NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Thursday, February 28, 2013

காலப் பெட்டகம்: 'நூற்றாண்டே சாட்சியாக' - பகுதி -4



தனி நபராக இஸ்லாமிய பாதையில் பயணித்த மெளலானாவின் அடிச்சுவட்டில் லட்சோப லட்சம் தொண்டர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அணி திரண்டார்கள்.

இஸ்லாமிய வாழ்வியல் திட்டத்தை நவீன சாதனங்கள் மூலமாக மனித குலத்துக்கு எட்டச் செய்ய கடந்த நூற்றாண்டில் பாடுபட்ட மாமனிதர் மௌலானா மௌதூதி ஆவார்.

1978-இல் சவுதி அரசின் 'சவுத் அல் ஃபைஸல்' விருதுக்காக மௌலானா தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சர்வதேச அளவில் நடக்கும் இந்த தேர்வை சர்வதேச அளவிலான அறிஞர் குழுதான் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஈரானில் சர்வாதிகாரி 'ஷா'வின் ஆட்சி இமாம் ஆயதுல்லாஹ் குமைனியின் தலைமையில் நடந்த மக்கள் புரட்சியால் கவிழ்ந்தது. ஈரானின் அதிபராக குமைனி தேர்வு செய்யப்பட்டார். 

அதிபரானதும் குமைனி முதன்மை பணியாக தமது பிரதிநிதி குழு ஒன்றை மெளலானா மௌதூதியை சந்திப்பதற்காக லாஹீருக்கு அனுப்பி வைத்தார். 

மௌலானாவும் இஸ்லாமிய ஆட்சிக்கான நெறிமுறைகளையும், அரிய பல ஆலோசனைகளையும் அக்குழுவினருக்கு வழங்கினார்கள். 

ஒருநாள் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு கடிதம் மௌலானாவுக்கு வந்தது. அதில் இப்படி எழுதப்படிட்டிருந்தது:

"அன்புள்ள தந்தை நிகர் மெளாலானாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களது புத்தகங்களைப் படித்துதான் நான் இஸ்லாம் தழுவினேன். 

மறுமையில் இறைவனின் சந்நிதியில் தங்களது ஈடேற்றத்துக்கான பரிந்துரையை (சாட்சி) நான் செய்வேன்!"

கடிதத்தை படித்து முடிதத மௌலானாவின் கண்கள் குளமாயின.  

"உண்மைதான! இந்த இளைஞன் நாளை மறுமையில் என் ஈடேற்றத்துக்காக சிபாரிசு செய்வான் என்பது உண்மைதான்!" - என்றார்கள் கனத்த குரலில்.


27, மே மாதம் 1979 - இல், தமது சக இஸ்லாமிய சேகவரும் மகனுமான டாக்டர் அஹ்மது பாஃரூக்குடன் மௌதூதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்கள். ஆகஸ்ட் 20 ஆம் நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். செப்டம்பர் 4 இல் நுரையீரல் நோய் சம்பந்தமான அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மௌலானா அவர்கள் செப்டம்பர் 22 அதிகாலையில் இறையடி சேர்ந்தார்கள். 

"இன்னாலில்லாஹி.. வ இன்னா இலைஹி ராஜிவூன்.."

மௌலானாவின் மரணம் முஸ்லிம் உலகுக்கு பெரும் இழப்பாக அமைந்தது. உலக முஸ்லிம் சமுதாயம் சோகப் பெருங்கடலில் மூழ்கியது. சில இளைஞர்கள் மூர்ச்சையடைந்து போனதாக செய்திகளும் வெளியாயின. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து இரங்கல் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. 

மௌலானாவின் பௌதீக உடல் அமெரிக்காவிலிருந்து பி.ஐ.ஏ. பிரத்யேக விமானத்தில் லாஹீர் கொண்டு வரப்பட்டது. கதாஃபி ஸ்டேடியத்தில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட. உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்திருந்த அறிஞர் பெருமக்கள், அறிவு ஜீவிகள், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக் உட்பட பல நாடுகளின் ஆட்சியாளர்கள் அத்தொழுகையில் கலந்துகொண்டார்கள். 

எழுதுகோலையே தனது போராட்டக்கள ஆயுதமாக்கி ஜிஹாத் என்னும் அறப்போர் புரிந்த மாமனிதரின் இறுதித் தொழுகையை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அன்றைய தலைவர் பேரறிஞர் அல்லாமா யூஸீஃப் அல் கர்ளாவி தலைமைத் தாங்கி நடத்தி வைத்தார்கள்.


இன்று மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் நம்மிடையே இல்லை. ஆயினும், அவர் விட்டுச் சென்ற பணிகள் 'ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின்' வடிவில் நாடு முழுவதும் பெரும் விருட்சமாய் படர்ந்துள்ளது. 

மெளலானா விட்டுச் சென்ற பணிகளை இன்னும் துடிப்பாக எடுத்துச் செல்ல வேண்டியது நமது பொறுப்பு. இந்தப் பணிகள் திருக்குர்ஆன் மற்றும் திருநபிகளாரின் சுன்னாஹ் - இவை இரண்டும் முஸ்லிம்கள் மீது சுமத்தும் பொறுப்புகளின் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டவை. 

யாருடைய சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த மறுமை நாளில், அந்த ஒரு ஸ்பெயின் இளைஞன் மட்டுமல்லாமல் இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரக் கணக்கான பேர் மௌலானாவின் பிழைப் பொறுக்க கருணையாளனான இறைவனிடம் இருகரமேந்தி நிற்பார்கள்.

இதற்கு வரவிருக்கும் நூற்றாண்டுகள் சாட்சிகளாக நிற்கும்!



Wednesday, February 27, 2013

விருந்தினர் பக்கம்: 'கருத்துச் சொல்ல உரிமை இல்லையா?'



பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்னும் அமைப்பின் தலைவராக இருப்பவர் நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு. இவர் தி  ஹிந்து நாளிதழில் நரேந்திர மோடியை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதிவிட்டார். 'மோடியின் தீய செயல்களுக்கு அரேபிய சென்ட் எவ்வளவு இருந்தாலும் போதாது!' - என்று கட்ஜு சொல்லிவிட்டாராம்!

அரேபிய சென்ட் மட்டுமல்ல, அகில உலகிலுள்ள எல்லா சென்ட்டுகளையும் கொட்டினாலும்கூட குஜராத் இனப்படுகொலையின் பாவங்களைக் கழுவ முடியாது என்பதுதானே உண்மை..! உடனே சங்பரிவார் அமைப்புகள் கட்ஜு மீது பாயத் தொடங்கிவிட்டன.  இது தொடர்பாகதுக்ளக்இதழில் வெளியான ஒரு கட்டுரையில்  பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது:

பிரஸ் கவுன்சில் தலைவர் பொறுப்பை வகிப்பவர்  இப்படி ஒருதலைப்பட்சமாக எழுதக் கூடாது. ஒரு பத்திரிகையாளர் பிரஸ் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவர் செய்யவேண்டிய முதல் வேலை பேனாவை மூடி வைக்க வேண்டியதே.” (துக்ளக் 27.2.2013)

நான் கேட்கிறேன்:

1. பிரஸ் கவுன்சில் தலைவர் பொறுப்புக்கு வருபவர்கள் பேனாவை மூடி வைத்துவிடவேண்டும் என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா?

2. தம்முடைய கருத்துகளைச் சொல்ல அவருக்குச் சுதந்திரம் இல்லையா?

3. எதையும் பார்க்காமல், பேசாமல், கேட்காமல் பொம்மை போல இருக்க வேண்டுமா? அல்லது அவர் என்ன ஜடமா?

4. கட்ஜு சொல்லிய கருத்துக்குப் பதில் சொல்வதை விட்டுவிட்டுபேனாவை மூடுஎன்பது என்ன ஜனநாயகம்?

ஊடகங்கள் போடும்பேயாட்டங்களுக்குமார்க்கண்டேய கட்ஜு அவ்வப்போதுவேப்பிலைஅடிப்பதால் ஊடகங்கள் அவர்மீது செம கடுப்பில் இருக்கின்றன.
அவர் உண்மையைச் சொல்கிறார்.  அதுவும் உரத்துச் சொல்கிறார். உண்மை சுடும். பலருக்கும் சுடுகிறது.  அலறுகிறார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரை நோக்கியேபேனாவை மூடுஎன்கிறார்களே...!

என்ன ஓர் அயோக்கியத்தனம்..!







-சிராஜுல்ஹஸன்,
பொறுப்பாசிரியர்,
'சமரசம்' - (மாதமிருமுறை)

Tuesday, February 26, 2013

காலப்பெட்டகம்:நூற்றாண்டே சாட்சியாக.. - பகுதி - 3



1938 இல், அல்லாமா இக்பாலின் அழைப்புக்கிணங்க மௌலானா மௌதூதி ஹைதராபாத்திலிருந்து லாஹீருக்குச் சென்றார். அவர் லாஹீர் சேரும்போது, இந்தியா சுதந்திரமடையப் போகிறது என்ற செய்தி ஊர்ஜிதமானது. 

சுதந்திர இந்தியாவில் அமையப் போகும் புதிய அரசு, இந்திய முஸ்லிம்களின் சமூக - அரசியல் வாழ்க்கைக்கு அந்த அரசு தரும் உத்திரவாதம் இவற்றை குறித்த கவலைகள் மௌலானாவின் மனதை அரித்தெடுக்கலாயின. 

1941 ஆகஸ்ட், 26 இல், வெறும் 75 பேர் கொண்ட ஒரு சிறு குழுவை ஒன்றுபடுத்தி 'ஜமாஅத்தே இஸ்லாமி' (இஸ்லாமிய கூட்டமைப்பு) என்ற இயக்கத்தை மௌலானா ஆரம்பித்தார்கள். அக்குழுவினரால் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒருபுறம் இயக்கப் பொறுப்புகள் மறுபுறம் எழுத்துப் பணிகள் என்று மௌலானா சூறாவளியர் சுழன்றார்கள். 

லெனின் இஸ்லாத்தை ஏளனம் செய்யும் வகையில், "வானத்தில் சுவனம் அமைப்பதைவிட பூமியில் சுவனம் அமைப்பதே எங்களது முக்கியப் பணி!" - என்றார். 



இதற்கு பதிலளிக்கும் வகையில் மௌலானா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பெருந்திரளாய் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில், "வானத்தில் சுவனம் அமைப்பதை லட்சியம் கொண்டவரால் மட்டுமே பூமியிலும் சுவனம் அமைக்க முடியும் என்றே கடந்த கால அனுபவங்கள் எடுத்துரைக்கின்றன!" - என்றார். தொடர்ந்து சொல்லும்போது, "ஆகாயத்தில் சுவனம் அமைக்க விருப்பமில்லாதவர்களால் ஆகாயத்திலும் நரகமே; பூமியிலும் நரகமே அமைப்பார்கள்! ஒருகாலம் வரும் ; அன்று மாஸ்கோவில் கம்யூனிஸம் சமாதி கட்டப்படும்!" - என்றார்கள் தீர்க்கதரிசனத்தோடு!

மௌலானா மௌதூதியின் தலைமையில் உருவான இஸ்லாமிய பேரெழுச்சி உலகம் முழுவதும் பரவலாயிற்று. 1970 இல், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய 'தஃப்ஹீமுல் குர்ஆன்' உருதுவில் முழுமை அடைந்தது. திருக்குர்ஆனின் அந்த விளக்கவுரை இன்று உலகின் பல்வேறு மொழிகளிலும், இந்தியர்களின் பெரும் பகுதி மொழிகளில் ஏறக்குறைய 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மௌலானாவின் பல நூல்கள் உலகின் 70 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 

இஸ்லாமிய இலக்கிய உலகில் பல்வேறு  சாதனைகள் புரிந்தோர் எல்லாம் மௌலானாவின் நூல்களையே 'சார்பு' நூல்களாக கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன உலகுக்கு ஈடுகொடுக்கும் விதமாக இறுதி வேத நூலான திருக்குர்ஆனின் கருத்துக்களுக்கு விளக்கவுரை எழுதியவர்களில் தலையாய இடம் பிடித்தவர்கள் மௌலானா அவர்கள். 



1947, ஆகஸ்ட் 15 இல், இந்தயா-பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்தன. இருபுறமும் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. பாகிஸ்தானில் மௌலானா மௌதூதியும், இந்தியாவில் காந்தியும் வகுப்புக் கலவரங்களைத் தடுக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்கள். 



ஆனால், காந்தியின் முயற்சிகளை மட்டுமே ஊடகங்கள் பிரதானப்படுத்தின. மெளலானாவின் முயற்சிகளையும், அமைதிக்கான பெரும் பணிகளையும் இருட்டடிப்புச் செய்தன. இஸ்லாம், முஸ்லிம்களின் விஷயத்தில் ஊடகங்களின் போக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் ஒரே மாதிரியாக தொடர்கிறது. 

 - இன்னும் வரும்.

Monday, February 25, 2013

காலப்பெட்டகம்: 'நூற்றாண்டே சாட்சியாக' - பகுதி - 2



1919 இல், தனது 16 வயதில் அவர் முதன் முறையாக 'ஜபல்பூரிலிருந்து' வெளியான 'தாஜ்' வார இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். மனித உள்ளங்களில் அன்பை பீறிட்டெழச் செய்வது இறைவேதமான திருக்குர்ஆன்தான் என்றும், அதன் பக்கம் திரும்புவது ஒன்றே ஈடேற்றத்துக்கான வழி என்றும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

1920 இல், தாஜ் இதழ் நின்று போனது. அதன் பிறகு அந்த இளைஞர் தில்லி சென்றடைந்தார். தில்லியில் 'ஜமீயதுல் உலமாயே ஹிந்த'  என்ற அமைப்பு 'முஸ்லிம்' என்ற பெயரால் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தது. இப்பத்திரிகையின் ஆசிரியராக அந்த இளைஞர் பொறுப்பேற்றார். தமது அற்புதமான ஆக்கங்களால் முஸ்லிம் சமுதாயத்தில் எழுச்சியை உருவாக்க கடுமையாக உழைத்தார்.

1926 இல், சுத்த சன்மார்க்க சங்கத்தின்   தலைவர் பண்டிட் சச்தானந் கொலை செய்யப்பட்டார். கொலையாளி ஒரு முஸ்லிம் இளைஞர். இச்சம்பவம் காங்கிரஸ் இயக்கத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த கொலையை காந்திஜி விமர்சிக்கும்போது, "இஸ்லாம் இரத்தம் சிந்துவதை ஊக்குவிக்கிறது" என்றும், "இஸ்லாத்தின் துவக்கமும் வாள்தான்! அதன் முடிவும் வாளகவும்தான் இருக்க முடியும்!" - என்று சொன்னார்.

காந்தியின் இந்த கடும் விமர்சனத்தின் மீது பலத்த சர்ச்சைகள் எழுந்தன.

இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்ட இந்த அபாண்டம் பெரும் பிரச்னையாக வடிவெடுத்தது.

இச்சமயத்தில், மௌலானா 'முஹம்மது அலி ஜவஹர்' தில்லியின் ஜாமியா மஸ்ஜிதில் அவசரகால கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி சொற்பொழிவாற்றினார். அப்போது அவர், "காந்தியின் விமர்சனத்துக்கு யாராவது தக்க விளக்கமளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"- என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.



கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்த இளைஞர் மௌலானா முஹம்மது அலி ஜவஹரின் சொற்பொழிவைக் கேட்டு பெரிதும் பாதிக்கப்பட்டார். மௌலானாவின் கேள்வி, "காந்தியின் விமர்சனத்துக்கு யாராவது தக்க விளக்கமளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"- அவரது நினைவில் எழுந்து அவரது தூக்கத்தைப் பறித்துவிட்டது. அதன் விளைவாக, 'அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்' (இஸ்லாத்தில் ஜிஹாத்தின் உண்மை நிலை) என்ற புத்தகத்தை எழுதினார். உலகில் அமைதியை நிலைநாட்ட வந்த இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கிறது என்ற தவறான கருத்தைக் கொண்டோருக்கு அது தக்க பதிலாக இருந்தது. மேற்கத்தியவாதமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என்று நினைத்துவந்த உலகத்தாருக்கு அந்த இளைஞரின் எழுதுகோலிலிருந்து பிறந்த அற்புதம் அது.

'இஸ்லாம் ஜிஹாத்' என்ற பெயரில் 'அல் ஜமியத்' பத்திரிகையில் (அந்த இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) அவருடைய ஆக்கங்கள் வெளிவரலாயின. அதன் பிறகு அது 500 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அச்சிடப்பட்டது. இஸ்லாமிய இலக்கியத்தில் இன்றுவரை அந்தப் புத்தகம் பேரிலக்கியமாக போற்றப்பட்டு வருகிறது. மார்க்க அறிஞர்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பொக்கிஷமாக  கருதப்படுகிறது   மகாகவி அல்லாமா இக்பால். 'அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்' என்னும் இந்தப் புத்தகத்தை உயர்ந்த நூல் என்று மனந்திறந்து பாராட்டியுள்ளார்.

மகாகவி அல்லாமா இக்பால்

தமது 24 வயதுக்குள் உலகின் கவனத்தை திசை திருப்ப காரணமான அந்த இளைஞர்தான் இன்று 'மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி' என்று அழைக்கப்படுகிறார்.

1928 இல், ஜமியத்துல் உலமாயே ஹிந்த் அரசியல் சார்புடைய இயக்கமாக மாறியது. 'அல் ஜமியத்' இதழும் கட்சியின் பத்திரிகையாகிவிட்டது. இந்த நடவடிக்கை மௌலானாவுக்கு பிடிக்கவில்லை. அல் ஜமிஅத்துக்கு விடை கொடுத்துவிட்டு 1932 இல், இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எழுதுவதில்  கவனம்  செலுத்த ஆரம்பித்தார்.  இந்த  நேரத்தில் ஹைதராபாத்திலிருந்து 'தர்ஜுமானுல் குர்ஆன்' என்ற பெயரில் மாத இதழ் ஒன்று  வெளிவந்து  கொண்டிருந்தது.  மௌலானா அதன் ஆசிரியராக  பொறுப்பு  ஏற்றுக் கொண்டார். திருக்குர்ஆனில்  ஒளிவெள்ளமே  மானுட பிரச்னைகளுக்கான தீர்வு என்று மனங்கவரும் விதமாக படிப்பவர் உள்ளங்களை ஈர்க்கும்விதமாக எழுதலானார். 

1933-1937 வரை இஸ்லாமிய சித்தாந்தத்தை உள்வாங்கி, சமூக -அரசியல்துறைச் சார்ந்த பல்வேறு புத்தகங்களை மௌலானா எழுதினார்கள். அப்போது எழுதப்பட்டவைதான் வட்டி, பர்தா, கணவன்-மனைவி உரிமைகள் மற்றும் கடமைகள், இஸ்லாத்தில் குடும்பக் கட்டுப்பாடு போன்ற உயரிய வாழ்வியல் இலக்கியங்கள். 

இவ்வெளியீடுகள் மேற்கத்திய பிரச்சார சாதனங்களுக்கு பெருத்த தலைவலியாக மாறின. இஸ்லாம் மற்றும் அதன் உன்னத கருத்துக்களை சகித்துக் கொள்ள அவை தயாராக இல்லை. சுரண்டலற்ற, கண்ணியம் வாய்ந்த இஸ்லாமிய சமூக அமைப்பை ஜீரணிக்க மேற்குலக ஆதிக்க சக்திகளால் முடியவில்லை.

மௌலானாவின் புத்தகங்கள் இஸ்லாமிய உலகில் பெரும் அறிவு புரட்சியைத் தோற்றுவித்தன. அதிலும் குறிப்பாக முதலாளித்துவத்துக்கும், கம்யூனியஸத்துக்கும் மூளைச் சலவைச் செய்யப்பட்டிருந்த இளைஞர்களின் உள்ளங்களை ஈர்த்துக் கொண்டன.

- இன்னும் வரும்.

Sunday, February 24, 2013

காலப்பெட்டகம்: நூற்றாண்டே சாட்சியாக... (பகுதி - 1)



அவர் மௌலான அபுல் கலாம் ஆசாத்துடன் நெருங்கி பழகியிருக்கிறார்.  அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறார். கட்டுரைகளைப் படித்திருக்கிறார். மாபெரும் கவி அல்லாமா இக்பால் மனதில் பிரவாகமெடுத்த கவிதைகளை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினார். அவருக்கு மௌலானா அன்வர் ஷா கஷ்மீரியின் இமாமத்தில் (தலைமையில்) தொழும் நற்பாக்கியம் கிடைத்தது. ஹஸன் அஹ்மது மதனீ, முஃப்தி கிஃபாயதுல்லாஹ் போன்ற பெரும் மார்க்க அறிவு ஜீவிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தமது இளமையில் சில நாட்களை ஸயீத் அதாவுல்லாஹ் ஷா புகாரியின் கல்விப் பாசறையில் பயின்றிருக்கிறார். இந்த அனுபவங்கள் எல்லாம் அவரை மிகச் சிறந்த சிந்தனையாளராக்கும் மைல்கற்களாக அமைந்தன. 

இஸ்லாமிய பேரரசுகளின் வளமும் செழுமையும், பண்பாடும், கலாச்சாரமும் அந்த அரசுகள் தந்த அமைதியான வாழ்க்கை அமைப்பும், முஸ்லிம்கள் இஸ்லாமிய பேரொளியில் ஸ்பெயினிலிருந்து இந்தோனேஸியாவரை  ஆண்ட உன்னதங்களும் கண்களில் மிளிர்ந்தன. உலகாசையில் விழுந்த முஸ்லிம்கள் தங்கள் இலக்கையும், குறிக்கோளையும் மறந்து போனதால்.. அடைந்த இழப்புகள் அவரது இரவுகளை வேதனை மிக்க தூங்கா இரவுகளாக்கின. முஸ்லிம்கள் இஸ்லாமிய ராஜபாட்டையிலிருந்து விலகி நடந்ததால்.. இதன் பிறகு ஒரு புதிய இஸ்லாமிய பெயர் தாங்கி அமைப்பு உருவானதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனை மாற்றியமைத்து புதுயுகங்களை சமைக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை அவர் திட்டவட்டமாக நம்பினார். 

இந்த நேரத்தில் வெள்ளையனை விரட்டியடிக்க உக்கிரமான பன்முகப் போராட்டங்கள் இந்தியாவில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இந்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க இந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க நச்சு விதைகளை விதைக்கிறார்கள். பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இதன் விளைவாக 1915-இல், மதன் மோகன் மாளவியா இந்த மகா சபையை நிறுவினார். பின்னாளில் அது வகுப்புவாத அமைப்பாக உருவெடுத்தது. 1925-இல், கேசவ பலிராம் ஹெட்கேவார் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஆரம்பித்தார். 1923-இல், நாக்பூரில் நடந்த வகுப்புக் கலவரங்களையொட்டி இந்துத்துவவாதிகள் செய்த பொய்யான பிரச்சாரங்கள் ஆர்.எஸ்.எஸ் உருவெடுக்க காரணங்களாயின.

உலக அரசியலை எடுத்துக் கொண்டால்.. ஸ்டாலினின் 'செம்படையினர்' நாத்திகவாதமே வாழ உரிமையுடையது என்ற எண்ணத்தில் ரஷ்யாவின் முஸ்லிம் பகுதிகளான உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், சமர்கண்ட், நேஷாபூர், புகாரா போன்ற மாநிலங்களை ரத்தக் களரியாக்கினர். அப்பகுதிகளில் வசித்துவந்த முஸ்லிம் அறிஞர்களையும், மேதாவிகளையும் கொன்றொழித்து மசூதிகளையும், பாடசாலைகளான மதரஸாக்களையும் கால்நடை தொழுவங்களாக்கினர்.

நாத்திகவாதம், ஆத்திகவாதத்தை 'கிரெம்ளின்' மாளிகையிலிருந்து விரட்டியடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றது. மற்றொருபுறமோ ஜெர்மன் 'நாஜி' தலைவர் ஹிட்லர் தனது இனவாத சித்தாந்தத்தை நிலைநாட்ட மனித பிணங்கள் மீது அரியணை அமைக்கும் தீவிர முயற்சியில் களம் இறங்கியிருந்தார்.

உலகை அமைதி பூங்காவாக்க வேண்டிய இஸ்லாமிய சக்தியோ அரசியல், பொருளாதாரம், அறிவியல் என்று வாழ்க்கையின் பல்வேறு துறைகளாக கூறு போடப்பட்டு இருந்தது. மேற்கத்திய சித்தாந்தம் முஸ்லிம்களின் வாழ்வில் திணிக்கப்பட்டிருந்தது. ஆன்மிக அறநெறிகளுக்கும், வாழ்வின் பிற துறைகளுக்கும் சம்பந்தமில்லை என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டது. பாரிஸ், லண்டன் கலாச்சாரங்கள் தாரளமயமாக்கப்பட்டு முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய வர்ணங்களுக்காளாயின.

1888-களிலேயே பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து முக்கிய விவாதம் நடந்தது. 'பிளட்ஸ்டோன்' என்ற பிரமுகர், 'இளைஞர்கள் சமூகத்தின் முதுகுத்தண்டு போன்றவர்கள். அதனால், இளைய சக்தியை திசை திருப்ப வேண்டும். முஸ்லிம் இளைஞர்களை நம் பக்கம் கவர்ந்துவிட்டால்.. இஸ்லாமிய வாழ்க்கை முறையை செயல்பட விடாமல் தடுத்துவிட முடியும்!"- என்ற ஆலோசனையை முன் வைத்தார். அத்துடன் நில்லாமல் மேசையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டி, "இது குர்ஆன்! முஸ்லிம்களின் வழிகாட்டி! இந்த நூலைவிட்டு அவர்களை விலக்க வேண்டும்!"-என்றார். 

இவரது ஆலோசனை ஒருமனதாக ஏற்கப்பட்டது.

பிரச்னைகளின் பிடியில் சிக்கி முஸ்லிம்கள் தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சிலர் நாட்டு விடுதலைக்காக.. சிலர் தொழிலாளர் உலகுக்காக.. இன்னும் சிலரோ 'பாஸிஸம்' வளர்வதற்காக தத்தமது சக்தி-சாமார்த்தியங்களை செலவழித்துக் கொண்டிருந்தார்கள். உலகமே, ரத்தக் களறியாகி.. மனிதகுலம் பிண மலைகளாய் குவிக்கப்பட்ட துயரம் வாய்ந்த நாட்களவை!

இந்த சூழலில் 16 வயதுகொண்ட அந்த துடிப்புள்ள இளைஞர் மனித குலத்துக்கு நேரிய வழியைக் காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். வரவிருக்கும் நவீன அறிவியல் உலகை 'எழுதுகோல்தான்' ஆளப்போகிறது என்ற திடமான தீர்மானத்துக்கு வந்தார். அறிவின் மூல ஊற்றே எழுதுகோல்தானே! திருக்குர்ஆனும் இதற்கு சாட்சியாகவல்லவா இருக்கிறது.

- தொடரும்


Sunday, February 17, 2013

'தூக்கு மேடையின் நிழலில்..'



அப்சல் குருவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிப்.9, 2013 அன்று சில மணி நேரத்துக்கு முன் அந்த செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவர் சிறைத்துறை அதிகாரிகளிடமிருந்து எழுதுகோலையும், தாளையும் பெற்று தனது குடும்பத்தாருக்கு எழுதிய கடிதம் இது:



அடியில் உள்ளது திகார் சிறைக் கண்காணிப்பாளர், அப்சல் குருவின் கடிதத்தோடு இணைப்பையும் இணைத்து அவரது குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்த கடிதம்:

அப்சல் குரு கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது:

எனது மதிப்பிற்குரிய குடும்பத்தார்க்கும் மற்றும் எனது சக தோழர்களுக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

மேன்மைமிக்க இந்த உயர் அந்தஸ்துக்கு என்னை தேர்வு செய்த இறைவனுக்கு நான் நன்றி செலுத்திக் கொள்கின்றேன். 

எனது தரப்பிலிருந்து .. எனது தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நாம் அனைவரும் நீதி - நேர்மையில் நிலைத்துள்ளோம். நமது முடிவும் நீதி - நேர்மைக்கான பாதையில்தான் பயணிக்க உள்ளது.

இந்த தருணத்தில் எனது குடும்பத்தாருக்கான தாழ்மையான வேண்டுகோள் இது: "எனது மரணம் குறித்து நீங்கள் வருந்துவதைவிட எனக்களிக்கப்பட்ட உயர் அந்தஸ்துக்கு நீங்கள் அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்!"

கருணையாளனான இறைவன்தான் உங்கள் பாதுகாவலன்! அவனே உங்களின் உதவியாளன்! நான் உங்களை அவனது பாதுகாப்பிலேயே விட்டு விடைபெறுகின்றேன்!

ஆதாரம் மற்றும் நன்றி: http://www.ndtv.com/article/india/read-afzal-guru-s-last-letter-to-his-wife-332023?pfrom=home-topstories

Tuesday, February 12, 2013

'நீதி வழுவாத அந்த நாள் வரும்வரை நன்றாக உறங்கு அப்சல்!'





அமெரிக்காவின்ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே.ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை (http://openspace.org.in/node/521) தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது.  அதை தலித் முரசு மார்ச் 2007 மொழியாக்கம் செய்து வெளியிட்டது. அதிலிருந்து...

சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன்.

சிறைவாசிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடிமனான கண்ணாடிச் சுவரும், இரும்பு சன்னலும் இருக்கிறது. இருபுறமும் சுவரில் ஒலிவாங்கியும் ஒலி பெருக்கியும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலமாகவே உரையாடல் நடக்கிறது.

அப்சல் எனக்காக காத்திருந்தார்.அவர், நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு கம்பீரமாகவும் அமைதியாகவும் இருந்தார்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினோம். பதினைந்து நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. பேட்டியை நிறைவு செய்ய வேண்டுமென்பதில் இருவருமே அவசரம் காட்டினோம்.

என்னுடைய சிறிய குறிப்பேட்டில் நான் குறிப்பெடுத்தேன். அப்சலுக்கு சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தன. தனிமைச் சிறையில் இருந்ததால், உலகத்தோடு தொடர்பு கொள்ள இயலாத நிலையை குறித்தே அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.

அப்சல் குறித்து பல்வேறு மாறுபட்ட பிம்பங்கள் உள்ளனவே. நான் எந்த அப்சலை இப்போது சந்தித்திருக்கிறேன்?

அப்படியா? என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு அப்சல்தான். அது நான்தான்.

அப்படியெனில் அந்த அப்சல் யார்?

அப்சல் இளமையான, துடிப்புமிக்க, அறிவாளியான, குறிக்கோளுடைய இளைஞன். 1990களின் முன்பகுதிகளில் மாறிய அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட பலரைப் போல நானும் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரி. ‘ஜம்மு காஷ்மீர் விடுதலஇயக்க'த்தில் உறுப்பினராக இருந்தேன். அந்த அடிப்படையில் எல்லை தாண்டியவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே அந்த மாயையிலிருந்து விடுபட்டு இங்கு திரும்பி வந்து, ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ முயன்றேன்.ஆனால், நான் ஒருபோதும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் என்னை கூட்டிச் சென்று, உச்சகட்ட சித்திர வதைகளை செய்தனர்.


  • உடம்பில் மின்சாரம் பாய்ச்சுவது,

  • குளிர்ந்த நீரில் உறைய வைப்பது,

  • பெட்ரோலில் முக்கி எடுப்பது,

  • மிளகாய் புகையில் நிற்க வைப்பது

என... வதைகளில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் நான் அனுபவித்திருக்கிறேன்.

பிறகு, ஒரு வழக்கில் பொய்யாக நான் இணைக்கப்பட்டேன். வழக்கறிஞர் இன்றி, நேர்மையான விசாரணையின்றி, இறுதியாக எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. காவல் துறையினர் கூறிய பொய்கள், ஊடகங்களில் பரப்பப்பட்டன.

அதுதான் ஒருவேளை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது போல, "தேசத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியாக உருவெடுத்தது. அந்தகூட்டு மனசாட்சி'யை திருப்திப்படுத்த, எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த முகமது அப்சலைத் தான் நீங்கள் சந்திக்கிறீர்கள்.
வெளி உலகத்திற்கு இந்த அப்சலைப் பற்றி ஏதேனும் தெரியுமா என நான் வியக்கிறேன்.  

நீங்களே சொல்லுங்கள்... எனது நிலையை சொல்லும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதா? எனக்கு நியாயம் வழங்கப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஒருவருக்கு வாதாட வழக்கறிஞரே வழங்கப்படாமல், நேர்மையான விசாரணையின்றி, அவன் தன் வாழ்க்கையில் சந்தித்தவற்றை கேட்காமல், அவனைத் தூக்கிலிடுவது சரியென கருதுகிறீர்களா? ஜனநாயகம் என்பது இதுவல்ல - இல்லையா?

உங்கள் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாமா? வழக்கிற்கு முந்தைய உங்கள் வாழ்க்கையிலிருந்து...

நான் வளரும் காலத்தில், காஷ்மீரில் ஓர் உணர்வெழுச்சிக்கான அரசியல் சூழல் நிலவியது. மக்பூர் பட் தூக்கிலிடப்பட்டார். அமைதியான வழியில் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வு காண மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதென காஷ்மீர் மக்கள் முடிவெடுத்தனர். காஷ்மீர் சிக்கலின் இறுதித் தீர்வில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்முஸ்லிம் அய்க்கிய முன்னணி' உருவாக்கப்பட்டது.

முன்னணிக்கு கிடைத்த ஆதரவு, தில்லி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக, தேர்தலில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன. தேர்தலில் பங்கெடுத்த மற்றும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் பிறகே, அதே தலைவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கினர்.

நான் அப்போது சிறீநகரில் ஜீலம் பள்ளத்தாக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தேன். எனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்க'த்தில் இணைந்தேன். அதன் உறுப்பினராக, காஷ்மீரின் அந்தப் பக்கத்திற்குச் சென்ற பலரில் நானும் ஒருவன். ஆனால், காஷ்மீர் சிக்கலில் பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் செயல்பாடு, எந்த வகையிலும் இந்திய அரசியல்வாதிகளின் செயல்பாட்டிலிருந்து மாறுபடாமல் இருப்பது கண்ட பிறகு, மாயை தெளிந்த மனதோடு சில வாரங்களிலேயே நான் இங்கு திரும்பிவிட்டேன். பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தேன்.

உங்களுக்குத் தெரியுமா? எல்லை பாதுகாப்புப் படையினர் எனக்குசரணடைந்த போராளி' என்று சான்றிதழ்கூட அளித்தனர். நான் புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். என்னால் ஒரு மருத்துவராக முடியவில்லை என்ற போதும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளராக ஆகிவிட்டேன்.எனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் ஒரு ஸ்கூட்டர்கூட வாங்கி விட்டேன். திருமணம் செய்து கொண்டேன்.

ஆனால், ராஷ்டிரிய ரைபிள் படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் துன்புறுத்தல் இல்லாமல் ஒரு நாள்கூட செல்லவில்லை.

காஷ்மீரில் எங்கேயாவது போராளிகளின் தாக்குதல் நடந்தால், பொது மக்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துவிடுவார்கள். என்னைப் போன்ற சரணடைந்த போராளிகளின் நிலை இன்னமும் மோசம். எங்களைப் பல நாட்கள் பாதுகாப்பில் வைத்திருந்து, பொய் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டினர்.

22 ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சார்ந்த மேஜர் ராம் மோகன் ராய், என்னுடைய பிறப்பு உறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சினார். பலமுறை அவர்களின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டேன். அவர்களின் முகாம்களை பெருக்க வைத்தனர். ஒரு முறை ஹம்ஹமா அதிரடிப்படை வதை முகாமிலிருந்து தப்பிக்க, பாதுகாப்புப் படையினருக்கு என்னிடம் இருந்த அனைத்தையும் லஞ்சமாக கொடுக்க வேண்டியிருந்தது.

துணை கண்காணிப்பாளர் வினய் குப்தாவும், துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங்கும் சித்திரவதைகளை மேற்பார்வையிட்டனர். வதை செய்வதில் தேர்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் ஷண்டி சிங், நான் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொள்ளும் வரையில், மூன்று மணி நேரம் என் மீது மின்சாரத்தைப் பாய்ச்சினார்.

எனது மனைவி தன் நகைகளை விற்றார். மீதி பணத்திற்கு அவர்கள் எனது ஸ்கூட்டரை விற்று விட்டனர்.

நான் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் உடைந்து போனவனாக முகாமிலிருந்து திரும்பினேன். 6 மாதங்களுக்கு என்னால் எனது வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. எனது உடல் நிலை அத்தனை மோசமாக இருந்தது. எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால், என்னால் எனது மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை. அதற்காக நான் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது.


வழக்கிற்கு வருவோம்... நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தங்களை சிக்க வைத்த நிகழ்வுகள் எவை?

சிறப்பு அதிரடிப்படை முகாம்களில் நான் கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவாக, துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், அவருக்காக ஒரு சின்ன வேலை செய்யச் சொன்னபோது, அதை மறுக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர் அப்படித்தான் கூறினார்: ‘ஒரு சின்ன வேலை.' நான் ஒருவரை தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். அந்த மனிதருக்காக நான் தில்லியில் ஒரு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

நான் அந்த மனிதரை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவர் காஷ்மீரி மொழி பேசவில்லை என்பதால், அவர் வெளியாள் என சந்தேகித்தேன்.

அவர் தனது பெயர் முகமது என்று கூறினார் (நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய அய்வர் குழுவிற்கு முகமதுதான் தலைவர் என காவல் துறை குற்றம் சாட்டியது. அவர்கள் அனைவருமே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்).

நாங்கள் தில்லியில் இருந்தபோது, எனக்கும் முகமதுவிற்கும் தவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அதோடு முகமது தில்லியில் நிறைய பேரை சந்தித்ததையும் நான் கவனித்தேன்.

அவர் ஒரு கார் வாங்கிய பிறகு என்னை திரும்பிச் செல்லுமாறு கூறினார். பரிசாக அளிப்பதாகக் கூறி அவர் எனக்கு 35,000 ரூபாய் அளித்தார். நான் ஈத்தை முன்னிட்டு காஷ்மீர் திரும்பினேன். சிறீநகர் பேருந்து நிலையத்திலிருந்து சோபூர் செல்ல முற்படும்போது, நான் கைது செய்யப்பட்டு, பரிம்போரா காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என்னை சித்ரவதை செய்து, பின்னர் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தில்லிக்கு கொண்டு வந்தனர். தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவின் வதை முகாமில் முகமதை பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறினேன்.

ஆனால், அவர்கள், நானும் எனது உறவினர் ஷவுகத், அவரது மனைவி நவ்ஜோத், சர் கிலானி ஆகியோர்தான் நடாளுமன்றத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும் என வற்புறுத்தினர்.

ஊடகங்களுக்கு முன் இதை நான் நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என கூறினர்.

நான் மறுத்தேன். ஆனால், என் குடும்பம் அவர்கள் கைப்பிடியில் இருப்பதாகவும், நான் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டினர்.

பல வெற்றுத் தாள்களில் கையெழுத்திட வைக்கப்பட்டேன். காவல் துறையினர் சொன்னதை ஊடகங்களிடம் சொல்லி, தாக்குதலுக்கும் பொறுப்பேற்குமாறு வற்புறுத்தப்பட்டேன். சர் கிலானி அவர்களின் பங்கு குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, கிலானி குற்றமற்றவர் என்று நான் கூறினேன். சொல்லிக் கொடுத்ததை தாண்டி நான் பேசியதற்காக, உதவி கமிஷனர் ராஜ்பீர் சிங், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே என்னிடம் கத்தினார்.

மறுநாள் ராஜ்பீர் சிங், எனது மனைவியிடம் நான் பேச அனுமதித்தார். அதன் பிறகு, அவர்களை நான் உயிருடன் பார்க்க வேண்டுமெனில், நான் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

எனது குடும்பத்தை நான் உயிருடன் பார்க்க வேண்டுமானால், குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழியாக இருந்தது.

சிறிது காலத்திற்குப் பிறகு நான் விடுதலையாகிவிடும் வகையில் எனது வழக்கை பலவீனமாக அமைப்பதாக சிறப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

என்னை அவர்கள் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, முகமது பலவிதப் பொருட்களை வாங்கிய கடைகளை காட்டினர். இதன் மூலம் வழக்கிற்கு என்னை சாட்சியாக மாற்றினர்.

நாடாளுமன்றத் தாக்குதலின் பின்னிருந்த மூளையை கண்டுபிடிக்க இயலாத தங்கள் தோல்வியை மறைக்க, காவல் துறையினர் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மக்களை அவர்கள் முட்டாள்களாக்கிவிட்டனர். நாடாளுமன்றத் தாக்குதல் யாருடைய திட்டம் என்பது, இன்னமும் மக்களுக்குத் தெரியாது. காவல் துறை அதிகாரிகள் பதக்கங்கள் பெற்றனர். எனக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

உங்களுக்கு ஏன் சட்டப்பூர்வமான உதவிகள் கிடைக்கவில்லை?

எனக்காக முறையிட யாருமே இல்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கி ஆறு மாதங்கள் வரையில் எனது குடும்பத்தைக்கூட நான் சந்திக்கவில்லை. பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் அவர்களை சந்தித்தபோது, அது மிகக் குறைவான நேரமே நீடித்தது. எனக்காக வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய யாரும் இருக்கவில்லை. சட்ட உதவி இந்நாட்டில் அடிப்படை உரிமையாக இருந்த காரணத்தினால், எனக்காக வாதாட நான்கு வழக்கறிஞர்களை நான் பரிந்துரை செய்தேன்.

ஆனால், அவர்கள் நால்வருமே என் வழக்கை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக நீதிபதி எஸ். என். திங்கரா கூறினார். நீதிமன்றம் எனக்காக தேர்ந்தெடுத்த வழக்கறிஞர், மிக முக்கிய ஆவணங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளத் தொடங்கினார். உண்மை என்னவென்று அவர் என்னிடம் கேட்கவே இல்லை.

பின்னர் நீதிமன்றம் ஒரு நடுநிலையாளரை நியமித்தது. எனக்காக வாதாட அல்ல; நீதிமன்றத்திற்கு உதவி செய்ய. அவர் என்னை சந்திக்கவே இல்லை. மேலும், அவர் எனக்கு மிகவும் எதிரானவராகவும், மதவாதியாகவும் இருந்தார். அதுதான் எனது வழக்கு. மிக முக்கிய விசாரணைக் காலத்தில் எந்த விதத்திலும் எடுத்துரைக்கப்படாதது. என்னைக் கொல்வதுதான் உங்கள் நோக்கம் என்றால், எதற்காக இத்தனை நீளமான சட்ட வழிமுறைகள்? எனக்கு அவை அனைத்துமே மிகவும் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் இதுதான்: கண்மூடித்தனமான தேசிய உணர்வும், தவறான புரிதல்களும், சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்குமாறு செய்ய விட்டுவிடாதீர்கள்.

சிறையில் என்ன நிலையில் வைக்கப்பட்டுள்ளீர்கள்?

உயர் பாதுகாப்பு தொகுதியில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். பகலில் மிகக் குறைவான நேரம் மட்டுமே நான் எனது அறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறேன். வானொலியோ, தொலைக்காட்சியோ கிடையாது. நான் சந்தா கட்டியுள்ள நாளேடுகள்கூட பல பகுதிகள் கிழிக்கப்பட்டே என்னை வந்தடைகின்றன. என்னைப் பற்றி ஏதேனும் செய்தி வந்திருந்தால், அதைக் கிழித்துவிட்டு எஞ்சிய பகுதிகளை மட்டுமே எனக்கு அளிக்கின்றனர்.

தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையைத் தவிர, தாங்கள் மிக அதிகமாக அக்கறை கொள்ளும் விஷயங்கள் என்ன?

பல விஷயங்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது. நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் பல சிறைகளில், வழக்கறிஞர்கள் இன்றி, விசாரணையின்றி, எந்தவித உரிமையும் இன்றி வாடுகின்றனர்.

காஷ்மீரின் தெருக்களில் நடமாடும் பொது மக்களின் நிலை இதிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல. காஷ்மீர் பள்ளத்தாக்கே ஒரு திறந்த வெளி சிறைதான். அண்மைக் காலங்களில் பொய்யான மோதல் சாவுகள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன.

ஆனால், இது பனிப்பாறையின் சிறுமுனை மட்டுமே. ஒரு நாகரீக நாட்டில் நீங்கள் பார்க்க விரும்பாத அத்தனையும் காஷ்மீரில் இருக்கின்றன.

உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடக்கிறது...

எனக்கு அநீதி இழைக்கப்பட்டதென சொல்ல முன் வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வழக்கறிஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அவர்கள் அனைவரும், அநீதிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் ஒரு மகத்தான செயலை செய்கிறார்கள்.

தொடக்கக் காலங்களில், 2001இல் வழக்கு விசாரணையின் தொடக்க நாட்களில், நீதியை நியாயத்தை விரும்புபவர்கள் வெளிப்படையாகப் பேசுவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. உயர் நீதிமன்றம் சர் கிலானியை குற்றமற்றவர் என விடுவித்தபோது, காவல் துறையின் முடிவை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர்.

மேலும் அதிகமாக மக்கள் வழக்கின் விவரங்களையும், உண்மைகளையும் அறிந்து, பொய்களைத் தாண்டியும் பார்க்கத் தொடங்கிய பிறகு, பேசவும் தொடங்கினர். நீதியை நியாயத்தை விரும்புபவர்கள், அப்சலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என சொல்ல முன்வருவது இயற்கையானது, ஏனெனில், அதுதான் உண்மை.


தங்கள் மனைவி தபஸ்சும், மகன் காலிப் இவர்களைப் பற்றி நினைக்கும்போது தங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

எங்களுக்கு திருமணமான பத்தாவது ஆண்டு இது. அதில் பாதியை நான் சிறையில் கழித்திருக்கிறேன். அதற்கு முன்னால், காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினரால் நான் பலமுறை கைது செய்யப்பட்டு வதை செய்யப்பட்டுள்ளேன். தபசும் எனது உடல் மற்றும் மனப்புண்களுக்கு சாட்சியாக இருந்துள்ளார். பலமுறை நிற்கக்கூட இயலாதவனாக நான் வதை முகாமிலிருந்து திரும்பியுள்ளேன். எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது உட்பட, பல வகையான கொடுமைகளை அனுபவித்துள்ளேன். அவர்தான் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்தார். ஒரு நாள்கூட நாங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழவில்லை. இதுதான் பல காஷ்மீரி இணையர்களின் கதையாக இருக்கிறது. காஷ்மீர் இல்லங்கள் அனைத்திலும் அச்சமே முக்கிய உணர்வாக உள்ளது.

தங்கள் மகன் என்னவாக வளர வேண்டும் என விரும்புகிறீர்கள்?

தொழில் ரீதியாக என்றால், மருத்துவராக வேண்டும். அது என்னுடைய நிறைவேறாத கனவு. ஆனால், அதைவிட முக்கியமாக, அவன் அச்சமின்றி வளர வேண்டும் என நான் விரும்புகிறேன். அவன் அநீதிக்கு எதிராகப் பேச வேண்டும் என விரும்புகிறேன். அநீதியின் கதையை என் மனைவியையும் மகனையும் விட, வேறு யார் அதிகமாக அறிவார்கள்?

நாடாளுமன்றத் தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினர் கொல்லப் பட்டுள்ளனர். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன...

உண்மையில், தாக்குதலில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், என்னைப் போன்ற ஓர் அப்பாவியை தூக்கிலிடுவது, அவர்களை திருப்திப் படுத்தும் என அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். தேசியவாதத்தின் மிக சிதைக்கப்பட்ட நோக்கத்திற்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை செய்திகளின் ஊடாகப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வாழ்க்கையின் சாதனையாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

ஒரு வேளை எனது மிகப் பெரிய சாதனை என்பது, எனது வழக்கின் ஊடாகவும், எனக்கு நடந்த அநீதிக்கு எதிரான பிரச்சாரத்தின் காரணமாகவும், சிறப்பு அதிரடிப்படையினரின் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பாதுகாப்புப் படையினர் மக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்கள், மோதல் கொலைகள், காணாமல் போனவர்கள், வதை முகாம்கள் போன்றவற்றைப் பற்றி மக்கள் இன்று விவாதிப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவைதான் ஒரு காஷ்மீரி நேரடியாக கண்டு வளரும் சூழல்.

இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் என்ன செய்கின்றனர் என்பது குறித்து காஷ்மீருக்கு வெளியிலிருக்கும் மக்களுக்கு எதுவும் தெரியாது.
காதை கிழிக்கும் மின்சார மணி அடிக்கிறது. இதுதான் நான் அப்சலிடம் கேட்ட இறுதிக் கேள்வி

நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?

அப்சலாக... முகமது அப்சலாக... நான் காஷ்மீரிகளுக்கு அப்சல்... இந்தியர்களுக்கும் நான் அப்சல்தான். ஆனால், இந்த இரு பிரிவினருக்கும் என்னைப் பற்றி முற்றிலும் முரண்பாடான புரிதல்கள் உள்ளன.

நான் இயல்பாக காஷ்மீரி மக்களின் முடிவையே நம்புவேன். நான் அவர்களில் ஒருவன் என்பதால் மட்டுமல்ல; நான் சந்தித்த எதார்த்தங்களை அவர்கள் நன்கு அறிவர் என்பதாலும்! எந்தவித சிதைக்கப்பட்ட வடிவமும் அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. அது வரலாறாக இருந்தாலும் ஒரு நிகழ்வாக இருந்தாலும்.

நன்றி: பூங்குழலி-தலித் முரசு மார்ச் 2007 - இதழில் வெளிவந்த தமிழாக்கம்