NewsBlog

Friday, October 23, 2015

வாழ்வியல் வழிகாட்டி- 'ஓயாமல் ஓதப்படும் திருமறை - திருக்குர்ஆன்'



திருக்குர்ஆன் இறைவனின் திருவேதம். மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த மறைநூல். இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபிகளாருக்கு அருளப்பட்ட புனித வேதம். ஜிப்ரீயல் (காப்ரீயல்) எனப்படும் வானவர் தலைவர், இறைவனிடமிருந்து இதைக் கொண்டு வந்தார். வரலாற்றுச் சூழல்களுக்கு ஏற்ப இது சிறுக சிறுக அருளப்பட்டது. நபிகளாரால் மனனம் செய்யப்பட்டது. அவர்களின் தோழர்களால் பதிவு செய்யப்பட்டது. நபிகளாரின் வாழ்நாளிலேயே சரி பார்க்கவும் பட்டது.

திருக்குர்ஆன்  114 அத்தியாயங்கள் கொண்டது. 30 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 14 நூற்றாண்டுகளாக மாற்றப்படாமல் அருளப்பட்ட நிலையிலேயே பாதுகாக்கப்பட்டும் வருகிறது. இதுவே இந்த இறைவேதத்தின் சிறப்புத் தன்மையாகும். திருக்குர்ஆனில் 6666 திருவசனங்கள் உள்ளன.

திருக்குர்ஆனின் மிகச் சிறிய அத்தியாயம் 'சூரே இக்லாஸ்'. மூன்று வசனங்கள் கொண்டது. 'அல்பகறா' எனப்படும் திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் மிகப் பெரியது. 286 வசனங்கள் கொண்டது.

ஆன்மிகம், வணக்க வழிபாடுகள், சமூகம், பொருளாதாரம், வரலாறு, அறிவியல், போர்கள், மனித உரிமைகள், குடும்பயியல், வாழ்வியல், சமூகயியல் என்று மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும் திருக்குர்ஆன் மெய்ஞான அறிவுக் கருவூலகமாகும்.

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளிப்படாத காலத்தில் அதாவது 7 ஆம் நூற்றாண்டில் திருக்குர்ஆன் இறங்கியது. நபிகளார் எழுதப் படிக்கத் தெரியாதவர். அவரது வாழ்வின் 40 வயதுவரை இததகைய கருத்துக்கள் ஏதும் பேசாதவர். ஆனால், இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் வியக்கும் விதமாக திருக்குர்ஆன் நவீன அறிவியலை உள்ளடக்கியுள்ளது. இதுவே திருக்குர்ஆன் படைத்தவனால் அருளப்பட்டது என்பதற்கு போதிய சான்றாகும்.

 திருக்குர்ஆனில் இறங்கிய முதல் இறைவசனம், 'இக்ரா' ஓதுவீராக!(96:1-15) என்பதாகும். அதேபோல, இறுதியாக அருளப்பட்ட திருவசனங்கள், "இன்று உங்களுடைய தீனை .. வாழ்க்கை நெறியை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய 'தீன் - வாழ்க்கை நெறியாக' ஏற்றுக் கொண்டேன்" (5:3) என்ற வசனங்களாகும்.

திருக்குர்ஆன் 23 ஆண்டு காலம் ... காலச் சூழல்களுக்கு ஏற்ப அருளப்பட்டது. இதன் இறுதி வசனம் இறங்கிய நேரத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்துக்கும் அதிகமான இறையடியார்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். 10 லட்சம் சதுர மைல்கள் வரை இஸ்லாம் பரவியிருந்தது.

திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மூல மொழி அரபி. தகவல் தொடர்புக்கு மிகவும் பொருத்தமான வளம் கொண்ட மொழி இது. ஆழ்ந்த கருத்துச் செறிவு, உயரிய இலக்கிய நடை, இனிய ஓசை நயம் போன்ற எண்ணற்ற சிறப்புகள் கொண்டது. இன்றைய உலகின் 30 கோடிக்கும் அதிகமான மக்களின் தாய் மொழி. ஐ.நா.மன்றத்தின் அதிகாரப் பூர்வமான சர்வதேச அந்தஸ்து பெற்ற மொழி.



திருக்குர்ஆன் அருளப்பட்ட மூல மொழியிலேயே இன்றும் ஓதப்படுகிறது. சராசரி முஸ்லிமும் மூல மொழியிலேயே திருக்குர்ஆனின் சில வசனங்களையாவது மனனம் செய்திருப்பார்.

23 ஆண்டு காலம் சிறுகச் சிறுக அருளப்பட்ட திருக்குர்ஆன், தோல் துண்டுகள், கால்நடைகளின் எலும்புகள், பேரீச்சம் ஓலைகளில் எழுதிப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பணிக்காக மிகச் சிறந்த எழுத்தாற்றல் மற்றும் நினைவாற்றல் கொண்டவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இயல்பாகவே அரபிகள் நினைவாற்றல் மிக்கவர்கள். மனனம் செய்வதில் வல்லவர்கள். வரலாற்றுப் பூர்வமான மூதாதையர்களின் நெடிய பெயர்பட்டியலைக் கூட அவர்கள் தலைமுறை தலைமுறையாய் மனப்பாடமாக ஒப்பிவிப்பார்கள். நீண்ட கவிதைகளைக்கூட சரளமாக மனப்பாடம் செய்துவிடுவார்கள். இத்தகைய சிறப்பியல்புகள் கொண்டநபித்தோழர்களால் திருக்குர்ஆன் மனனம் செய்யப்பட்டது.

இதன் மூலம் திருக்குர்ஆன் 'ஒலி-வரி' வடிவங்களில் அட்சரம் மாறாமல் பதிவு  செய்யப்பட்டது. அத்தோடு பல நூறு நபித்தோழர்களால் மனனம் செய்யப்பட்ட திருக்குர்ஆன் தொழுகையில் ஓதப்படுவதும் அதன் பாதுகாப்பின் மற்றொரு காரணமானது.

நபிகளாரின் துணைவியார் அன்னை ஆயிஷா திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.

நபிகளாரின் மரணத்துக்குப் பிறகு அதாவது ஆறு மாதங்களுக்குள் திருக்குர்ஆனை நூல் வடிவில் தொகுக்கும் பணி தொடங்கியது.

நபிகளாருக்குப் பின் இஸ்லாமியப் பேரரசின் தலைவராக அதாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்கர் இந்தத் திருப்பணியைத் துவக்கினார்கள். இதற்காக நபிகளாரின் பிரதம எழுத்தராக இருந்த நபித்தோழர் 'ஜைத் பின் ஸாபித்' தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பணியின் போது நபிகளாரின் காலத்தில் தோல்களிலும், எலும்புகளிலும், ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டு பத்திரப்படுத்தியிருந்த திருக்குர்ஆனின் மூல வடிவம் பாதுகாப்புடன் இருந்தது. அதேபோல, நபிகளாரிடம் நேரிடையாகவே திருக்குர்ஆனின் வசனங்களைக் கேட்டு மனனம் செய்திருந்த நூற்றுக்கணக்கான  நபித்தோழர்களும் உயிருடன் இருந்தார்கள்.



நபித்தோழர் ஜைத் பின் ஸாபித் அவர்களின் பொறுப்புணர்வு மிக்க மேற்பார்வையில், நபிகளார் அறிவித்திருந்த வரிசைக் கிரமப்படி தொகுக்கப்பட்டு .. நூற்றுக்கணக்கான நபித்தோழர்கள் முன்னிலையில் ஓதப்பட்டு... சரிபார்க்கப்பட்டு... ஒரே நூலாக ஆக்கப்பட்டது. இந்த தொகுப்பு 'முஸ்ஹஃப்' அதாவது 'ஒன்றிணைக்கப்பட்ட தாள்கள்' எனப்படுகிறது.

மூன்றாம் மக்கள் தலைவராக பொறுப்பேற்ற உஸ்மான் அவர்கள் காலத்தில் இந்த மூலப் பிரதியிலிருந்து பல பிரதிகள் எடுக்கப்பட்டு, பரந்து விரிந்திருந்த இஸ்லாமிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. இந்தத் திருப்பணியும் மூலப் பிரதியை தொகுத்த நபித்தோழர் ஜைத் பின் ஸாபித் அவர்களின் தலைமையிலான குழுவினரிடமே ஒப்படைக்கப்பட்டது.

இப்படி அருளப்பட்ட காலத்திலிருந்து ஒரு புள்ளியோ, எழுத்தோ மாறாமல், அருளப்பட்ட நிலையிலேயே திருக்குர்ஆன் இன்று உலகெங்கும் உள்ள மசூதிகளிலும், ஒவ்வொரு முஸ்லிமின் இல்லத்திலும் பல கோடிப் பிரதிகளின் வடிவில் பாதுகாப்புடன் இருக்கிறது.

உலக மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவவொரு நான்கு பேரிலும் ஒருவர் முஸ்லிம. இதன்படி சுமார் 200 கோடி முஸ்லிம்கள் தங்களின் தினசரி ஐவேளைத் தொழுகைகளில் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதுகிறார்கள். இந்தத் தொழுகை நேரங்களும் நாடு தோறும் மாறும். இவ்வாறு மாறிவரும் காலச் சூழலில் 24 மணி நேரமும் ஓயாமல் ஓதப்படும் திருமறை உலகில் திருக்குர்ஆன் மட்டும்தான்! திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட முதல் முதல் இறைவசனம் "ஓதுவீராக!" என்ற இறைவனின் கட்டளையைத் தொடர்ந்தே இன்றுவரை அது தொடர்ந்து ஓதப்பட்டு வருகிறது.

திருக்குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்தவர்கள் நபிகளாரின் காலத்துக்குப் பிறகும் தொடர்கிறார்கள். இவர்கள் 'ஹாபிஃஸ்கள்-திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள்' என்றழைக்கப்படுகிறார்கள்.

அதேபோல, திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கும், அதை அடுத்தவர்க்குப் பிழையில்லாமல் ஓதிக் கொடுப்பதற்கும் உலகெங்கும் 'மதரஸாக்கள்' எனப்படும் ஆயிரமாயிரம் கல்விக்கூடங்கள் உள்ளன.

அரேபிய மக்கள் பொதுவாகவே இலக்கியத்தில் ஈடுபாடு மிக்கவர்கள். அவர்களிடையே இசைவாணர்கள் அதிகம். புலமையை வெளிப்படுத்தக் களம் அமைத்துப் போட்டிகளும் நடத்துவார்கள். வெற்றிப் பெறும் கவிதைப் படைப்பு கஅபாவின் தலைவாயிலில் மக்கள் பார்வைக்கு தொங்கவிடப்படும்.

ஒருமுறை.

வழக்கப்படி .. முதல்தர வெற்றிக் கவிதை கஅபாவின் வாசலில் தொங்கவிடப்பட்டது. இந்த நேரத்தில் திருக்குர்ஆனின் 108 ஆவது அத்தியாயமான சூரே 'கவ்ஸர்' இறங்கியது. உடனே நபித்தோழர் ஒருவர் இந்த அத்தியாயத்தை ஓர் அட்டையில் எழுதி ஏற்கனவே கஅபாவில் தொங்கிக் கொண்டிருந்த கவிதைக்குப் பக்கத்தில் தொங்கவிட்டார்.

முதல் தரக் கவிதையைப் படித்த கையோடு மக்கள் 'கவ்ர்' அத்தியாயத்தையும் படித்தார்கள். வெறும் மூன்றே மூன்று திருவசனங்களில் நச்சென்று இருந்த அத்தியாயத்தைக் கண்டு வியப்படைந்தார்கள்.

இலக்கிய நடையழகு, ஓசை நயம், உள் வாங்கியிருந்த அழகிய கருத்துவளம் ஆகியவை பிரமிக்கத்தக்கவையாக இருந்தன. வருவோர், போவோர் உள்ளங்களை ஈர்த்தன. இந்த அத்தியாயத்துக்குப் பக்கத்தில் பெரும் கவிஞர்களில் சிலர் இப்படிக் கருத்து பதித்தார்கள்:

"மா ஹாஸா கலாமுல் பஷர்! - நிச்சயமாக இது மனிதனின் சொல்லாக இருக்கவே முடியாது!"




திருக்குர்ஆன் இஸ்லாத்தின் மூல ஆதார நூல். மனித இனத்துக்கு வாழ்வியலைப் போதிக்கும் இறைநெறி. படைத்தவனால்.. படைப்புகளுக்கு இறக்கியருளப்பட்ட வாழ்கைத் திட்டம்.

"நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கிறோம்!" - (54:17} என்கிறான் இறைவன் தனது திருவேதம் குறித்து.

உலகில் அறிவுரை வெறுவதற்கு இரண்டு வகையான வழிகள் உள்ளன.

ஒன்று, வரம்பு மீறி வாழ்ந்த சமுதாயங்கள் மீது இறங்கிய படிப்பினை தரும் தண்டனைகள்.

அடுத்தது, தகுந்த ஆதாரங்கள், உள்ளத்தை வருடிச் செல்லும் நல்லுரைகள், அழகிய அறிவுரைகள் போன்றவற்றால் பெறப்படும் நேர்வழி.

"முதல் வழியைவிட அறிவுரை பெறுவதற்கான இரண்டாவது வழி எளிமையாக இருக்க... பிறகு நீங்கள் ஏன் படிப்பினைப் பெறுவதில்லை? முரண்டு பிடிக்கிறீர்கள்? - என்ற வினாக்களை எழுப்பி இறைநெறியின் பக்கம் அழைக்கிறது திருக்குர்ஆன்.



தினமணி, 29 அக்டோபர், 2004 வெள்ளிமணியில் வெளியான கட்டுரை.



0 comments:

Post a Comment