NewsBlog

Monday, February 25, 2013

காலப்பெட்டகம்: 'நூற்றாண்டே சாட்சியாக' - பகுதி - 2



1919 இல், தனது 16 வயதில் அவர் முதன் முறையாக 'ஜபல்பூரிலிருந்து' வெளியான 'தாஜ்' வார இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். மனித உள்ளங்களில் அன்பை பீறிட்டெழச் செய்வது இறைவேதமான திருக்குர்ஆன்தான் என்றும், அதன் பக்கம் திரும்புவது ஒன்றே ஈடேற்றத்துக்கான வழி என்றும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

1920 இல், தாஜ் இதழ் நின்று போனது. அதன் பிறகு அந்த இளைஞர் தில்லி சென்றடைந்தார். தில்லியில் 'ஜமீயதுல் உலமாயே ஹிந்த'  என்ற அமைப்பு 'முஸ்லிம்' என்ற பெயரால் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தது. இப்பத்திரிகையின் ஆசிரியராக அந்த இளைஞர் பொறுப்பேற்றார். தமது அற்புதமான ஆக்கங்களால் முஸ்லிம் சமுதாயத்தில் எழுச்சியை உருவாக்க கடுமையாக உழைத்தார்.

1926 இல், சுத்த சன்மார்க்க சங்கத்தின்   தலைவர் பண்டிட் சச்தானந் கொலை செய்யப்பட்டார். கொலையாளி ஒரு முஸ்லிம் இளைஞர். இச்சம்பவம் காங்கிரஸ் இயக்கத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த கொலையை காந்திஜி விமர்சிக்கும்போது, "இஸ்லாம் இரத்தம் சிந்துவதை ஊக்குவிக்கிறது" என்றும், "இஸ்லாத்தின் துவக்கமும் வாள்தான்! அதன் முடிவும் வாளகவும்தான் இருக்க முடியும்!" - என்று சொன்னார்.

காந்தியின் இந்த கடும் விமர்சனத்தின் மீது பலத்த சர்ச்சைகள் எழுந்தன.

இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்ட இந்த அபாண்டம் பெரும் பிரச்னையாக வடிவெடுத்தது.

இச்சமயத்தில், மௌலானா 'முஹம்மது அலி ஜவஹர்' தில்லியின் ஜாமியா மஸ்ஜிதில் அவசரகால கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி சொற்பொழிவாற்றினார். அப்போது அவர், "காந்தியின் விமர்சனத்துக்கு யாராவது தக்க விளக்கமளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"- என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.



கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்த இளைஞர் மௌலானா முஹம்மது அலி ஜவஹரின் சொற்பொழிவைக் கேட்டு பெரிதும் பாதிக்கப்பட்டார். மௌலானாவின் கேள்வி, "காந்தியின் விமர்சனத்துக்கு யாராவது தக்க விளக்கமளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"- அவரது நினைவில் எழுந்து அவரது தூக்கத்தைப் பறித்துவிட்டது. அதன் விளைவாக, 'அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்' (இஸ்லாத்தில் ஜிஹாத்தின் உண்மை நிலை) என்ற புத்தகத்தை எழுதினார். உலகில் அமைதியை நிலைநாட்ட வந்த இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கிறது என்ற தவறான கருத்தைக் கொண்டோருக்கு அது தக்க பதிலாக இருந்தது. மேற்கத்தியவாதமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என்று நினைத்துவந்த உலகத்தாருக்கு அந்த இளைஞரின் எழுதுகோலிலிருந்து பிறந்த அற்புதம் அது.

'இஸ்லாம் ஜிஹாத்' என்ற பெயரில் 'அல் ஜமியத்' பத்திரிகையில் (அந்த இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) அவருடைய ஆக்கங்கள் வெளிவரலாயின. அதன் பிறகு அது 500 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அச்சிடப்பட்டது. இஸ்லாமிய இலக்கியத்தில் இன்றுவரை அந்தப் புத்தகம் பேரிலக்கியமாக போற்றப்பட்டு வருகிறது. மார்க்க அறிஞர்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பொக்கிஷமாக  கருதப்படுகிறது   மகாகவி அல்லாமா இக்பால். 'அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்' என்னும் இந்தப் புத்தகத்தை உயர்ந்த நூல் என்று மனந்திறந்து பாராட்டியுள்ளார்.

மகாகவி அல்லாமா இக்பால்

தமது 24 வயதுக்குள் உலகின் கவனத்தை திசை திருப்ப காரணமான அந்த இளைஞர்தான் இன்று 'மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி' என்று அழைக்கப்படுகிறார்.

1928 இல், ஜமியத்துல் உலமாயே ஹிந்த் அரசியல் சார்புடைய இயக்கமாக மாறியது. 'அல் ஜமியத்' இதழும் கட்சியின் பத்திரிகையாகிவிட்டது. இந்த நடவடிக்கை மௌலானாவுக்கு பிடிக்கவில்லை. அல் ஜமிஅத்துக்கு விடை கொடுத்துவிட்டு 1932 இல், இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எழுதுவதில்  கவனம்  செலுத்த ஆரம்பித்தார்.  இந்த  நேரத்தில் ஹைதராபாத்திலிருந்து 'தர்ஜுமானுல் குர்ஆன்' என்ற பெயரில் மாத இதழ் ஒன்று  வெளிவந்து  கொண்டிருந்தது.  மௌலானா அதன் ஆசிரியராக  பொறுப்பு  ஏற்றுக் கொண்டார். திருக்குர்ஆனில்  ஒளிவெள்ளமே  மானுட பிரச்னைகளுக்கான தீர்வு என்று மனங்கவரும் விதமாக படிப்பவர் உள்ளங்களை ஈர்க்கும்விதமாக எழுதலானார். 

1933-1937 வரை இஸ்லாமிய சித்தாந்தத்தை உள்வாங்கி, சமூக -அரசியல்துறைச் சார்ந்த பல்வேறு புத்தகங்களை மௌலானா எழுதினார்கள். அப்போது எழுதப்பட்டவைதான் வட்டி, பர்தா, கணவன்-மனைவி உரிமைகள் மற்றும் கடமைகள், இஸ்லாத்தில் குடும்பக் கட்டுப்பாடு போன்ற உயரிய வாழ்வியல் இலக்கியங்கள். 

இவ்வெளியீடுகள் மேற்கத்திய பிரச்சார சாதனங்களுக்கு பெருத்த தலைவலியாக மாறின. இஸ்லாம் மற்றும் அதன் உன்னத கருத்துக்களை சகித்துக் கொள்ள அவை தயாராக இல்லை. சுரண்டலற்ற, கண்ணியம் வாய்ந்த இஸ்லாமிய சமூக அமைப்பை ஜீரணிக்க மேற்குலக ஆதிக்க சக்திகளால் முடியவில்லை.

மௌலானாவின் புத்தகங்கள் இஸ்லாமிய உலகில் பெரும் அறிவு புரட்சியைத் தோற்றுவித்தன. அதிலும் குறிப்பாக முதலாளித்துவத்துக்கும், கம்யூனியஸத்துக்கும் மூளைச் சலவைச் செய்யப்பட்டிருந்த இளைஞர்களின் உள்ளங்களை ஈர்த்துக் கொண்டன.

- இன்னும் வரும்.

0 comments:

Post a Comment