NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Sunday, August 30, 2020

நல்லவன் வாழ்வான்

நேற்றைய பத்திரிகைகளில் வசந்தகுமாருக்கான அஞ்சலிச் செய்திகளே பெரும் பகுதியாய் இடம் பெற்றிருந்தன. அவர் இருக்கும்போது நாம் நினைத்துப் பார்க்காத அவரது வியாபார ஆளுமைத் திறனை அவர் இறந்த பிறகுதான் பலரும் சொல்ல கேட்டு, நாம் வியந்து கொண்டிருக்கிறோம்.

நிஜமாகவே அவர் ஒரு வியாபார சக்கரவர்த்தி என்பது இப்போது நமக்குப் புரிகிறது. அவர் நடத்திய அந்த சாம்ராஜ்யம் அவரது மகனால் விரிவடைய வேண்டும்.

தகப்பனுக்கு பிள்ளை செய்யக்கூடிய உதவியே தகப்பனின் பெயரை காப்பாற்றுவதுதான். அதுமட்டுமல்ல வசந்தகுமார் சாதிமத பேதமில்லாமல் எல்லா மக்களோடும் எளிமையாக பழகியவர். இத்தகைய அருங்குணம் அவரது மகனுக்கும் வரவேண்டும். காங்கிரஸ் பேரியக்கத்தில் அவர் காட்டிய பாரம்பரிய பாசம் பட்டுப் போய்விடாமல் அவர் மகன் அதைத் தொடர வேண்டும்.

பாசிசத்தின் கதை முடித்த கதநாயகன் அண்ணாச்சி வசந்தகுமார். அவரது வழியில் அவர் மகனும் நடைபோட வேண்டும் .

வரவிருக்கும், இடைத்தேர்தலிலும் வசந்தகுமார் மகனுக்கே நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதே தொகுதிமக்களின் பேராவல். அது எனது விருப்பமும்கூட. அதனால், நிலைமையை இப்போதே நான் சொல்லி வைக்கிறேன்.

வசந்தகுமார் அண்ணாச்சிக்கும் எனக்கும் சொல்லிக்கொள்ளும் விதமான பழக்கம் கிடையாது. ஒரு பெருநாள் தொழுகையின்போது ஈத்கா  (சிறப்புத் தொழுகைகளுக்கான திடல்) மைதானத்திற்கு வந்திருந்த அவரோடு ஒரு படம் எடுத்துக் கொண்டதோடு சரி.  உருவத்தைப் பார்த்தோ என்னவோ அவருடைய விஷேச புன்னகையுடன் ரொம்ப கண்ணியமாக என்னை விசாரித்து மரியாதை தந்தார் அப்போது.

அண்மையில், அருமை அண்ணன் தக்கலை அப்துல் வாகித் மறைந்த செய்தியறிந்து அவரது உடலை பார்க்கச் சென்றிருந்தேன். பார்த்துவிட்டு நான் வீட்டுக்கு வரும் வழியில் எதிரே வசந்தகுமார் அண்ணாச்சி காரில் வந்து கொண்டிருந்தார். அவரும் வாகித் அண்ணன் வீட்டுக்குத்தான் வந்து கொண்டிருந்தார்.

என்னைக் கண்டதும் காரின் வேகத்தைக் குறைத்து, என்னிடம் அதே விஷேசச் சிரிப்போடு, “நல்லா இருக்கீங்களா?” - என்று விசாரித்துச் சென்றார்.

ஒரே ஒருமுறை சந்தித்த சந்திப்பை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறாரே என்று நினைத்து எனக்கு வியப்பாக இருந்தது.

நேற்று நண்பர் ‘சித்திக் ஹஸன்’ (Siddique Hassan),

“ரொம்ப நல்லவனா இருக்குறதே தப்பு. வசந்தகுமார் அண்ணாச்சி ரொம்ப நல்லவனா இருந்தாரு. இப்போ எதிர்பாராத நிலையில இறந்துட்டாரு. மனசு தாங்கலே"ன்னு சொல்லி புலம்பினாரு.

வசந்தகுமார் அண்ணாச்சி, நல்லவனாக இருந்ததால்தான் இன்றைக்கும் நாம் அவரை பாராட்டுகிறோம். இத்தகைய சாதனையாளர்களின் சிறப்பே அவர்கள் மறைந்த பிறகும் அவர்களை நினைவு கொள்ள சிலவற்றை விட்டுச் செல்வார்கள்.

வசந்தகுமார் அண்ணாச்சியும் அத்தகைய பல நினைவுகளை நிச்சயம் விட்டு சென்றிருக்கிறார். வீடுதோறும், அவரது ஷவசந்த் அண்ட் கோ’வில் வாங்கிய பொருட்கள் ஏதாவது இல்லாமல் இருக்காது. எங்கள் வீட்டிலும் அவரது கடையில் வாங்கிய  ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருக்கின்றன.

ஆமாம்! மதிப்பான பொருட்கள்தான்.

ஒரு சாதாரண எளிய பணியாளராய் வாழ்க்கையைத் தொடங்கி, உழைப்பை மூலதனமாக்கி வாழ்வில் உயர்ந்து காட்டிய ஒரு மதிப்புமிக்க மனிதரின் மதிப்புமிக்க பொருட்கள் அவை.

அண்ணாச்சி வசந்தகுமாரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

''''''''''''''''''''''''' 

ஆக்கம்: அபு ஹாஷிமா (Abu Haashima-https://www.facebook.com/abuhaashima)

Saturday, August 29, 2020

வண்ண நண்டு


 

விமர்சனங்களைத் தாண்டி சாதனைப் படைத்த 'அரே ஓ சம்பா!' - ஷோலே

 

இந்த மாதம் 45-ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது என்றும் பசுமையான இந்திப் படமான "ஷோலே" (Cult movie).

கமல், ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ‘அபூர்வ ராகங்கள்’ வெளிவந்த ஆகஸ்ட் 15, 1975-ஆம் ஆண்டில்தான் இந்தப் படமும் வெளிவந்தது.

அப்பா தயாரிப்பில் மகன் ரமேஷ் சிப்பி இயக்க,  ஆர்.டி.பர்மன், சலீம்-ஜாவேத் கூட்டணி அமைந்திருந்தனர்.

‘அந்தாஸ்’ (1971), ‘சீதா அவர் கீதா’ (1972) போன்ற படங்களுக்குப் பிறகு, இயக்குநர் ரமேஷ் சிப்பி ஹாலிவுட் பாணியில் ஒரு படம் எடுக்க எண்ணி அதனை ஜாவேத் அக்தரிடம் தெரிவித்தார். சலீம் ஜாவேத் இரட்டையர்கள் ‘ஷோலே’யின் ஒரு வரிக்கதையை ரமேஷ் சிப்பியிடம் சொல்ல, பின்னர் ஏகப்பட்ட மாற்றங்களுடன் திரைக்கதை உருவானது.  நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். 1973-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதியில் படப்பிடிப்பு தொடங்கியது.

1950-களில் குவாலியர், ராம்கார் (Ramgarh) பகுதியில் இருந்து கொண்டு பக்கத்துக் கிராமங்களில் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவன் கப்பர் சிங். தன்னிடம் பிடிபடும் காவலர்களின் காது, மூக்குகளை வெட்டிக் காவலர்களை நடுச்சாலைகளில் போட்டுவிடும் அளவு கொடியவன் அவன்.

இந்த உண்மைச் சம்பவமும், திலீப்குமார் கொள்ளையனாக நடித்து வெற்றி பெற்ற ‘கங்கா ஜமுனா’ (Gunga Jumna -1961) மற்றும் பாக்கிஸ்தானியப் படைப்பாளர் இப்னே ஷபியின் (Ibn-e-Safi ) உருது நாவலின் பாத்திரங்களும் இயக்குநர் ரமேஷ் சிப்பிக்கு உள்ளூக்கம் தந்தன. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, நூறு விழுக்காடு வில்லனாக உருப்பெற்றதுதான் கப்பர் சிங் பாத்திரப் படைப்பு.

இந்தப் படத்தின் சக்திவாய்ந்த, கொடூரமானக் கொள்ளைக்காரன் பாத்திரமான கப்பர் சிங் வேடத்தில் நடிக்க முதலில் டேனியை (Danny Denzongpa) ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இயக்குநர் சங்கரின் ‘எந்திரன்’ படத்தில் ரஜினிக்கு  வில்லனாக டாக்டர் போரா பாத்திரத்தில் நடித்த அதே டேனிதான் அவர்)

அந்த நேரத்தில் டேனி ஏற்கனவே இயக்குநர் ஃபெரோஸ்கானின் ‘தர்மாத்மா’ படத்திற்குக் கால்ஷீட் கொடுத்திருந்ததால் ‘ஷோலே’ ஒப்பந்த்த்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில், தர்மேந்திரா, அமிதாப் இருவரும் கப்பர் சிங் பாத்திரத்தில் நடிக்க விரும்பினார்கள். பின்னர் வில்லன் பாத்திரம் தங்களது இமேஜைப் பாதிக்கலாமென எண்ணி அந்த எண்ணத்தைக் கைவிட்டனர் என்பதை ‘ஷோலே’ நாற்பதாவது ஆண்டு விழாவில் இயக்குநர் ரமேஷ் சிப்பி நினைவு கூர்ந்தார்.

இயக்குநர் ரமேஷ் சிப்பி வழக்கமான வில்லன்களிலிருந்து கப்பர் சிங்கை மாற்றிக் காட்ட விரும்பினார். அதற்காக வில்லனின் உடை மற்றும் வழக்கு மொழிகளில் மாற்றம் கொண்டு வந்தார். 'கப்பர் சிங்'கிற்கு ராணுவ உடை அணிவித்தார். வில்லனின் மொழியை வட இந்தியாவில் புகழ்பெற்ற  காரிபோலி (Khariboli) மொழியுடன், இந்தியைக் கலந்து பேச வைத்தார்.

இத்தகைய ஒரு சூழலில்தான் நாடக மேடைகளில் வளரிளம் பருவ நடிகராக வலம்வந்து, ‘ஹிந்துஸ்தான் கி கசம்’ (1973) படத்தில் அறிமுகமாகியிருந்த அம்ஜத்கானைக் கப்பர் சிங் பாத்திரத்திற்குச் சிபாரிசு செய்கிறார்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள்.

தாடி வளர்க்கவிட்டு, ஃபோட்டோ ஷூட் நடத்தியதில், அச்சு அசலாக இயக்குநரின் 'கப்பர் சிங்' பாத்திரத்திற்குப் பொருந்திப் போனார் அம்ஜத்கான்.

வில்லனாகத் தேர்வுசெய்யப்பட்ட பிறகு, ‘சம்பல் கொள்ளையர்கள்’ குறித்து ஜெயபாதுரியின் (ஜெயாபச்சன்) தந்தை தருண்குமார் பாதுரி எழுதி வெளிவந்த நூலான ‘அபிஹ்ஷாப்த் சம்பல்’ (Abhishapth Chambal) படித்துத் தனது பாத்திரத்திற்கு மெருகேற்றினார் அம்ஜத்கான்.

‘ஷோலே’ யின் முக்கியமான இரயில் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு ஏழு வாரங்கள் நீடித்தது. அப்போதெல்லாம், ஏழு வாரங்களில் ஒரு படமே எடுத்துவிடுவார்கள். இப்போதிருப்பது போல் VFX தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல், கிடைத்த தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வெடிபொருட்கள், துப்பாக்கிகள், ஸ்டண்ட் நடிகர்கள், குதிரைகள் என ஏற்பாடு செய்து, ரயில் சண்டைக் காட்சியை எடுத்து முடித்தார்கள் என்பது வியப்பானது.

யே தோஸ்தி ஹம் நஹி தோடெங்கே,
தோடெங்கே தம்-மகர்,
தேரா சாத் னா சோடெங்கே .....

(We will never break our friendship
Till my last breath
I will not leave your side ..)


என்ற நட்பின் பெருமை பேசும் பாடலில் தர்மேந்திரா பைக் ஓட்டுவார். பைக்கின் 'சைட் கார்' படுக்கை வசதிகளுடன் தனியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும். தர்மேந்திரா அமிதாப் என மாறி மாறி அதில் அமர்ந்திருப்பார்கள்.

பாடலின் முடிவில் அமிதாப் தோள் மீது தர்மேந்திரா அமர்ந்திருந்து 'மௌத் ஆர்கன்' வாசிக்க, அமிதாப் விசிலடிக்க, பைக் பறக்க கிஷோர்குமாரும் மன்னாடேயும் தங்கள் மந்திரக் குரலால் அசத்தியிருப்பார்கள். இந்தக் காட்டசி 21 நாள் எடுக்கப்பட்டது.

படப்பிடிப்பினூடேதான் ஜெயா பாதுரி தன் முதல் குழந்தை ஸ்வேதாவைப் பெற்றெடுத்தார். அந்த ஸ்வேதாதான் இப்போது, மாடலாக, படைப்பாளராக, பத்திரிகையாளராக டெலி நடிகராக தூள் பரப்பிக் கொண்டிருக்கிறார்.

‘ஷோலே' படப்பிடிப்பின்போது, ஜெயா பச்சன், நான்குமாதக் கருவாக அபிஷேக் பச்சனைச் சுமந்து கொண்டிருந்தார். இதுவும் படம் விரைந்து வெளியிட முடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்றானது.

'ஷோலே' திரைப்படம் ஒட்டு மொத்தமாக உருவாகி வெளியிட 500 நாட்களாயின.

குரோசாவா அகிராவின் (Akira Kurosawa) வின் பிரசித்திபெற்ற ஜப்பானியத்  திரைப்படம் ‘Seven Samurai’ (1954). 16-ஆம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் (1586) நடந்த ஜப்பானிய வரலாற்றின் நிகழ்வைக் கொண்டு எடுத்த திரைப்படம்.

ஒரு மலைக்கிராமத்தின் அறுவடைக்குக் காத்திருக்கும் மொத்தப் பயிர்களையும் கொள்ளையடிப்பார்கள் கொள்ளையர்கள். அந்தக் கொள்ளையிலிருந்து, பயிரைக்  காப்பாற்றுவதற்காக ஏழு சாமுராய்களை வாடகைக்கு அமர்த்துகின்றனர் மலைக்கிராம விவசாயிகள். இந்த மூலக் கதையிலிருந்துதான் ‘ஷோலே’ திரைப்படமானது.

ரயில் சண்டைக்காட்சியை எடுத்துக் கொண்டால், 1903 ஆம் ஆண்டு வெளிவந்த பேசாபடமான ‘The Great Train Robbery’ படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டதாகும்.

‘ஷோலே’யில் பயங்கர ஆயுதங்களோடு யாருக்கும் அடங்காத கொள்ளைக்காரன் கப்பர் சிங்கைப் (அம்ஜத்கான்) பிடிக்க இரண்டு கிரிமினல்களை (தர்மேந்திரா, அமிதாப்பச்சன்) கூலிக்கு அமர்த்துகிறார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான சஞ்சீவ் குமார். இதுதான் திரைப்படத்தின் கரு

‘மெஹ்பூபா மெஹ்பூபா,
குல்ஷன் மெய்ன் குல் கில்தே ஹே,
ஜப் செஹ்ரா மெய்ன் மில்தே ஹே,
மெய்ன் அவுர் தூ’ 

- என்ற புகழ்பெற்ற ‘ஷோலே’ பாடல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தனித்த கிரேக்கப் பாடகர் டெமிஸ் ரூசோஸின் (Demis Roussos)

‘Say You Love Me
Of all the things you're telling me,
I ever heard you say’ 

-என்ற பாடலிலுள்ள ராகத்தின்  அப்பட்டமான ஜிராக்ஸ் பிரதிதான் என அப்போது விமர்ச்சனமும் எழுந்தது. ஆனால், ‘மெஹ்பூபா’ பாடலுடன் நில்லாமல், ஒரு சரித்திரமும் சொல்லும்.

கப்பர் சிங்கிற்கு ஆயுதம் வழங்கும் ஜிப்ஸிகள் கப்பர் சிங் தங்கள் பகுதிக்கு வருவதைத் தாக்கூருக்குத் (சஞ்சீவ் குமார்) தெரிவிக்க, வீருவும் (தர்மேந்திரா) ஜெய்யும் (அமிதாப்) கப்பர் சிங்கைப்பிடிக்க ஜிப்ஸிகள் பகுதிக்கு வருகை தருவார்கள். அப்போது, ஆடலர் ஹெலனும், ஜலால் ஆகாவும் பிரத்யேக தோற்றத்தில் ஆடிப் பாடுவார்கள். இந்த பாடலுக்கு ஃபில்ம் ஃபேரின் சிறந்த பாடகர் விருது, பாடகர் ஆர்.டி. பர்மனுக்குக் கிடைத்த்து. பின்னாளில் இந்த பாடலின் ராகம், பாடகர் மகேஷ் குமாரினால் மும்பையின் திருமண மண்டபங்களில், ‘லட்டு லா லட்டு லா, மிர்சிஸ் மூ ஜல்தா ஹை’ என்ற வரிகளோடு  வரலாறானது. ஆர்டி பர்மனும், ஆனந்த் பக்சியும் கலை ரசிகர்களின் உள்ளங்களை இதுவரையிலும் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதும் உண்மை.

107 நிமிடத்திற்குப் பிறகுதான் கப்பர் சிங் திரையில் தோன்றுவார். அதுவரை அவரைச்சுற்றியே கதை இயங்கிக் கொண்டிருக்கும்.

தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், அம்ஜத்கான், ஹேமமாலினி, அமிதாப் பச்சன், ஜெயபாதுரி, அஸ்ரானி, ஜெக்தீப், ஹெலன் என நடிகர் பட்டாளம் அணிவகுத்து நிற்கும்.

படத்துக்கு முன்பதிவு பிரமாதமாக இருந்தது. ஆனால், சொல்லி வைத்தார் போல, எல்லா பத்திரிகைகளும் ‘படம் தேறாது’’ என்று விமர்சனம் எழுதியதால், மொத்த திரைப்பட யூனிட்டும் அதிர்ச்சிக்கு ஆளானது.

முதல் வாரத்தில் இயக்குநர் ரமேஷ் சிப்பி குழம்பித்தான் போனார். பம்பாய் மினர்வா அரங்கம் நிறைந்த இருக்கைகளுடன் நிசப்தமாகவே இருந்தது. விநியோகிஸ்தர்கள், விளம்பரதாரர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் ‘இது தங்கள் பேரழிவின் தொடக்கமோ?’ என்று அச்சப்பட்டதாக பின்னாளில் அறிவிக்கிறார்கள்.

இந்தியா டுடே (India Today) இதழின் புகழ்பெற்ற திரை விமர்ச்சகர், கே.எம்.அல்மாதி, "எல்லாமே முடிந்துவிட்டது. சக்திவாய்ந்த உரையாடல்களால் கூட ஒரு கைதட்டலையோ, விசில் சத்தத்தையோ ரசிகர்களிடமிருந்து பெறமுடியவில்லை!" - என்று எழுதினார்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறியது. அகன்ற திரையிடலும், ஸ்டீரியோ ஃபோபோனிக் ஒலி அமைப்பின் தன்மையும் ரசிகர்களை இருக்கைகளுடன் கட்டிப் போட்டுவிட்டதே உண்மை. பம்பாய மினர்வா அரங்கின் கைதட்டல், விசில் சத்த ஒலிகள், அமிதாப் தர்மேந்திராவின் மரணக் கணங்கள சிதறடிக்க, ஜெயபாதுரி வருகை அரங்கில் கண்ணீரால் நிறைத்த்து.

இரண்டு ஆண்டுகள் ஓடிய ‘பர்சாத்’,  (Barsaat-1949), மூன்று ஆண்டுகள் ஓடிய ‘முகல்லே ஆஸம்’, (Mughal-e-Azem- 1960), மூன்றரை ஆண்டுகள் ஓடிய ‘கிஸ்மத்’ (Kismet-1943) இவைகளின் சாதனைகளை ஷோலே முறியடித்தது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து ஓடி சரித்திரச் சாதனை புரிந்தது.

சென்னை சத்யம் திரையரங்கில் ஓராண்டிற்கும் அதிகமாக வழக்கமான திரையிடலில் (ரெகுலர் காட்சிகளாக) ஓடிய முதல் தமிழல்லாத படம் ‘ஷோலேவாகத்தான் இருக்கும்!

வெறும் 3 கோடி பட்ஜெட்டில் உருவான ‘ஷோலே’ 30 கோடி வசூலை அள்ளித் தந்த்து. ரஷ்யாவில் மட்டும் ஆறு கோடி ரசிகர்கள் ‘ஷோலே’ படத்தை ரசித்துப் பார்த்திருக்கிறார்களாம்.

கடந்த 50 ஆண்டுகளில் மக்களின் மனம் கவர்ந்த மிகப் பெரிய வில்லன்கள் பட்டியலில் அம்ரீஸ் பூரி (Mr India), ராமதிர் சிங் (Gangs Of Wasseypur),  பிரேம்நாத் (Bobby),  ரன்வீர் சிங் (Padmaavat), சஞ்சய் தத் (Kancha Cheena) போன்றோரைப் பின்னுக்குத் தள்ளி பட்டியலில் முதலிடத்தில் 'கப்பர் சிங்' அம்ஜத்கான்தான் அமர்ந்துவிட்டார்.

‘ஷோலே’ திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணம், கதை சொன்னவிதம், முதன் முறையாக ஸ்டீரியோஃபோனிக் ஒலி அமைப்பில் அசத்திய பிரம்மாண்டக் காட்சிகள், இந்தியாவின் முதல் அகன்ற 70 எம். எம். திரையிடல், பாடல்கள், காட்சிகள் படமாக்கப்பட்ட விதங்கள், இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்கள், புதுமையான அமிதாப்பின் மேனரிஸங்கள், கப்பர் சிங் வில்லன் பாத்திரம், சாதாரண ரசிகனைத் திருப்திப்படுத்தும் விதங்கள் எனச் சொல்லிக் கொண்டேபோகலாம்.

முதன்முறையாக இந்தியத் திரைப்பட வரலாற்றில் 100 திரையரங்குகளில் வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் படம் ‘ஷோலே’. அத்துடன் 60 திரையரங்குகளில் பொன்விழாவும் கண்ட படம் அது.

2002 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவின் மிகச்சிறந்த 10 திரைப்படங்களில் ‘ஷோலே’ முதலிடத்தைப் பிடித்தது. 2005 ஆம் ஆண்டு நடந்த 50-ஆம் ஃபில்ம்-ஃபேர் விருது விழாவில் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த படமாகவும் ‘ஷோலே’ விருதுபெற்றது.

2014 ஆம் ஆண்டு ஜனவரியில் 3 D வடிவிலும் ‘ஷோலே’ மறுவெளியீடு செய்யப்பட்டது. படத்தின் ஒலிச்சித்திரம் மற்றும் உரையாடல்கள் தனித்தனி  இசைத்தட்டுகாளாக வெளியாகிச் சாதனைகள் படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு படம் வெளியீட்டிற்கு முன், வெற்றிபெறுமா, பெறாதா என்பது பற்றிய முடிவை எந்தக் கொம்பனாலும் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் வெற்றி பெற்ற பிறகு, ‘எதனால் படம் வெற்றி பெற்றது?’ அல்லது ‘தோல்வியுற்றது?’ என்பதனை விளக்க ஒரு கோஷ்டியே வரிசைகட்டும் என்பார் சுஜாதா.

ஷோலே’ வெற்றிக்குப் பிறகு அப்படித்தான் எண்ணற்ற கட்டுரைகள், விமர்ச்சனங்கள் வந்தன. அவற்றில் சுவாரஸ்யமான விசயங்கள் இவை:

‘ஷோலே’ வெற்றிக்குப் பிறகு இந்தித் திரைப்படங்களின் வில்லன் பாத்திரங்களில் அம்ஜத்கானின் கப்பர் சிங் மேனரிஸங்கள், உரையாடல் பாணிகள் எனப் பாலிவுட் மாறத் தொடங்கியது.

பாலிவுட.டின் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளைத் தூங்கவைக்க, ‘இப்ப தூங்கலன்னா கப்பர் சிங் வந்துருவான்’ (soja beta warna gabbar jaigea -sleep baby else Gabbar will come) என்பது போன்ற வசனங்களைப் பேசத் தொடங்கினார்கள்.

ஒரு வில்லன் விளம்பரப் படத்தில் நடிப்பதைத் தொடங்கி வைத்தவர் அம்ஜத்கான். ‘கப்பர் சிங்’ பாத்திரமாகவே பிரிட்டானியா குளுகோஸ் பிஸ்கட் விளம்பரப் படத்தில் ஒருவர் நடித்தார் (Popularly known as Gabbar Ki Asli Pasand)

இந்த அம்ஜத்கானைத்தான் சுஜாதாவின் கதையில் உருவான ‘விக்ரம்’ (1986) படத்திற்குச்  சலாமியா நாட்டின் சுல்தானாகக் கொண்டுவந்தார் கமல்ஹாஸன்.

‘ஷோலே’யின், பிரம்மாண்ட வெற்றியின் 16 ஆண்டுகள் கழித்து, மீண்டும் 1991-ஆம் ஆண்டு, அம்ஜத்கானைக் கதாநாயகனாக வைத்து ‘ராம்கர் கி ஷோலே’, (Ramgarh Ke Sholay) என்ற பகடிப் படம் ஒன்றும் வெளிவந்த்து.

‘ஷோலே’ படம் பற்றிய சில புத்தகங்கள்கூட வெளியாகியிகியுள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதானால், பென்குவின் வெளியீடாக 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Sholay : The Making of a Classic’ என்ற நூலை சொல்லலாம்.

‘ஷோலே’ குறித்து இந்தியா முழுவதும் நிறைய விவாதங்கள், ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இரட்டையர்களில் ஓருவரான ஜாவேத் அக்தர், ஒரு நேர்காணலில் ‘ஷோலே’ படத்தின் கதை பல வரலாறுகளைக் கண்டது என்று கூறியிருக்கிறார்.

‘ஷோலே’ திரைப்படத்தில் மேற்கத்தியப் படங்களின் சாயல் இருப்பது விமர்ச்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டன.

உலகத் திரைப்பட வரலாற்றில் புகழ்பெற்ற இயக்குநர்களுள் குறிப்பிடத் தக்கவர் இத்தாலியின் செர்ஜியோ லியோன்.

இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘ஒன்ஸப்பான் ஏ டைம்’ பட வரிசையில், ஹென்றி ஃபான்டா, சார்ல்ஸ் ப்ரான்ஸன் என நட்சத்திரப் பட்டாளம் கலக்கிய ‘ஒன்ஸப்பான்ய  டைமின்தி வெஸ்ட்’ (Once Upon a Time in the West)- படம் 1968 ஆம் ஆண்டு வெளியானது. அதில் முதன் முறையாக வில்லன் பாத்திரத்தில் ஹென்றி ஃபான்டா கலக்கியிருப்பார்.

அந்தப்படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே அமெரிக்காவில் பார்த்துவிட்டதாக ஒரு நேர்காணலில்  குறிப்பிட்டார் ஜாவேத் அக்தர். அதன் பாதிப்பை ‘ஷோலே’யின் பல காட்சிகளில் காணலாம்.

‘ஷோலே’ படத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை விமர்ச்சிக்கும் கட்டுரை ஒன்றைச் சாகித்ய விருதாளர் எஸ். ராமகிருஷ்ணன் 2005 ஆம் ஆண்டு எழுதும்போது, ‘ஷோலே’ திரைப்படம் பத்து ஆங்கிலப் படங்களின் காட்சிகள், கதை வடிவங்களைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். ‘The Great Train Robbery (1903), ‘Seven Samurai ( 1954), ‘Garden Of Evil’ (1954), ‘The Searchers’ (1956), ‘One-Eyed Jacks’ (1961), ‘Once Upon a Time in the West’ ( 1968), ‘Butch Cassidy and the Sundance Kid’ (1969), ‘The Wild Bunch’ (1969) என்று பட்டியல் நீள்கிறது.

இத்தனை படங்களிலிருந்து காட்சிகள், பாத்திரங்களின் மேனரிஸங்கள், பாடல்களின் பாணி, உருவி எடுக்கபட்டிருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தனையும் தங்களது படத்திற்கு தேவையான முறையில் உருமாற்றித் திரைக்கதையை உருவாக்கியவர்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள் (சலீம் அப்துல் ரஷீத்கான், ஜாவேத் அக்தர்) என்கிறார்கள் அவர்கள்.

‘ஷோலே’ படத்தில் வரும் வன்முறைக் காட்சிகள் திடுக்கிட வைக்கின்றன.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்த அம்ஜத்கானின் நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது. ‘படத்தில் வந்த சில காட்சிகள் சாதாரண கற்பனையில் தோன்றக்கூடியவை அல்ல’ - என்கிறார், சாகித்ய விருதாளர் அசோகமித்திரன்.

உலகத்தின் எந்த மூலையில் ஒரு நிகழ்வு நடந்து, மக்கள் அதிகமாகப் பேசத் தொடங்கினால், அதுகுறித்து கருத்துச் சொல்லி ஒரு கட்டுரை எழுதும் பழக்கமுடையவர் இவர். 2008 ஆம் ஆண்டு ஜூலை 21-இல், ‘ஷோலே’ திரைப்படம் பற்றியும் எழுதினார்.

‘கப்பர் சிங்கின் நக்கலான வசன உச்சரிப்பும் சட் சட்டென்று மாறும் முகபாவனைகளும் கவர்ந்திருக்கின்றன. ஆனால், ‘ஷோலே’யின் பெருவெற்றிக்கு அமிதாப்பின் உடல்மொழி முக்கியமான காரணம் - என்பதாகக் குறிப்பிடுகிறார். மேலும், ‘ஷோலே’ எழுபத்தெட்டில்தான் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது என்று நினைக்கிறேன்.  அப்போது நான் பதினொன்றாம் வகுப்பு மாணவன்’ - என்றும் எழுதியிருக்கிறார்.

உண்மை என்னவென்று பார்ப்போம்.

1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள்  இந்தியா முழுவதும் வெளியான ‘ஷோலே’ திரைப்படம், அதே நாளில் சென்னையில் சத்யம், காசினோ, பைலட் திரையரங்குகளில் வெளிவந்தது, மூன்று தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடியதைப் பதிவுசெய்கிறார் இந்தியத் திரைப்பட வரலாற்றாய்வாளரும் தமிழ் சினிமாவின் நடமாடும் தகவல் களஞ்சியமுமான ஃபில்ம் நியூஸ் ஆனந்தன்.

இதுவரை சொல்லப்படாத மிகச்சிறப்பான கதை என ‘ஷோலே’ திரைப்படம் புகழப்பட்டாலும், அதன் திரைக்கதாசிரியர்கள் சலீம் – ஜாவேத் மீது சில விமர்ச்சனங்களும் வந்தன.

1.’பானி அன்ட் க்லைட்’ (1967):

‘க்லைட் பாரோ’ (Clyde Barrow) மற்றும்   எலிஸபெத் பார்க்கர் (Bonnie Elizabeth Parker) - இருவரும் கிரிமினல் இணையர்கள். வங்கிக் கொள்ளைக்குப் புகழ்பெற்றவர்கள். இவர்களின் வாழ்க்கை நிகழ்வைச் சித்தரிக்கும் படம்தான் ’பானி அன்ட் க்லைட் (Bonnie and Clyde’) 1967 ஆம் ஆண்டு வெளியாகி, புதிய ஹாலிவுட் கலாச்சாரத்தை உருவாக்கிய படம் இது. செக்ஸ், வன்முறை, கொடுமையான மரணம் ஆகியவற்றைக் கலந்து கொடுக்கும் புதிய திரைப்படங்களுக்கு மூலப்படமாக அமைந்த படம். விருதுகளைக் குவித்ததோடு, கலாச்சார, வரலாற்று ரீதியான அழகியல் படமென்று 1992-ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய ஃபில்ம் பதிவேட்டில்  பதிவுசெய்யப்பட்ட படம்.

2.’புச் கேசிடி அன்ட் சன்டேன்ஸ் கிட்’ ( 1969) :

வங்கி மற்றும் ரயில் கொள்ளைகளில் ஈடுபட்டு, மரணித்த பின்பும் பல கொள்ளைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையைத் திணறடித்த இரட்டைக் கொள்ளையர்களான புச் கேசிடி மற்றும் சன்டேன்ஸ் கிட் ஆகிய இருவரின் வாழ்க்கையைப் பிரதிபலித்த படம் இது.

பால் நியூமனும் ராபர்ட் ரெட்ஃபோர்டும் இரட்டைக் கொள்ளையர்களாகக் கலக்கிய படம். பல விருதுகளையும் பெற்றது. 2003 ஆம் ஆண்டு அமெரிக்க நூலகக் காங்கிரஸின் தேசிய ஃபில்ம் பதிவேட்டில் (National Film Registry) பதிவுசெய்யப்பட்ட திரைப்படம் ‘புச் கேசிடி அன்ட் சன்டேன்ஸ் கிட்’, (Butch Cassidy and the Sundance Kid-1969) இந்த இரண்டு படங்களையும் உல்டா பண்ணி ‘ஷோலே’ திரைப்படத்தில்  தெளித்திருக்கிறார்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள் என்ற விமர்ச்சனம் அது.

இந்த விமர்ச்சனம் ஒருவேளை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ‘ஷோலே’யின் அற்புதக் கேமிராக் கோணங்கள், இயக்கம், மக்களோடு ஒன்றெனக் கலந்திட்ட வசனங்கள், நடிகர்களின் இயல்பான நடிப்பு, பாடல்கள், தர்மேந்திரா - அமிதாப் வசனங்களில் தெறிக்கும் நட்பின் மேன்மை போன்றவை சினிமா இதயங்களை இன்னும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

படத்தில் கப்பர் சிங்கின் வசனமொன்று வரும், "கப்பர் கே டாப் சே தும்ஹே ஏக் ஹை ஆத்மி பச்சா சக்தா ஹை, ஏக் ஹை ஆத்மி ... குட் கப்பர்" (There is only one man who can save you from Gabbar's heat, only one man...Gabbar himself.) இந்த வசனத்திலிருந்து நாம் புரிந்துகொள்வது இதுதான்:

‘உங்களைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். நீங்கள்தான் உங்களைக் காப்பற்றிக் கொள்ளவேண்டும். தற்போதயக் கொரோனா தீநுண்மி கிருமித் தொற்றும் அதைத்தான் நமக்குக் கற்றுத் தந்துகொண்டிருக்கிறது.

'''''''''''''''''''''''

விமர்சகர்: பென்ஸி. (Kadayanallur Benzy - https://www.facebook.com/kadayanallur.benzy)

Friday, August 28, 2020

வெற்றிப்படிகட்டுகளை தொட்டுக் காட்டியவர்!


 
இனி பணியாளராகவே இருக்க கூடாது; முதலாளியாகதான் இருக்க வேண்டும் என்று லட்சிய வேட்கையுடன் செயல்பட்டு கடைசியில் தனது இலக்கை அடையவும் செய்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''
கையில் ஒரு பைசாவும் இல்லாத்தால் மூடிகிடந்த நண்பரின் கடையை கேட்டு வாங்கி திறந்தார். பெயர் பலவை மாட்டவும் வசதி இல்லாத்தால் எதிர் கடையிலிருந்த ஒரு பலகையில் தன் கையாலேயே சொந்தமாக எழுதி பெயர்ப்பலகையை மாட்டினார். நாற்காலிகள் செய்யும் நண்பரிடம் ரூ.25 க்கு நாற்காலிகளை வாங்கி முப்பது ரூபாய்க்கு விற்று விற்பனையைத் துவக்கினார். முழு தொகையை தர முடியாதவர்களிடம் பாதி தொகையைப் பெற்றுக்  கொண்டு மீதத் தொகையை நாள்தோறும் ஒவ்வொரு ரூபாயாக பெற்றுக் கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950-ஆம் ஆண்டு பிறந்தவர் வசந்தகுமார். பட்டப்படிப்பு முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்தவர், 1970-களில் விஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றினார்.

அதன்பின் அந்தப் பணியிலிருந்து வெளியேறியவர் இனி பணியாளராகவே இருக்க கூடாது; முதலாளியாகதான் இருக்க வேண்டும் என்று லட்சிய வேட்கையுடன் செயல்பட்டு கடைசியில் தனது இலக்கை அடையவும் செய்தார்.

அதிலும் சாமான்யர்கள் எளிதில் வீட்டுப் பொருட்கள் வாங்கும் விதமாக தவணைமுறையில் வசந்த் அண்ட் கோ என்ற பெயரில் துவங்கிய அவரது நிறுவனம் வெகுவிரைவிலேயே பிரபலமானது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் என்று ஆலமரமாய் மொத்தம் 64 கிளைகள் பரப்பி படர்ந்து நின்றது. 2008-இல், வசந்த் தொலைக்காட்சி துவக்கப்பட்டது. தனது உழைப்பால் உயரிய படிக்கட்டுகளை அடைந்த வசந்தகுமார் தனது அனுபவங்களை தொகுத்து "வெற்றிப்படிக்கட்டு" என்ற பெயரில் சுயசரிதையாக்கினார். அந்தப் புத்தகத்தை நடிகர் ரிஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தலைமையில் வெளியிட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான குமரி ஆனந்தனின் சகோதரர்தான் வசந்தகுமார். 2006 மற்றும் 2016ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.

2019ல் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் இன்று 28.08.2020 மாலை காலமானார்.

Thursday, August 27, 2020

உலக நாடுகளுக்கு, சமநீதி பாடத்தை போதிக்கும் நியூஸிலாந்து

"நீங்கள் செய்த குற்றங்கள் கொடுமையானவை. சாகும் வரை உங்களை சிறையில் வைத்தாலும், நீங்கள் செய்த குற்றத்துக்கு அந்த தண்டனை போதாது"

குற்றவாளியின் நடவடிக்கைகள் ‘மனித நேயமற்ற செயல். அவர் யார் மீதும் கருணை காட்டவில்லை"

நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் கடந்த ஆண்டு இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின்போது, கிரைஸ்ட்சர்ச் நீதிமன்ற நீதிபதி கேமரன் மேண்டர் வியாழக்கிழமை (27.08.2020) அன்று வெளியிட்ட தீர்ப்பில் தெரிவித்த வாசகங்கள் இவை.

குற்றவாளி, பரோலில் கூட வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் சாகும் வரை சிறையிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் இவ்வாறு தண்டனை விதிக்கப்படும் முதல் நபர் இவன்.

பரோல் இல்லாமல் வாழ்நாள் சிறை தண்டனை என்றால், தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி, ஒரு குறிப்பிட்ட காலம் சிறையில் இருந்த பிறகு அவருக்கு வெளியே வர அனுமதி வழங்கப்படாது. இதுபோன்ற தண்டனைகள், மிகவும் மோசமான கொலையாளிகளுக்கே வழங்கப்படும். நியூஸிலாந்தின் சட்ட அமைப்பில் மரண தண்டனை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

டர்ரன்டுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டென் கூறுகையில், "குற்றவாளியை பற்றி இனி சிந்திக்கவோ, அவர் கூறுவதை கேட்கவோ நமக்கு இனி எதுவும் இல்லை என்பதே இத்தீர்ப்பின் பொருள். தீவிரவாதி என்று குறிப்பிடப்படும் நபர் குறித்து கேட்பதோ பேசுவதோ இதுவே கடைசி நாளாக இருக்கும் என நம்புகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிரைஸ்ட்சர்ச்சில் நடந்தது என்ன? 

 

கடந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி அங்குள்ள இரு மசூதிகளில் துப்பாக்கியுடன் நுழைந்த 29 வயதான ஆஸ்திரேலியாவை சேர்ந்த குற்றவாளி வெள்ளையின மேலாதிக்கவாதியான பயங்கரவாதி ப்ரென்டன் டர்ரன்ட் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டான்.

முதலில் அல்-நூர் மசூதியில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சுட, 30 விநாடிகள் கழித்து தனது காருக்கு சென்று மீண்டும் ஒரு ஆயுதத்தை எடுத்து வந்து மீண்டும் மசூதிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை சுட ஆரம்பித்தான்.

தனது நெற்றியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் அவர் அந்த சம்பவத்தை ஃபேஸ்புக்கில் நேரலை செய்தான்.

பின்னர் லின்வுட் இஸ்லாமிய மையத்திற்கு காரில் சென்றவன், அங்கு வெளியே இருந்த இரு நபர்களை சுட்டதோடு, அதன் ஜன்னல்களிலும் சுட்டான்.

உள்ளிருந்த வந்த நபர் ஒருவர் வெளியே ஓடிவந்து, பயங்கரவாதி ப்ரென்டன் டர்ரன்ட் பயன்படுத்திய துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து, அவனை துரத்தினார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இரு போலீஸ் அதிகாரிகள், பயங்கரவாதி ப்ரென்டன் டர்ரன்ட்டை விரட்டிப் பிடித்தனர். கைதுக்கு பிறகு அவன் போலீஸாரிடம் மசூதிகளை எரிப்பதே தனது நோக்கம் என்றும், அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாகவும் புலம்பியுள்ளான். 

29 வயதான ஆஸ்திரேலியாவை சேர்ந்த குற்றவாளி வெள்ளையின மேலாதிக்கவாதியான ப்ரென்டன் டர்ரன்ட், 51 பேரை சுட்டுக் கொலை செய்ததையும், 40 பேரை கொலை செய்ய முயற்சித்ததாகவும், தன் மீது இருந்த தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான்.

தனது குடிமக்களுக்கான சமநீதியை உலக நாடுகளுக்கு நியூஸிலாந்து பாடம் நடத்தி கொண்டிருக்கிறது.


அந்த இரண்டு இளம் மீட்பாளரும், தூக்கணாம் குருவி குஞ்சுகளும்

 

மித்ரன் மற்றும் வர்சா எப்போதும் போல் தங்கள் ஊரை சுற்றி சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மழை நீர் தேங்கிய சதுப்பு நிலத்தில் வளர்ந்திருந்த யானைத்தட்டை புற்கள் செழித்த புதர் காட்டின் கரையோரம் அநாதரவாக தரையில் கிடந்த தூக்கணாங்குருவி கூடு ஒன்றை கண்டனர்.

யாரோ மாட்டுக்கு புல் அறுத்தவர்கள் உச்சிப் புல்லை வளைத்து, கோர்த்து, இணைத்து கட்டியிருந்த கூட்டை அகற்றி பொருட்படுத்தாமல் தரையில் வீசிச்சென்றுள்ளனர்.

கீழே கிடந்த கூட்டை அந்த இரண்டு சிறுவர்கள் கையில் எடுத்து சோதனை செய்ததில் உள்ளே நான்கு இளம் குஞ்சுகள் இருந்துள்ளன.

சரி நமக்கென்ன கவலை என்று அப்படியே கிடத்திவிட்டு கடக்கவில்லை அந்த குழந்தைகள்.

மித்ரன் மற்றும் வர்சா நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுவர்கள். நண்பர்கள் இருவரும் அந்த குஞ்சுகளை பத்திரமாக வீட்டுக்கு எடுத்துக் கொண்டுப் போய் தங்கள் பெற்றோர்களிடம் நடந்த விவரத்தை விவரித்தனர்.

மாலையில் மீட்கப்பட்ட இளம் குஞ்சுகள் இரவு முழுதும் அந்த குழந்தைகள் அரவணைப்பில். குஞ்சுகள் பசியால் வாடும் என்று அந்த குழந்தைகள் புழுக்களையும் பூச்சிகளையும் பிடித்து உணவாக கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து என்ன செய்வதென்று அறியாமல் குழந்தைகளின் பெற்றோர்கள் 'ஊர்வனம்' குழுவினரை அண்ணன் இறகுகள் ரவீந்திரன் மூலம் நம்மை தொடர்பு கொண்டனர்.

ஊர்வனம் மீட்பு குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு குழந்தைகள் மித்ரன் மற்றும் வர்சா உடன் விரைந்து சென்றனர். குஞ்சுகள் கிடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

உயர்ந்த வசதியான பெரும் குடியிருப்புகளுக்கு நடுவே யானைத்தட்டை புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் அது. 

அங்கு பெரும் கூட்டமாக தூக்கணாங்குருவிகள் குடியேறி இருந்தன. ஆங்காங்கே கூடுகள் கட்டப்பட்டிருந்ததையும் பெற்றோர்கள் கூட்டுக்குள் நுழைவதும், வெளியேறுவதுமாய் இருந்தன. கூடுகளில் இருந்து வெளிவரும் அழகிய இசையில் உள்ளே குஞ்சுகள் உள்ளது உணரப்பட்டது.

கரையோரம் இருந்த புற்கள் அறுக்கப்பட்டிருந்தன. அறுபட்ட புல்லில் கட்டப்பட்டிருந்த கூட்டை அகற்றி கீழே வீசிச்சென்று புற்களை எடுத்து சென்றுள்ளனர்.

சரி குஞ்சுகளை நாம் எடுத்து சென்று இரையை ஊட்டி வளர்க்கும், ஒரு சவாலான, ஆபத்தான பணியைவிட, அதை காணாது தவிக்கும் பெற்றோர்களுடன் சேர்ப்பதுதான் சிறப்பானது.

கூடு கீழே கிடந்த சரியான இடம் கண்டறியப்பட்டது. அதன் அருகில் உயரே வளர்ந்து இருந்த புல்லின் சதுப்பு நிலப் பகுதியில் மீட்புக்குழுவினர் இறங்கினர். வேறு வழியில்லாததால், தூக்கணாங்குருவி போல் அருகருகே இருந்த வெவ்வேறு புல்லின் உயர்ந்து வளர்ந்த நுனிப்பகுதியை வளைத்து, இணைத்து கூடு மீண்டும் உயரே நான்கு குஞ்சுகளுடன் கட்டி விடப்பட்டது.

மித்ரன், வர்சா என்ற இரண்டு இளம் மீட்பாளர்கள் குருவியின் குடும்பத்தை இணைக்க மேற்கொண்ட சிரமங்கள், அனைத்து மனிதர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக "பல்லுயிர் ஓம்புதல மாந்தர் இயல்பு" என்ற கருத்தை உணர்த்துகிறது.

வாழ்த்துகள் மித்ரன் மற்றும் வர்சா...

படம், தகவல்: Vishwa Wishtohelp - https://www.facebook.com/vishwanath.vishwa.507
ஊர்வனம் :: Urvanam
விலங்குகள் மீட்புக்கு
8608700088

'''''''''''''''''''''''''

தூக்கணாம்குருவிகளின் வாழ்வியலை அறிய இணைப்புக்கு: https://www.youtube.com/watch?v=on__YmwEm1U&t=14s

Wednesday, August 26, 2020

பையன்னா பரவாயில்ல; பொண்ணுன்னா செலவா?

 

"யார் மூன்று பெண் குழந்தைகள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை கருணையுடனும், பரிவுடனும் அவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அத்தகையோருக்கு இறைவன் சுவனத்தைக் கடமையாக்கிவிட்டான்” – என்று நபிகளார் கூறினார். அப்போது, அங்கிருந்தவர்களில் ஒருவர், ”ஒரு பெண் குழந்தை இருந்தபோதும் இந்த உயர் பதவி கிடைக்குமா? இறைவனின் திருத்தூதரே?” – என்று கேள்வி எழுப்ப, ”ஆம்..!” – என்று ஆமோதிக்கிறார் நபிகளார். இத்தகைய உயரிய பெற்றோரின் சுவனச்சீட்டுகளாக இருக்கும் பெண் குழந்தைகள் நடப்பைக் குறித்து விளக்கியிருக்கிறார் புளியங்குடி சையத் அலி 
 
''''''''''''''''''''''''
என்னங்க நாலாவதும் பொண்ணா?"

"நாலும் பொட்டப்புள்ளையா பெத்து வெச்சுருக்கீங்க கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டா யார் உங்கள பாத்துக்குவா, இதுக்குத்தான் பையன் வேணும்ங்கறது"

"என்ன இருந்தாலும் குடும்பத்துக்கு வாரிசு வேணாமா?"

"பொம்பளப் புள்ளைக வேணுந்தான் ஆனாலும் கடைசி வரைக்கும் பசங்க தான் வருவாங்க"

இந்த சொல்லாடல்கள் எல்லாம் கிராமப்புறங்களைத் தாண்டி, ஹைடெக் சிட்டிகளான பெருநகரங்களில் பேசப்படுகின்றன.

கொஞ்ச நாள் முன்னாடி கூட விஜய் டிவி ‘நீயா நானால’ "பெண்களுக்கு சொத்து பிரிச்சு குடுக்கறது" சம்பந்தமா தலைப்பில விவாதம் நடந்துச்சு. வீட்டுல மூத்த ஆம்பளைங்கனு பேசுன பசங்கள்ள பாதி பேர் "அதான் கல்யாணத்துக்கு செய்றோம்ல அப்பறம் வந்து சொத்துல பங்கு கேக்கக் கூடாதுனு பேசுனாங்க".

“அப்ப உன் பொண்டாட்டிக்கும் இதே பார்முலாவை அப்ளை பண்ணிடலாம்லனு யாராச்சும் கேட்ருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.

ஆனா, யாரும் கேட்கல.

பெண் குழந்தைகள் எல்லாம் இவங்களப் பொறுத்த வரைக்கும் பாரம், வீண்செலவு, தண்டச் செலவுனு சொன்னா சரியாருக்கும்.

இதுவே ஆம்பளப் பயலுகளுக்குனா அது முதலீடு, ஃபிக்ஸ்ட் டெபாசிட் மாதிரி. இப்ப செலவு பண்ணாலும் பின்னாடி அவன வெச்சு ஒரு வியாபாரம் பாத்து, விட்ட காசப் பிடிச்சர்லாம்னு ‘காம்பிளிங்’ (Gambling) கணக்கா பேசுவாங்க. பேசறதோட மட்டுமில்ல; அதுதான் இப்ப வரைக்கும் நடைமுறையிலும் இருக்கு.

என் மகனுகென்ன கொறச்சல்? 50 பவுன் நகை கூட இல்லாம ஏன் கல்யாணம் பண்ணனும்னு? - பேசற தாய்மார்கள்,

“ஒன்னும் இல்லாத இடத்துல கல்யாண பண்ணா குறை இருக்குனு நெனச்சுருவாங்க. ஒத்தப் புள்ளைய வெச்சுருக்கேன் அவனுக்கு இல்லாததா? அவனுக்கு செய்யாததா?” அப்டினு மடில போட்டு தாலாட்டுவாங்க.

சரிதான்! இதெல்லாம் தாய்மார்கள் டிபார்ட்மெண்ட்.

"நான் படிக்காதத என் மகன் படிக்கணும்!”

“எனக்கு கிடைக்காதது என் மகனுக்கு கிடைக்கணும்!”

“சொத்து சேக்கணும்"

இந்த தாறு-மாறு கனவுகள் எல்லாம் தகப்பன்களோட டிபார்ட்மெண்ட்.

ரெண்டாவது படிநிலைகள் நான் சொல்றது. இதுவே வீட்ல ஒரு பொண்ணு ஒரு பையன்னா, அந்தப் புள்ள பெருசோ, சிறுசோ இவன் சொல்றதக் கேட்டுத்தான் நடக்கணும். அவனுக்கு தெரியாததா உனக்கு தெரிஞ்சுடும்? அவன் நாலு இடத்துல சஞ்சரிப்பவன்னு வசனம் பேசுவாங்க.

ஒரு காலத்துல பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊத்தி கொல்றதையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. இப்போ, அந்தளவுக்கு சீரியஸா இல்லனா கூட, இவங்க பொம்பளப் புள்ளைகள ட்ரீட் பண்ற விதத்துக்கே முதல்ல கேஸ் போட்டு உள்ள தள்ளணும்.

படிக்காதவன் தான் இப்படியெல்லாம் பண்ணுவான்னு நீங்க தீவிரமா நம்புனீங்கன்னா, கடைசி வரைக்கும் அப்டியே தான் நம்பணும். ஏன்னா படிச்சவங்க கொஞ்சம் டீசன்ட்டா சுத்துவாங்க இதோ இப்படி: “கஷ்டப்பட்டு ஒரு டிகிரி படிக்க வெச்சுட்டேன்; கட்டிக் குடுத்தா போதும்னு”

கள்ளிப்பால் கொடுத்து கொன்ன காலகட்டத்துல இருந்து வெளிய வந்துட்டோம்னு சந்தோஷப்பட்டுக்கலாம் தான். ஆனா இப்பவரைக்கும் பையன்னா பரவால்ல; பொண்ணுனா செலவளிக்கனும்னு யோசிக்கிற 80% பேர் இருக்கத்தான் செய்றாங்க.

குழந்தைகள் உங்க கௌரவத்துக்கான அடையாளம் இல்ல. அது உங்களால் இந்த உலகத்துக்கு வந்த ஒரு உயிர் அவ்வளவுதான்! பெத்துட்டீங்கங்கறதுக்காக உங்க கௌரவத்தையெல்லாம் அவங்க தலைல கட்டாதீங்க! உங்க ஆசையெல்லாம் அவங்க மேல திணிக்காதீங்க! எல்லாத்தையும் தாண்டி ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் ஒண்ணுதான்! தராசுல வெச்சு இது ஒசத்தியான புள்ள; இது மட்டமான புள்ளன்னு எடை போடாதீங்க!
''''''''''''''''''''''''''''''

நன்றி:  புளியங்குடி சையத் அலி (https://www.facebook.com/puliangudiseyad.ali)


Saturday, August 22, 2020

'பலியாடுகளா தப்லீக் ஜமாஅத்தினர்?' போலீஸாரின் பொய் வழக்கை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம்

டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்குபெற்ற 29 வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
 
ஐவரி கோஸ்ட், கானா, தான்சானியா, ஜிபெளடி, பெனின் மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளை சேர்ந்த மனுதாரர்கள் தாக்கல் செய்த மூன்று தனித்தனி மனுக்களை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வின் நீதிபதிகள் டி.வி நளவாடே மற்றும் செவ்லிகர் விசாரித்து அளித்த தீர்ப்பு இது.
 
அதன் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:
 
ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர் நடக்கும் ஒரு சூழலில் அரசியல் ரீதியாக இயங்கும் ஓர் அரசு, அதற்கான பலியாடுகளைத் தேட முயல்கிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலியாடுகள் ஆக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சூழல்கள் காட்டுகின்றன

வெளிநாட்டவர்கள் பெற்று வந்த விசாவில், அவர்கள் மதம் சார்ந்த இடங்களுக்கோ அல்லது மத நிகழ்வுகளில் கலந்துகொள்ளவோ எந்தத் தடையும் இல்லை.

‘தப்லிக் ஜமாஅத்’ என்பது முஸ்லிம்களின் ஒரு பிரிவு கிடையாது. மதத்தை சீர்திருத்தம் செய்ய உருவான ஓர் இயக்கம். சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள்படி இந்த வெளிநாட்டவர்கள் மற்றவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றவோ அல்லது மதத்தை பரப்பவோ முயற்சித்தார்கள எனக்கூற முடியாது.

அதோடு அவர்கள் இந்திய மொழிகளான இந்தி அல்லது உருது மொழியை பேசவில்லை. அரபு, ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகளையே பேசுகிறார்கள்.

“அதிதி தேவோ பவா" அதாவது “விருந்தினர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள்!" என்பது இந்திய பண்பாடு.

நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்

2020 ஜனவரி மாதத்திற்கு முன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற்றன. அதில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் முஸ்லிம்கள். 2019 சிஏஏ சட்டம் அவர்களுக்கு எதிராக உள்ளதென போராட்டம் நடத்தினர். முஸ்லிம் அகதிகளுக்கு, குடிபெயர்பவர்களுக்கும் இந்திய பிரஜை என்ற உரிமை கிடைக்காது என்று அவர்கள் நம்புகின்றனர். என்ஆர்சிக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது

தற்போதைய நடவடிக்கையால் முஸ்லிம்கள் மனதில் அச்சம் கொண்டிருப்பார்கள். முஸ்லிம்கள் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை இந்த செயல்பாடு காட்டுகிறது. மற்ற நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்திருந்தால்கூட, இங்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போல இது இருக்கிறது.

இந்த வழக்குக்கு பின்னால் பிறருக்கு தீமை விளைவிக்கும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது. எனவே மனுதாரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

வழக்கு புனைவுக்காக போலீஸ் சொன்னது என்ன?

விசா விதிகளை மீறி தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்குபெற்றதாக இவர்கள் மீது பெருந்தொற்று நோய்கள் சட்டம், மகாராஷ்டிரா போலீஸ் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் வெளிநாட்டவர்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஊரடங்கு உத்தரவுகளை மீறி இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்தி வந்ததாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தாகக் கூறி மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மனுதாரர்கள் இஸ்லாமிய மதத்தை பரப்பும் நோக்கில் மசூதிகளை பார்வையிட சென்றதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது

மேலும் இதில் ஐந்து வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்களின் தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்கள் என்றும் வாதிடப்பட்டது.

இந்த வெளிநாட்டவர்களை தவிர, இவர்களுக்கு தங்குமிடம் கொடுத்த நிஜாமுதீன் மசூதியின் அறங்காவலர்கள் மற்றும் ஆறு இந்தியர்கள் மீதும் போலீஸார் பொய் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், உண்மை என்ன?

இந்திய அரசால் முறையாக விசா வழங்கப்பட்டு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், விருந்தோம்பல் மற்றும் உணர்வுகளின் அனுபவத்தை பெறவே தாங்கள் பயணம் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் கூறினர்.

விமான நிலையத்தில் தங்களுக்கு முறையாக கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதியான பின்பே தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அஹமத்நகர் மாவட்டத்தை வந்தடைந்தவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அதுகுறித்து தகவல் அளித்துள்ளனர்.

மார்ச் 23-ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டதால், இவர்கள் தங்குவதற்கு வசதி இல்லாமல் போனது. இந்நிலையில் வேறு வழியில்லாத நிலையில் தங்கிக்கொள்ள மசூதி நிர்வாகம் அனுமதித்தது.

தாங்கள் எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை

தங்கிய இடத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர்கள், தங்கள் விசாவின் விதிமுறைகளின்படி மசூதி போன்ற மதம் சார்ந்த இடங்களை பார்வையிட எந்தத் தடையும் இல்லை என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.



Thursday, August 20, 2020

எண்ணூர் உப்பங்கழியும், அரங்கேற்றப்படும் அத்துமீறல்களும்!

பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெறும் முப்பது, நாற்பதாண்டுகளில் நதி நிறம் மாறிப்போனது. பெரும் பகுதி நீர் வாழ் உயிரினங்கள் அடையாளம் தெரியாமல் போயின. கிடைக்கும் சொற்ப வகை மீன்களும் மண்ணெண்ணெய் தொட்டிக்குள் வளர்வது போல உண்பதற்கு லாயக்கற்று சுவை மாறிப் போயின
>>> இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''

வடசென்னை மக்களால் நதி எனக் குறிப்பிடப்படும் எண்ணூர் உப்பங்கழி, முன்பு இருந்ததைப்போல இப்போது இல்லை. பள்ளி நாட்களில் மாணவர்களாகிய நாங்கள் பளிங்கு போல தோற்றமளிக்கும் இந்த நதியில்தான் நீந்தக் கற்றுக் கொண்டோம். சுவை மிகுந்த மீன்களை விடுமுறை நாட்களில் இங்குதான் வேட்டையாடி உண்டோம். வெண்குவியல்களாய் கொட்டப்பட்டிருக்கும் உப்பைச் சுமந்த உப்பளங்கள் பிரமிப்பூட்டும். உப்பையும், சவுக்குச் சுள்ளிகளையும் சுமந்த பாய்மர படகுகள் கம்பீரமாக பயணிக்கும். அந்தக் கால கோலிவுட்டின் வெளிப்புற படக்காட்சிகளின் முக்கிய இடமாக இருந்த நதி இது. பரிந்துரைக்கப்பட்ட சுற்றலாதலங்களில் ஒன்றாக விளங்கிய இடம்.

உப்பங்கழியின் பளீர் நீல நிற கரையோரத்தில், வண்ணமய சிறு நண்டுகள் தங்கள் தடித்த ஒற்றைக் காலால் வரவேற்கும். இருபுறமும், அடர்த்தியான அலையாத்திக் காடுகள் பசுமைப் பூச்சுடன் செழித்து வளர்ந்து ஆயிரக்கணக்கான உயிரினங்களின் உறைவிடமாக இருந்த நதி. 

இந்த நதி அதாவது எண்ணூர் உப்பங்கழி தனது அத்தனை சிறப்புகளையும், அழகையும் இழந்து பொலிவிழந்த விதவைப் பெண்ணாய் தற்போது காட்சியளிக்கிறது.  ஏற்கனவே எண்ணூர் அனல் மின்நிலையம் இருந்தது போதாதென்று அழகிய உப்பளங்கள் இருந்த இடத்தில் இன்னும் ஒன்றுக்கு இரண்டாய், வல்லூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம் என்று மூன்று அனல் மின்நிலையங்கள் நதியை சின்னாபின்மாக்கிவிட்டன. சாம்பல் மயமாய், நிலக்கரி கழிவுகளாய் உப்பங்கழியை நிரப்பிவிட்டன. 

அத்தோடு தனியாருக்குச் சொந்தமான வாகன உற்பத்தி நிறுவனங்களின் எண்ணெய் கழிவுகள், இரசாயன ஆலைகளின் கழிவுகள் என்று கரு நிறத்தில் எண்ணெய் பிசகாய் உருமாற்றிவிட்டன. அரிய வகை பச்சை ஆலி போன்ற நீர் வாழ் உயிரினங்களின் வாழ்வியலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், மீன்பிடித் தொழிலை மட்டும் நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய வைத்துவிட்டன.

சூழல்மாசுவால் சீரழிக்கப்பட்ட எண்ணூர் உப்பங்கழி குறித்து விரிவாக தெரிந்து கொள்வதுதான் பிரச்னையின் பிரதானத்தை உணர முடியும். மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் மொத்த பரப்பளவு கொண்ட உப்பங்கழி என்பது ஒரு நீரேற்ற நீர்நிலைப் பகுதி என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஆங்கிலத்தில் புலிகாட் என்று வழங்கப்படும், பழவேற்காட்டுக்குத் தென் பகுதியில் ஆரணி நதி, உப்பங்கழிக்கு வந்தடைந்து, தெற்கு திசையில் பாய்ந்து எண்ணூர் முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அத்துடன், தெற்குப்பக்கம் கொசஸ்தலை நதி இந்த உப்பங்கழியில் இணைந்து, முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கொசஸ்தலை, ஆரணி நதிகளின் நீர் சமுத்திரமுனையில் சந்திக்கும் நீர்நிலை அமைப்பு. இதுத் தவிர, பக்கிங்காம் கால்வாயும், சென்ட்ரல் ரயில்நிலையம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலிருந்து கழிவு நீர் எண்ணூர் முகத்துவாரத்துக்கு வந்தடைகிறது.
 
முன்பு, இந்த நதியின் இரு பக்கங்களிலும் அலையாத்திக் காடுகளும், ஆற்றுப்படுகைகளில் அலையேற்ற சதுப்பு நிலங்களும், மண்மேடுகளும், உப்பு நீரில் வளரும் தாவரங்களும் ஏராளமாக இருந்தன. பிரதான கால்வாய் ஆழமாக இருந்ததால், நீரின் ஓட்டமும் அதிகமாக இருந்தது. முகத்துவாரம் இயற்கையாகவே திறந்திருந்ததால், ஒவ்வொரு பருவநிலை அலையேற்றத்தின்போதும், கடலிலிருந்து மீன்களும், இறால்களும் உப்பங்கழிக்கு புலன்பெயர்ந்து, அதி பாதுகாப்பான சதுப்பு நிலக்காடுகளில் முட்டைகளை இட்டன. இனப்பெருக்கம் நடந்தது. சுவை மிகுந்த நீர் வாழ் உயிரினங்களால் மீனவ மக்களின் வாழ்வும் செழித்தது. நதியைச் சுற்றியிருந்த உப்பளங்களால், சவுக்குக் காடுகளால் பொருளியலும் பெருகியது. 
 
பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெறும் முப்பது, நாற்பதாண்டுகளில் நதி நிறம் மாறிப்போனது. பெரும் பகுதி நீர் வாழ் உயிரினங்கள் அடையாளம் தெரியாமல் போயின. கிடைக்கும் சொற்ப வகை மீன்களும் மண்ணெண்ணெய் தொட்டிக்குள் வளர்வது போல உண்பதற்கு லாயக்கற்று சுவை மாறிப் போயின. https://www.youtube.com/watch?v=I2zClBfZh-0 https://www.youtube.com/watch?v=4pdprvBSwIo 
 
அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் வடசென்னைவாசிகளின் அறியாமையைப் பயன்படுத்தி பல ஆண்டுகள் ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய திட்டங்களின் விளைவுகள்தான் இவை. https://www.youtube.com/watch?v=4TflFDj74l0

சென்னை, ஆர்.கே.நகர், திருவொற்றியூர் பகுதிகளிலிருந்து சாக்கடை நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக இந்த உப்பங்கழிக்கு வந்து சேர்கிறது. 
 
மணலி தொழிற்சாலையிலிருந்து ரசாயனக் கழிவுகள், வாகன உற்பத்தி நிறுவனங்களின் கழிவுகள் இந்த உப்பங்கழியிலும் கொசஸ்தலை ஆற்றிலும் கலக்கின்றன. https://www.youtube.com/watch?v=9MZxhPcfj4k 
 
எண்ணூர் அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம், ஹெச்.பி.சி.எல்., பி.பி.சி.எல் எண்ணெய் நிறுவனங்கள், காமராஜர் துறைமுகம் போன்றவை இந்த நீர்நிலைப் பகுதியின் ஆயிரம் ஏக்கருக்கும்  அதிகமான இடத்தை ஆக்கிரமித்து கொண்டுள்ளன.  இதன் விளைவாக மீன், இறால் போன்ற நீர்வாழ் உயிரிகள் இனப்பெருக்கம் செய்யும் இங்குள்ள செழிப்பான மண் மேடுகள் மற்றும் சதுப்புநிலப்பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. https://www.youtube.com/watch?v=miF_9v9fi1I  https://www.youtube.com/watch?v=7zKaqaL-P6o

இந்த அத்துமீறிய ஊடுருவல்களாலும், குழாய்களிலிருந்து கசியும் நிலக்கரி சாம்பலும் இந்த நதியின் ஆழத்தை வெகுவாக குறைத்துவிட்டன.  இதன் விளைவாக, ஆழமற்ற நீர் வெகு வேகமாக வெப்பமடைந்தது. மீன்கள், இறால்கள் போன்ற நீர் வாழ் உயிரிகளின் உயிர்வாழ்க்கை சிக்கலானது. https://www.youtube.com/watch?v=yVVIsYEFAWQ  வடப்பகுதியில் இருக்கும் மீன்பிடி இடங்களில் சேறு அல்லது நிலக்கரி சாம்பல் சூழ்ந்து கொண்டது. இதனால், மீனவர்களின் படகுகள் சிக்கிக்கொள்வதால் அந்த மீன்பிடி இடங்களுக்குப் போவதில் சிக்கல் ஏற்பட்டது. https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg

அதேபோல, வடசென்னை அனல் மின் நிலையம் நேரடியாக முகத்துவாரப்பகுதிக்கு அதன் வெப்ப நீரை வெளியேற்றுகிறது. உயர் அலையேற்ற கால நிலையில்கூட, வெப்ப நீர் காரணமாக உப்பங்கழிக்கு கடலிலிருந்து மீன்கள் புலன் பெயர முடியாமல் போனது. https://www.youtube.com/watch?v=TUSV_c8s7ns 
 
இவ்வளவு மோசமான அரசு அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்தி எண்ணூர் கடற்கழியைக் காத்து ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நமது நாட்டில் எந்த சட்டப் பிரிவுகளும் இல்லையா என்ற கேள்வி எழுவதும் இயல்புதான்! 
 
இந்திய நாட்டில் ஏட்டளவில் குறைவில்லாத சட்டங்களும் உள்ளன. அவற்றில் ஒட்டகம் நுழையும் அளவுக்கு ஓட்டைகளும் உள்ளன. சட்டங்களைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்களும், விழிப்புணர்வற்ற மக்களும் உள்ளனர். 
 
எண்ணூர் உப்பங்கழியை மட்டும் எடுத்துக் கொண்டால் அது 6 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த 6 ஆயிரத்து 500 ஏக்கர்  பகுதியைப் பாதுகாக்க கோரி அரசே பரிந்துரைத்துள்ளது முக்கியமானது. அந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டு அப்பகுதிக்குக் கடற்கரை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சட்ட ரீதியாக முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. 16 கி.மீ. நீளம் கொண்ட கருங்காலி நதிப் பகுதியின் முகத்துவாரத்திலிருந்து (சிந்தாமணி முகத்துவாரம்) எண்ணூர் முகத்துவாரம் வரையிலான பகுதி, 1996ஆம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல (சி.ஆர்.இசட்) வரைபடத்தில் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே  அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சி.ஆர்.இசட். அறிவிப்பு குறிப்பாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடையாளம் கண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டியது. இதன்படி, மீன்பிடி பகுதிகள் எவை என்று அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என சட்டம் குறிப்பிடுகிறது. அதேபோல, நதியின் நிலப்பரப்பை கையகப்படுத்த, நிலக்கரி சாம்பல், மணல் அல்லது கழிவுகளை நதியில் கொட்டுவதும், உப்பங்கழியில் வெப்ப நீரை வெளியேற்றுவதும் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. ஏதாவது காரணங்களுக்காக நதியின் போக்கைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதற்குக்கூட இந்த சட்டத்தின்படி யாருக்கும் அனுமதி கிடையாது எனலாம். 
 
இவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தும், இந்த நதி தற்போது ஏன் மிகவும் மோசமான நிலையில் உள்ளது? என்ற கேள்வி எழுவதும் சகஜம்தான்!

வெறும் சட்டங்களால் மட்டுமே பிரச்னைகளை தீர்த்துவிட முடியும் என்றால் நாம் புழல் சிறையைக் கட்ட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அதேபோல, சட்டங்களால் மட்டுமே நதியைப் பாதுகாத்துவிட முடியாது. அந்தச் சட்டங்கள் பாராபட்சமின்றி மக்களல் நலன்சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியம். அந்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும், அவை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிர்பந்தங்களும் தர வேண்டியது மக்கள்தான்..! 
 
அதோடு மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை மீறாமல் அமல்படுத்த வேண்டும் என்பதை உறுதிசெய்வதில் ஆர்வம் கொண்டுள்ள வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியமானது. 
 
சீர்கெட்டுவிட்ட எண்ணூர் உப்பங்கழி சம்பந்தமாக மீனவ பெருமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே செய்தனர். ஆனால், அந்த எதிர்ப்பை சட்ட ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளவில்லை. மேலும், தகுந்த நேரத்தில் தங்கள் கருத்துக்களை அவர்கள் பதிவு செய்யவில்லை அல்லது பெரும்பான்மையினர் அதற்கு ஆர்வம் காட்டவில்லை.

வல்லூர் அனல் மின்நிலையம், ஹெச்.பி.சி.எல்லின் எண்ணெய் சேமிப்பு முனையம் முன்மொழியப்பட்டபோது பொதுமக்களின் கருத்துகளை அறிய கண்துடைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பது உண்மைதான்! இவற்றில் தங்களது கவலையைப் பதிவு செய்ய பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது துரதிஷ்டவசமானது. மண்ணையும், காற்றையும், காட்டையும், சக உயிர்களையும் காத்தல் வருங்கால தலைமுறையைக் காப்பது என்ற தொலை நோக்கு பார்வையில்லாமல் ஒரு சிலர் இதில் வேலைவாய்ப்பை நாடிச் சென்றனர். இந்த வாய்ப்புக்காக காத்திருந்த சூழலைச் சீரழிக்க வந்த நிறுவனங்கள், இவர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதியை எந்தவிதமான உத்திரவாதமும் தராமல், அதைக் காப்பாற்றும் எண்ணமும் இல்லாமல், ஒப்புக்கு தலையாட்டிவிட்டு இந்த நதிப்பகுதியில் தாங்கள் விரும்பும் எதை வேண்டுமானலும் செய்துகொள்ளலாம் என்று நினைத்தன. 
 
அரசு ஏஜென்சிகளை இதற்குப் பொறுப்பாளிகள் ஆக்குவதற்கு மக்கள் போதுமான முனைப்புக் காட்டவில்லை. எண்ணூர் உப்பங்கழி பகுதி அபிவிருத்தி மண்டலம் கிடையாது என்ற சட்டம் அமலாக்கப்படுவதையும், இந்தப் பகுதியின் 1996ஆம் ஆண்டின் வரைபடம் அறிவிப்பின்படி எண்ணூர் உப்பங்கழி பகுதியின் 6 ஆயிரத்து 500 ஏக்கரில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் இருப்பதையும் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருக்கும் மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்.

2017 ஜூலை மாதம் இந்த ஆணையம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணூர் பகுதியின் சி.ஆர்.இசட். வரைபடம் என்று கூறி மோசடியான ஒரு வரைபடத்தை வெளியிட்டதாகவும், இந்த வரைப்படத்தின்படி எண்ணூர் உப்பங்கழி என்ற ஒன்று இருப்பதையே மறுப்பதாகவும் சூழலியலாளர்களால் சொல்லப்படுகிறது.  காளாஞ்சி அருகே உள்ள சிந்தாமணி முகத்துவாரத்துக்கும், சமுத்திரமுனைக்கும் இடையே உள்ள ஒட்டுமொத்த பகுதியும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலமாக (நீர் அல்ல நிலம்) காட்டப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 
 
ஜூன் மாதம் மோசடியாகத் தயாரிக்கப்பட்ட இந்த வரைப்படத்தைப் பயன்படுத்தி இந்த நதியின் ஆயிரம் ஏக்கர் பகுதியை காமராஜர் துறைமுகத்துக்கு ஒதுக்கீடு செய்தது. அந்தத் துறைமுகம் நதியின் மேல் ஒரு கார் நிற்கும் முனையம், நிலக்கரி கிடங்கும் ஆகியவற்றை கட்ட விரும்புவதாக சொல்லப்படுகிறது.
 
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மிக மோசமான அரசு மோசடி இது என்றால் மிகையில்லை..!

 
வெறும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மெரினாவில் லட்சக்கணக்கில் திரண்ட வரலாற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு பயனும் இல்லை. பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் நெடுவாசல்கள், கதிராமங்கலங்கள் அவலங்களைவிட வடசென்னைவாசிகளின் வாழ்வியலுக்கு கவனம் செலுத்துவதும் முக்கியமானது. 

தனது தவறுகளுக்கு அரசாங்கத்தைப் பொறுப்பேற்க செய்வதற்கும், வளர்ச்சி என்ற பெயரால் வருங்கால தலைமுறையினரின் வாழ்வியலையும், சக உயிரிகளின் உயிர்களையும் சூறையாடுவதை தடுத்து நிறுத்தவும் ஆக பொறுப்பு அவர்களை அரியணையில் அமர்த்தும் மக்களின் அதிகாரத்துக்கே உள்ளது. மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை கேள்வி கேட்க வேண்டியதும், இதற்காக ஒரு விசாரணை நடத்தப்பட்டு, ஆணையத்தில் தவறாக நடந்துகொள்பவர்களின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த வேண்டியதும் பொது மக்களின் தார்மீகப் பொறுப்பாகும். 

நாளை எண்ணூர் என்ற ஒரு பகுதி இல்லவே இல்லை என்று சுயநல வரைப்படம் உருவாவதற்கு முன் பொதுமக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாளைய இளந்தலைமுறையினர் சுயநல ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக இருந்த ஒரு சமூகத்தின் வாரிசுகள் தாங்கள் என்ற அவப் பெயரை வரலாற்றில் காலமெல்லாம், சுமக்க வேண்டியிருக்கும். சூழல்மாசுவால் மொத்த வாழ்வாதாரத்தை பறிகொடுத்து, சொந்த நிலத்தில் மனித உருமாறி அகதிகளாக வலம் வர வேண்டியிருக்கும்.


Wednesday, August 19, 2020

ஒளியே கதை எழுது..1 - நெஞ்சோடு கொஞ்சம்

பிரியத்துக்குரிய தோழர், தோழியரே.. வாழ்த்துகள்!

நான் இக்வான் அமீர். தமிழ் இலக்கியம், இதழியல் மற்றும் மனித உரிமைகள் என்று மூன்று மேல்நிலை பட்டப்படிப்புகளை முடித்து 40 ஆண்டுகளாய் பல்வேறு வெகுஜன ஊடகங்களில் சுதந்திர இதழியலாளனாக எழுதி கொண்டிருப்பவன். பல்வேறு பத்திரிகைகளுக்கு சிறப்பு செய்தியாளராக பணியாற்றியவன். குழந்தை எழுத்தாளனாக 15 புத்தகங்களை எழுதியிருப்பவன். ஒளிப்படக்காரன். முழுநேர பணியாளனாக சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் 1975-ல், சாதாரண பயிற்சியாளனாக சேர்ந்து 40 ஆண்டுகளில் பல்வேறு பணி நிலைகளைக் கடந்து மூத்த அதிகாரியாக விருப்ப ஓய்வு பெற்றவன்.  வடசென்னைவாசி. புகழனைத்தும் இறைவனுக்கே!

நண்பர்களே!

'ஒளியே கதை எழுது.!' - என்னும் இந்த ஒளிப்பட தொடர் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான்காம் வகுப்பு படிக்கும்போது ஆரம்பித்தது எனது வாசிப்பு. தினத்தந்தி சிந்துபாத் தொடர் என்று தொடர்ந்து அரசு கிளை நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் வாசிக்க வைத்தது. அத்தகைய அற்புதமான தருணங்களை கடந்து வந்த அனுபவத்தை வாழ்க்கை எனக்களித்திருக்கிறது.

மாலை நேரத்தில், எனது பள்ளி தலைமை ஆசிரியை அவர்களின் வீட்டுப் பணிகளை செய்து தந்து, பள்ளி நூலகத்திலிருந்து சொற்ப தவணைக்குள் பெற்ற ஷேக்ஸ்பியருக்குள் இந்த சிறுவயதில் நான் நுழைந்தது ஆச்சரியமாக உள்ளது.

சிந்துபாத் தொடரை படிக்க சிகை அலங்காரம் செய்யும் கடையில் நீண்ட நேரம் காத்திருந்தது நினைவில் எழுகிறது. ஒரு கட்டத்தில் ஆவலை அடக்க முடியாமல் படிப்பவரின் எதிரே தரையில் அமர்ந்து அந்த நான்கு படம், சில வரி வசனங்களை, வாசிக்க முயலவைத்தது. அப்போது, கழுத்தைப் பிடித்து வெளியே நெட்டித் தள்ளிய அந்த நாவித சகோதரர் இன்றும் மனக்கண்ணில் தெரிகிறார். இன்று சிகை அலங்காரம் செய்து கொள்ளும்போதெல்லாம் அந்த சம்பவம் நெஞ்சில் நிழலாடுகிறது.

எத்தனைமுறை புத்தக அலமாரிகளுக்குள் பதுங்கிக் கொண்டு நான் புத்தகம் வாசித்தாலும் அத்தனை முறையும் நூலகர் மோப்பம் பிடித்து வந்து விடுவார். புத்தகங்களை நான் கலைத்துவிடுவேன் என்ற ஒரே காரணத்துக்காக “தம்பி, உனக்கு இன்னும் வயசாகலே!” – என்று என்னை நூலகத்தைவிட்டு வெளியே அனுப்பி விடுவார்.

இன்று இறையருளால் வீட்டிலேயே எனக்கான ஒரு தனி நூலகம் அமைத்திருக்கும் நான் அதே நூலகத்தை கடந்து செல்லும்போதெல்லாம் முக மலர்ச்சியுடன் கடக்கிறேன்.

இந்த அனுபவங்களை, வாசிப்புகளை உள்வாங்கி வளர்ந்து ஒரு கட்டத்தில் அவற்றை அடுத்தவர் வாசிக்க எழுத்தாளனாய் ஆன அனுபவத்தை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும்.

ஆக, ஒவ்வொருவரும், ஒரு வாசகராய், எழுத்தாளராய், ஒளிப்பதிவாளராய் இருக்கும் சமூக ஊடக பிரளயத்தில், மிஸ்டர் பாமரன் வலைப்பூவில் நான் சொல்லவிருப்பது என்ன?

இந்தக் கேள்வி சுருக்கமான பதில் இதுதான்: “அனுபவங்கள் அன்றி வேறில்லை! ஆம்.. அனுபவங்களே ஆசான்கள்!

உண்மை!

எனதருமை சகோதரர் ஸ்டில்ஸ் அரவிந்தனோடு, தொலைபேசி உரையாடலில் அவரது படமொன்றை பாராட்டிவிட்டு பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் பேச்சு ‘ஒளியே கதை எழுது’ பக்கம் திரும்பியது. அதைக் குறித்து அரவிந்தன் சிலாகித்தபோது, நான் சொன்னேன்: “அய்யா, ஒரு கத்துக்குட்டியின் தட்டுத் தடுமாறல் நடையே இந்தத் தொடரில் நான் சொல்லவருவது!”

உண்மைதான் தோழர்களே,

‘ஒளியே கதை எழுது’ என்ற இந்தத் தொடர் அனுபவங்களின் பகிர்வின்றி அறிவின் ஊற்றல்ல என்பதை நான் முதலிலேயே தெளிவாக அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடுகின்றேன்.

என்னிலும் மூத்த ஒளிப்பட ஜாம்பவான்கள் எல்லாம் இருக்க ஒரு மாணவனாய் நான் மலங்க.. மலங்க விழிக்கின்றேன்.

நான் பெற்ற அறிவை.. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் நான் மாணவனாய் அனுதினமும் கற்றுக் கொண்டிருக்கும் அறிவை… பகிரும் ஒரு முயற்சிதான் இது.

அனுபவசாலிகள், மூத்தவர்களின் கரும்பலகையாய் நான் இருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

எனது அனுபவ எழுத்துக்களிலிருந்து ஒரு கட்டத்தில் அடைந்த பரிணாம வளர்ச்சிதான் எனது ஒளிப்பதிவுகள். இது எனது அறிவோட்டத்தை இன்னும் விசாலமாக்கியது.

கோடானு கோடி கோள்கள் துணைக்கோள்கள் கொண்ட இந்த அண்ட வெளியின் சிறு துகள் … அதுவும் கடற்கரை மணற்பரப்பின் ஒரு சிறு மணல் துகளாம் பூமி.  இந்த பூமியில் எனக்கு கிடைக்கும் வாய்ப்பு வசதிகளை கொண்டு நான் ஒளிப்படங்களாய் பதிவு செய்து வருகிறேன்.

நுண்மை, அழகியல், வாழ்வியல் கலந்த பார்வைதான் எனது சிறப்புக்குரிய களங்கள். இவையே எனக்குப் பின்னர் நான் விட்டுச் செல்லும் ஆவணங்கள். மனித வரலாறுகள். இயற்கையின் விந்தைகள். சொத்து-பத்துகள் எல்லாமே..!

சிறப்பான படங்கள் என்று முற்றே இல்லாத ஒரு மகா சமுத்திரத்தின் ஒரு துளியாய் நான் கற்றதை பறிமாறும் ஒரு வாய்ப்புதான் இது.

அறிவைப் பெற்று அதை பரப்புவர்தான் உங்களில் சிறந்தவர் என்று அண்ணல் நபியின் அருளுரையை நிறைவேற்றிய பாக்கியசாலியாக மட்டுமே என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.

இறைவன் நாடினால், இனி வாரந்தோறும் ஒளியே கதை எழுது தொடரில் என்னோடு நீங்களும் பயணிப்பீர்கள். ஒளியால் சூழப்பட்ட இந்த உலகைக் கண்டு என்னைப் போலவே பிரமிக்கப் போகிறீர்கள்! சிலிர்ப்பும், சில்லிப்பும், குதுகலமும், துள்ளலும், சில நேரம் சோகமுமாய் உணர்வுகளை வெளிப்படுத்த இருக்கிறீர்கள்.

அவை எதுவானாலும், வாரந்தோறும் என்னுடனான இந்தப் பயணத்தில் ஏற்படும் சந்தேகங்களை மட்டுமே கேளுங்கள்.

சிலபோது, இந்தப் பயணம் ஏற்கனவே நீங்கள் சென்ற இடமாக அதாவது தெரிந்த விடயங்களாக இருக்கும் என்றால் கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள். உங்களுக்கான புதிய வழித்தடம் வரும். அந்த நேரத்தில் என்னோடு இணைந்து அந்தப் பயணத்தை நீங்களும் தொடரலாம். அப்போது உங்கள் சந்தேகங்களுக்கு நிச்சயம் பதில் கிடைத்துவிடும்.  

இறைவன் நாடினால், 'ஒளியே கதை எழுது!' என்ற இந்தத் தொடரில் ஒளிப்படக் கலையின் அத்தனை நுணுக்கங்களையும், பிரிவுகளையும் தொட்டுக் காட்டிட ஆசைப்படுகிறேன். இதற்கு உங்கள் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

அடுத்த வாரம்..  

சிறந்த ஒளிப்படங்களைத் தீர்மானிப்பவை விலையுயர்ந்த காமிராக்களா..?  கையளவு நீண்ட லென்ஸ்களா?  அல்லது  ஃபில்டர்களா? இவற்றில் எவை என்பதை பார்ப்போம்.

001 ஒளியே கதை எழுது 1, நெஞ்சோடு கொஞ்சம்: 

காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

 

ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

பால் வடியும்வரை நிழலான பகுதியில் வைத்து ஓரிரு நாள் கழித்து நடுங்கள்.

பொடி கற்கள், ஆற்று மணல், சிறிதளவு தோட்ட மண், கிடைத்தால் அடுப்பு கரி இவற்றை கலந்து நல்ல வடிகால் வசதியோடு கூடிய ஒரு மண் கலவையை தயார் செய்து நடுங்கள்.

அப்படி நடும்போது, மண்ணில் ஈரமிருந்தால் அதுவே போதுமானது.

அதனால், தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

நல்ல வெய்யிலில் வைத்து விடுங்கள்.

துளிர்விடும்வரை அதிக நீரோ, மழையோ விழாமல் பார்த்து கொள்ளுங்கள்.

கள்ளி செடிகளுக்கு அதிக தண்ணீர் ஆபத்தாகிவிடும்.

Monday, August 17, 2020

இப்படிதான் யானை கவுணி 'மினி ராஜஸ்தான் ஆனது!

 
ஒரு காலத்தில், யானை கவுணியில்தான், அநேக பிராமணர்கள் வசித்தனர். இவர்கள் பெரும்பாலும், ஆற்காடு, ஆரணி, வந்தவாசி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள். கொச்சையான கிராமிய தமிழுக்கு சொந்தக்காரர்கள். கரிய நிறங்கொண்டவரகளாக (பிராமணரா என்று யூகிக்கும் வகையில்) இருப்பினும், தீர்க்கமான கருட மூக்கு கொண்டவர்கள்.

அப்போதெல்லாம் அனுமாருக்கு சாத்தப்படும் வெங்காய நிறத்தில் ஶ்ரீசுர்ணம் தான் இட்டுக் கொள்வார்கள்.

ஒரு பக்கம் கோமுட்டிகளும், இன்னொரு பக்கம் செட்டியார்களும், மறுபக்கம் முதலியார்களும் வாழ்ந்த இடம். கணிசமாக மார்வாரிகளும் இருந்தனர்.

உலகப்புகழ் பெற்ற வால்டாக்ஸ் ரோடில் திருப்பதி குடை அழகு.

நாயுடு சமூகத்தினரின், ஆத்மார்த்த பெருமாள் பஜனை, நம்முடலில் புது ரத்தம் பாய்ச்சும்.

தமிழ் மொழியில் ‘ல, ள, ன, ண, ழ’ வித்தியாசத்தைக் காதுக் கொடுத்துக் கேட்கலாம்.

பைராகி மடம் கோயில் மினி திருப்பதி. வைகுண்ட ஏகாதசியன்று, மார்வாடி உபயத்தில், நாட்டுச் சர்க்கரை. அது தேவாமிருதம்.

விடிய விடிய பரம்பத விளையாட்டுக்கள்தான்.

பிரம்மோற்சவம் நடக்கும் தருவாயில், பாண்ட் வாத்தியத்தோடு, கிளாரிநெட் மற்றும் சாக்ஸ்போன் (clarinet & saxophone) வாசிப்பு நாடி நரம்புகளை என்னமோ செய்யும்.

மூங்கிபாய் ஸ்கூல்தான், மேல்தட்டு பெண்கள் படிக்கும் பள்ளி. இந்து தியாலஜிகல் (Hindu theological) ஆண்களுக்கான பள்ளி. ஜிஎம்டிடிவியில் (GMTTV) முதலியார்கள் பரவலாக படித்தார்கள். ரிக்ஷாவில் செல்பவர்கள் மார்வாரிகள் மற்றும் மேல் தட்டு மக்கள். மின்ட் தெருவில், உள்ள டாக்டர் PT.ராமலிங்கம் ஒரு ஊசி போட்டா கொரானாவே காலியாகும் அவ்வளவு ராசியான டாக்டர்.  

சென்னை தமிழ் அழகு. "நீ வா சார்" என்று ரிக்ஷாவாலா பேசுவது, ஜெல்லாஸ்பத்திரி என்று GHஐ சொல்வது, பால் மாறாம, ஜல்ப்பு (ஜலதோஷம்), பழுப்பு (pipe), இட்னு, கவுச்சி, குந்திக்குனு, நாஸ்தா, நோவு இப்படி தமிழ் அழகு.

பிராமணர்கள் திராபை, ஜபர்தஸ்து என்கிற வார்த்தைகளை பிரோயிகித்தனர்.

ஆண்டாள் பாசுரம் அநேகருக்கு அத்துப்படி. அருணாசலேஸ்வரர் கோயில்தான் எங்களுக்கு திருவண்ணாமலை. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, மகாசிவராத்திரி எல்லாம் யாருக்கும் தெரியாது. செவ்வாய் வெள்ளி மட்டும் காளிகாம்பாள் கோயிலில் கூட்டம். இப்போதெல்லாம் திருவேற்காடு எங்களுக்கு தூரதேசம், "திருவேற்காடா போயாந்தே" எம்மாந் தொலவுன்னு வெகுளியாக சென்னை தமிழில் கேட்பது கொள்ளை அழகு.

டவ்டனை, டfton என்பதும், புரசைவாக்கத்தை, பொரஷவாக்கம் என்பதும், விருகம்பாக்கத்தை விரியம்பாக்கம் என்பதும், ஃபேனைத் துடை என்பதற்கு ஃபேனைத் தொடி என்பதும், குன்சா என்று சொல்வதும் பேஜார், பேமானி, கசுமாலம் என்கிற வார்த்தைகள் எங்கே?

சென்ட்ரல் ரெயில் நிலையம், எங்களுக்கே சொந்தமானது போல் ஒரு அந்நியோநியம்.

அரிசி போடுவதற்கு, நெல்லூரிலிருந்து, நடிகர் ரங்காராவ் போல கம்பீரமாய் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு 6 அடி மனிதர் வீட்டிற்கே வருவார். பக்கத்தாத்து வக்கீல் பாட்டிதான், நம் பிள்ளைகளுக்கு பெயரே சூட்டுவார். “மைதிலி, இப்பத்தான்டி, நான் ஸ்ரீவில்லிபுத்தூர் போய் ஆண்டாளை சேவிச்சிட்டு வரேன். உன் பொண்ணுக்கு ஆண்டாள்ன்னு பேர் வைடி!”- என்று சொல்ல, மகிழ்ச்சியோடு ‘ஆண்டாள்’ என்று பெயர் சூட்டப்பட்டது என் தங்கைக்கு.

பிராமணர்களில் அநேகம் பேர் அப்போது சீனிவாசன், பாலாஜி, வெங்கடேசன், பெண்களாக இருந்தால் நப்பின்னை, கோதை, லட்சுமி என்று பேர் வைத்தார்கள். பிராமணர் அல்லாதார் எத்திராஜ், ராஜேந்திரன், கபாலி, சிங்காரம், பழனி, சபாபதி, மலைச்சாமி, பெண்களாக இருந்தால், கயல்விழி, மோகன சுந்தரி, சுகந்தி, சாந்தி, விஜயலட்சுமி, உமா.

அப்போதெல்லாம், உடுப்பி ஹோட்டல்தான்! ஆனால் சுவை அதன் நறுமணம் நாலு தெருக்களுக்கு வீசும். அசைவம் என்றால், மதுரை முனியாண்டி விலாஸ்தான். எங்கு பார்த்தாலும் போக்குவரத்து கிடங்கிகள்தான் (transport godown)

கொத்தவால் சாவடி தான் அன்றைய கோயம்பேடு. நெய் வாங்கனும்னா கிரி டிரேடர்ஸ் என்கிற பெருமாள் செட்டி அண்ட் கோ. தாமரை இலையில் கட்டிக் கொடுப்பார்.ராயபுரம் கல்மண்டபம் அருகே அரிசி பருப்பு கிடைக்கும். அப்பவே “ஹோட்டல்க்கா?”, “வீட்டுக்கான்னு?” கேட்டார்கள். 

அவ்வளவு நேர்மை?

வருஷத்திற்கு ஒரு தபா, எல்லோருக்கும் டைபாயிட் (typhoid) வரும்.

விநாயக சதுர்த்தி, திருப்பதி குடை மற்றும் ஆடி மாதம் லைட் மியூசிக் ரொம்ப பிரபலம். எம்எஸ்வி, மாஸ்டீரியோ, சங்கர் கணேஷ் (MSV, MAESTERO, SHANKAR GANESH) ஆரம்ப கால டிஆர் (TR) பாடல்கள்தான் அப்போ ஹைலைட்.

சின்னகடம்மன் கோயிலில், எல்ஆர். ஈஸ்வரி செல்லத்தா, செல்ல மாரியத்தான்னு ஆடி மாதம், லைட் மியூசிக்ல பாடும் போது ஒட்டுமொத்த மக்களையும் சாமியாட வைத்தது கின்னஸ் சாதனைதான்.

திருவிளையாடல் ஒலிச்சித்திரம் எத்தனை முறை மகிழ்வித்தது!

புரட்சி செய்த வெளி மொழிப் படங்கள் சங்கராபரணம் 500 daysக்கு மேல் சத்யம் தியேட்டரில் ஓடியது. இந்த படம் வந்த போது, ரிக்ஷா வாலாகூட சங்கரா என்று ரம்மியமாக பாடினார். எஸ்பிபி பெருமளவில் ஈர்க்கப்பட்டார்.

என்டர்’ தி டிராகன் (ENTER THE DRAGON) ஆனந்த் தியேட்டரில் 365 நாட்கள், மரோசரித்ரா சபையர் (SAPPHIRE) தியேட்டரில் 500 நாட்களுக்கு மேல், ஜாக்கி ஷரூப் (JACKIE SHEROF) நடித்த ஹீரோ இந்திப் படம் பத்மம் தியேட்டரில் 500 நாட்களுக்கு மேல், 36 சாம்பர் ஆஃப் ஷாலின் (36 CHAMBER OF SHAOLIN) சபையர் (SAPPHIRE) தியேட்டர்ல 365 நாட்கள், இறுதியில் கியாமத்-ஸே, கியாமத்-தக் (QUATMAT SE QUATMAT TAK) எமரால்ட் (EMERALD) தியேட்டரில் 700 நாட்கள்.

மினர்வா (MINERVA) தியேட்டரும், ஓட்டேரி பாலாஜி தியேட்டரும், அற்புதமான ஹாலிவுட் படங்களை கீழ் தட்டு மக்களுக்கு கொண்டு சேர்த்தது.

ஆங்கிலப் படங்களைப் பற்றிய அதீத அறிவு, கீழ்த்தட்டு மக்களுக்கு உண்டு.

ஒருமுறை, ஐ ஆஃப் தி நீடில் (eye of the needle) படம் பார்க்கும் போது, பக்கத்தில் உட்கார்ந்து பார்த்த, ஒரு ரிக்ஷாகாரர், என்னைப் பார்த்து, இதில் வரும் ஹீரோ பேர் தெரியுமான்னார், தெரியலன்னேன். அவர் டொனால்ட் சுதர்லண்ட்ன்னார் (Donald Sutherland). அடுத்து இந்த ஹீரோவை பார்த்தா, யார் மாதிரி இருக்கு சொல்லுன்னார், மறுபடியும் தெரியலன்னேன், அந்த நபர், என்னைப் பார்த்து, உனக்கொன்னியும் தெர்லன்னு சொல்லி, நம்ம கமல் மாதிரி இருக்கான் பாருன்னு சொன்னார், அதே மாதிரி கண், நடிப்பு பாருன்னார். அந்த ரிக்ஷாகாரரை பார்த்து வியந்தேன் ஏனெனில் அந்த நடிகர் அப்படியே இருந்தார்.

ஒரே நேரத்தில், தீபாவளி ரிலீஸ், கிருஷ்ணா தியேட்டர்ல, கமலின் தூங்காதே தம்பி தூங்காதே, பாண்டியன் தியேட்டர்ல ரஜினியின் தங்க மகன். எப்புடி? கமல் ஸ்ரீதேவிதான் ஃபேமஸ்.

திமுக கோட்டை வடசென்னை என்பதால், என்விஎன் சோமு, டாக்டர் கலாநிதி (NVN SOMU, Dr.KALANIDHI) எல்லாம் தொகுதி பக்கம் வராமல் ஒவ்வொரு முறையும் ஜெயித்தனர்.

ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு பொருள் பிரத்யேகம். ஆதியப்ப நாயக்கன் தெருவில், மளிகை சாமான்கள், நாராயண முதலி தெருவில், பிளாஸ்டிக், செம்பு தாஸ் தெருவில் இரும்பு சாமான்கள், கோவிந்தப்ப நாயக்கன் தெருவில், எலக்ட்ரிக் பொருட்கள், பந்தர் தெருவில் (BUNDER STREET) எழுதுப்பொருட்கள். இப்படி ஒரே இடத்தில், எல்லா பொருட்களும் சகாய விலையில்.

பக்த பிரகலாதன் படம் பார்க்க டிவியில்தான்; ஒரு வீட்டில் நாலணா அதாவது 25 காசு கேட்கப்பட்டது. ஆனா என் ஹவுஸ் ஓனர் வீட்டில், தெருவே டிவி பார்த்து, மணிக்கணக்காக சிவாஜியின் நடிப்பை ஆராய்ச்சி செய்யும். அப்போது என்ன ஒரு குதூகலம் என்றால், “இந்த படத்துல சண்டை இருக்கா?”, “ஹை, ஜாலி!”- என்று சொல்வது.

ரேடியோ மாதிரி ஒரு சொர்க்கம் உண்டா? விவதபாரதியில், பாடல்கள் ஒலிக்கும் போது, நாளை இந்த வேளை என்று பாடும் போது ஆண்கள் கூட வாணிஸ்ரீ ஆகி அதே அபிநயம் செய்தனர்.

70 களில், மிகப்பெரும் மாற்றம் நடந்தது, ஒரு பக்கம், எம்எஸ்வி, டிஎம்எஸ். இன்னொரு பக்கம், டப்பாங்குத்து மியூசிக் டைரக்டர் என்று பேசப்பட்ட இளையராஜா வாழையில் ஊசி போல் நம் மனதில் கால் மேல் கால் போட்டுக் கொண்டார்.

சங்கர் கணேஷின், நான் கட்டில் மீது கண்டேன், டிஆர்ரின் வாசமில்லா மலரிது, சந்திரபோஸின் மாம்பூவே சிறு மைனாவே, மாஸ்டீரியோவின் இளைய நிலாவும் ஆக்கிரமித்தன.

அகஸ்தியா தியேட்டர், பைலட் தியேட்டர் மற்றும் தேவி தியேட்டர்களின் அகண்ட திரைகள் பிரபலமானவை.
 
மூர் மார்க்கெட் எங்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம்.

வண்டலூர் உயிரியல் பூங்கா யானை கவணிலதான் இருந்ததுன்னா, யாராவது நம்புவாங்களா? காலையில் சிங்கம் உறுமுவது எங்கள் வீட்டு மாடியில் கேட்கும். பேசின் பிரிட்ஜ் அனல் மின்நிலையத்திலிருந்து வரும் கரும்புகையை தினமும் சுவாசித்து வந்தோம்.

அப்போதே எங்களுக்கு, சாலையில், ‘இயேசுவின் ரத்தம் ஜெயம்!’ - என்று சொல்லி, புத்தகங்களையும், படங்களையும் விநியோகித்தனர். அதை வாங்கிக் கொண்டு, திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல விழித்தோம்.

கொண்டித்தோப்பில்தான், பாம்பு பஞ்சாங்கம் அச்சிடப்படுகிறது.

சீனப் பல் மருத்துவர்கள் கணிசமாக ஈவினிங் பஜார் பகுதியில் இருந்தனர். அவர்கள் எங்கே என்று தெரியவில்லை.

அடிப்பட்டால், புத்தூர் கட்டுத்தான். மூலகொத்தளம் பஸ் ஸ்டாண்டில் வலிக்க வலிக்க ஆந்திரா பஸ்ஸில் ஏற்றி, புத்தூருக்குச் சென்று வெற்றிகரமாக கட்டுப் போட்டு, ஒரு சில வாரங்களில் சரியாகிவிடுவோம்.

கல்யாணம் என்றால், நாரயணமுதலி தெரு கோமிட்டி மண்டபங்கள்தான் சகாய வாடகையில்! கொஞ்சம் வசதியிருந்தால், கோவிந்தப்ப நாயக்கன் தெரு பெரிய மண்டபம்.

ஒரு முறை நடிகை பத்மப்ரியாவை (மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்) பார்த்தேன், தூரத்து சொந்தம்.

குலதெய்வம் கோயிலுக்கு போறாங்களோ இல்லையோ, திருப்பதி பெருமாள்தான் ஒட்டு மொத்த வடசென்னைவாசிகளுக்கு பேவரிட். வருடத்திற்கு என்ன, மாதாமாதம் விசிட் அடித்தவர்கள். சம்மரில் (SUMMER) திருப்பதியோ அல்லது திருத்தணி மொட்டை தலையரை சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

மெல்ல மெல்ல பிராமணர்கள், நங்கநல்லூர், தாம்பரம், அம்பத்தூர் என்று வெகுஜனங்களோடு இடம் பெயர்ந்தனர். ஆகையால், இப்போது யானை கவுணி ‘மினி ராஜஸ்தான்’ ஆகிவிட்டது.

''''''''''''''''''''''''''''''''''''' 

(70 & 80களில் வடசென்னையில் (யானை கவுணி) பிறந்து வசித்த ஒரு சாமான்ய பிராமணரின் பதிவு இது. அவரது பெயர் குறிப்பிடவில்லை நண்பர் ரசூல் மொய்தீன் https://www.facebook.com/amrasoolmohideen பதிவில்)


Wednesday, August 12, 2020

முதுபெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி மறைந்தார்.

 முதுபெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி உடல்நலக் குறைவால் தனது 102 ஆம் வயதில் இன்று காலமானார்.

மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?

சின்னச் சின்ன நடைநடந்து, செம்பவள வாய் திறந்து

ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து

- போன்ற பல வெற்றிப் பாடல்களை இயற்றியவர்தான் இந்த வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி.

கண்களுக்குக் கண்ணாடி ஏதுமின்றி, 102 வயதைத் தொட்டும் இளைஞர் போல் சுறுசுறுப்பாக, அவரே சமைத்துச் சாப்பிட்டுத் தான் பெற்ற விருதுகளோடு சிறிய வீட்டில் வாழந்து வந்த  கவிஞரின் மரணம் அக்கிராமத்தினரிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடத்துக்குள் ஒளிரும் குத்துவிளக்கு வறுமை வளாகத்தில் உலாவும் பெரியார், கொள்கைச் சிங்கம் கவிஞர் பி.கே.முத்துசாமி.

“இவரது பாடலுக்கு நான் அந்த நாள் ரசிகன்”-என்று கவிஞர் சுரதா வார இதழ் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

"வெண்பா வேந்தர்", "இந்த நுாற்றாண்டின் புகழேந்தி"-போன்ற விருதுகளும் கவிஞருக்கு வழங்கப்பட்டுள்ளன.

உலகத் திரைப்படங்களிலிருந்து இந்தியப் படங்களை வேறுபடுத்திக் காட்டும் ஒரு அடையாளம் திரைப்பாடல்கள். கிராம ஃபோன் - LP - SP  இசைத்தட்டுகளிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுத் திரையிசைப் பாடல்கள் வெகுவாக முன்னேறியிருந்தாலும் பாடல்கள் இல்லாமல் படங்கள் வெளிவருவது மிகமிகச் சொற்பமே.

சில படங்களின் பெயர்களோ, பாட்டிற்கு நடித்த நடிக, நடிகையர் பெயர்கள் கூட ஞாபகமில்லாமல் பாடல்களை முணுமுணுக்கும் பெரியவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அதில் ஒரு சிலர் காட்சிகளின் கோணங்களைக் கூடச் சொல்லுமளவிற்குத் திறமை பெற்றிருப்பார்கள்.

பாடல்களை உருவாக்குவதில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், வாயசைக்கும் நடிக நடிகையர் எனப் பலரின் பங்களிப்புகள் இருப்பினும் சில பாடலாசிரியர்களே மக்களின் நெஞ்சங் கவர்ந்தவர்களாக வலம் வருகிறார்கள். அரை நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்களை இயற்றிய பாடலாசிரியர்களுள் மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் சுரதா ஆகியோரைக் குறிப்பிட்டுச்  சொல்லலாம்.

இவர்களுக்கு மத்தியில், பல வெற்றிப்பாடல்களை எழுதிப் பொதுவெளியில் அடையாளங் காணப்படாத பாடலாசிரியர்களுள் ஒருவர்தான் வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி.

கவிஞர் முத்துசாமி
கவிஞர் பி.கே. முத்துசாமி, ஏராளமான வெண்பா, நூல்கள், கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார். அவரது படைப்புகளைப் பாதுகாக்க போதிய இட வசதி இல்லாததால், மூட்டைகளில் கட்டி வைத்துள்ளார். தன்னை சந்திக்க வருவோரிடம் வெகு ஆவலாக அந்த மூட்டையில் உள்ள படைப்புகளை எடுத்துக் காண்பித்து, அவை உருவான விதம் குறித்து விளக்குகிறார் வெளிச்சம் படாத கவிஞர் முத்துசாமி  

கவிஞர் பி.கே. முத்துசாமி திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிவந்தவர். தி.மு.க. வில் தன்னை இணைத்துக் கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவர். முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றோருக்கு மிகவும் பரிச்சயமானவராகவும் இருந்திருக்கிறார்.

"அண்ணா அறுபது", "பெரியார் புரட்சிக் காப்பியம்", ஜெயலலிதா பற்றிய "புரட்சித் தலைவியின் புரட்சிக் காப்பியம்" போன்றவை இவர் எழுதிய நூல்களில் சில.  மேலும் 15, 000 வெண்பாக்களும் 1000 கவிதைகளும் அடங்கும். "புரட்சித்தலைவி அந்தாதி" என்ற நூலையும், பெரியார், அண்ணா, எம்ஜிஆர்.,  போன்றோரைப் பாராட்டித் தனித்தனியே வெண்பாக்களையும் எழுதியுள்ளார்.

"பொன்னித் திருநாள்" படத்தில் ( 1960 ) கே.வி. மகாதேவன் இசையில் பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடும், ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து? உன் எழில்தனை பாடவா  தமிழைச் சேர்த்து என்ற பாடலையும்,

"காவேரியின் கணவன்" படத்தில் மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே பொண்ணு வந்தா பொண்ணு  வந்தா பொட்டி வண்டியிலே .... போன்ற பாடல்கள் இன்னும் மக்களால் முணுமுணுக்கப்படும் பாடல்களாக அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பட்டியை சேர்ந்தவர் வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி. இவர் பள்ளிக்கல்வி மட்டுமே படித்துள்ளார். தமிழ், இலக்கியம் மீது கொண்ட காதலால் ஆயிரக்கணக்கான வெண்பாக்களை எழுதி உள்ளார். அந்தக் காலத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்தவர்களின் அறிமுகத்தால் அப்படியே சினிமாவுக்கு வந்தவர்.

இவரது தந்தையார் எஸ்.பி. கருப்பண்ணன், தாயார் காளியம்மாள். விவசாயத்தைப் பார்த்துக் கொண்டே மிதிவண்டி நிலையக் கடைப் பணியில் ஈடுபட்டவர். திரைப்படம் மீது கொண்ட பேரார்வத்தால் தனது நிலத்தை விற்பனை செய்து, அதில் கிடைத்த பணம் மூலம் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற திரைப்படத்தை எடுக்க முயற்சித்தார். அவரின் திரைப பட முயற்சி வெற்றிபெறவில்லை. அந்தத் திரைப்படத்தை அப்போதய பிரபல இயக்குநர் ஏ.கே. வேலனிடம் ஒப்படைத்தார். அந்தப் படத்தில் பாடல் ஆசிரியராக மட்டுமே பணிபுரிந்துள்ளார் - (மண்ணுக்கு மரம் பாரமா) "காவேரியின் கணவன்" ஏ.கே. வேலன் இயக்கிய படத்தில் இடம்பெற்ற "சின்னநடை நடந்து வா" - பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

பி.கே.முத்துசாமியின் மகன் ஒரு ஒளிப்பதிவாளர். மகள் கலையரசி ஆர். புதுப்பட்டியில் உள்ளார்.

2003 ஆம் ஆண்டு, தன்னுடைய மனைவியை இழந்த பின், மீண்டும் நாமக்கலுக்கே சென்ற கவிஞர் அங்கு வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார்.

இவர் படைப்பில் உருவான புத்தகங்களின் உரிமையை கூட, சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வழங்கிய இவர், கடைசி வரை தனக்கு அரசால் வழங்கப்பட்ட ரூ.1500/- பணத்தை கொண்டே வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இவர் எழுதிய ஒரு நாடகத்தில், நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்ற திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

திரைப்படப் பாடல்களில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர் வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமிக்கு ( 20 அக்டோபர், 1918 - 11 ஆகஸ்ட், 2020 ) அஞ்சலி செலுத்துவோம்.

மதுரையிலிருந்து
பென்ஸி.

நன்றி: Kadayanallur Benzy   (https://www.facebook.com/kadayanallur.benzy)