NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Friday, October 30, 2020

இறைவா இதற்கு நீயே சாட்சி: மீலாது நபி சிறப்புக் கட்டுரை

 

இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''
நபிகளார் சிறு வயது முதலே உயரிய ஒழுக்கப் பண்பாளராகவே இருந்தார். மென்மையும், நளினமும் அவரது அணிகலன்களாகத் திகழ்ந்தன. சக மனிதர் மீது அவர் கொண்ட அன்பும், நேசமும் அளப்பரியது. ஒழுக்கச் சீர்கேடுகளிலிருந்து மனித இனத்தை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஈடில்லாதவை. இளம் வயதிலேயே தந்தையையும், தாயையும் இழந்த அனாதையான நபிகளார், சக மனிதர்களின் துன்பங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் தாயாக இருந்தார்.
 
நபிகளார் காலத்தில், சமூகத்தில் நிலவிவந்த சீர்கேடுகள் சதா அவரை அலைக்கழிக்க, அவற்றிற்கான தீர்வு தேடி அவர் தனிமையில் இருக்கலானார். அதற்காக அவர் மக்காவுக்கு வெளியில் இருந்த ஹிரா மலையின் நூர் என்னும் குகையில் தனித்தும், விழித்தும், பசித்துமிருக்க நேர்ந்தது. சக மனிதர்களின் மீதான இத்தகைய கவலையால் இறைவனின் தரப்பிலிருந்து பெற்றதுதான் திருக்குர்ஆன் என்னும் வாழ்வியல் வழிகாட்டியின் துவக்கமானது.
 
எது பிறருக்கு அருளுரையாய் இறைவனின் தரப்பிலிருந்து வழங்கப்பட்டதோ அதன்படி தம்மை வடிமைத்துக் கொண்டு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் அவர். அந்த இறை வழிகாட்டுதல் ஒன்றே மனிதப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்று உறுதியாக நம்பினார். அதை, உற்றார், உறவினர், அண்டை, அயலார் என்று அனைத்துத் தரப்பிலும் சேரக்க முயன்றார். மிகவும் இனிய வார்த்தைகளால், மென்மையான போக்கால் தமது பரப்புரைகளைச் சுமந்து சென்றார். மக்கத்துத் தெருக்கள், வணிகச் சந்தைகள், பிரமுகர்களின் கூடாரங்கள், தாயிப் போன்ற அண்டை நகர வீதிகள் என்று சுற்றி அலைந்து அதற்காக அவர் பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கான உதாரண சம்பவம் இது.
 
உணவை மறுத்த நபிகளார்
 
மிகவும் களைப்புடன் அப்போதுதான் திரும்பியிருந்தார் நபிகளார். தமது போதனைகளை நிராகரிக்கும் மக்கள் குறித்து பெரும் கவலை அவர் முகத்தில் வேதனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தமது அன்புக் கணவரின் முகவாட்டத்தைக் கண்டு பதறிப்போன கதீஜா நாச்சியார் அமுது படைக்க அவரை அமர வைக்கிறார்.
 
பசியோடிருந்த நபிகளாரும் ஒரு கவளம் உணவை உண்ண வாயருகே கொண்டு செல்கிறார். அதே நேரத்தில், வீட்டுக்கு வெளியே அயலகத்திலிருந்து வந்த ஒட்டகக் குழுவொன்று பாதையைக் கடந்து செல்லும் சத்தம் கேட்கிறது.
 
உண்ண வாயருகே கொண்டு சென்ற உணவுக் கவளத்தை வைத்து விட்டு முக மலர்ச்சியோடு நபிகளார் எழுந்து கொள்கிறார். பதறிப்போன கதீஜா நாச்சியாரோ, “அண்ணலே..! சோறு உண்டுவிட்டுச் செல்லலாமே” என்று அன்பொழுகக் கேட்கிறார்.
 
“கதீஜா.. கேட்டீரா.. . வீட்டுக்கு வெளியே ஒட்டகக் குழுவின் காலடி சப்தத்தை..? ஆம்… அயலகத்திலிருந்து ஏதோ வணிகக் கூட்டமொன்று இவ்வழியே செல்லும் அறிகுறி இது.”
 
“உண்மைதான் அண்ணலே..! இருக்கட்டும்… ஒரேயொரு கவளம் உணவாவது உண்டுவிட்டு செல்லலாமே.!” என்று சொன்ன கதீஜா நாச்சியாரை இடைமறித்த நபிகளார்,
 
“என்ன சொன்னீர் கதீஜா? நான் ஒரு கவளம் உணவு உண்டுவிட்டுச் செல்வதற்குள் அந்த ஒட்டகக் குழு, மக்காவைக் கடந்துவிட்டால் நான், அவர்களுக்கு எனது போதனைகளைச் சொல்ல முடியாத நிலைமைக்கு அல்லவா ஆளாகிவிடுவேன்..! நாளை நான் இதற்காக இறைசந்நிதியில் அல்லவா பதில் சொல்லியாக வேண்டும்!” என்று பதற்றத்துடன் நபிகளார் சொல்கிறார்.
 
இந்த அக்கறை, சமூக அவலங்களிலிருந்து மக்களைக் கரைசேர்ப்பதற்கான துடிதுடிப்பு ஏறக்குறைய 23 ஆண்டுகள் தொடர்ந்தது. மக்காவைத் துறந்து மதீனாவரை சென்றது. நபிகளாரின் அரசியல் தலைமையகமாக மதீனா மாறியும், பல்வேறு போர்முனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
 
கடைசியில் மக்கா வீழ்ந்து முழு அரசியல் அதிகாரம் நபிகளார் வசமான அந்த இறுதித் தருணங்களில், நபிகளாரின் கவலை முற்றுப் பெற்றதாய் இல்லை. ஹிரா மலையின் நூர் குகையில் முதன்முதலில் பெற்ற வேதவெளிப்பாட்டிலிருந்து அரஃபாத் திடல்வரை இந்த கவலையே நபிகளாருக்குள் மேலோங்கி இருந்தது.
 
நபிகளாரின் அய்யப்பாடு
 
“பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றினேனா?” - என்ற ஐயப்பாடு நபிகளாரின் ஹஜ்ஜதுல் விதா என்னும் அந்த இறுதி ஹஜ்ஜிலும் எதிரொலிக்கிறது.
 
அலைகடல்போல வெள்ளுடையில் லட்சக்கணக்கான நபித்தோழர், தோழியர்களால் அரஃபாத் திடல் நிரம்பி வழிகிறது. தமது நபித்துவ உழைப்பின் பலன் அறுவடையாக நபிகளார் அங்கு குழுமியிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் காண்கிறார். திருக்குர்ஆனின் கடைசி வேத வெளிப்பாடும் அங்கு முற்றுப் பெறுகிறது.
 
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹஜ்ஜுப் பேருரையாக வரலாற்றில் போற்றப்படும் அந்த பேருரைக்கு பின், நபிகளார் மனதில் தொக்கி நின்ற கேள்வி அத்திடலில் மக்கள் முன் இப்படி வெளிப்படுகிறது:
 
“மக்களே…! உங்களுக்கு நான் இறைவனின் திருச்செய்தியை முற்றிலும் சரியான முறையில் சேர்த்துவிட்டேனா?”
 
தங்கள் கொள்கை போதனைகளின் அடிப்படையிலான ஒரு கட்டமைப்பு, அரசியல் அதிகாரம் மக்காவைத் தாண்டி மதீனாவில் உருவெடுத்திருந்தது. அந்நிலையிலும் நபிகளாரின் உள்ளத்திலிருந்து அந்த கேள்வி உருவெடுக்கிறது என்பது முக்கியமானது!
 
அரஃபா திடலில் குழுமியிருந்த மக்கள், “ஆம்… இறைவனின் திருத்தூதரே! தங்கள் பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றிவிட்டீர்கள்!” என்று விண்ணதிர முழங்குகிறார்கள்.
 
நபிகளாரின் திருமுகம், பூரண நிலவொளியாய் பிரகாசிக்கிறது. அதரங்களில் புன்னகை இழையோடுகிறது. நாசியிலிருந்து பெருமூச்சு வெளிப்படுகிறது. தமது சுட்டுவிரலை வானத்தை நோக்கி உயர்த்தி, “இறைவா… இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை அவர் உச்சரிக்கிறார்.
 
வாழும் சமூகத்தின் மீதான நபிகளாரின் இந்த அளவற்ற நேசத்தைத்தான் திருக்குர்ஆன் இப்படி சிலாகிக்கிறது:
 
“இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையென்றால் இவர்கள் பின்னே கவலைப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்வீரோ நபியே..!”
 
(தி இந்து நாளேட்டில், 15 டிசம்பர் 2016, அன்று பிரசுரமான கட்டுரை. இணைப்புக்கு: https://www.hindutamil.in/news/spirituals/92170-.html)

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெயரில் முழக்கமா?

 

பிரான்ஸ் நாட்டில், சர்ச்சைக்குரிய வகையில் நபிகளார் குறித்து கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் காவாஜா ஆஸிப் உள்ளிட்ட எம்.பி.க்கள் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். 
 
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு மற்றும் எதிர்க்கட்சி இரண்டுமே தனித்தனி தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சித்தன.
 
விவாதம் நடந்துகொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அவையில் எழுந்து உரையாற்ற முயற்சித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் "ஓட்டிங், ஓட்டிங்…" என்று முழக்கம் எழுப்பினார்கள். அவர்களது கோரிக்கை அரசுத் தரப்புத் தீர்மானத்துக்குப் பதிலாக தங்கள் தரப்புத் தீர்மானத்தை சமர்ப்பித்து ஓட்டெடுப்புக்கு அனுமதிக்கவேண்டும் என்பதே ஆகும்.
 
இந்த முழக்கம் எழுப்பும் இரண்டு நிமிடக் காட்சி இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களிலும், மின்னணு தளங்களிலும், பிரபல சமூக ஊடக கணக்குகளிலும் தவறாக, வெளியிடப்பட்டது. இந்த முழக்கம் எந்த சூழ்நிலையில் எழுப்பப்பட்டது என்ற எந்த விளக்கமும் இல்லாமலே இது வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
 
"ஓட்டிங் ஓட்டிங்..." என்று பாகிஸ்தான் எம்.பி.க்கள் முழக்கமிட்ட நிலையில், அவர்கள் "மோடி... மோடி" என்று முழக்கம் எழுப்பியதாக டைம்ஸ் நவ், இந்தியா டிவி, எக்கனாமிக் டைம்ஸ் மற்றும் குறிப்பிட்ட பிரபல சமூக ஊடக கணக்குகள் தவறாகக் கூறின. பிரதமர் இம்ரான் கானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மோடி பெயரை முழக்கமிட்டதாக இந்த ஊடகங்கள் தவறாக குறிப்பிட்டன.
 
இப்படி தவறாக வெளியிடப்பட்ட செய்தியை எக்கனாமிக் டைம்ஸ் தனது இணையதளத்திலிருந்து நீக்கிவிட்டது. டைம்ஸ் நவ் தனது டிவீட்டை டெலீட் செய்துவிட்டது. ஆனால், டைம்ஸ் நவ் தளத்தில் இது தொடர்பான கட்டுரை, குறிப்பிட்ட காணொளியோடு தொடர்ந்து காணப்பட்டது.

(Source: BBC)


Thursday, October 29, 2020

”திகைக்க வைத்த அந்த முதல் மரியாதை..!”

இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''

சக சமய சகோதரர்களுக்கு அவரவர் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்வது கூடுமா..? கூடாதா..? என்ற விவேகமற்ற சர்ச்சைகள் அல்லது நினைப்புகள் மேலோங்கியிருக்கும் நேரத்தில்,

மேன்மைமிக்க சமுதாயம்என்ற சொல்லாடல் சதா, மேடைதோறும் முழங்கிக் கொண்டிருக்கும் காலத்தில், 

எனது அண்டைவீட்டார் தனது நடத்தையால் திகைக்க வைத்த ஒரு சம்பவம் இது.

சமீபத்தில்தான் சகோதரர் முத்து சுப்பிரமணியன் எங்கள் அண்டைவீட்டாராக குடியேறியிருந்தார். அமைதி தவழும் முகம். சதா புன்முறுவல் இழையோடும் தோற்றம்.

இன்று காலை சகோதரர் முத்து சுப்பிரமணியனின் மனைவி, மக்கள் தீபாவளி இனிப்புடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.

என் பங்காக தீபாவளி வாழ்த்துக்களை சொல்லி அவர்களை வரவேற்றேன்.

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? 

இனிப்புத் தட்டை கையில் ஏந்தி வந்த மகேஸ்வரி முத்துசுப்பிரமணியன் சொன்னார்: "எங்கள் தலைவருக்கு பாலூட்டி வளர்த்தவர் ஒரு முஸ்லிம் தாய். அதனால், இன்றைய நாளின் இந்த பண்டிகையின் முதல் மரியாதை உங்களுக்குதான்! 

அம்மாவோடு வந்திருந்த ஸ்ரீநிதி மத்தாய்ப்பாய் சிரித்தார்.

மகேஸ்வரி முத்துசுப்பிரமணியன் இன்னும் நிறைய செய்திகளை அவருக்கு உரிய பாணியில் சொன்னார். அவை எல்லாமே இணக்கமான, நெஞ்சங்களைப் பிணைக்கும் செய்திகளான வரலாறுகள்.

நமது முன்னோர் விட்டுச் சென்ற இந்த இணக்கங்களோடான வாழ்க்கையின் முன்மாதிரியைப் பின்பற்றி அழகிய அன்புக் கோட்டையைக் கட்ட எத்தனை எத்தனை வாய்ப்புகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன ஆஹா.. !

(அக்டோபர் 29, 2016 நடந்த சம்பவம் இது-முகநூலில் வாசிக்க: https://www.facebook.com/ikhwan.ameer.9/post /698025880350444?__cft__[0]=AZUw2YxB4KSb2lNZj0E_D5iGo8NH2YhoshWO2W9YZvh98xQXaZPlYCbdsKSM0OyzoTlT4DilAkG-kZukZql2c71u-hyJg13oJhNdRCh71zR17otqLySzkmF0n2LR1xWEEllBx7S4Hbq8DM1VMHGpnl7b&__tn__=%2CO%2CPH-R )

 

Tuesday, October 13, 2020

தூத்துக்குடி: ஆடு மந்தையில் நுழைந்துவிட்டதாக கூறி காலில் விழ வைத்த சாதீயம்

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓலைகுளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். 55 வயதாகும் இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். ஆடுகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருபவர்.  இதே ஓலைகுளம் தெற்கு தெருவில் வசிக்கும் சிவசங்கு என்பரும் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த, 8 ஆம் தேதி கண்மாய்க்குள் பல ஆட்டு மந்தைகள் , மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது சிவசங்கின் மந்தைக்குள் பால்ராஜின் ஆடுகளில் ஒன்று, நுழைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கு தரப்பினர், பால்ராஜை தாக்கி அனைவர் முன்னிலையில், அவரை சிவசங்கு காலில் விழுந்து, மன்னிப்பு கேட்க செய்துள்ளனர். இந்தக் காட்சியை காணொளியாக்கி சமூக ஊடகங்களில் பரப்பினர்.

இதையறிந்த பால்ராஜ், 11 ஆம் தேதி மாலை கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து கயத்தாறு போலீசார், பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சிவசங்கு உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து, இன்று 13.10.2020 (செவ்வாய்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Monday, October 12, 2020

ஒளியே கதை எழுது 2 - காஷ்ட்லியான சமாச்சாரமா ஒளிப்படக்கலை?

இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு வெளிப்புற படப்பிடிப்புக்காக இரண்டு நாள் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. அய்யா நம்மாழ்வாரின் சிந்தனையாளர்கள் ‘இயற்கையோடு இயைந்து வாழ்தல்’ 

https://www.youtube.com/watch?v=qxiYWukMdU0 

https://www.youtube.com/watch?v=jE2YY03b058 

https://www.youtube.com/watch?v=dVoIf3M0PIg 

https://www.youtube.com/watch?v=uTOLqNJjDtM

-என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சிகளை ஆவணப்படமாக்க நண்பர் ஒருவர் என்னை சத்தியமங்கலம் அழைத்திருந்தார். அவரது அழைப்பைத் தட்ட முடியவில்லை.

நிகழ்ச்சியில், இரண்டு ஒளிப்பட நண்பர்களைக் கண்டேன். விலை உயர்ந்த வாகனங்களில், விலையுயர்ந்த ஒளிப்படக் கருவிகள், லென்ஸ்கள் மற்றும் ஒளிப்பட சாதனங்களுடன் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.

நானும் என்னுடைய மாணவர் மெஹர் அலியும் எடுத்துச் சென்றது இவைதான்:

1. வீடியோ படப்பிடிப்புக்கான சாதாரணமான இரண்டு காம் ரிகார்டர்கள்,
2. கனான் குயிக் ஷாட் கையடக்க காமிரா,
3. கனான் ரிபேல் டி-3 என்றழைக்கப்படும் DSLR வகையில் அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட EOS 1100D காமிரா மற்றும்
4. எனது சாம்சங் காலக்ஸி எஸ் 2 செல்லிடைப் பேசி (அட்டகாசமாக படம் பிடிக்கும். வீடியோ எடுக்கும். https://www.youtube.com/watch?v=ZG5YCVsU3Xw அதனால்தான் இதையும் எனது ஒளிப்பட சாதனங்களில் சேர்த்துக் கொண்டேன்.)


வெளிப்புற படப்பிடிப்பின் அந்த இரண்டு நாளும், நிகழ்ச்சி நேரம் போக மற்ற நேரங்களில் இயற்கையின் அத்தனை அழகும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்தப் பகுதிகள் முழுக்க நடந்து சென்று வயல்காடுகள், தோப்புத் துறவுகள், மனித வாழ்வியல் என்று அத்தனையையும் படம் பிடித்தேன்.

இதில் ஏற்கனவே நான் சொல்லியிருந்த நண்பரும் அடக்கம். சீருடை, தொப்பி சகிதமாக அவரது நீண்ட காமிராவையும் சேர்த்து படம் பிடித்தேன்.

கடைசி நாள் அன்று அந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் நிற்க வைத்து படம் பிடிக்கும்படி நண்பர் கேட்டுக் கொண்டார்.

நண்பகல் நேரம்.

சூரியன் உச்சியில் இருக்கும்போது, முகம் நிழலாய் கருத்து காணப்படும். இதற்கான பிரத்யேக ஒளிரும் சாதனங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். என்னிடமோ அத்தகைய பிரத்யேக சாதனங்கள் ஏதுமில்லை.


அந்த இக்கட்டான நிலையில், மின்னணு ஒளிப்பட கருவியின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த நிகழ்வை சிறப்பாக படம் பிடித்தேன்.

ஆக ஒளிப்படங்களை தீர்மானிப்பவை விலையுயர்ந்த ஒளிப்பட சாதனங்களோ, பெரிய பெரிய லென்ஸ்களோ அல்லது நவீன ஃபில்டர்களோ மட்டும் அல்ல.

ஒரு சாதாரணமான ஒளிப்படக் கருவியையும் பயன்படுத்தி மிகச் சிறந்த ஒளிப்படத்தை எடுக்க முடியும் என்பதே அனுபவம்.

“நல்ல ஒளிப்படக்கலை என்பது வெறும் காசு கொடுத்து வாங்கும் ‘காஷ்ட்லியான’ சமாச்சாரம் அல்ல!” – என்கிறார் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞரான ஆரி மில்லர். தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் இப்படி குறிப்பிட்டு காட்டுகிறார்.

 

“ஒருமுறை லண்டனுக்குச் சென்றிருந்தேன். அப்போது, சில ஒளிப்படச் சாதனங்களை வாங்க ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடை லண்டனில் விலை உயர்ந்த ஆடம்பர பொருள்கள் விற்கும் பலபொருள் அங்காடித் தொகுப்பில் இருந்தது. வேறு எங்கும் கிடைக்காத காமிராவுக்கான சில பொருள்களைத் தேடி நான் அங்கு சென்றிருந்தேன். கடையில் சற்று நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

எனக்கு அருகில் ஒருவர் நின்றிருந்தார். பெரிய செல்வந்தர் அவர் என்பதை அவரது தோற்றமே சொல்லியது. அவர் வாங்கியிருந்தது மிகவும் விலையுயர்ந்த காமிரா. கூடவே, காமிராவுக்கான லென்ஸ், ஃபில்டர்கள் மற்றும் துணைச்சாதனங்கள் என்று எல்லாவற்றையும் வாங்கினார்.

பில் தொகையைக் கண்டு நான் அசந்து போனேன். பணம் கட்டி முடித்ததும், கடைக்காரர் பொருட்களை பாக்கிங் செய்ய ஆரம்பித்தார்.  


அப்போது, அந்த செல்வந்தர், கடைக்காரரிடம், “கொஞ்சம் இருங்கள்!” – என்றார்.

“நீங்கள் பாக்கிங் செய்வதற்கு முன் இந்த காமிராவையும், இந்த துணைச்சாதனங்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று சொல்லித் தந்தால் நல்லது!” – என்றாரே பார்க்கலாம்.

உண்மைதான்..!

செல்வந்தர் வாங்கிய காமிரா மற்றும் அதன் சாதனங்கள் அனைத்தும் ஒளிப்பட அனுபவசாலிகள் மட்டுமே பயன்படுத்தும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டவை. அனுபவசாலிகளால் மட்டுமே அவற்றை எப்படி கையாள்வது என்று அறிய முடியும்.

அந்த சாதனங்களை வாங்கிய செல்வந்தர், அவற்றைக் குறித்து விஷய ஞானமே இல்லாதிருந்தார். யாரோ அவருக்கு தவறாக வழிகாட்டியிருக்கிறார்கள் என்பதே அதன் பொருள்.

ஒளிப்படமெடுக்க வேண்டும் என்று நினைத்த அவருக்கு, “ஒரு சாதாரணமான காமிரா வாங்குங்கள் போதும்!” – என்று மட்டுமே  ஆலோசனை சொல்லியிருக்க வேண்டும்”

– என்று லண்டன் மாநகரில் தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் ஒளிப்பட ஜாம்பவான் ஆரி மில்லர்.

ஒளிப்படக்கலை என்பது வெறுமனே விலையுயர்ந்த காமிராவோ, மீட்டர் கணக்கில் நீளமான லென்ஸ்களோ, விதவிதமான ஃபில்டர்களோ மட்டுமல்ல என்பதை உள்வாங்கவே இந்த சம்பவத்தை நான் குறிப்பிட்டு காட்டினேன். 


ஒரு காமிராவை எப்படி எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்று ஒரு வரம்பு உண்டு. அதனால், காமிராவை வாங்கும்போதே அது,

•    “எதற்காக பயன்படப் போகிறது?” - என்று தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இது தெரியும்போதுதான் வாங்கும் காமிராவை எதற்காக பயன்படுத்தலாம், எந்த வரம்புவரை பயன்படுத்தலாம் என்ற தெளிவும் கிடைக்கும். வரம்பு மீறி அதை கையாளவும் முடியாது என்று அதன் மதிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளங்கியிருக்கும்.

இறைவன் நாடினால்.. அடுத்தவாரம் பலே பிட்பாக்கெட் திருடன் ஒருவன் தனது, கையடக்க ‘பிளேடால்’, எனக்குக் கற்றுத் தந்த பாடம் அதாவது சொந்தமாக எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைக் காணலாம்.

இதற்கு முந்தைய தொடரை வாசிக்க:

001 ஒளியே கதை எழுது 1, நெஞ்சோடு கொஞ்சம்:
https://mrpamaran.blogspot.com/2020/08/1.html

நூற்றாண்டுக்குள் நிறம் வெளுத்த சங்பரிவார்



இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''
1980-களின் பிற்பகுதி.

கம்யூனிஸ சிந்தனையிலிருந்து விலகி இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டிருந்த நேரம். கார்ல் மார்க்ஸ்ஸிலிருந்து, நபிகளார் பக்கம் உணர்வு ரீதியாக அல்லாமல் அறிவு ரீதியாக திரும்பியிருந்த காலம் அது. காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள் போன்ற பிரதான கட்சிகளே முன்னிலை.

இந்த காலகட்டத்தில்தான் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் ஜீக்கள் அறிமுகமானார்கள். அதற்கு முன் எங்கள் பள்ளி நாட்களில் இந்த அமைப்புகள் குறித்து எல்லாம் கேள்விபட்டதே இல்லை.

சிறுபான்மை மக்களின் தர்க்கா, கிருத்துவ மெஷினரி நிலையங்கள் இவற்றின் முன்பாகவும், பள்ளி மைதானங்களிலும் தேசபக்தி பெயரில் ஷாக்காக்கள் தீவிரமாக நடக்கும். அதில் நூறு விழுக்காடு வம்பிழுக்கும் தொனி இருக்கும்.

ஐஎஃப்டி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிய நிறுவனத்தின் வெளியீடுகளும், சமரசம் மாதமிருமுறை இதழ்களும் மக்கள்கூடும் இடங்களில் நாங்கள் விற்பனை செய்யும்போது, விஜயபாரதமும், இந்து முன்னணி வெளியீடுகளும் ஏன் விற்பனையில் சேரத்து கொள்ளவில்லை என்று வந்து நின்று மல்லு கட்டுவார்கள்.

தொழிற்சங்கம், இரத்த தானம் போன்ற மக்கள் சேவைகள், வீடுதோறும் தனிநபர் சந்திப்புகள், அறிவு ஜீவி கூட்டங்கள், இலக்கிய கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் என்று சாமான்யன்வரை ஆண், பெண், குழந்தைகள் என்ற வேறுபாடில்லாமல், சமய வெறியை அபினாக்கி பல முகங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள்தான்! அதுவும், பிரம்மசாரியாக கங்கணம் கட்டிக் கொண்டு அவர்கள் இயங்கி காலம் அது.

அப்போதெல்லாம் அவர்கள், தேசம், தேசபக்தி, தேசியம், சுதேசி, ராம ராஜ்ஜியம் என்றெல்லாம் அதிகம் கதைப்பார்கள். ஒருவேளை அப்போது அது உண்மையாக்கூட இருந்திருக்கலாம்! பின்னாளில் சம்புகனின் வதையை தெரிந்து கொள்ளும்வரை ‘ராம ராஜ்ஜியம்’ வரட்டும்! நன்மைதானே நடக்கும்! என்ற நினைப்பும் என்னுள் இருந்தது உண்மைதான்!

அதன்பின், பின்னாளில் ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் குழந்தை பிஜேபி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அதாவது சரியாக சொல்லபோனால் குஜராத் கலவரங்களுக்கு பிறகு சொந்த காரணங்களுக்காக அதே குஜராத்துக்கு செல்ல வேண்டியிருந்தது.

செய்தி சேகரிக்க நேரில் செல்ல முடியாத சூழலிலும், குஜராத் கலவரங்கள் சம்பந்தமாக தொலைபேசியிலும், பல்வேறு செய்தி சேகரிப்பு நிறுவனங்கள் மூலமாகவும் நேரடி செய்திகளை அறிந்து பல்வேறு பத்திரிகைளில் அதிகமதிகம் கட்டுரைகள் எழுதியவன் நான். நெஞ்சை கல்லாக்கி கொண்டு தட்டச்சு செய்த தருணங்கள் அவை. இதன்விளைவாக, குஜராத் கலவரங்களை நேரிடையாக கண்ட உணர்வில் பாதிக்கப்பட்டிருந்தேன் நான். எக்காலமும் குஜராத்தில் என் காலடிகள் படவே கூடாது என்றும் நினைத்திருந்தேன்.

சொந்த காரணங்கள் எனது இந்த முடிவை மாற்றி குஜராத் பயணத்தை தவிர்க்கவே முடியாததாக்கியது.

இத்தகைய ஒரு சூழலில் சாசன் கிர் சிங்க சரணாலயத்துக்கு ஒரு பயணம் ஏற்பாடானது.

வண்டியை ஓட்டி வந்தவர் குஜராத்தி. பிஜேபி அனுதாபி.

மோடி சர்க்காரின் வெற்றிக்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் வார்த்தைகளைத் தேடி ஒரு கேள்வியாகவும் கேட்டுவிட்டேன்.

அந்த இளைஞர் சொன்ன சுருக்கமான அந்த பதில் மறக்க முடியாததானது.

“புஜபலம், மது, மாது, பணம்” - பிற அரசியல் கட்சிகள் பின்பற்றும் அதே வழிமுறைகளே பிரதானம் என்றார் அவர்.

ஆர்எஸ்எஸ் சங்பரிவாரின் நிறங்கள் இதோ 2020வெளுத்து கொண்டிருக்கின்றன. ஒரு நூற்றாண்டுகூட அது தாக்கு பிடிக்காத நிலை ஏற்படும் என்கிறது உள்ளுணர்வு. அதன் ஆட்சி, அதிகார அமைப்பு எல்லாமே சராசரி கட்சிகளைவிட மிக மோசமாக மக்களை ஆண்டு கொண்டிருக்கிறது. அப்பட்டமான அடக்குமுறை, அநீதி, அகங்காரம் எல்லாமே இந்த அமைப்புடன் பிரிக்க முடியாமல் இணைந்துவிட்டது.

சுதந்திர இந்தியா முன்னோக்கி செல்வதற்கு மாறாக, பின்னோக்கி செல்கிறது!

இந்திய தீபகற்பம் பல சமஸ்தானங்களாக பிளவுண்டு சண்டை, சச்சரவுகள் என்று அமைதி இழந்து, ஆளுமை இழந்து நின்றபோது,

பல நூறு மைல்களுக்கு அப்பாலிருந்து புறவிகள் மீதமர்ந்து வந்தார்கள்; வென்றார்கள்; முஸ்லிம்கள்.

எட்டுநூறு ஆண்டுகளுக்கு அப்பால் அதே முஸ்லிம்கள் ஆளுமை இழந்து பரிதவித்தபோது,

பழுப்பு நிற கண்களோடு கப்பலேறி வந்தார்கள் வெள்ளையர்கள் இந்திய அரியணையின் அதிகாரத்தை கையிலெடுத்தார்கள்.

200 ஆண்டுக்குள் இந்த தகுதியை அவர்கள் இழந்தபோது, சுதந்திர போராட்டம் துவங்கியது. மக்களாட்சி மலர்ந்தது.

அது மன்னராட்சியோ, மக்களாட்சியோ இந்தியாவின் ஒவ்வொரு காலகட்டமும் இதே நியதியின் அடிப்படையில்தான் அதிகாரம் கைமாறி கொண்டேயிருக்கிறது.

இதை ஜனநாயகம், வாக்குகள், தரவுகள் என்யெல்லாம் சொல்கிறார்கள் அரசியல்வாதிகள்.

ஆனால், ஒற்றைச் சொல்லில், ‘இறைநியதி’ என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

Saturday, October 10, 2020

பனையோடு நான்..!

 
''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> இக்வான் அமீர் <<<
''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 

ஒருநாள் தம்பி குமார் - விஜயகுமார் வேல்முருகன்,  எங்கள் வீட்டின் மாடி தோட்டத்திற்கு வந்திருந்தபோது, எதேச்சையாக எடுத்த முடிவுதான் அது – ‘பனை விதைகள் நடுவது என்று’

அதற்கு முன்னர் பனை மரத்தின் பலன்களை இருவருமே அறிந்து வைத்திருந்ததும் கூடுதல் பயனாக அமைந்தது.

60-களின் துவக்கத்தில், நான் மூன்றாவது நான்காவது வகுப்புப் படிக்கும்போதே அறிமுகமாகியிந்த தோழன்தான் பனை மரம். எனது வீட்டிற்கு மிக அருகில் இருந்த பள்ளிக்கு பத்து, பதினைந்து பாதுகாவலர்களாக வரிசைக்கட்டி நின்றிருந்தார்கள் அந்த பனைத் தோழர்கள். வீட்டில் மின்சாரம் இல்லாத காலத்தில் இரவின் கும்மிருட்டில் வீசும் பலத்த காற்றில் பனை ஓலைகளின் உரசல்கள் பயம் தந்த காலம் அது.

இருள் விலகாத அந்த கருக்கலில் யார் முந்தி செல்கிறார்களோ அவர்கள் நிச்சயம் சில பனம்பழத்துடன் திரும்புவது திண்ணம். அநேகமாக அந்தப் போட்டியில் அதிகமாக வெல்வது நானாகவே இருக்கும். ஏழ்மையின் பசியும், பனம்பழத்தின் சுவையும் பல இரவுகளை உறங்காத இரவுகளாக்க பனம் பழம் சேகரிப்புப் போட்டியில் நான் வெல், எந்தத் தடையுமிருக்காது! விறகடுப்பில் பனம் பழத்தைச் சுட்டு, முகமெல்லாம் பழச்சாற்றைப் பூசிக்கொண்டு, 'பனம்புலி'யாக வளர்ந்த நாட்கள் அவை.

இதைத் தொடர்ந்து, ஆந்திரத்தில் வாழ்ந்து வந்த எனது பாட்டியை பள்ளி விடுமுறையில் சந்திக்க செல்லும்போதெல்லாம் சரியான பேருந்து வசதியில்லாமல் நடந்து செலல வேண்டியிருக்கும். ஒரு பத்து கிலோ மீட்டருக்கும் குறையாத அந்த கிராமப்பகுதிகளைக் கடந்து செம்மண் சாலையில் நடந்து செல்ல வேண்டும். அப்போதெல்லாம் வழி நெடுக காணப்படும் இதே பனைமரங்கள்தான் 'சல சல' பனை ஓலை உரசல் ஒலியால், தோழமையாக தனிமையைப்  போக்கி பாட்டியின் கிராமத்துக்கு சலிப்பில்லாமல் கொண்டு சேர்க்கும்.

இத்தகைய ஒரு சூழலில்தான் ஒருமுறை பாட்டி, “(சுவரை ஒட்டியிருந்த திறந்தவெளி) குளியலறையில், செம்மண் பாறைகளுக்கிடையில் ஒரு பனம் மரம் வளர்வதாக” - சொன்னாள்.

“அதை பிடுங்க வேண்டாம்..!” – என்ற எனது சொல்லை, வேத வாக்காக ஏற்ற அவள், கிழங்கு நிலையில் இருந்த அந்த பிஞ்சு மரத்தை பிடுங்கிடாமல் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.

 

ஒவ்வொரு பள்ளி விடுமுறையின் போதும், அந்த ஒற்றைப் பனை மரத்தின் வளர்ச்சி என்னை ஒத்ததாகவே இருந்தது. என்னோடு பனையும் வளர்ந்து, சில ஆண்டுகளில் நெடுமரமாக.. இளைஞியாகிவிட்டது. 

ஒற்றைப் பனைமரம் அந்த கிராமத்தில் முதன்முறையாக ஒரு வீட்டில் வளர்ந்து காய்த்து நின்ற அதிசயமும் நடந்தது.

அந்த பனைமரத்தின் ஒய்யாரமும், சலசலப்பும் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதனுடனான எனது பரிச்சயம் எனது பாட்டியின் மரணத்துடன் முடிவுக்கு வந்தது.

தனது ஒரே மகனை அந்த ஒற்றைப் பனைமரத்துடன் ஒப்பிட்டு புலம்பிவந்த எனது பாட்டியின் ஆசையை எனது தந்தை புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான், அந்த குக்கிராமத்து வீட்டை சொற்ப விலைக்கு விற்றுவிட்டார். அந்நிலையில் மீண்டும் அந்த வீட்டையும் பனை மரத்தையும் பார்க்க நான் சென்றிருந்தேன். வானளாவி கம்பீரமாக வளர்ந்து நூங்குகளாக பனைமரம் காய்த்திருந்தது. அதன் பிறகு நான் மேற்கொண்ட பயணத்தில் அந்தப் பனைமரம் கொல்லப்பட்டிருந்தது ஒரு சோகமான வரலாறு.  

எனது இளம் பிராயம்தொட்டு பனைமரத்துடன் எனக்கிருந்த தொடர்பு மீண்டும் வடசென்னை காட்டுப்பள்ளி வனத்துக்கு நான் ஒளிப்படங்கள் எடுக்கவும், காட்டுயிரி ஆய்வுக்காக செல்லும்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

நூற்றுக் கணக்கான பனைமரங்களும், சவுக்கும், முந்திரியும் அடர்ந்த காடு அது.

அனல் மின்சாரம் என்ற பெயரில் பல ஏக்கர் வனங்கள் கையகப்படுத்தப்பட்டு https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg அழிக்கப்படும் வேளையில்தான் எனது மாடி தோட்டத்தில் குமாருடன் அந்த சந்திப்பு நடந்தது. ஒரு லட்சம் பனை விதை நடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே நமது நாட்டின் பாரம்பர்ய வேளாண்முறைகள் பக்கம் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த https://www.youtube.com/watch?v=JtvoDYT_KH4&t=15s எனது கவனமும் தீவிரமானது. இதற்காக நான் எடுத்துக் கொண்ட சிரத்தைகள் பலருக்கு வேலையற்றவனாக என்னைக் காட்ட எனக்குக் கிடைத்த ஒரே துணை குமாரின் உதவிகளோடு, Pasumai Kudaram  பசுமைக் கூடாரம் https://www.facebook.com/Pasumai-Kudaram-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1820117441612952/?ref=br_tf மூலமாக ஆக்கப் பூர்வமான பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Tuesday, October 6, 2020

தற்சார்பு என்பது இதுதான்!

 

 திருமூர்த்தி
'''''''''''''''''''''''''''''''''''''
தக்காளி, கத்திரி, சின்ன வெங்காயம், மிளகா, கொஞ்சம் முள்ளங்கி சோதனை முறையில் வெள்ளைபூண்டு, துவரை இப்படி எல்லாமே மஞ்சள்காட்டுக்குள்ளேயே ஊடுபயிரா வீட்டுக்கு தேவையான அளவு நடவி விடுவோம். அடுத்த சில மாதங்களிலேயே அறுவடைக்கு வந்திடும். 
 
கத்திரிக்கா செடிக்கு மட்டும் புழு  வரும். அதற்கு அடுப்பு சாம்பல் இரைத்துவிடும் வைத்தியமே போதும். 
 
தற்சார்புனா இப்படிதான் பார்கிறோம். 
 
மூன்று வருடத்திற்கு முன்பே இருக்கிற மஞ்சளை கிலோ 250 ரூபாய் விலைக்கு நாங்களே கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்துவிடுகிறோம்னு மொத்த மஞ்சளையும் கேட்டாங்க. 
 
ஆனா நா ஒத்துக்கல. 
 
கஷ்டபட்டு விளைய வச்சதே நம்ம மக்கள் சாப்பிடதானே தவிர வெளிநாட்டில் இருக்கும் வெள்ளைக்காரனுக்கு இல்லைனு தீர்கமான சொல்லீட்டேன். 
 
மாசம் நூறு கிலோ, இருநூறு கிலோ அரைச்சு விற்பதற்கு பதிலா மொத்தமா ஒரு விலையை வாங்கீட்டு கொடுத்திடலாமேனு மூளை சலவை செஞ்சும் பார்த்தாங்க. 
 
ம்ம்ஹூம்..! 
 
ஒரே பிடிவாதம் கொடுப்பதில்லைனு. 
 
பின்னே இந்த பிடிவாதம் மட்டும் இல்லைனா ஏறி நசுக்கிவிட்டு போயிட்டே இருப்பாங்களே..! 
 
பெருமைக்காக சொல்றேனு நினைக்காதீங்க. 
 
முதல் வருடத்தில் முன்னூறு கிலோ மஞ்சள்தூள் விற்று  இப்போ மாதம் முன்னூறு கிலோ விற்க்கிறதுனு. 
 
அதற்கு முக்கிய காரணம் எத்தனை தேவை அதிகரித்தாலும், கலப்படம் மற்றும் நச்சை தெளிப்பதில்லைங்கிற சமரசமாகாதா என்னோட இந்த பிடிவாதம்தாங்க..! 
 
ஐயாயிரம் பேரை நண்பர்களா முகநூலில் சேர்த்து வச்சுக்கிட்டு பாதி பேரை ஏமாற்றி கல்லா கட்டுறவங்க இங்க நிறையா இருக்கங்னு நேற்று என்னை ஒரு நண்பர் 2014 பகிர்ந்த ஒரு பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்தார். 
 
அப்படி எல்லாம் யாரையும் ஏமாற்ற முடியாது ராசா..! 
 
அப்படி ஏமாற்ற வேண்டி அவசியம் எங்களுக்கு இல்ல. 
 
அது எங்க வேலையும் இல்ல. 
 
நீங்க இப்படியே எங்களை உமிழ்ந்திட்டே இருங்க. 
 
அப்போதுதான் அடுத்தடுத்த கட்டத்திற்கு எங்களால் நகர முடியும்..!
 
''''''''''''''''''''''''''''''''''''''''''
நன்றி: திருமூர்த்தி, இயற்கை விவசாயி, சத்தியமங்கலம்
https://www.facebook.com/thiru.murthy.568

வாய்ப்பில்லை ராசா.. வாய்ப்பில்லை!

 பரிமளா தேவி

'''''''''''''''''''''''''''''''''''''''''

நான் மஞ்சள் விவசாயி அல்ல.

இருந்தாலும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

பெரியது ஹைபிரிட் ரகம். நாட்டுரகம் சின்னதாகத்தான் இருக்கும்.

பிசு பிசுனு இருக்குங்கறீங்க.! பின்னே, அதிலுள்ள நீர்சத்து எங்க போகும்.?!

தை-மாசில இருந்து அறுவடை ரெண்டு மூணு மாசம் மட்டுமே நடக்கும்.

விதைக்காக நிழல்ல ஒரு அம்பது நாள் வெச்சிருக்கலாம்.

அப்பவே முளைப்பு வந்துரும்.

வருஷம் 365 நாளும் பச்சை மஞ்சள் வேணும்னா சீதோஷ்ணநிலைக்கு தகுந்தமாதிரி தானே விளையும்.!? அதுபோக நிலஅமைப்பு மண்ணுக்கு மண். அதிலுள்ள சத்துக்களுக்கு தகுந்தபடிதான் விளைச்சல் இருக்கும்.

மஞ்சள்தூள் அரைக்கறவங்களுக்கு பொடி மஞ்சள். பெரிய மஞ்சள் வேறுபாடெல்லாம் இல்லை. பெரிச விட பொடிதான் சீக்கிரம் அரைபடும்.

பசு மஞ்சளை வேகவைத்து பங்குனி சித்திரை வெயிலிலேயே முப்பது நாட்கள் போல் கடும் வெயிலில் காயவைத்து  கைகளால் உடைக்க முடியாத அளவு கெட்டியான பின்தான் மூட்டை பிடிப்பார்கள்!

கிலோ 90 ரூபான்னு விலை சொல்றாங்கனு சொல்றீங்க.

பல்க்கா ஒரு ஏக்கர் மஞ்சளையும் எடுத்துகிட்டா 15 ரூபாக்கே கொடுப்பாங்க!

வாங்கறது ஒருகிலோ ரெண்டுகிலோ. அதுக்கு தினம் கொஞ்சமா அறுவடை செஞ்சு கொரியருக்கு பேக் பண்ற வேலையெல்லாம் விவசாயிக்கு சாத்தியமில்லாதது! இன்று பெண் வேலையாட்கள் கூலி தினம் 300 ரூபாய். நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் யாரும் இப்ப வேலை செய்யறதே இல்லை.!

நீர்சத்து குறைஞ்சா மஞ்சள் சுருங்கத்தானே செய்யும்.!

யோசிங்க.ப்ளீஸ்.

நுகர்வோர் காசை வாங்கி எந்த விவசாயியும் ஏமாத்தி கடனை கட்டப் போறதில்லை. கோடீஸ்வரனும் ஆகப்போறதில்லை!

முப்பது ‘குரோ பேக்’ வாங்கி சித்திரை வைகாசில ஒவ்வொரு பேக்லேயும் ஒரு விதைமஞ்சள் ஊணி வைங்க. ஒரு வருஷம் அதுக்கு வேலை செய்ங்க. உங்க உழைப்புக்கான கூலிய போடுங்க. மஞ்சள் விளைவிக்கறதுல உள்ள பிரச்சனைய பாருங்க.

அப்படி விளைந்ததை மாதத்திற்கு இரண்டு பைகளாக அறுவடை செய்து ப்ரெஷ்ஷா சாப்பிடுங்க. ஆரோக்கியமா இருங்க!

வேளாண் மசோதா நிறைவேறி கார்ப்பரேட் மரபணு மாற்றிய மஞ்சள் கொடுப்பான். நாங்களும் ஒரே சைஸ்ல விளைய வெச்சு குடுப்போம்.

அப்பவும் உங்களுக்கு நேரடியா கொடுக்கமுடியாது.

அவனுக்கு 50 ரூபாய்க்கு விப்போம். அவன் இந்தக் கமெண்ட்டையெல்லாம் படிச்சுப்பாத்துட்டு முகம் சுருங்காம இருக்க பண்ணும் (மேக்அப்) வைத்தியத்தையெல்லாம் மஞ்சள்ல ஏத்தி கிலோ 500 ரூபாய்னு விப்பான்.

நீங்களும் ‘குர்குமின்’ 6% இருக்குதுன்னு கேள்வியே கேக்காம வாங்கி சாப்பிடுவீங்க. ஆறாவது மாசமே கேன்சர் வரும்!

தயவுசெய்து யாரும் தவறாக நினைக்கவேண்டாம். இதுனாலேயேதான் நான் எந்தப் பொருளும் தற்போது விற்பதில்லைங்க.

இவ்ளோ பெரிய விளக்கம்  உங்களுக்கு புரியற மாதிரி சொல்ல என்னால முடியுது. ஒரு மணிநேரம் அவுட். அதுக்குள்ள அஞ்சுதடவை போனை வெச்சுட்டு போய்வேலைய பாத்துட்டு வந்தேன்.

எல்லோருக்கும் அது சாத்தியமுமில்லை. நேரமுமிருக்காதுங்க.!

Dry ஆன பொருளா இருந்தா கெட்டுப்போகாது.

பச்சையான பொருள்களெல்லாம் அழுகறது. பூசணம் பிடிப்பதுனு எல்லா பிரச்சனையும் இருக்கும்!

சகவிவசாயியா விவசாயத்துல இருக்கற அதை மார்க்கெட்டிங் பண்றதுல இருக்கற சிக்கலை சொன்னேன்!

இதுக்கும் மேல மாடு-கன்னு பிரச்சனை. மோட்டார் பிரச்சனை. அதுக்கு சரிபண்ண ஆட்கள் கிடைக்காமனு ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சந்திக்கிற பிரச்சனைகள் ஏராளம்.

ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க எல்லோரும்!

கட்டுபடியே ஆகாத விலையில் போடற முதலீட்டை எடுக்க முடியாத நிலையிலும் இன்னும் விவசாயம் செய்யறவங்க நல்லாருக்கணும்னு வேண்டிக்குங்க.

ஏன்னா இன்றுவரை விவசாயத்தில் நீடிப்பதே பெரும் சாதனையாத்தான் நினைக்கிறோம். ஏதோ ஒரு 5% பேர் பணக்கார விவசாயிகளா இருக்கலாம். எல்லோரும் அப்படி அல்ல. பணக்காரனா இருக்கறவன் இந்த நோண்டு வேலையெல்லாம் செய்யமாட்டான்.

அத்தனை ரசாயன மருந்தையும் ஊத்தி விளையவைப்பான். வேகவைப்பான். மூட்டை போட்டு குடோன்ல ஸ்டாக் வெச்சு மாதம் ஒருமுறை செல்பாஸ் வெச்சு விலையேறும் வரை பத்து வருஷமானாலும் ஸ்டாக் வெச்சிருந்து வித்துட்டு போயிருவாங்க.

அவங்க பார்வைல அறம் வழுவாம இருக்கணும்னு இயற்கையை விவசாயம் செய்யறவங்க எல்லாம் பொழைக்கத் தெரியாத லூசுக.

விவசாயம் மட்டுமே செய்பவர்கள் இப்பவும் காட்டை வித்துதான் கடன் கட்டறோம்..!

பூமாரி. ஹெர்பீ இவங்கெல்லாம் யாருன்னே எனக்குத்தெரியாது.

திருமூர்த்தியும் அல்லி அக்காவையும் வேணா தெரியும்.

கார்ப்பரேட் ஆசுபத்திரில. மால்ல நகைக்கடைல ஜவுளிக்கடைல.. வாழ்வியலுக்கு பத்துகாசு பிரயோனம் இல்லாத தற்கால கல்விக்கூடங்களுக்கு லட்சலட்சமா செலவழிப்பீங்க!

ஆனா, ஆரோக்கியத்துக்கு செலவழிக்க இத்தனை கணக்கா.?!

அங்கங்க இருக்கற விவசாயிகளை தத்தெடுத்துகிட்டு உங்க தேவைகளை சொல்லி விளைய வெச்சு சாப்பிட்டு ஆரோக்கியமா இருங்க.!

உங்களுக்காவது இந்தவாய்ப்பு கிடைச்சிருக்கு பயன் படுத்திக்குங்க.

உங்க வாரிசுகளுக்கு நோ சான்ஸ்.! 

ஆமாம்.. வாய்ப்பில்லை ராசா..! வாய்ப்பேயில்லை!!

 (நன்றி: Parimala Devi - https://www.facebook.com/parimala.devi.7777)

Sunday, October 4, 2020

இதோ வந்துவிட்டார்கள் உங்கள் வாசல்முன்!

இதோ
வந்துவிட்டார்கள்
அவர்கள்

நேற்று ஏஎம்யூ
இன்று ஜேஎன்யூ
நாளை
உங்கள் வீட்டு
வாசல் முன்

இதோ வந்துவிட்டார்கள்
அவர்கள்..
உங்கள் வாசல் முன்..!
அய்யகோ..
கேட்க நாதியற்ற
கையறு நிலையில்
நீங்கள்..!

நெஞ்சம் பதறும்
உங்கள் கண்முன்..
வாழ்நாள் முழுக்க
பணயம் வைதது
சம்பாதித்த சொத்து-சுகங்கள்
தீ வைத்து கொளுத்தப்படலாம்!
ஈரல் குலை.. கண்மணிகளின்
கற்புகள் பறிபோகலாம்..!
வாரிசு கனவுகளின் வயிறுகள்
கிழிக்கப்படலாம்..
"அம்மா-அப்பா" என்று
யாழினும் இனிதாய்
உறவுகளைத்
தொடுக்கும்
எதிர்க்கால கனவு சிசுக்கள்
சுவறுகளில் மோதி
தலை உடைத்து
வீசப்படலாம்..!
தனயன் முன்
தாயின் மானம், மரியாதை
பறிக்கப்படலாம்.
உங்கள் சின்னஞ்சிறார்கள்
வல்லுறவுக்காளாகலாம்!
நேற்றைய குஜராத்
மீண்டும் உயிர் பெற்றெழலாம்!

இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்
மனுதர்மம் ஏந்தி கொண்டு
ஓராயிரம் வஞ்சக திட்டங்களுடன்
உங்கள் சொந்த உதிரங்களை
ஓரணியில் படையாய்
திரட்டி கொண்டு
சர்வ ஆட்சி அதிகாரத்துடன்
இதோ வந்துவிட்டார்கள்
அவர்கள்..

நேற்று.. ஏ.எம்.யூ
இன்று ஜேஎன்யூ
நாளை உங்கள் வாசல் முன்..

இதோ வந்துவிட்டார்கள அவர்கள்
மனுதர்மம் ஏந்தி கொண்டு
பாபா அம்பேத்கரின்
சமதர்ம சட்டங்களை வீசி எறிந்து..
ஆர்ப்பரிப்பு... கொக்கரிப்போடு
இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்.

நேற்று ஏ.எம்.யூ
இன்று ஜே.என்.யூ
நாளை
உங்கள் வீட்டு
வாசல் முன்
இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்

அய்யகோ..
கேட்க நாதியற்ற
கையறு நிலையில்
நீங்கள்..!

(அண்மையில், டெல்லி ஜாமியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வகுப்புவாத அத்துமீறல் சம்பந்தமாக எனது மற்றொரு வலைப்பூவில் https://pamarannews.blogspot.com/2020/01/blog-post.html எழுதிய கவிதை இது. ஹதாரஸ் பாலியல் வல்லுறவு சம்பவத்துக்கு முற்றிலும் பொருந்தும் கவிதை. வகுப்புவாதிகள் குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் எதிரிகள் அல்ல. மனித இனத்துக்கே எதிரியானவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும் - இக்வான் அமீர்)