NewsBlog

Friday, October 30, 2020

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெயரில் முழக்கமா?

 

பிரான்ஸ் நாட்டில், சர்ச்சைக்குரிய வகையில் நபிகளார் குறித்து கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் காவாஜா ஆஸிப் உள்ளிட்ட எம்.பி.க்கள் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். 
 
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு மற்றும் எதிர்க்கட்சி இரண்டுமே தனித்தனி தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சித்தன.
 
விவாதம் நடந்துகொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அவையில் எழுந்து உரையாற்ற முயற்சித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் "ஓட்டிங், ஓட்டிங்…" என்று முழக்கம் எழுப்பினார்கள். அவர்களது கோரிக்கை அரசுத் தரப்புத் தீர்மானத்துக்குப் பதிலாக தங்கள் தரப்புத் தீர்மானத்தை சமர்ப்பித்து ஓட்டெடுப்புக்கு அனுமதிக்கவேண்டும் என்பதே ஆகும்.
 
இந்த முழக்கம் எழுப்பும் இரண்டு நிமிடக் காட்சி இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களிலும், மின்னணு தளங்களிலும், பிரபல சமூக ஊடக கணக்குகளிலும் தவறாக, வெளியிடப்பட்டது. இந்த முழக்கம் எந்த சூழ்நிலையில் எழுப்பப்பட்டது என்ற எந்த விளக்கமும் இல்லாமலே இது வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
 
"ஓட்டிங் ஓட்டிங்..." என்று பாகிஸ்தான் எம்.பி.க்கள் முழக்கமிட்ட நிலையில், அவர்கள் "மோடி... மோடி" என்று முழக்கம் எழுப்பியதாக டைம்ஸ் நவ், இந்தியா டிவி, எக்கனாமிக் டைம்ஸ் மற்றும் குறிப்பிட்ட பிரபல சமூக ஊடக கணக்குகள் தவறாகக் கூறின. பிரதமர் இம்ரான் கானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மோடி பெயரை முழக்கமிட்டதாக இந்த ஊடகங்கள் தவறாக குறிப்பிட்டன.
 
இப்படி தவறாக வெளியிடப்பட்ட செய்தியை எக்கனாமிக் டைம்ஸ் தனது இணையதளத்திலிருந்து நீக்கிவிட்டது. டைம்ஸ் நவ் தனது டிவீட்டை டெலீட் செய்துவிட்டது. ஆனால், டைம்ஸ் நவ் தளத்தில் இது தொடர்பான கட்டுரை, குறிப்பிட்ட காணொளியோடு தொடர்ந்து காணப்பட்டது.

(Source: BBC)


0 comments:

Post a Comment