NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Tuesday, March 26, 2013

வாழ்வியல்: ‘முதலாவது யுத்தம்!’



“என்னதான் செய்வதென்று தெரியலே.. படாதபாடுபடுத்துறான்ப்பா.. 15 வருஷமா அவன்கிட்டே மாட்டிட்டு முழிக்கிறேன்..!” – புலம்பிக் கொண்டே வந்தார் நண்பார்.

விஷயம் இதுதான்:

“நிறுவனத்தில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் குழுக்களாய்தான் சேர்ந்து பணிபுரிய வேண்டியதிருக்கும். கூட்டு முயற்சியின் விளைவாகத்தான் உற்பத்தி கிடைக்கும். இந்த ‘குரூப்’பில் அல்லது ‘குழு’வில் உள்ளவர்கள் சரியாக அமையாவிட்டால்.. உற்பத்தி பாதிப்பதோடு பணிபுரிபவர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியதிருக்கும்.

நண்பரின் குரூப்பில் இருந்தவர்களில் சில இளைய பணியாளர்கள் மற்றும் நண்பரை 15 ஆண்டுகளாக மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவரும் முரட்டு சுபாவம் கொண்டவர் ஆகியோர் அடக்கம்.

இளைய பணியாளர்களோ பட்டும் படாமலும் செயல்படுவார்கள்.

நண்பர் மிகவும் பொறுமைசாலி. நல்ல பண்பாளர். சிறந்த கல்வியாளர்கூட. ஆனாலும், எதற்கெடுத்தாலும் பிரச்னை தரும் அந்த முரட்டு மனிதரை மட்டும் நண்பராக்கிக் கொள்ள முடியவில்லை. ‘அவருக்கு எப்போது கோபம் வரும்? எப்போது நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வார்?’ – என்பது யாருக்கும் தெரியாது.

அந்த முரட்டு சுபாவம் உள்ளவர் யாருடனாவது பிணங்கிக் கொண்டே இருப்பார். இந்தப் பிணக்கின் சுழற்சியில் அதிகம் சிக்குவது மேற்படி நண்பர்தான்!

இத்தகைய முரட்டு மனிதர்கள் வாழ்க்கையின் பல துறைகளில் எதிர்பட்டுக் கொண்டே இருப்பார்கள். மனித உறவுகளுக்காக அவர்களைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். மற்றவர்கள் நல்ல மனிதராக மாறவில்லை என்பதற்காக நம்மிடம் உள்ள பண்புகளை இழந்திட முடியாது. பண்பற்ற செயல்களை எதிர்ப்பதற்காக உணர்ச்சிவசப்படுவது நமது ஆளுமைப் பண்பைச் சிதைத்துவிடும்.

ஆக, வாழ்க்கையின் அடிதோறும் நாம் முதலாவது எதிரியாக கருத வேண்டியது நம்மைத்தான்! நாம் போரிட வேண்டியதும் நம்மோடுதான்! இந்த நினைப்புதான் நம்மைப் பண்பட வைக்கும். 


சமீபத்தில் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளைத் தயாரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியில் குடிநீர்த்துறை சார்ந்த மூத்த அரசு அதிகாரிகள் இருவர் பேட்டி அளித்தனர்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அரசு அதிகாரிகளின் பெயர்களில் தமிழில் ஒரு புள்ளி விடப்பட்டும், ஆங்கிலத்தில் ‘க’ உச்சரிப்புக்காக ‘G’ க்குப் பதிலாக ‘K’ யும், இடம் பெற்று விட்டன. இந்த எழுத்துப் பிழையை தயாரிப்பாளன் என்ற முறையில் நானும் கவனிக்கவில்லை.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில் இதைக் கண்ட அந்த ‘அசைன்மெண்ட்’ கொடுத்தவர் தொலைபேசியில் அரைமணி நேரத்துக்கு ஒரு பிடி பிடித்துவிட்டார். அதிலிருந்து தப்பிக்க பல காரணங்கள் இருந்தன. ஆனாலும், அவற்றில் எதையும் எனது தவறை மறைப்பதற்கான ‘கவசங்களாக்கிக்’ கொள்ள விரும்பவில்லை. மௌனமாக அந்த ‘அர்ச்சனைகளை’ வாங்கிக் கொண்டு நடந்த தவறுக்கு முழு பொறுப்பு ஏற்றேன். அடுத்தமுறை தவறு நிகழாதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதியும் அளித்தேன். அன்றைய இரவு முழுவதும் வேதனையால் மனம் தவித்தது.

அடுத்த நாள்.

அலுவலகத்துக்குச் சென்று எனக்கு ‘அசைன்மெண்ட்’ வழங்கிய சம்பந்தப்பட்ட நபரைச் சந்திக்கும்வரை இந்த மனநிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

கடைசியில், அறையில் நுழைந்தபோது அவர் என்னை அன்புடன் அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார். முதல்நாள் எதுவும் நடக்காதது போல, ஒரு சகஜமான நிலை. ஒளிபரப்பான நிகழ்ச்சி மிகவும் கலைநயத்தோடு அமைந்திருந்ததைச் சுட்டிக் காட்டிப் பாராட்டினார். அடுத்த ‘அசைன்மெண்ட்’டுக்காக, புதிய தலைப்பையும் கொடுத்தார்.

ஒரே இரவில் நடந்த மாற்றம் இது. இந்த சம்பவத்தில் கொஞ்சம் பொறுமை காத்திருக்காவிட்டால்.. அதற்கான எதிர்விளைவுகள் பல நிரந்தர சோகங்களை சுமக்கச் செய்திருக்கலாம். பொறுமை காத்ததற்கு கைமேல் பலன் கிடைத்திருந்தது.  

மனித வாழ்க்கையில் இத்தகைய சம்பவங்கள் அன்றாடம் நடக்கத்தான் செய்கின்றன. பேருந்தில்… அஞ்சல் நிலையத்தில்… காவல்நிலையத்தில்… இன்னும் பல்வேறு இடங்களில்.. இது தொடரலாம். உயரதிகாரிகள் சில நேரங்களில் போதிய புரிதல் இல்லாமலோ அல்லது அவர்களின் பணிச்சுமையின் காரணமாகவோ கோபப்படலாம்.

அது எதுவானாலும்… நம்மை உணர்ச்சிப் பிழம்பாய் நாம் மாற்றிக் கொள்ளக்கூடாது. பதிலுக்குப் பதிலாய் .. தரம் தாழக்கூடாது! ஆளுமைப் பண்பிலிருந்து கீழிறங்கிடக்கூடாது.

15 ஆண்டுகள் தனது முரட்டு நண்பரைச் சமாளித்த அந்த நண்பர்  நிச்சயம் முதிர்ச்சியடைந்திருப்பார். நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கும். இன்னும் பல ஆண்டுகளைச் சமாளிக்கும் பக்குவம் பெற்றிருப்பார்; தனது மனதோடு யுத்தம் தொடரும் நிலையில்!

Monday, March 25, 2013

விருந்தினர் பக்கம்: 'குருஜி கோல்வாக்கரின் இதயக் குரல்!'



(ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் (சர் சங் சாலக்) குருஜி கோல்வாக்கர் பொது சிவில் சட்டம் பற்றி 26.08.1972 ‘ஆர்கனைசர்’ இதழுக்கு பேட்டி அளித்தார். முக்கியமான சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களையே தொகுத்து ‘சிறப்புத் தலையங்கமாக (Guest Editorial) சமரசம் மாதமிருமுறை 1-15 செப்.1995 இல், வெளியிட்டிருந்தது. அதை மிஸ்டர் பாமரன் வாசகர்களுக்காக அளிக்கிறோம்.

"தேசிய உணர்வுகளை வளர்க்க பொது சிவில் சட்டம் தேவையில்லை என்பதே என்னுடைய தீர்க்கமான கருத்தாகும். இந்தியா எப்போதுமே பன்முக தன்மைகள் கொண்ட நாடு. அப்படியிருந்தும் நாம் தொன்று தொட்டடே ஒன்றுபட்டவராக – வலுவானவராக திகழ்கிறோம். நாம் ஒன்றுபடுவதற்கு இணக்கம்தான் தேவைபடுகிறதே தவிர பொதுவான தன்மை அல்ல. அளவு கடந்த பொதுவான தன்மை இயற்கைக்கு உகந்ததல்ல என்றே நான் உணர்கிறேன்.

நம்முடைய அரசியல் சாசனத்தில் உள்ள வழிகாட்டிக் கொள்கை பொது சிவில் சட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று கூறியிருப்பது உண்மைதான். ஒருவிஷயம் அரசியல் சாசனத்தில் இடம் பெற்று இருப்பதால் மட்டுமு; அது விரும்பத் தக்கதாக ஆகிவிட முடியாது. மேலும், அரசியல் சாசனம் இந்திய அனுபவத்தின் அடிப்படையில் நன்கு சிந்திக்கப்பட்டு இயற்றப்பட்ட சாசனம் அல்ல. மாறாக, பல அந்நிய கருத்தக்களின் தொகுப்பே நம் அரசியல் சாசனம்.

ஒரு வகுப்போ, சமுதாயமோ, இனமோ தனக்கு உரிய தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை. அதனை நான் ஆட்சேபிக்கவும் இல்லை. ஆனால், அது தேசிய உணர்வுகளைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

‘நான்கு பெண்களை மணம்  செய்து கொள்ள முஸ்லிம்களுக்கு உரிமை இருப்பதால், மக்கள்  தொகையில் அவர்களின் எண்ணிக்கை பெருகிவிடும். பொதுசிவில் சட்டம் மூலம் இந்த அபாயத்தை தடுக்க வேண்டும்!’- என்று சிலர் கூறுகிறார்கள். தேசிய உணர்வை வளர்ப்பதற்கான எதிர்மறை அணுகுமுறையாகும் இது.

தேச ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை உருவாக்கிட இந்து சட்டங்களை ஒரே வகையாக தொகுப்பது கூட தேவையற்ற ஒன்று என நான் நினைக்கிறேன். தொன்றுதொட்டு எண்ணற்ற சட்டத் தொகுப்புகளை (Codes) நாம் கொண்டிருந்தோம். அதனால் நாம் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை.

பர்தா, பலதார மணம் போன்ற முஸ்லிம் பழக்க வழக்கங்களை மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் ஆட்சேபித்தால்… அது சரியானதே! ஆனால், அனைவரையும் சமன் செய்ய வேண்டும் என்ற ‘ரோடு ரோலர்’ மனப்பான்மை முற்றிலும் தவறானது. முஸ்லிம்கள் அவர்களின் சட்டத்திட்டங்களை அவர்களே இயற்றட்டும். பலதார மணம் சரியில்லை என்று அவர்களே முடிவுக்கு வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், இந்தக் கருத்தை அவர்கள் மீது திணப்பதை நான் விரும்பவில்லை.

பொதுவான தன்மை தேசங்களுக்கு சாவுமணி அடிக்கும் என்பதே என் கருத்து. இயற்கை பொதுவான தன்மையை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே, பல்வேறு வாழ்க்கை முறைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் நான் நினைக்கின்றேன். ஆனால், இந்தப் பல்வேறு தன்மைகள் ஒன்றுக்கொன்று துணை போக வேண்டும்; தேசிய ஒற்றுமைக்கு வழிகோல வேண்டும். தேசிய ஒற்றுமைக்கு எதிரானதாக அமைந்திடக் கூடாது!"

 - நன்றி: சமரசம்

Saturday, March 23, 2013

வாழ்வியல்:'விரயம் தவிர்!'


அன்று இரவு திடுப்பென்று வீட்டுக்கு விருந்தினர் வந்துவிட்டனர். என் இல்லத்தரசி என்னை தனியே அழைத்து, “ஏங்க! இருந்ததை சாப்பிட்டு முடிச்சு இப்போதான் பாத்திரங்களை எல்லாம் கழுவி வச்சேன்!” – என்றார் சங்கடத்துடன்.

“வீட்டுலே எப்பவும் நான்கைந்து பேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாடு தயாராக இருக்குமே?” –என்றதும், “உண்மைதான்! ஆனால், காலையிலே அதைப் சாப்பிட ஆளில்லாமல் கீழே கொட்ட வேண்டியிருக்கு . அதனாலே, இப்போதெல்லாம் … நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் வடிக்கிறேன்!” – என்று சொன்ன கையோடு அடுப்பைப் பற்ற வைத்து, சுடச் சுட உணவு தயாரித்து விருந்தோம்பியது வேறு விஷயம்.

நமது வீடுகளில் நாம் அன்றாடம் சந்திக்கும் இத்தகைய பிரச்னைகள் ‘விரயம்’ என்பதற்கு உதாரணங்கள்தான்!

தேவைக்கு அதிகமான, போதிய கவனமில்லாத, தரமில்லாத செயல்கள் அனைத்தும் விரயம் என்றே சொல்லலாம். இதனால் நேரம், உழைப்பு, பொருளாதாரம், உடல் நலம் இவை அனைத்தையும் இழக்க நேரிடலாம்.

மனித உடலின் சீரான இயக்கம், உடல் நலத்தின் ‘தரமாக’ வெளிப்படுகிறது. இதில் காட்டும் கவனமின்மை பெரும் பாதிப்பாகி, உடல் நலம் கெட்டு நோயாளியாக்குகிறது. கடைசியில் சில அவயங்களையும் விரயம் செய்ய வேண்டியிருக்கிறது அதாவது இழக்க வேண்டியிருக்கிறது.



ஒரு நிறுவனம் என்பது இதற்கு சற்றும் குறைந்ததல்ல. லாபத்தில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனத்தின் ‘வெற்றியின் ரகசியம்’, விரயம் தவிர்த்தல் அல்லது கட்டுக்குள் கொண்டு வரல் – இதுவும் ஒரு காரணம்தான்!

கவனமின்மை எனப்படும் செயல் மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்திவிடும்.

ஒரு வாகன உற்பத்தி ஆலையில், அசெம்பியின்போது, இழப்பு 1.4 லட்சம் ரூபாய். இயந்திர கோளாறால் 2.70 லட்சம், வெட்டுமானக் கருவிகளைத் தவறாகக் கையாள்வதால் விரயம் 0.54 லட்சம், ‘ஹீட் ட்ரீட்மெண்ட்’ எனப்படும்  அனல் சிகிச்சையின் போது இழப்பு 0.24 லட்சம், பழுதுபட்ட வெட்டுமானக் கருவிகளால் விரயம் 0.53 லட்சம், இன்னும் இதர காரணங்களால் விரயம் 9.98 லட்சம் ரூபாய். இது ஒரு நிறுவனத்தின் ஒரு மாத விரயத்துக்கான இழப்பீட்டுப் பட்டியல். இதில் பணியாள் கவனமின்மையால் மட்டும் விரயமாகும் பொருளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 10.44 லட்சம் ரூபாய்!

ஒருமுறை உயரதிகாரி ஒருவர் தனது பணியாளரிடம் சொன்னது இது:

“இந்தப் பொருள் விரயமானால்.. உன் சம்பளத்தோடு.. என் சம்பளத்தைச் சேர்த்தாலும் இதை வாங்க முடியாது!”

உண்மைதான்!

நாம் அனுதினமும் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் அல்லது உற்பத்தி செய்யும் பொருளின் விலை மிக அதிகமானது. அதற்காகப் பயன்படுத்தப்படும் எந்திரம் பல கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கலாம். அதனால், ஒவ்வொரு கண நேரமும் கவனத்துடன் பணிபுரிந்தால் விரயத்தைப் பெருமளவில் தவிர்த்துவிடலாம்.

பணி மாற்றங்கள் காரணமாக சிற்றுண்டி சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த சில பணியாளரை எந்திரப்பகுதிக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுவரை முற்றிலும் வேறுபட்ட பணிச்சூழலுக்குள் நுழைந்த பணியாளர்கள், ஆரம்பத்தில் சற்றுத் திணறிவிட்டனர். துளையிடும் வெட்டுமானக் கருவியான டிரில்லின் (drill) பெயர்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதேபோல, ‘மரையிடும்’ கருவியான ‘டாப்பின்” (Tap) பெயரும் தெரியவில்லை. 



இந்நிலையில் அவர்களில் ஒருவர் இப்படி கேட்டார்: “சார் இந்தக் ‘குச்சியை’ (drill) வைத்துக் கொண்டு எப்படி துளையிட முடியும்? இந்த ‘முள்ளால்’ (Tap) எப்படி மரையிட முடியும்?”

“இது துளைப்போடும் குச்சி! இது மரைபோடும் குச்சி!!” – என்றுதான் அந்த அதிகாரி ஆரம்பத்தில் விளக்கி அவருக்குப் புரிய வைத்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

போதிய தொழில் நுட்பமின்மையும், விரயத்துக்கான காரணமாகிவிடும்.. எச்சரிக்கை!

உதாரணமாக, ஒரு வாகனத்தின் ‘சேசியின்’ விலை சுமார் 6 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டால்.. இதில் அனுமதிக்கப்படும் விரயத்தின் மதிப்பு சுமார் 700 ரூபாய் மட்டுமே! 900 ரூபாய் அளவு விரயமானாலும் ‘சேசியின்’ விலை அதிகரித்துவிடும்.

சில நேரங்களில் மிகவும் கவனமாக, நேர்த்தியாக, தரமாக உற்பத்திப் பொருள் ஒவ்வொரு நிலையிலும் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இடையில், ஏதாவது ஒரு பணியாளர் செய்யும் ஒரு சிறு தவறுகூட மொத்த இழப்புக்கும் காரணமாகிவிடும்.

விரயம் என்பது தனிநபரை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல.

குடும்பம், நிறுவனம், நாடு என்று தொடராய்ப் பாதிக்கும் பொருளியல் வீழ்ச்சியாகும்!

   

Wednesday, March 13, 2013

கவிதை: 'விடுமுறையா? விடுதலையா?'

 
எதிரொளிக்கா திடம் கேட்டு
இன்று முதல்
நிறப்பிரிகைகளுக்கு விடுமுறை
அல்லது விடுதலை

கண்கட்டிக் கொண்ட
காட்சிகளில் கிடக்கின்றன
எனது நிம்மதி 
அவசியமில்லாத
அலைதலில்
கிடைப்பது எல்லாம்
உளைச்சலே

சுரங்கத்தினுள்
இப்போது இறங்கிக்கொண்டிருக்கும்
நீரோடை
அமைதி உண்டியலில்
நிறைந்து
தன் சலசலப்பை
குறைத்துக் கொண்டிருக்கிறது

இந்த இருட்டிலும்
தன்னைத் தேடிவரும்
வேர்களின் மூலம்
அதன் பச்சயத்திலோ
பூக்களிலோ
ஊடுருவி
வேறுருவில்
கடந்து வந்தவையை
கண்காணிக்கும்

இது
விடுமுறை
அல்லது விடுதலை.
IDREES YACOOB
 

Saturday, March 9, 2013

OH! MY SPRING! 'அந்த வசந்தம் போனதெங்கே?'

ஆரம்ப கல்வி நாட்களில் என் தாயாரோடும், அண்டை -- அயலாரோடும் காற்றுடன் சேர்ந்து அழகிய சங்கீதம் இசைக்கும் அந்த அடர்ந்த சவுக்குத் தோப்புக்கு சுள்ளி பொறுக்கச் செல்வோம்.

உயர்நிலைக் கல்வி நாட்களில் ஓட்டப் பயிற்சிக்காக அலைக் கடல் நீரின் ஈரத்தில் தட்.. தட்.. என்று கால்களைப் பதித்து ஓடுவது பேரின்பம்! பல நூறு மீட்டர் அகலத்தில் வெள்ளை வெளேரென்று பூவாய் படர்ந்திருக்கும் கடலோரத்து வெண் மணல். அதில் முளைத்திருக்கும் புற் -- பூண்டு தாவரங்கள். அவற்றில் கால்பந்து அளவுக்கு பூக்கும் முட்பூக்கள்! அவை காற்றில் உருண்டு உருண்டு ஓட.. வேட்டை விலங்குகளாய் விரட்டிச் செல்லும் நண்பர்கள் குழு.

இப்படி, ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் இயற்கையின் வசந்தமாய் காணப்பட்ட சென்னை மாநகரின் வடக்குப் பகுதியும், முதலாவது மற்றும் இரண்டாவது வட்டத்தைச் சேர்ந்த என் ஊர்.. எண்ணூர் இன்று இல்லை!
 
சவுக்குத் தோப்பை நிர்மூலமாக்கிவிட்டு கொட்டப்பட்ட உரத்தொழிற்சாலைகளின் மலைக்குன்றுகள் போன்ற ஜிப்ஸம். அத்தொழிலுக்கு மூலப் பொருளான திரவ நிலை அம்மோனிய வாயு நிரப்பப்பட்ட மெகா சைஸ் பூமி உருண்டை வடிவ கொள் கலன். அம்மோனியம் வாயுவை குழாய் வழியே நிரப்ப கடல் மார்க்கத்தில் காத்திருக்கும் ஒன்றுக்கு மூன்றாய் ரோஸ் வண்ண கப்பல்கள்!

இந்த பேராபத்தை உணராமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் சிறார்கள். பாறைகளாகிப் போன கரையோரத்து கிழிந்த கடலில் மகிழ்ந்து குளிக்கும் சிறுவர்கள்!

இந்தியாவில் குடிநீரில் புளோரைடு நச்சு அதிகளவு கலக்கப்பட்டள்ள நகரங்களின் பட்டியலில் எண்ணூரும் ஒன்று. நீர் நச்சாகிப் போனதால்.. அதை பயன்படுத்திய மூன்று தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வளைந்த கால்களாகி .. பற்கள் கரைப் படிந்து அழகிழந்தவர்கள்.. அத்தனை எலும்பு நோயும் தொற்றிக் கொண்டவர்கள் என்று முடங்கிப் போன இளைய பாரதம்!

கடலோரம் மறைந்து .. கடலரிப்பைத் தடுக்க மைல் கணக்கான நீளம் பாறைகளே கரைகளாகிப் போன பரிதாபம்!

மனிதனின் சுயநலங்களால் சின்னபின்மாய் சீரழிந்துப் போன.. அத்தனை அடையாளங்களையும் ஒளிப்பதிவாய் சுமந்து கொண்டு உள்ளதை உள்ளபடியே காட்டும் விழிகளின் மற்றொரு ஈரமிது!
 

உடல் நலம்: 'உங்கள் ஃபிட்னஸ் எப்படி?'

உங்கள் உடல் தகுதி, அதாவது 'ஃபிட்னெஸ் லெவல்' (Fitness Level) எப்படி உள்ளது 

கீழ் வரும் கேள்விகளுக்கு பதிலைத் தேர்வு செய்யுங்கள். 

, , , இந்த மூன்று பதில்களில்,

'' என்ற பதிலுக்கு 2 மதிப்பெண்கள். '' என்ற பதிலுக்கு 5 மதிப்பெண்கள். 'இ' என்ற பதிலுக்கு 10 மதிப்பெண்களுமாகும்.

 
1. ஆறு மாடிக் கட்டிடத்தின் படிகளில் ஏறுவீர்களா?

) ஒரு சொட்டு வேர்வை கூட வராமல் ஏறுவேன்.

) மூச்சுத் திணறியபடியே ஏறுவேன்.

) ஏறுவேன் ஆனால் இடையிடையே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்வேன்.



2. உடற்பயிற்சி செய்யும் போது அல்லது வெயிட் லிப்டிங் செய்து முடிக்கும்போது உடலில் கடும் வலி ஏற்படுகிறதா?

) ஒரிரண்டு நாட்களுக்கு வலி இருக்கும்.

) சில நாட்களுக்கு வலி இருந்து கொண்டேயிருக்கும்.

) என்னுடைய தசைகளை ஒருவாரத்திற்கு செயலிழக்கச்செய்யும்.



3. இரண்டு அல்லது மூன்று கிமீ தூரம் இடைவெளியின்றி நிறுத்தாமல் ஜாகிங் செய்வீர்களா?





) எந்த கடினமும் இல்லை.

) உறுதியாக சொல்ல முடியாது.. முயன்று பார்க்கலாம்,

) முடியவே முடியாது.




4. உங்கள் முழங்காலை மடக்காமல் உங்கள் கால் கட்டை விரலைத் தொட முடியுமா?





) சுலபமாக.

)முயற்சி செய்து பார்க்கிறேன்.

) முன்பு தொடமுடிந்ததுஇப்போது முடியவில்லை.

5. மருத்துவரை எவ்வளவு முறை பார்க்கிறீர்கள்?

) முழுமையான உடல் சோதனைக்காகஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பேன்.

) உடம்பு சரியில்லாத போது மட்டும் பார்ப்பேன்.

) சிலவாரங்களுக்கு ஒரு முறையாவது பார்க்க நேரிடுகிறது.


6. 100 மீ தூரத்தை 15 வினாடிகளுக்குள் ஓடி முடிப்பீர்களா?








) ஆமாம்

) ஓடலாம்.

) அதெல்லாம் முடியாது.

7  மராத்தான் போட்டி நடைபெறுகிறது என்றால் நீங்கள் எப்படி அதற்கு தயாராவீர்கள்?

) பயிற்சிகள் எடுத்துக் கொண்டு முன் தயாரிப்புடன் செல்வேன்.

) சில வார அவகாசத்தில் உடல்தகுதி பெற்று போட்டியில் கலந்து கொள்வேன்.

) அய்யா! சாமி.. ஆளை விடுங்க!


8. ஓடும்போதோ, பயிற்சி செய்யும்போதோ அப்பாடா என்று உட்காராத அளவுக்கு எவ்வளவு நேரம் தாக்குபிடிக்க முடியும்?









) 20 நிமிடங்களுக்கு மேல் தாங்கும்.

) 5 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை தாங்கும்.

) 5 நிமிடத்திற்கும் குறைவே.




9. தற்போது எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை பயிற்சி செய்கிறீர்கள்?








) வாரத்தில் 3 தடவைகளுக்கு மேல்.

) வாரத்திற்க்கு ஒரு முறை அல்லது இருமுறை.

) நேரமே இருக்கறதில்லை சார்!


இந்த 9 கேள்விகளுக்குமான உங்களது மதிப்பெண்களை நீங்களே கூட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள்.




38 - 55 மதிப்பெண்கள் பெற்றிருந்தால்..

நீங்கள் உண்மையில் முழு உடல் தகுதியுடன் இருக்கிறீர்கள்.  

உங்களது செயல்கள், உணவுப்பழக்கம் எல்லாம் சரிதான். இதை அப்படியே தொடரலாம்.



56 - 100 மதிப்பெண்கள் வரை பெற்றிருந்தால்..

தினமும் பயிற்சி செய்யவேண்டிய தேவையில்லை என்றாலும், வாரத்திற்கு 3 முறை பயிற்சி செய்யலாம். தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்க இது உதவும். 


101 முதல் 140 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது என்றால்.. இருங்க சந்தோஷம் அடைஞ்சிடாதீங்க..

இந்த வகையினர் தங்களது ஆரோக்கியம் குறித்து அலட்சியம் காட்டுகிறார்கள் என்று பொருள்.  

ஆனாலும் கவலைப்படத் தேவையில்லை. பயிற்சியை ஒரு அன்றாட நடைமுறையாக்கினால் ஆரோக்கிய வாழ்வின் பாதைக்குத் திரும்ப முடியும்.

வாழ்த்துக்கள்!