NewsBlog

Friday, February 1, 2013

'மந்திரக்கோலல்ல யதார்த்தங்கள்!'



 2001-இல், நாளிதழ் தொடங்குவது சம்பந்தமாக ஓர் ஆலோசனைக் கூட்டம் சென்னை ஓட்டல் ஒன்றின் திறந்தவெளி புல்தரையில் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை நான் செய்திருந்தேன். பல்வேறு வெகுஜன நாளிதழ்கள் மற்றும் பல தனியார் தொலைக்காட்சி நிலையங்களின் ஆசிரியர் குழுவினர் இதற்காக வந்திருந்தனர். நாளிதழ் நடத்துவதில் உள்ள சிரமங்கள், பிரச்சினைகள், செலவு, விற்பனை, விளம்பரங்கள் வரை விரிவான முறையில் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடைசியில் எடுக்கப்பட்ட முடிவு வெகுஜன மாதமிருமுறை அல்லது வார இதழ் ஆரம்பிக்கலாம். அதிலிருந்து நாளிதழாக மாற்றலாம் என்பதுதான்.

இன்றைய காலகட்டத்தில் மாற்று ஊடகம் (Alternate Media)  அவசியம்தான். தற்போது, ஒரு சார்புடைய செய்திகள்தான் வெளியாகின்றன. மறுபக்கச் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. கேரளத்தில், முஸ்லிம்களால் நடத்தப்படும் வெற்றிகரமான வெகுஜன நாளிதழ் மாத்யமம். ஆரம்பிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மலையாள மனோரமா, சந்திரிகா போன்ற நாளிதழ்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. செய்தி இருட்டடிப்பு செய்ய முடியாது. செய்திகளைத் திரிக்க முடியாது. மாத்யமம் செய்திகளை வெளியிட்டுவிடும். அதன் பிறகு தங்களைப் பற்றிய நம்பகத்தன்மை மக்களிடையே குலைந்துவிடும் என்ற அச்சமும், நிர்பந்தமும் மற்ற பத்திரிகைகளுக்கு ஏற்பட்டது.

 மாத்யமம் போன்ற ஒரு நாளிதழ் வேண்டும் என்பதும், அது விரைவில் வரும் என்பதும் பூமிக்கு மேலே அலாவுதீன் போர்வையில் மிதந்து செல்வதைப் போன்றதுதான்! யதார்த்தங்களை மந்திரக்கோலால் மறைக்க முடியாது. தற்போது தமிழகத்து முஸ்லிம்களுக்கான ஒரே நாளிதழ் மணிச்சுடர் தமிழறிஞர், நற்சிந்தனையாளர் காலஞ்சென்ற தலைவர் அப்துஸ் ஸமது அவர்களால் துவக்கப்பட்டது. அந்த நாளிதழ் ஒரு எல்லையோடு நிற்கிறது. 

ஒருமுறை சில ஆர்வலர்கள் இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்டின் முன்னாள் செயலாளரும், காலஞ்சென்ற மூதறிஞருமான ஜமீல் அஹ்மது அவர்களை அணுகினார்கள். "நலிந்துவரும் குறிப்பிட்ட நாளிதழை செழுமையாக்க தகுதியுடையோர் நீங்கள்தான். தயவுசெய்து அதனை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நிதி ஆதாரம் முழுவதும் எங்கள் பொறுப்பு!" - என்கிறார்கள்.



அவர்கள் சொன்னதை பொறுமையாகக் கேட்ட அந்த பெரியவர் சொன்னார்: "நீங்கள்  எங்கள் ஜமாஅத் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகவும் நன்றி. இப்போதைக்கு எங்களால் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியாததற்கு வருந்துகிறோம். இன்னும் சிறிது காலம் போகட்டும் பார்க்கலாம்!"

ஒரு சந்தர்பத்தில் இது சம்பந்தமாக எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். "மௌலானா! நல்லதொரு வாய்ப்பை நழுவவிட்டோமே! அவர்கள்தான் பொருளாதார உதவிகள் செய்வதாய் சொல்லி இருக்கிறார்களே!"

மௌலானா ஜமீல் அஹ்மது அவர்கள் புன்முறுவலுடன், "உண்மைதான் தம்பி. ஆனால், இதை கொஞ்சம் கவனத்தில் வை. அந்த சில கோடிகளா செய்தி சேகரித்துத் தரும்? சேரித்தச் செய்திகளை ஒழுங்குபடுத்தும்? அந்த பணமா புகைப்படங்களை எடுத்துத் தரும்? பத்திரிகையை அச்சேற்றும்?"- என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மௌலானா ஜமீல் அஹ்மது
 நான் புரியாமல் விழித்துக் கொண்டிருந்ததை கண்ட அந்த மூதறிஞர், "தற்போது நமக்கு முதலில் தேவையானது பணமல்ல தம்பி! மனித வளம். திறமையாளர்கள்.. நமக்கான செய்தி சேகரிப்பவர்கள்.. புகைப்படக் கலைஞர்கள்.. இதழியல் தொழில்நுட்ப கலைஞர்கள்... என்று ஒரு பத்திரிகைக்கான குழு சொந்தமாக நமக்கிருக்க வேண்டும். இதழியல் என்பது ஒரு புனிதப் போர். வெறும் கூலிக்கான ஆட்களோ, வாடகை ஆட்களோ சரிபட்டு வராது!" - என்றார்.

மௌலானாவின் பதில் ஒரு பத்தாண்டுகளுக்கு அதிகமாக தாண்டியும் இன்னும் மேம்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஊடகங்களை கையாள வேண்டும் என்று சொல்வோருக்கான அதே பதில் இன்னும் பொருத்தமாகவே இருக்கிறது. இது ஆவலைக் குலைக்கும் செயல் அல்ல. யதார்த்தம்.  முஸ்லிம் திறமையாளர்கள் அதிலும் மார்க்க அறிவும், பொது அறிவும் ஒரு சேரப் பெற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிலும், அவரவர் சுயமாக தட்டுத் தடுமாறி இதழியல் சமுத்திரத்தில் விழுந்து கரை சேர்ந்தவர்கள். தங்கள் ஜீவனுத்துக்கான ஏதாவதொரு தொழிலைச் சார்ந்து சமுதாயத்துக்காக இதழியல் துறையில் அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இவர்கள். என் முன்னோடி முஸ்லிம் இதழியலாளர்களுக்கும், என் சமகாலத்து இதழியலாளர்களுக்கும் இது  பொருந்தும். இதழியலை முழுநேரத் தொழிலாகக் கொள்ளும் துணிச்சல் இஸ்லாமிய சமூகத்தில் இன்னும் யாருக்கும் வரவில்லை. அது வெகுஜனப் பத்திரிகைகளில் பணிபுரியும் சக பத்திரிகையாளர் நண்பர்களாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. 

அதனால்தான் என்னவோ முஸ்லிம் செய்தி சேகரிப்பாளர்களுக்கும் சரி.. எழுத்தாளர்களுக்கும் சரி... அவர்களது உழைப்புக்கான .. செலவுக்கான நியாயமான எழுத்து அன்பளிப்புக்களைக் கூட யாரும் தருவதில்லை. எழுதுவதும், செய்தி தருவதும் கட்டாயக் கடமை என்று கட்டளையிடாத தொனிதான்! இந்த நிலையில் யாரை வைத்து.. எதை நம்பி பத்திரிகை துவக்குவது? ஊடகங்களில் நுழைவது?

 நாளேட்டின் தேவை உண்மைதான். அதற்காக வேண்டுமானால் அவகாசத்தை வைத்துக் கொள்ளலாம். அதுவும் தொழில் ரீதியான பத்திரிகை. அரசியல் சாயம் இல்லாத பத்திரிகை. ஒடுக்கப்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு குரல்  கொடுக்கும் பத்திரிகை. வானத்தக்குக் கீழே, பூமிக்கு மேலே உள்ள அனைத்து செய்திகளையும் இரு பக்கமும் தொட்டு தர வேண்டும். நடுநிலை நாளேடு என்று சொல்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை. ஒவ்வொருக்கும் ஒரு கொள்கை இருக்கும். அதை உள் வாங்கிக் கொண்டு பிரச்சினைகளின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவு என்ற நிலையில் நாளேடு அவசியம். மற்றபடி எங்கும் எந்த வண்ணமும் விழக்கூடாது.

தினமணி 31.01.2013.
 அடுத்து முக்கியமான அம்சம் கொள்கைச் சார்ந்த போக்கு. எதிரி.. அவனது சக்தி சாமார்த்தியங்கள்.. அவன் செய்யும் சூழ்ச்சிகள் இவற்றை எதிர்கொள்வது குறித்த திட்டவட்டமான நிலை. இன்று உலகளாவிய ஊடகத்துறை (Both Visual and Print Media) ஆதிக்க சக்திகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. அவர்கள் நடத்தும் செய்தி நிறுவனங்கள் வழியேதான் உலகச் செய்திகள் ஒவ்வொரு நகரின் .. கிராமத்தின் பட்டித்தொட்டி எல்லாம் சென்றடையும். இந்த வலிமையான அமைப்பு இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சாரரிடம் சிக்கியுள்ளது. 

கடலோரம் விளையாடச் சென்ற பிள்ளைகள் கண்ணெடுத்த குண்டுகள் அந்த அப்பாவிகளை பயங்கரவாதிகளாக்கலாம். தாடி-தொப்பி படங்களுடன் தீவிரவாதிகளாக்க முதல் பக்கத்திலேயே காட்டலாம். குவியல்.. குவியலாக வெடிகுண்டுகள் கண்டுபிடித்தாலும்..  அதற்குரியவர்கள் நாளேட்டின் ஏதோ ஒரு மூலையில் போகிற போக்கில் ஒரு சிறு செய்தியாகலாம்! முக்கியத்துவம் பெறாமல் போகலாம்!

எந்தக் கொள்கை - கோட்பாடுகள், திருக்குர்ஆன் - நபிமொழி முஸ்லிம்களின் உயிர் மூச்சாக இருக்கிறதோ இந்த கொள்கை - கோட்பாடுகளைப் போதிக்கும் கல்விச்சாலைகளான மதரஸாக்களை பயங்கரவாதிகளை உருவாக்கும் கூடங்களாகக் காட்ட சதி நடக்கிறது. இப்படிப்பட்ட அதி தீவிரமான சூழலில் தற்போது முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் இருக்கும் அரை சதம் தாண்டிய இதழ்களின் ஒவ்வொரு வரியும், எழுத்தும் அதி முக்கியமானது. தற்காப்புக்கானது! தங்கள் இருப்பை இந்த நாட்டில் நிரந்தரமாக்கிக் கொள்வதற்கானது. ஆனால், உண்மை நிலை அப்படி இல்லை. ஒவ்வொரு இதழும் ஒரு குழு சார்ந்த .. இயக்கம் சார்ந்த உட்பிரிவுகள் கொண்டது. தனது செய்தி சேகரிப்பாளர்களுக்கு தர ஒரு முறையான அடையாள அட்டைகூட கிடையாது. இது மாற வேண்டும். 

சகோதரர் சிராஜீல்  ஹஸன்

அதேபோல, தங்களை மட்டுமே பார்க்கக் கூடாது. தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். நபிகளாரின் வாழ்க்கை முழுவதும் வாழும் சமுதாயத்தக்கான கவலையும், பாதிக்கப்பட்டோரின் துயர் களையும் ஏக்கமுமாகவே இருந்தது. பிறரது உரிமைகளை மீட்டுத் தரும் போர்க் குணம் மிக்கவர்களாகவே நபிகளார் வரலாற்றில் திகழ்கிறார்கள். இந்த முன்மாதிரியை இஸ்லாமிய இதழியாளர்களும் பின்பற்ற வேண்டும். ஆனால், இவர்களுக்கிடையே ஒரு சரியான தகவல் தொடர்புகளோ, ஒருங்கிணைப்போ இல்லை என்பது துரதிஷ்டவசமானது.

எனது இதழியல் பயிற்சி பாசறையின் ஆசானும், சமரசம் மாதமிருமுறையின் பொறுப்பாசிரியருமான சகோதரர் சிராஜீல்  ஹஸன் அடிக்கடி சொல்வார்: "இதழியல் திடல் பரந்திருக்கிறது இக்வான்! சலிக்காமல் ஓடுங்கள்! வெற்றி உங்களுக்குத்தான்!"

அதையே நானும் வழிமொழிகின்றேன்.


0 comments:

Post a Comment