NewsBlog

Friday, February 8, 2013

இன்றைய சூழலில் ... 'இதயத்தைத் தொட்ட இரண்டு நிகழ்ச்சிகள்'



சஹாரன்பூர் அரபிக் கல்லூரி முதல்வராக இருந்த மௌலானா சித்தீக் சாஹிப் 90 களின் முற்பகுதியில் தமிழகம் வந்திருந்தார். வாணியம்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் சிறப்புரையாற்றினார். அப்பொழுது, "நாட்டின் இன்றைய நிலையில் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?"-என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு மெளாலான சொன்னார்:

"இஸ்லாத்தை வாய்மையாக முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இதர மக்களையும் அதன்பால் அழைக்க வேண்டும். அவர்களுக்கு இறைநெறியை அறிமுகப்படுத்த வேண்டும். இதுவே இன்றைய எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாகும். இதைப் பற்றி விரிவாக பேச நேரமில்லை. இரண்டு சம்பவங்களை மட்டும் கூறுகின்றேன்.

மீரட்டில் ஒரு முஸ்லிம் பெரியவரும், அவருடைய இரண்டு பிள்ளைகளும் காரில் சென்று கொண்டிருந்தனர். எதிரில் ஒரு கார் வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விபத்து ஏற்பட்டுவிட்டது. முஸ்லிம் பெரியவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்து விட்டார். எதிர் வண்டியில் வந்த மாற்று மத சகோதரரும் படுகாயம் அடைந்திருந்தார். ஆயினும் மூச்சு வந்து கொண்டிருந்தது. 

உடனே அந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவரும் தம் தந்தையைக் கூட கவனிக்காமல் உயிருக்குப் போராடி கொண்டிருந்த அந்தச் சகோதரதரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.

'நடுரோட்டில் கிடக்கும் உங்கள் தந்தையை முதலில் கவனியுங்கள். அதற்குப் பிறகு வேண்டுமானால்.. அந்த நபரைப் பார்த்து கொள்ளலாம்!'-என்று பலரும் கூறிப் பார்த்தனர். 

ஆனால், அந்த இளைஞர்களோ, "இறைவனின் நாட்டிப்படி நடந்தது நடந்துவிட்டது. எங்கள் தந்தை இறந்துவிட்டார். ஆனால், இந்தச் சகோதரரோ உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவரைக் காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமை!"-என்று சொல்லியவாறு மருத்துவமனைக்கு விரைந்தனர். 

தாமதமின்றி அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அபாய கட்டத்தைத் தாண்டி கண் விழித்துப் பார்த்த அந்த மாற்றுமதச் சகோதரர் முஸ்லிம் இளைஞர்களின் கரங்களை நன்றியுடன் பற்றிக் கொண்டார். 

இந்த நிகழ்ச்சி அந்தப் பகுதி மக்களின் இதயங்களைத் தொட்டது.


இதேபோல, இன்னொரு சம்பவமும் கூறுகின்றேன்:

ஒருமுறை, வெளியூர் போவதற்காக ரயில் நிலையம் சென்றிருந்தேன்.

நல்ல கூட்டம்!

முறுக்கிவிடப்பட்ட மீசையும், குங்குமப் பொட்டுமாய் ஒருவர் டிக்கெட் பரிசோதகரிடம் வந்து தமக்கு ஒரு ஸீட் ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். அந்த அதிகாரியும் பயணிகள் பதிவுப் பட்டியலைப் பார்த்து எப்படியோ ஓர் இருக்கையை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டார்.

உடனே அந்தப் பயணி தம் சட்டைப் பையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் நீட்டினார்.

"மன்னிக்கவும்! சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு நான் இந்த லஞ்சப் பணத்தை வாங்க மாட்டேன். அது மட்டுமின்றி நான் ஒரு முஸ்லிம். லஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆகவே, நான் இதை எப்படி வாங்க முடியும்?"-என்று சிறு புன்னகையுடன் அதைப் பெற மறுத்துவிட்டார் அவர்.

அதைக் கேட்டு அந்தக் குங்குமப் பொட்டுக்காரர் அப்படியே திகைத்து நின்றார். தம் ஊர் போய்ச் சேர்ந்ததும் எல்லோரிடமும் இந்தச் சம்பவத்தை சொல்லியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு  ஹிந்து தீவிரவாத அமைப்பின் உறுப்பினர். 

"எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்கள் தேசவிரோதிகள்; நேர்மைக்குப் புறம்பானவர்கள் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். ஆனால், எனக்கேற்பட்ட அனுபவமோ நேர் எதிராய் இருக்கிறது. முஸ்லிம்களில் நிறைய பேர் நல்லவர்கள்தாம்! ஒன்றிரண்டு பேர் செய்யும் தவறுகளை வைத்துக் கொண்டு ஒரு சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாக விமர்சிப்பது சரியல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்!"-என்று அவர் கூறினாராம்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் எதைக் காட்டுகின்றன?

முஸ்லிம்கள் இஸ்லாமிய வழிமுறையில் செயல்பட்டால் நிச்சயம் மற்றவர்களின் இதயங்களைக் கவர முடியும். அந்த அன்பும், நல்லிணக்கமும்தான் இன்றைய தேவை!"-என்று கூறி மௌலான சித்தீக் தம் உரையை முடித்துக் கொண்டார்.

நன்றி: அபூ ஹாரீஸ் (ஆதாரம்: சமரசம் 1-15 ஏப்ரல், 1993)

0 comments:

Post a Comment