NewsBlog

Sunday, February 24, 2013

காலப்பெட்டகம்: நூற்றாண்டே சாட்சியாக... (பகுதி - 1)



அவர் மௌலான அபுல் கலாம் ஆசாத்துடன் நெருங்கி பழகியிருக்கிறார்.  அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறார். கட்டுரைகளைப் படித்திருக்கிறார். மாபெரும் கவி அல்லாமா இக்பால் மனதில் பிரவாகமெடுத்த கவிதைகளை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினார். அவருக்கு மௌலானா அன்வர் ஷா கஷ்மீரியின் இமாமத்தில் (தலைமையில்) தொழும் நற்பாக்கியம் கிடைத்தது. ஹஸன் அஹ்மது மதனீ, முஃப்தி கிஃபாயதுல்லாஹ் போன்ற பெரும் மார்க்க அறிவு ஜீவிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தமது இளமையில் சில நாட்களை ஸயீத் அதாவுல்லாஹ் ஷா புகாரியின் கல்விப் பாசறையில் பயின்றிருக்கிறார். இந்த அனுபவங்கள் எல்லாம் அவரை மிகச் சிறந்த சிந்தனையாளராக்கும் மைல்கற்களாக அமைந்தன. 

இஸ்லாமிய பேரரசுகளின் வளமும் செழுமையும், பண்பாடும், கலாச்சாரமும் அந்த அரசுகள் தந்த அமைதியான வாழ்க்கை அமைப்பும், முஸ்லிம்கள் இஸ்லாமிய பேரொளியில் ஸ்பெயினிலிருந்து இந்தோனேஸியாவரை  ஆண்ட உன்னதங்களும் கண்களில் மிளிர்ந்தன. உலகாசையில் விழுந்த முஸ்லிம்கள் தங்கள் இலக்கையும், குறிக்கோளையும் மறந்து போனதால்.. அடைந்த இழப்புகள் அவரது இரவுகளை வேதனை மிக்க தூங்கா இரவுகளாக்கின. முஸ்லிம்கள் இஸ்லாமிய ராஜபாட்டையிலிருந்து விலகி நடந்ததால்.. இதன் பிறகு ஒரு புதிய இஸ்லாமிய பெயர் தாங்கி அமைப்பு உருவானதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனை மாற்றியமைத்து புதுயுகங்களை சமைக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை அவர் திட்டவட்டமாக நம்பினார். 

இந்த நேரத்தில் வெள்ளையனை விரட்டியடிக்க உக்கிரமான பன்முகப் போராட்டங்கள் இந்தியாவில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இந்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க இந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க நச்சு விதைகளை விதைக்கிறார்கள். பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இதன் விளைவாக 1915-இல், மதன் மோகன் மாளவியா இந்த மகா சபையை நிறுவினார். பின்னாளில் அது வகுப்புவாத அமைப்பாக உருவெடுத்தது. 1925-இல், கேசவ பலிராம் ஹெட்கேவார் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஆரம்பித்தார். 1923-இல், நாக்பூரில் நடந்த வகுப்புக் கலவரங்களையொட்டி இந்துத்துவவாதிகள் செய்த பொய்யான பிரச்சாரங்கள் ஆர்.எஸ்.எஸ் உருவெடுக்க காரணங்களாயின.

உலக அரசியலை எடுத்துக் கொண்டால்.. ஸ்டாலினின் 'செம்படையினர்' நாத்திகவாதமே வாழ உரிமையுடையது என்ற எண்ணத்தில் ரஷ்யாவின் முஸ்லிம் பகுதிகளான உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், சமர்கண்ட், நேஷாபூர், புகாரா போன்ற மாநிலங்களை ரத்தக் களரியாக்கினர். அப்பகுதிகளில் வசித்துவந்த முஸ்லிம் அறிஞர்களையும், மேதாவிகளையும் கொன்றொழித்து மசூதிகளையும், பாடசாலைகளான மதரஸாக்களையும் கால்நடை தொழுவங்களாக்கினர்.

நாத்திகவாதம், ஆத்திகவாதத்தை 'கிரெம்ளின்' மாளிகையிலிருந்து விரட்டியடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றது. மற்றொருபுறமோ ஜெர்மன் 'நாஜி' தலைவர் ஹிட்லர் தனது இனவாத சித்தாந்தத்தை நிலைநாட்ட மனித பிணங்கள் மீது அரியணை அமைக்கும் தீவிர முயற்சியில் களம் இறங்கியிருந்தார்.

உலகை அமைதி பூங்காவாக்க வேண்டிய இஸ்லாமிய சக்தியோ அரசியல், பொருளாதாரம், அறிவியல் என்று வாழ்க்கையின் பல்வேறு துறைகளாக கூறு போடப்பட்டு இருந்தது. மேற்கத்திய சித்தாந்தம் முஸ்லிம்களின் வாழ்வில் திணிக்கப்பட்டிருந்தது. ஆன்மிக அறநெறிகளுக்கும், வாழ்வின் பிற துறைகளுக்கும் சம்பந்தமில்லை என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டது. பாரிஸ், லண்டன் கலாச்சாரங்கள் தாரளமயமாக்கப்பட்டு முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய வர்ணங்களுக்காளாயின.

1888-களிலேயே பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து முக்கிய விவாதம் நடந்தது. 'பிளட்ஸ்டோன்' என்ற பிரமுகர், 'இளைஞர்கள் சமூகத்தின் முதுகுத்தண்டு போன்றவர்கள். அதனால், இளைய சக்தியை திசை திருப்ப வேண்டும். முஸ்லிம் இளைஞர்களை நம் பக்கம் கவர்ந்துவிட்டால்.. இஸ்லாமிய வாழ்க்கை முறையை செயல்பட விடாமல் தடுத்துவிட முடியும்!"- என்ற ஆலோசனையை முன் வைத்தார். அத்துடன் நில்லாமல் மேசையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டி, "இது குர்ஆன்! முஸ்லிம்களின் வழிகாட்டி! இந்த நூலைவிட்டு அவர்களை விலக்க வேண்டும்!"-என்றார். 

இவரது ஆலோசனை ஒருமனதாக ஏற்கப்பட்டது.

பிரச்னைகளின் பிடியில் சிக்கி முஸ்லிம்கள் தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சிலர் நாட்டு விடுதலைக்காக.. சிலர் தொழிலாளர் உலகுக்காக.. இன்னும் சிலரோ 'பாஸிஸம்' வளர்வதற்காக தத்தமது சக்தி-சாமார்த்தியங்களை செலவழித்துக் கொண்டிருந்தார்கள். உலகமே, ரத்தக் களறியாகி.. மனிதகுலம் பிண மலைகளாய் குவிக்கப்பட்ட துயரம் வாய்ந்த நாட்களவை!

இந்த சூழலில் 16 வயதுகொண்ட அந்த துடிப்புள்ள இளைஞர் மனித குலத்துக்கு நேரிய வழியைக் காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். வரவிருக்கும் நவீன அறிவியல் உலகை 'எழுதுகோல்தான்' ஆளப்போகிறது என்ற திடமான தீர்மானத்துக்கு வந்தார். அறிவின் மூல ஊற்றே எழுதுகோல்தானே! திருக்குர்ஆனும் இதற்கு சாட்சியாகவல்லவா இருக்கிறது.

- தொடரும்


0 comments:

Post a Comment