NewsBlog

Monday, October 12, 2020

நூற்றாண்டுக்குள் நிறம் வெளுத்த சங்பரிவார்



இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''
1980-களின் பிற்பகுதி.

கம்யூனிஸ சிந்தனையிலிருந்து விலகி இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டிருந்த நேரம். கார்ல் மார்க்ஸ்ஸிலிருந்து, நபிகளார் பக்கம் உணர்வு ரீதியாக அல்லாமல் அறிவு ரீதியாக திரும்பியிருந்த காலம் அது. காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள் போன்ற பிரதான கட்சிகளே முன்னிலை.

இந்த காலகட்டத்தில்தான் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் ஜீக்கள் அறிமுகமானார்கள். அதற்கு முன் எங்கள் பள்ளி நாட்களில் இந்த அமைப்புகள் குறித்து எல்லாம் கேள்விபட்டதே இல்லை.

சிறுபான்மை மக்களின் தர்க்கா, கிருத்துவ மெஷினரி நிலையங்கள் இவற்றின் முன்பாகவும், பள்ளி மைதானங்களிலும் தேசபக்தி பெயரில் ஷாக்காக்கள் தீவிரமாக நடக்கும். அதில் நூறு விழுக்காடு வம்பிழுக்கும் தொனி இருக்கும்.

ஐஎஃப்டி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிய நிறுவனத்தின் வெளியீடுகளும், சமரசம் மாதமிருமுறை இதழ்களும் மக்கள்கூடும் இடங்களில் நாங்கள் விற்பனை செய்யும்போது, விஜயபாரதமும், இந்து முன்னணி வெளியீடுகளும் ஏன் விற்பனையில் சேரத்து கொள்ளவில்லை என்று வந்து நின்று மல்லு கட்டுவார்கள்.

தொழிற்சங்கம், இரத்த தானம் போன்ற மக்கள் சேவைகள், வீடுதோறும் தனிநபர் சந்திப்புகள், அறிவு ஜீவி கூட்டங்கள், இலக்கிய கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் என்று சாமான்யன்வரை ஆண், பெண், குழந்தைகள் என்ற வேறுபாடில்லாமல், சமய வெறியை அபினாக்கி பல முகங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள்தான்! அதுவும், பிரம்மசாரியாக கங்கணம் கட்டிக் கொண்டு அவர்கள் இயங்கி காலம் அது.

அப்போதெல்லாம் அவர்கள், தேசம், தேசபக்தி, தேசியம், சுதேசி, ராம ராஜ்ஜியம் என்றெல்லாம் அதிகம் கதைப்பார்கள். ஒருவேளை அப்போது அது உண்மையாக்கூட இருந்திருக்கலாம்! பின்னாளில் சம்புகனின் வதையை தெரிந்து கொள்ளும்வரை ‘ராம ராஜ்ஜியம்’ வரட்டும்! நன்மைதானே நடக்கும்! என்ற நினைப்பும் என்னுள் இருந்தது உண்மைதான்!

அதன்பின், பின்னாளில் ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் குழந்தை பிஜேபி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அதாவது சரியாக சொல்லபோனால் குஜராத் கலவரங்களுக்கு பிறகு சொந்த காரணங்களுக்காக அதே குஜராத்துக்கு செல்ல வேண்டியிருந்தது.

செய்தி சேகரிக்க நேரில் செல்ல முடியாத சூழலிலும், குஜராத் கலவரங்கள் சம்பந்தமாக தொலைபேசியிலும், பல்வேறு செய்தி சேகரிப்பு நிறுவனங்கள் மூலமாகவும் நேரடி செய்திகளை அறிந்து பல்வேறு பத்திரிகைளில் அதிகமதிகம் கட்டுரைகள் எழுதியவன் நான். நெஞ்சை கல்லாக்கி கொண்டு தட்டச்சு செய்த தருணங்கள் அவை. இதன்விளைவாக, குஜராத் கலவரங்களை நேரிடையாக கண்ட உணர்வில் பாதிக்கப்பட்டிருந்தேன் நான். எக்காலமும் குஜராத்தில் என் காலடிகள் படவே கூடாது என்றும் நினைத்திருந்தேன்.

சொந்த காரணங்கள் எனது இந்த முடிவை மாற்றி குஜராத் பயணத்தை தவிர்க்கவே முடியாததாக்கியது.

இத்தகைய ஒரு சூழலில் சாசன் கிர் சிங்க சரணாலயத்துக்கு ஒரு பயணம் ஏற்பாடானது.

வண்டியை ஓட்டி வந்தவர் குஜராத்தி. பிஜேபி அனுதாபி.

மோடி சர்க்காரின் வெற்றிக்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் வார்த்தைகளைத் தேடி ஒரு கேள்வியாகவும் கேட்டுவிட்டேன்.

அந்த இளைஞர் சொன்ன சுருக்கமான அந்த பதில் மறக்க முடியாததானது.

“புஜபலம், மது, மாது, பணம்” - பிற அரசியல் கட்சிகள் பின்பற்றும் அதே வழிமுறைகளே பிரதானம் என்றார் அவர்.

ஆர்எஸ்எஸ் சங்பரிவாரின் நிறங்கள் இதோ 2020வெளுத்து கொண்டிருக்கின்றன. ஒரு நூற்றாண்டுகூட அது தாக்கு பிடிக்காத நிலை ஏற்படும் என்கிறது உள்ளுணர்வு. அதன் ஆட்சி, அதிகார அமைப்பு எல்லாமே சராசரி கட்சிகளைவிட மிக மோசமாக மக்களை ஆண்டு கொண்டிருக்கிறது. அப்பட்டமான அடக்குமுறை, அநீதி, அகங்காரம் எல்லாமே இந்த அமைப்புடன் பிரிக்க முடியாமல் இணைந்துவிட்டது.

சுதந்திர இந்தியா முன்னோக்கி செல்வதற்கு மாறாக, பின்னோக்கி செல்கிறது!

இந்திய தீபகற்பம் பல சமஸ்தானங்களாக பிளவுண்டு சண்டை, சச்சரவுகள் என்று அமைதி இழந்து, ஆளுமை இழந்து நின்றபோது,

பல நூறு மைல்களுக்கு அப்பாலிருந்து புறவிகள் மீதமர்ந்து வந்தார்கள்; வென்றார்கள்; முஸ்லிம்கள்.

எட்டுநூறு ஆண்டுகளுக்கு அப்பால் அதே முஸ்லிம்கள் ஆளுமை இழந்து பரிதவித்தபோது,

பழுப்பு நிற கண்களோடு கப்பலேறி வந்தார்கள் வெள்ளையர்கள் இந்திய அரியணையின் அதிகாரத்தை கையிலெடுத்தார்கள்.

200 ஆண்டுக்குள் இந்த தகுதியை அவர்கள் இழந்தபோது, சுதந்திர போராட்டம் துவங்கியது. மக்களாட்சி மலர்ந்தது.

அது மன்னராட்சியோ, மக்களாட்சியோ இந்தியாவின் ஒவ்வொரு காலகட்டமும் இதே நியதியின் அடிப்படையில்தான் அதிகாரம் கைமாறி கொண்டேயிருக்கிறது.

இதை ஜனநாயகம், வாக்குகள், தரவுகள் என்யெல்லாம் சொல்கிறார்கள் அரசியல்வாதிகள்.

ஆனால், ஒற்றைச் சொல்லில், ‘இறைநியதி’ என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

0 comments:

Post a Comment