NewsBlog

Friday, February 1, 2013

விஸ்வரூபம்: 'உணரப்படும் அந்த வலிகள்! '






எனது சிறு வயதில் இருந்தே, கமல் ஹாசனின் தீவிர ரசிகன் நான். எனது சித்தப்பா கலைஞன் படம் வந்த போது முதல் முறையாக கமலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது, ஏதோ இன்று தான் என்பது போல் இருக்கிறது. 
 
நான் 2006 ஆம் ஆண்டு முதல் தியேட்டரில் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன், நண்பர்களுடன் சினிமா பார்ப்பது எவ்வளவு மகிழ்வானது...! ஆனாலும், ஏனென்றால் அது பெரும் பொருளாதார மற்றும் நேர இழப்பு என்பது என் கருத்து. ஆனாலும் டிவிக்களில் கமல் படம் போட்டால் கண்டிப்பாக பார்ப்பேன் ஏனென்றால், அவருடைய படங்களில் சமூக சிந்தனை இருக்கும் என்பது எனக்கு தெரியும். 
 
நான் இறைவனை மிக உறுதியாக நம்பிக்கை கொண்டவன், ஆனாலும் தசாவதாரத்தில் "கடவுள் இல்லைன்னு சொல்லல, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்ட்ரேன்" என்னும் அவர் வசனத்தை ரசித்தவன் நான், ஏனெனில் அது அவருடைய கருத்து அவ்வளவு தான் அதில் நான் அவருடைய ஸ்டைலை ரசித்தேன். அது அவர் கருத்து சுதந்திரம். 
 
ஆனால் விஸ்வரூபம் படம் நான் பார்க்கவில்லையென்றாலும் டிவிக்களில் வரும் காட்சிகள் மற்றும் கமலின் வாக்குமூலத்தில் நான் அறிந்தது யாதெனில்..... கமல் மாறிவிட்டார்.... பணம் அல்லது ஆஸ்கர் அல்லது புரட்சிகரமான சிந்தனை என்ற பெயரில் அவர் தனது ஒரு கலைஞனாக கடமையை தவறிவிட்டார், மனிதம் தழைக்க கதை சொன்ன கமல் இப்பொது வேறு யாருக்கோ வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்.
 
 
கமல் கூறுவதையே எடுத்து கொள்வோம், அது ஆப்கன் முஸ்லிகளின் கதையாகவே இருக்கட்டும், அதிலாவது எதார்த்தம் இருந்திருக்கலாமே, தாலிபன்கள் கமலுக்கும் அவரின் அமெரிக்க எஜாமானனுக்கு வேண்டுமானால் தீவிரவாதிகளாக இருக்கலாம் ஆனால் ஆப்கனியர்களுக்கு, அவர்கள் தங்கள் நாட்டின் சுதந்திர போராளிகள் தானே..? 
 
 
 
அமெரிக்காவிற்கு தேவை மத்திய ஆசியாவில் ஒரு ராணுவதளம் அதன் மூலம் எதிர்கால வல்லரசு இந்தியாவையும், அணு ஆயுதத்துடன் கூடிய ஓரே முஸ்லிம் நாடு பாகிஸ்தானையும் மற்றும் தன் பரம வைரியான ஈரானையும் கண்காணிக்க வேண்டும். அதற்கு இடையில் நின்ற இஸ்லாமிய அரசாங்கம் தலிபான்கள் மட்டுமே! அவர்களை போரில் வெல்ல முடியாத அமெரிக்கா. (படிக்க 10 days in Taliban state by yuvan ritley--- i think available in internet also) இன்று அவர்களுக்கு எதிராகவும் எங்கே இந்திய தேசம் அமைதியாக இருந்துவிடுமோ அதனால் கனவுகள் காண இந்தியர்கள் தயாராகிவிடுவார்களோ என ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களாக தாலிபன்கள் மற்றும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தவறான கருத்தியல் பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறது அமெரிக்கா.

 
டிவைடு அண்ட் ரூல் என்பது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது, இந்தியா-பாகிஸ்தான் பிளக்கபட்டது, ஆனால் அது அத்துடன் முடியவில்லை அப்போதிருந்தே இந்தியர்களின் மனங்கள் பிரிந்து தான் கிடக்கின்றன, எத்தனையோ என் நெருங்கிய இந்து மற்றும் கிறித்தவ நண்பர்கள் என்னிடம் நன்றாக நடக்கின்றார்கள் ஆனால், இந்தியா பாகிஸ்தான் கிரிகெட்டின் போது, எங்கோ யாரோ குண்டு வெடித்த செய்தி கிடைக்கும் போது என்னிடம் வேறு மாதிரி பேசுகிறார்கள், அது அவர்கள் மீது தவறில்லை, ஏனென்றால் இந்த மனபான்மை வெகுஜன ஊடகங்களால் அவர்கள் அனுமதியில்லாமலேயே கட்டமைக்கபட்டுள்ளது.
 
ஆனால் கமல் கூறுகிறார்: "என் சினிமாவில் நான் இந்திய முஸ்லிம்களை காட்டவில்லை!". நாடு அந்த அளவுக்கு புரிதலோடு இருந்தால் இங்கு நாம் பல முதலமைச்சர்களை சினிமாவில் இருந்து பெற்றிருப்போமா... இன்னும் வருங்கால முதல்வர் கனவுடன் விசயகாந்த், விசய், அசித் என பெரிய பட்டியலே இருக்குமா? இந்த நாட்டில் எங்காவது ஒரு சிந்தனையாளன், அதை மட்டுமே தகுதியாக கொண்டு அமைச்சராகி இருக்கிறானா....இல்லை அது முடியுமா? அந்த புரிதல் இக்கால இளைய தலைமுறை கொண்டிருந்தால் இன்னும் அது ஏன் சினிமா கட்-அவுட்களுக்கு பாலாபிசேகம் செய்து கொண்டுள்ளது?, ஏன் இந்த அரசியல்வாதிகள் இன்னும் இலவசங்களை கொடுத்து ஆட்சிகளை பிடிக்கிறார்கள்? தெரு தெருவுக்கு டாஸ்மாக் கடைகள் ஏன் உள்ளன? 
 
கமல் எவ்வளவு அழகாக பேசுகிறீர்கள்...!

 
நமது மக்களுக்கு பொதுவாக நாம் சம்பந்தபடாத விஷயத்தில் ஆழமாக சிந்திக்க தெரியாது அல்லது இந்தியன் அதற்கு அனுமதிக்கபடுவது கிடையாது, ஆமாம்! எல்லாமே மேலோட்டமாகவே சிந்திப்போம், என்னையும் சேர்த்தே தான் சொல்கிறேன். எந்த ஒரு விஷயத்திலும் இன்றைய செய்திதாள்கள், டி.வி மற்றும் சினிமாவை தாண்டி நமது அறிவை செலுத்துவது இல்லை,
 
இந்தியா ஒரு அற்புதமான தேசம், மற்ற வளர்ந்த நாடுகளில் கூட இல்லாத சுதந்திரம் இங்கு எல்லாருக்கும் உண்டு, ஆனால் தினசரி வாழ்வில் தான் மட்டும், தன் சமூகம் மட்டும், ஏதோ ஒரு விதத்தில் வேறு மாதிரி பார்க்க படுகிறோம் என்பதை உணரும் போது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு தலித்தும் எவ்வளவு வலிகளை உணர்கிறோம் என்பது, அந்த இடத்தில் நிற்பவர்களால் மட்டுமே உணரமுடியும்.
 
 
 
இங்கு ஏதோ பாலன்ஸ்க்காக தலித் என்று கூறவில்லை, நான் படித்த பள்ளியில் அவர்கள் தான் மெஜாரிட்டி, ஆனாலும் சில பேரே உள்ள வன்னிய சாதி சக வகுப்பு மாணவர்கள் ஒரு தலித் மாணவனை, பள்ளியில் இருந்து அந்த நகர பஸ் ஸ்டாண்டு வரை அடித்து துவைத்ததை நான் கண்டிருக்கிறேன், அதே பள்ளியில் செய்யுள் பகுதியில் வரும் அந்தணர் வார்த்தைக்கு பொருள் கேட்ட குற்றத்திற்க்காக வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்கபட்ட என் சக தலித் சகோதரனை, அவன் வலியை நான் உணர்ந்திருக்கிறேன், அதே பள்ளியில் மற்ற மாணவர்களிடம் சிரித்து பேசும் ரைட்டர் (செட்டியார்) தலித் மாணவர்களிடம் மட்டும் எரிந்து விழுவதை பார்த்திருக்கிறேன்.... இதோ அவர்களின் வலியை எழுதி விட்டேன், 
 
ஆனால் அவர்களை போன்றே நானும் அனுபவித்திருக்கிறேன் ஆனால் வேறு வழிகளில், "நீங்களெல்லாம் துலுக்கன்! காசுக்கு ஆசைபட்டு ஓடி போய் மதமாறியவர்கள் தானே!"- என 80 பேர் முன்னிலையில் அந்த பி.டி மாஸ்டர் (அந்தணர்) சொன்ன போது கூனி குறுகி போய் இருக்கிறேன்.
 
அவர் அதை கூறும் வேளையில் உடனிருந்த இன்னொரு பி.டி மாஸ்டர் (முஸ்லிம்) அதை கேட்டு சிரித்து கொண்டே சமாளித்த போது... அவரின் இயலாமையை நினைத்து கோபத்தின் உச்சிக்கு சென்று பின் பீறிட்டு அழுதிருக்கிறேன்!
 
இதெல்லாம் நடந்து பதினைந்து வருடங்கள் ஆகி விட்டன, இன்றைய நிலைமை இதை விட மோசமாகதான் உள்ளது அல்லது அது முன் நின்று பேசுவது போய் பின்னே பேசுவது என்று ஆகிவிட்டது அவ்வளவு தான். 
 
நாடும் மக்களும் இன்னும் முற்போக்கு நிலையை அடைய நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
 
THANKS TO JANAB AHMAD ISMAIL
 
 கருத்துரை: 
சகோதரர் அஹ்மது இஸ்மாயீல்
 
 

1 comment:

  1. "நமது மக்களுக்கு பொதுவாக நாம் சம்பந்தபடாத விஷயத்தில் ஆழமாக சிந்திக்க தெரியாது"
    --- இதை நான் அமோதிக்கிறேன்.

    மேற்க்கண்ட கூற்றுப் படி... இந்த சமூதாயதில் ஊடகம் மற்றும் சினிமா தங்கள் கருத்துக்களை கவனமாக தெரிவிக்க வேண்டும்.

    ReplyDelete