NewsBlog

Friday, October 11, 2013

சிறப்புக் கட்டுரை: 'காருண்ய மலை அடிவாரத்தில் கருணையை நோக்கி அடியார்கள்!'



ஐம்பது நாளில் முழு உலகையே சுற்றி வர வேண்டும். முடியுமா?

என்ன ஐம்பது நாட்களில் அதுவும் முழு உலகைச் சுற்றி வரவேண்டுமா? வியப்பால் புருவங்கள் உயர்கின்றன?

நிச்சயமாக முடியும்! அரஃபா நாளில்.

ஹஜ்ஜின் மிக முக்கிய அம்சமான அரஃபா நாளில் அது சாத்தியம்தான்.

சமத்துவத்தின் அடையாளமாகத் திகழும் அந்த நாளில் ‘ஜபலே ரஹ்மத்’ எனப்படும் காருண்ய மலையடிவாரத்தில் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தை ஒருமுறை பார்வையிட்டாலே போதும். வியப்பால் விழிகள் பிதுங்கிவிடும்.

தோளோடு தோள் இணைந்து,”ஓர் இறை..! ஓர் நிறை..!” – என்று நிதர்சன செய்தியை சுமந்து வெள்ளாடை தரித்த 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹாஜிகளால் அந்த மைதானம் வெள்ளைப் பூவாய் மலர்ந்திருக்கும்! வெள்ளுடைகளையும் தாண்டி கொஞ்சம் உற்று நோக்கினால்.. பிரமிப்பால் உள்ளம் ஜில்லிட்டுப் போகும்.


ஆம்..! பல நிறங்கள்.. பல இனங்கள்… பல மொழிகள்.. பல தேசங்கள் .. என்று எல்லைகளைத் தாண்டி நிற்கும் மனித குழுமம் அது. இறைநம்பிக்கை பந்தபாசம் உருவாக்கிய அந்த உறவால் காண்போர் உள்ளம் பூரித்துப் போகும்.

முதன் முதலில் ஹஜ் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தவர் யார்? அன்பு நபி! – என்று சட்டென்று பதில் வரும்.

ஆனால், இறைவனின் கட்டளைப்படி அந்த முதல் அழைப்புக்கு உரியவர்கள் கிருத்துவ சகோதரர்கள் 'ஆப்ரஹாம்' என்றழைக்கும் இப்ராஹீம் நபிதான் (இறையருள் பொழிவதாக!) என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

“நாம் இப்ராஹீமுக்கு கஅபா என்னும் இந்த ஆலயத்தின் இடத்தை பின்வரும் கட்டளையுடன் நிர்ணயம் செய்து கொடுத்த சந்தர்ப்பத்தை நினைவு கூருங்கள்! ….. ஹஜ் செய்ய மக்களுக்கு பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும், ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்!” (திருக்குர்ஆன, 22:27) என்று இறைவன் இதைக் குறிப்பிடுகின்றான்.

பரம்பொருளின் இல்லமான கஅபாவை கட்டி முடித்ததும், இறைவனின் திருத்தூதரான இப்ராஹீம் நபி, ‘ஜபலே ரஹ்மத்’ என்றழைக்கப்படும் ‘காருண்ய மலைச் சிகரத்தில் ஏறி நின்று ஹஜ் செய்ய வருமாறு இறைவன் ஒருவன் என்று நம்பிக்கைக் கொண்ட மனித சமூகத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். அதையே இறைவனும் திருக்குர்ஆனில் சுட்டிக் காட்டுகின்றான். அந்த அழைப்புக்கு செவிச் சாய்த்துதான் உலகின் பல மூலைகளிலிருந்தும் முஸ்லிமகள் ஹஜ் எனப்படும் புனிதப் பயணம் மேற் கொள்கிறார்கள்.

ஒரே வெண்மை நிற சீருடை தரித்து, தோளோடு தோள் ஒட்டி, கஅபாவை முன்னோக்கி, தனது கருணையால் மனித இனத்தை ஒன்றிணைத்த சர்வ உலகங்களின் அதிபதியான அந்த மகா சக்தியை வணங்கி நின்றார்கள்.

எல்லைகளைக் கடந்த இந்த உறவுமுறை இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபிகளார் (இறைவனின் சாந்தியும், சமாதானமும் அன்னார் மீது பொழிவதாக!) அவர்களால் கட்டி உருவாக்கப்பட்டது.

அன்பு நபியின் திருச்சமூகத்தில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், உஸ்மான் பின் அஃப்பான் (இவர்கள் இருவர் மீதும் இறையருள் பொழிவதாக!) போன்ற செல்வ சீமான்கள் இருந்தார்கள். 

அபூஹீரைரா, பிலால் பின் ரபாஹ் (இவர்கள் இருவர் மீதும் இறையருள் பொழிவதாக!) போன்ற பஞ்ச பராரிகளும் இடம் பெற்றிருந்தார்கள். நிறத்தால், குலத்தால் வேறுபட்டவர்கள் அனைவரும் நபித்தோழர்கள் என்ற சம அந்தஸ்தில் அதற்கும் மேலாக இறையடியார்கள் என்ற தகுதியுடனும் திகழ்ந்தார்கள்.


இன்னும் சொல்லப் போனால், நபிகளாரின் பேரன்புக்கும், இறையருளுக்கும் ஆளாகியிருந்த சில நபித்தோழர்கள் அரபியர் அல்லாதவர்கள் என்பது வியப்புக்குரிய செய்தி.

அதில் ஒருவர்தான் பிலால் பின் ரபாஹ் (இறையருள் பொழிவதாக!). 

அன்று 'அபிசீனியா' என்றழைக்கப்பட்ட இன்றைய 'எத்தியோப்பியா' நாட்டைச் சார்ந்த கரு நிறத்து அடிமை இவர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக தனது எஜமானரால் கடுமையான சித்திரவதைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆளானவர். கடைசியில் நபித் தோழர் அபூபக்கர் (இறையருள் பொழிவதாக!) அவர்களால் அடிமைத் தளையிலிருந்து மீட்கப்பட்டவர்.

இந்த வரலாற்று சம்பவத்தை சுட்டிக் காட்டி ‘காந்தியடிகள்’ மெச்சிய நபித்தோழர் உமர் (இறையருள் பொழிவதாக!) இப்படி கூறுவார்கள்: “நம் தலைவர் மீட்ட பெருந்தலைவர் பிலால்!” (ஆதார நூல்: புகாரி)

அத்தோடு முதன் முறையாக தொழுகை அழைப்பான ‘பாங்கு’ அழைப்பொலியை கஅபாவின் மீது ஏறி நின்று விடுத்தவர் என்ற சிறப்புக்குரியவர் அதே பிலால்தான்!

அதேபோல, நபிகளாரின் இல்லத்தாரில் ஒருவர் என்ற சிறப்புப் பெற்றவர் நபித்தோழர் சல்மான் பார்ஸி (இறையருள் பொழிவதாக!). இவர் பாரசீகத்தின் ‘ரம் ஹீர்முஜ்’ என்ற நகரத்தைச் சார்ந்த அரபி இனம் அல்லாத அடிமையாவார். (ஆதாரம்: தப்ரானீ)


நபித்தோழர் அபூஹீரைராஹ் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) அறிவிக்கிறார்கள்: “சல்மான் பார்ஸி (இறையருள் பொழிவதாக!) உட்பட நாங்கள் நபிகளாரின் திருச்சபையில் அமர்ந்திருந்தோம். அப்போது, திருக்குர்ஆனின் ‘அல்ஜீம்ஆ’ (அத்தியாயம்: 62) அருளப்பெற்றது. (அந்த நேரத்தில் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை). அதன் மூன்றாவது திருவசனத்தை நபிகளார் ஓதலானார்கள். (“இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் இந்தத் தூதர் அனுப்பப்பட்டுள்ளார் என்ற திருவசனம் அது. நபித்தோழர்களில் ஒருவர் கேட்டார்: “இறைவனின் தூதரே! இறைவன் சுட்டிக் காட்டும் அவர்கள் யார்?” அந்தக் கேள்விக்கு நபிகளார் பதிலாய் சல்மான் பார்ஸியை சுட்டிக் காட்டினார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்)

சில நேரங்களில் இஸ்லாம் அரபியரின் சமயமாக தெரிவதற்கு, அதைப் போதித்த நபிகளார் அரபியர் என்ற ஒரே காரணம் அன்றி வேறில்லை! 

ஆனால், திருக்குர்ஆனின் இந்த திருவசனம் அந்தக் கருத்தைத் தகர்த்துவிடுகிறது இதோ: “நபியே! நாம் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும்தான் அனுப்பி வைத்துள்ளோம்!” (திருக்குர்அன்: 34:28)


இதே ஹஜ்ஜின் போதுதான் அரஃபா திடலில் ஆயிரக்கணக்கான நபித்தோழர் மற்றும் நபித்தோழியரின் முன்பாக நபிகளார் இனத்தையும், நிறத்தையும் கடுமையாக கண்டித்து உரையாற்றினார்கள். (ஆதார நூல்: முஸ்னது அஹ்மது)

இதை இறைவனும் திருக்குர்ஆனில் இப்படி சுட்டிக் காட்டுகின்றான்: “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக இவற்றில் எல்லாம் அறிவுடையோருக்கு நிறைய சான்றுகள் உள்ளன’ (30:22)

மற்றொரு சமயத்தில் நபிகளார் இப்படி சொன்னார்கள்: “இறைவன் உங்கள் உருவங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்” (ஆதார நூல்: முஸ்லிம்)

0 comments:

Post a Comment