NewsBlog

Thursday, October 31, 2013

காலப்பெட்டகம்: 'மனதைப் பிழிந்த அந்த இரண்டு கடிதங்கள்!


அரசியல், ஆன்மிகம், குழந்தை இலக்கியம், வேளாண்மை, வணிகம், சிறுகதைகள் என்று பன்முகங்களில் தினமணியில் எழுதிக் கொண்டிருந்த 1990-களின் ஒருநாள். 

அன்றைய தினமணியின் ஆசிரியர் காலஞ்சென்ற திரு இராம சம்பந்தம் சிரித்துக் கொண்டே ஒரு கடிதத்தின் நகலொன்றை என்னிடம் நீட்டினார். முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டார்.

அந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த நான் பரிதவித்துவிட்டேன். கடும் வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்த கடிதம் அது. அதை பிரேம்போடாத குறையாக இன்னும் பாதுகாத்து வருகின்றேன். இதனுடைய நகல்கள் மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியர் காலஞ்சென்ற மூதறிஞர் அப்துல் சமது சாஹெப்புக்கும், சமரசம் ஆசிரியர் மதிப்பிற்குற்குரிய எனது சகோதரர் சிராஜுல் ஹஸனுக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

மனம்  நொந்துப் போயிருந்த எனக்கு சிராஜுல் ஹஸன் ஆறுதலாய் சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. ரொம்பவும் சின்ன வார்த்தை, "இக்வான் அவர்களுக்கு உங்களைப் பற்றி என்ன தெரியும்? விடுங்கள் அதை!" இதுதான்.

என்ன நடந்தது என்று சொல்லவில்லை அல்லவா?

நடந்தது இதுதான்: 'தும்பை ஒரு அற்புத மருந்து' -  என்னும் தலைப்பில் தினமணி சிறப்புப் பகுதிக்கு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அந்த பகுதிக்கான பொறுப்பாசிரியர் கட்டுரையின் துவக்கத்தில் சில வரிகளைச் (எதேச்சையாக நடந்தது இது) சேர்த்திருக்கிறார். அந்த நான்கைந்து வரிகளை காரணம் காட்டி மொத்தமாக காழ்ப்புணர்ச்சியுடன் அந்தக் கடிதம் வசவுகளாய் கொட்டித் தீர்த்திருந்தது.


மேலே உள்ளது நான் தினமணிக்கு  கொடுத்த கட்டுரைக்கான தட்டச்சுப் பிரதியின் முதல் பக்கம். 


மேலே உள்ளது வேளாண்மணிக்கான சிறப்பாசிரியர் எடிட் செய்தபின் பிரசுரமான கட்டுரை.


மேலே உள்ளது கடும் விமர்சனத்துடன் வந்திருந்த கடிதத்தின் நகல். 

அடுத்தது நான் பணிப்புரியும் நிறுவனம் சம்பந்தமாக தினமணியில் எழுதிய கட்டுரைக்கு நிறுவனத்தின் அன்றைய நிர்வாக இயக்குநர் திரு. சேசஷாயி  அவர்கள் பாராட்டு தெரிவித்து தம் கைப்பட எழுதி அனுப்பியிருந்த கடிதம். .


 இந்த இரண்டு விதமான நேர்பார்வைகள் என் எழுத்துலகப் பயணத்தை தளராமல் முன்னெடுத்து  செல்லவும் விமர்சனங்களைத் தாங்கவும் பக்குவப்படுத்திய கடிதங்களாக இதுவரையிலும் போற்றி பாதுகாத்துவருகின்றேன்.

ஒருகாலமும் உணர்ச்சிவசப்படக் கூடாது என்று எச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரே கலங்கரை விளக்கின் இரு வேறு வெளிச்சங்கள் இவை.


0 comments:

Post a Comment