'''''''''''''''''''''''''''''''''
வடசென்னை மக்களால் நதி எனக் குறிப்பிடப்படும் எண்ணூர் உப்பங்கழி, முன்பு இருந்ததைப்போல இப்போது இல்லை. பள்ளி நாட்களில் மாணவர்களாகிய நாங்கள் பளிங்கு போல தோற்றமளிக்கும் இந்த நதியில்தான் நீந்தக் கற்றுக் கொண்டோம். சுவை மிகுந்த மீன்களை விடுமுறை நாட்களில் இங்குதான் வேட்டையாடி உண்டோம். வெண்குவியல்களாய் கொட்டப்பட்டிருக்கும் உப்பைச் சுமந்த உப்பளங்கள் பிரமிப்பூட்டும். உப்பையும், சவுக்குச் சுள்ளிகளையும் சுமந்த பாய்மர படகுகள் கம்பீரமாக பயணிக்கும். அந்தக் கால கோலிவுட்டின் வெளிப்புற படக்காட்சிகளின் முக்கிய இடமாக இருந்த நதி இது. பரிந்துரைக்கப்பட்ட சுற்றலாதலங்களில் ஒன்றாக விளங்கிய இடம்.
உப்பங்கழியின் பளீர் நீல நிற கரையோரத்தில், வண்ணமய சிறு நண்டுகள் தங்கள் தடித்த ஒற்றைக் காலால் வரவேற்கும். இருபுறமும், அடர்த்தியான அலையாத்திக் காடுகள் பசுமைப் பூச்சுடன் செழித்து வளர்ந்து ஆயிரக்கணக்கான உயிரினங்களின் உறைவிடமாக இருந்த நதி.
இந்த நதி அதாவது எண்ணூர் உப்பங்கழி தனது அத்தனை சிறப்புகளையும், அழகையும் இழந்து பொலிவிழந்த விதவைப் பெண்ணாய் தற்போது காட்சியளிக்கிறது. ஏற்கனவே எண்ணூர் அனல் மின்நிலையம் இருந்தது போதாதென்று அழகிய உப்பளங்கள் இருந்த இடத்தில் இன்னும் ஒன்றுக்கு இரண்டாய், வல்லூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம் என்று மூன்று அனல் மின்நிலையங்கள் நதியை சின்னாபின்மாக்கிவிட்டன. சாம்பல் மயமாய், நிலக்கரி கழிவுகளாய் உப்பங்கழியை நிரப்பிவிட்டன.
அத்தோடு தனியாருக்குச் சொந்தமான வாகன உற்பத்தி நிறுவனங்களின் எண்ணெய் கழிவுகள், இரசாயன ஆலைகளின் கழிவுகள் என்று கரு நிறத்தில் எண்ணெய் பிசகாய் உருமாற்றிவிட்டன. அரிய வகை பச்சை ஆலி போன்ற நீர் வாழ் உயிரினங்களின் வாழ்வியலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், மீன்பிடித் தொழிலை மட்டும் நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய வைத்துவிட்டன.
முன்பு, இந்த நதியின் இரு பக்கங்களிலும் அலையாத்திக் காடுகளும், ஆற்றுப்படுகைகளில் அலையேற்ற சதுப்பு நிலங்களும், மண்மேடுகளும், உப்பு நீரில் வளரும் தாவரங்களும் ஏராளமாக இருந்தன. பிரதான கால்வாய் ஆழமாக இருந்ததால், நீரின் ஓட்டமும் அதிகமாக இருந்தது. முகத்துவாரம் இயற்கையாகவே திறந்திருந்ததால், ஒவ்வொரு பருவநிலை அலையேற்றத்தின்போதும், கடலிலிருந்து மீன்களும், இறால்களும் உப்பங்கழிக்கு புலன்பெயர்ந்து, அதி பாதுகாப்பான சதுப்பு நிலக்காடுகளில் முட்டைகளை இட்டன. இனப்பெருக்கம் நடந்தது. சுவை மிகுந்த நீர் வாழ் உயிரினங்களால் மீனவ மக்களின் வாழ்வும் செழித்தது. நதியைச் சுற்றியிருந்த உப்பளங்களால், சவுக்குக் காடுகளால் பொருளியலும் பெருகியது.
சென்னை, ஆர்.கே.நகர், திருவொற்றியூர் பகுதிகளிலிருந்து சாக்கடை நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக இந்த உப்பங்கழிக்கு வந்து சேர்கிறது.
இந்த அத்துமீறிய ஊடுருவல்களாலும், குழாய்களிலிருந்து கசியும் நிலக்கரி சாம்பலும் இந்த நதியின் ஆழத்தை வெகுவாக குறைத்துவிட்டன. இதன் விளைவாக, ஆழமற்ற நீர் வெகு வேகமாக வெப்பமடைந்தது. மீன்கள், இறால்கள் போன்ற நீர் வாழ் உயிரிகளின் உயிர்வாழ்க்கை சிக்கலானது. https://www.youtube.com/watch?v=yVVIsYEFAWQ வடப்பகுதியில் இருக்கும் மீன்பிடி இடங்களில் சேறு அல்லது நிலக்கரி சாம்பல் சூழ்ந்து கொண்டது. இதனால், மீனவர்களின் படகுகள் சிக்கிக்கொள்வதால் அந்த மீன்பிடி இடங்களுக்குப் போவதில் சிக்கல் ஏற்பட்டது. https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg
சி.ஆர்.இசட். அறிவிப்பு குறிப்பாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடையாளம் கண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டியது. இதன்படி, மீன்பிடி பகுதிகள் எவை என்று அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என சட்டம் குறிப்பிடுகிறது. அதேபோல, நதியின் நிலப்பரப்பை கையகப்படுத்த, நிலக்கரி சாம்பல், மணல் அல்லது கழிவுகளை நதியில் கொட்டுவதும், உப்பங்கழியில் வெப்ப நீரை வெளியேற்றுவதும் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. ஏதாவது காரணங்களுக்காக நதியின் போக்கைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதற்குக்கூட இந்த சட்டத்தின்படி யாருக்கும் அனுமதி கிடையாது எனலாம்.
வெறும் சட்டங்களால் மட்டுமே பிரச்னைகளை தீர்த்துவிட முடியும் என்றால் நாம் புழல் சிறையைக் கட்ட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அதேபோல, சட்டங்களால் மட்டுமே நதியைப் பாதுகாத்துவிட முடியாது. அந்தச் சட்டங்கள் பாராபட்சமின்றி மக்களல் நலன்சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியம். அந்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும், அவை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிர்பந்தங்களும் தர வேண்டியது மக்கள்தான்..!
வல்லூர் அனல் மின்நிலையம், ஹெச்.பி.சி.எல்லின் எண்ணெய் சேமிப்பு முனையம் முன்மொழியப்பட்டபோது பொதுமக்களின் கருத்துகளை அறிய கண்துடைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பது உண்மைதான்! இவற்றில் தங்களது கவலையைப் பதிவு செய்ய பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது துரதிஷ்டவசமானது. மண்ணையும், காற்றையும், காட்டையும், சக உயிர்களையும் காத்தல் வருங்கால தலைமுறையைக் காப்பது என்ற தொலை நோக்கு பார்வையில்லாமல் ஒரு சிலர் இதில் வேலைவாய்ப்பை நாடிச் சென்றனர். இந்த வாய்ப்புக்காக காத்திருந்த சூழலைச் சீரழிக்க வந்த நிறுவனங்கள், இவர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதியை எந்தவிதமான உத்திரவாதமும் தராமல், அதைக் காப்பாற்றும் எண்ணமும் இல்லாமல், ஒப்புக்கு தலையாட்டிவிட்டு இந்த நதிப்பகுதியில் தாங்கள் விரும்பும் எதை வேண்டுமானலும் செய்துகொள்ளலாம் என்று நினைத்தன.
2017 ஜூலை மாதம் இந்த ஆணையம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணூர் பகுதியின் சி.ஆர்.இசட். வரைபடம் என்று கூறி மோசடியான ஒரு வரைபடத்தை வெளியிட்டதாகவும், இந்த வரைப்படத்தின்படி எண்ணூர் உப்பங்கழி என்ற ஒன்று இருப்பதையே மறுப்பதாகவும் சூழலியலாளர்களால் சொல்லப்படுகிறது. காளாஞ்சி அருகே உள்ள சிந்தாமணி முகத்துவாரத்துக்கும், சமுத்திரமுனைக்கும் இடையே உள்ள ஒட்டுமொத்த பகுதியும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலமாக (நீர் அல்ல நிலம்) காட்டப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தனது தவறுகளுக்கு அரசாங்கத்தைப் பொறுப்பேற்க செய்வதற்கும், வளர்ச்சி என்ற பெயரால் வருங்கால தலைமுறையினரின் வாழ்வியலையும், சக உயிரிகளின் உயிர்களையும் சூறையாடுவதை தடுத்து நிறுத்தவும் ஆக பொறுப்பு அவர்களை அரியணையில் அமர்த்தும் மக்களின் அதிகாரத்துக்கே உள்ளது. மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை கேள்வி கேட்க வேண்டியதும், இதற்காக ஒரு விசாரணை நடத்தப்பட்டு, ஆணையத்தில் தவறாக நடந்துகொள்பவர்களின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த வேண்டியதும் பொது மக்களின் தார்மீகப் பொறுப்பாகும்.
நாளை எண்ணூர் என்ற ஒரு பகுதி இல்லவே இல்லை என்று சுயநல வரைப்படம் உருவாவதற்கு முன் பொதுமக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாளைய இளந்தலைமுறையினர் சுயநல ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக இருந்த ஒரு சமூகத்தின் வாரிசுகள் தாங்கள் என்ற அவப் பெயரை வரலாற்றில் காலமெல்லாம், சுமக்க வேண்டியிருக்கும். சூழல்மாசுவால் மொத்த வாழ்வாதாரத்தை பறிகொடுத்து, சொந்த நிலத்தில் மனித உருமாறி அகதிகளாக வலம் வர வேண்டியிருக்கும்.












0 comments:
Post a Comment