NewsBlog

Thursday, February 28, 2013

காலப் பெட்டகம்: 'நூற்றாண்டே சாட்சியாக' - பகுதி -4



தனி நபராக இஸ்லாமிய பாதையில் பயணித்த மெளலானாவின் அடிச்சுவட்டில் லட்சோப லட்சம் தொண்டர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அணி திரண்டார்கள்.

இஸ்லாமிய வாழ்வியல் திட்டத்தை நவீன சாதனங்கள் மூலமாக மனித குலத்துக்கு எட்டச் செய்ய கடந்த நூற்றாண்டில் பாடுபட்ட மாமனிதர் மௌலானா மௌதூதி ஆவார்.

1978-இல் சவுதி அரசின் 'சவுத் அல் ஃபைஸல்' விருதுக்காக மௌலானா தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சர்வதேச அளவில் நடக்கும் இந்த தேர்வை சர்வதேச அளவிலான அறிஞர் குழுதான் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஈரானில் சர்வாதிகாரி 'ஷா'வின் ஆட்சி இமாம் ஆயதுல்லாஹ் குமைனியின் தலைமையில் நடந்த மக்கள் புரட்சியால் கவிழ்ந்தது. ஈரானின் அதிபராக குமைனி தேர்வு செய்யப்பட்டார். 

அதிபரானதும் குமைனி முதன்மை பணியாக தமது பிரதிநிதி குழு ஒன்றை மெளலானா மௌதூதியை சந்திப்பதற்காக லாஹீருக்கு அனுப்பி வைத்தார். 

மௌலானாவும் இஸ்லாமிய ஆட்சிக்கான நெறிமுறைகளையும், அரிய பல ஆலோசனைகளையும் அக்குழுவினருக்கு வழங்கினார்கள். 

ஒருநாள் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு கடிதம் மௌலானாவுக்கு வந்தது. அதில் இப்படி எழுதப்படிட்டிருந்தது:

"அன்புள்ள தந்தை நிகர் மெளாலானாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களது புத்தகங்களைப் படித்துதான் நான் இஸ்லாம் தழுவினேன். 

மறுமையில் இறைவனின் சந்நிதியில் தங்களது ஈடேற்றத்துக்கான பரிந்துரையை (சாட்சி) நான் செய்வேன்!"

கடிதத்தை படித்து முடிதத மௌலானாவின் கண்கள் குளமாயின.  

"உண்மைதான! இந்த இளைஞன் நாளை மறுமையில் என் ஈடேற்றத்துக்காக சிபாரிசு செய்வான் என்பது உண்மைதான்!" - என்றார்கள் கனத்த குரலில்.


27, மே மாதம் 1979 - இல், தமது சக இஸ்லாமிய சேகவரும் மகனுமான டாக்டர் அஹ்மது பாஃரூக்குடன் மௌதூதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்கள். ஆகஸ்ட் 20 ஆம் நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். செப்டம்பர் 4 இல் நுரையீரல் நோய் சம்பந்தமான அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மௌலானா அவர்கள் செப்டம்பர் 22 அதிகாலையில் இறையடி சேர்ந்தார்கள். 

"இன்னாலில்லாஹி.. வ இன்னா இலைஹி ராஜிவூன்.."

மௌலானாவின் மரணம் முஸ்லிம் உலகுக்கு பெரும் இழப்பாக அமைந்தது. உலக முஸ்லிம் சமுதாயம் சோகப் பெருங்கடலில் மூழ்கியது. சில இளைஞர்கள் மூர்ச்சையடைந்து போனதாக செய்திகளும் வெளியாயின. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து இரங்கல் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. 

மௌலானாவின் பௌதீக உடல் அமெரிக்காவிலிருந்து பி.ஐ.ஏ. பிரத்யேக விமானத்தில் லாஹீர் கொண்டு வரப்பட்டது. கதாஃபி ஸ்டேடியத்தில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட. உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்திருந்த அறிஞர் பெருமக்கள், அறிவு ஜீவிகள், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக் உட்பட பல நாடுகளின் ஆட்சியாளர்கள் அத்தொழுகையில் கலந்துகொண்டார்கள். 

எழுதுகோலையே தனது போராட்டக்கள ஆயுதமாக்கி ஜிஹாத் என்னும் அறப்போர் புரிந்த மாமனிதரின் இறுதித் தொழுகையை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அன்றைய தலைவர் பேரறிஞர் அல்லாமா யூஸீஃப் அல் கர்ளாவி தலைமைத் தாங்கி நடத்தி வைத்தார்கள்.


இன்று மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் நம்மிடையே இல்லை. ஆயினும், அவர் விட்டுச் சென்ற பணிகள் 'ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின்' வடிவில் நாடு முழுவதும் பெரும் விருட்சமாய் படர்ந்துள்ளது. 

மெளலானா விட்டுச் சென்ற பணிகளை இன்னும் துடிப்பாக எடுத்துச் செல்ல வேண்டியது நமது பொறுப்பு. இந்தப் பணிகள் திருக்குர்ஆன் மற்றும் திருநபிகளாரின் சுன்னாஹ் - இவை இரண்டும் முஸ்லிம்கள் மீது சுமத்தும் பொறுப்புகளின் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டவை. 

யாருடைய சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த மறுமை நாளில், அந்த ஒரு ஸ்பெயின் இளைஞன் மட்டுமல்லாமல் இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரக் கணக்கான பேர் மௌலானாவின் பிழைப் பொறுக்க கருணையாளனான இறைவனிடம் இருகரமேந்தி நிற்பார்கள்.

இதற்கு வரவிருக்கும் நூற்றாண்டுகள் சாட்சிகளாக நிற்கும்!



2 comments: