NewsBlog

Saturday, October 10, 2015

ஆய்வுக் கட்டுரை: 'பசுவதை: சில சரித்திர சத்தியங்கள்!'



"பசு வதையைத் தடை செய்ய வேண்டும்!"-என்ற இந்து இயக்கங்களின் கோரிக்கை அரசியல் களத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிக் கொண்டே இருக்கிறது. இந்து பாசிஸ சக்திகள் தற்காலிக அரசியல் வெற்றி அடைந்துள்ள பிரதேசங்களில் இந்தக் கோரிக்கை மீண்டும் தீவிரமாகியுள்ளது. 

''பசுவதை இந்து தர்மத்திற்கு எதிரானது!''- என்றும், ''வேதங்கள் உட்பட இந்துமதப் பிரமாணங்கள் பசுவதையை அனுமதிக்கவில்லை''- என்றும் இந்துத்துவவாதிகள் பிரச்சாரத்ததை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

ஆனால், வேதகாலத்து ஆரியர்கள் பசுவைக் கொன்று அதன் இறைச்சியை புசித்தும் வந்தனர் என்பதுதான் உண்மை. வேதகால சமூக - பொருளாதாரத் துறையில் பசுவுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்து வந்தது.

வேளாண்மையோடு தொடர்புள்ள ஒரு நாடோடிக் கூட்டமாகத்தான் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் அவர்களின் முக்கிய தொழில்களாய் இருந்தன. அவர்களுடைய முக்கிய சம்பாதியம் கால்நடைகள்தான் - குறிப்பாக பசுக்கள் கன்று காலிகள் அதிகம் பெருக வேண்டும் என்பதற்காக அவர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர் என்று வைதீக நூல்கள் கூறுகின்றன. 

யாகங்கள் நடக்கும்போது, புரோகிதர்களுக்குக் கூலியாக வழங்கியது பசுக்களைத்தான்! கன்று காலிகள் காரணமாக கோத்திரங்களிடையே போர் மூளுவதும் உண்டு. 

'கோத்திரம்' என்னும் சொல்கூட ஆரியர்களின் சமூக வாழ்வில் பசுவுக்கு இருந்த முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டும். (கோ - பசு) ஒரே ஆலயத்தில் தங்களுடைய 'கோ' க்களுடன் வசித்துவந்த ஆட்கள் கோத்திரம் எனப்பட்டனர்.

இவர்கள் பசுக்களையும், காளைகளையும் உணவுக்காக கொன்று புசித்து வந்தனர் என்று வேத இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. 

விருந்தினர்களுக்கு பசு இறைச்சியைப் பரிமாறி உபசரிப்பதை உயர்ந்த மரபாக அவர்கள் பின்பற்றி வந்தனர். பசு இறைச்சியை விடச் சிறந்த உணவு வேறில்லை என்பது அவர்களின் நம்பிக்கை.

வேதகால யாகங்களில் ஒரு பிரதான சடங்கு பசுவதைதான்!

யாகங்களில் மிகச் சிறந்த யாகம் 'சோம' யாகம்! ரிக் வேதத்தில் ஒன்பதாம் மண்டலம் முழுவதும் சோம யாகம் பற்றிய வர்ணணைகள் நிரம்பியுள்ளன. 

ஐந்து  ஹோமம் சோமயாகத்தின் முக்கியமான சடங்காகும். உயிர்ப் பிராணிகளை அக்னியில் அர்ப்பணித்தல் மட்டுமல்ல.. அவற்றின் இறைச்சியை யாக முறைப்படி ரிஷிகள் உண்ணவும் செய்தனர்.

பசு, ஆடு, காளை, குதிரை, எருமை, மான் போன்ற பிராணிகள்தான்  ஹோமத்திற்கு பயன்படுத்தப்பட்டன. யாகப் பசுவை மூச்சு திணற வைத்தோ, கழுத்தை நெரித்தோ கொல்வார்கள். கொன்ற பசுவை துண்டுகளாய் வெட்டி, ஒவ்வொரு துண்டாக எடுத்து  ஹோமத்தில் இடுவார்கள். மொத்தம் முப்பத்தாறு துண்டுகளாய் வெட்டி, ஒவ்வொரு துண்டையும் ரிஷிகளில் ஒவ்வொருவராய் எடுத்து   ஹோமம் செய்ய வேண்டும் என்பது நியதி. (ஐதரேய பிராமணம் 7 - 1) யாகப் பசுவின் எந்தெந்த பாகத்தை யார் யார்  ஹோமம் செய்ய வேண்டும் என்ற விபரத்தையும் வேத இலக்கியங்கள் தருகின்றன.



  • பிரஸ்தோ தாவ்  - தாடை எலும்பும் நாக்கும்,
  • உத்காதாவ்  -  வயிறு,
  • பிரதிகர்த்தாவ்  -  கழுத்து,
  • மைத்ராவருணன்  -  வலது தொடையின் கீழ்ப்பாகம்,
  • பிராம்ணாச்சம்ஸி  -  இடது தொடையின் கீழ்ப்பாகம்,
  • அச்சாவாகன்     -   வலது தொடையின் மேல்பாகம்,
  • அக்னீதரன்  -  இடது தொடையின் மேல்பாகம்,
  • நேஷ்டாவ்  -  வலது முன்காலின் கீழ்ப்பாகம்,
  • போதாவ்  -  இடது முன்காலின் கீழ்ப்பாகம்,
  • அத்ரேயன்  -  வலது முன்காலின் மேல்பாகம்,
  • ஸதஸ்யன்  -  இடது முன்காலின் மேல்பாகம்,
  • அத்வர்யூ  -  முதுகோடு சேர்ந்த வலப்பக்கம்,
  • பிரதிபிரஸ்தாவ்  -  முதுகோடு சேர்ந்த இடப்பக்கம்,
  • கிராவஸ்துதன்  -  கழுத்து இறைச்சி,
  • சுப்ரமணியன்   -  தலை

இதுமட்டுமல்ல, யாகப் பசுவின் வாலை 'கிருஹப்பத்னியும்', மூத்திரப் பையை 'கிருஹபதியும்' எடுக்க வேண்டும் என்பது விதி.

மேற்சொன்னவாறு பசுவை அணு அணுவாக வெட்டி, சுவைத்துண்ணும் சம்பிரதாயம் வேதகால இந்துக்களிடம் இருந்தது. புராதன கலாச்சாரத்திற்கு ஏற்ப பசு வதையைத் தடை செய்ய வேண்டும் என்று இன்றைக்கு கூறுபவர்கள், எதார்த்த சரித்திர சத்தியங்களை வெட்கமின்றி மறைக்கிறார்கள் என்றுதான் பொருள்.

வேதகால இந்து சமூகம் தாவர உண்ணிகளாய் இருக்கவில்லை என்பதும், இறைச்சி உணவுகள் அவர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் மேற்சொன்ன விபரங்களில் இருந்து தெளிவாகி விட்டதல்லவா? பிற்காலத்தில் தாவர உணவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதற்கும், பசுவுக்குச் சிறப்பான அந்தஸ்து அளிக்கப்பட்டதற்கும் காரணம் ஜைன - புத்த மதங்களின் செல்வாக்குதான்!

சிந்துநதி தீரத்தைக் கைப்பற்றிய ஆரிய கோத்திரங்கள் பிறகு படிப்படியாக கங்கைச் சமவெளிக்கும் பரவத் தொடங்கினார்கள். இரும்பின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரியர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இரும்பு ஆயுதங்கள் கொண்டு காடுகளை திருத்தி, கழனிகளாக்கி, பெருமளவில் விவசாயம் செய்யத் தொடங்கினர். உழுவதற்கும், உண்பதற்கும் மற்றும் இதர தேவைகளுக்கும் கால்நடைகள் பெரிதும் தேவைப்பட்டது இந்தக் கால கட்டத்தில்தான்! இத்தகைய ஒரு சூழ்நிலைதான் பசுவுக்கு முக்கியத்துவத்தை தேடித் தந்தது! அதிக கன்றுகள் ஈன வேண்டும் என்பதற்காக பசுவுக்குப் பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டன. 

இவ்வாறு தொழில் ரீதியாகத்தான் பசுவுக்கு அன்று ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டதே தவிர, மத ரீதியான எந்தக் காரணமும் இல்லை. 



பண்டைக் காலத்தில் விவசாயத்திற்கு உழவுக் காளைகள் பெரிதும் தேவைப்பட்டன. இன்று அந்தப் பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. உழவுக்கு காளைகளைப் பயன்படுத்துவதைவிட  டிராக்டர்களைப் பயன்படுத்துவதுதான் லாபகரமானது. சினைக் காளைகள் கூட அதிகம் தேவைப்படாத சூழ்நிலைதான் இன்று நிலவுகிறது. ஒரே ஒரு காளை மாட்டின் வீரியத்தை சேகரித்து, தகுந்த குளிர்சாதனத்தில் அதைப் பாதுகாத்து வைத்து, நூற்றுக்கணக்கான பசுக்களுக்கு அதைச் செலுத்தி கருத்தரிக்க வைக்கலாம். ஆகவே, பண்டைக்கால இந்தியாவில் அல்லது வேதகால இந்தியாவில் பசுவுக்கு இருந்த முக்கியத்துவம் இன்று இல்லை என்பதுதான் உண்மையாகும். 

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இன்று பசுவதை கூடாது என்று குரல் கொடுப்பவர்கள் பசுவின் உயிரை மட்டுமே பெரிதாக நினைக்கிறார்கள். அவர்களுடைய இரக்கம், கருணை எல்லாம் பசுவின் மீது மட்டும்தான்! ஆடு, கோழி, முயல், மான் ஆகியவற்றின் மீது அவர்களுக்கு எந்த இரக்கமும் இல்லை. சிக்கனையும், மட்டனையும் மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு, பசுவதைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போலி இந்துமதப் பிரியர்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

கீசக வதம், துரியோதன வதம், வாலி வதம், தாருக வதம், சம்பூக வதம் என்று முறைகெட்ட வதங்கள் நடத்தி, அவற்றுக்கு ஆதரவாகவும் பேசும் வகுப்புவாத பாசிஸ்டுகள், பசுவதை எதிர்ப்புக்காக குரல் கொடுப்பது இந்து தர்மத்தைக் காப்பாற்ற அல்ல. மாறாக, இஸ்லாமிய சகோதரர்களின் நிம்மதியைக் குலைத்து. குறுகிய அரசியல் லாபம் தேடுவதே அவர்களின் நோக்கம்!



சிறுபான்மையினரை தேசவிரோதிகளாய் முத்திரை குத்த வகுப்புவாத பாசிஸ்டுகள் கண்டுபிடித்து வைத்துள்ள பல வழிமுறைகளில் ஒன்றுதான் பசுவதை எதிர்ப்பு என்ற கூக்குரலும்!

முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கூப்பாடு, சதுர்வர்ண - ஜாதீய முறையைப் புகழ்ந்துரைத்தல், விடுதலைப் போராட்டத்திலும், பொருளாதார - பண்பாட்டுத்துறைகளிலும் முஸ்லிம்களின் பங்களிப்பைக் குறைத்துக் காட்டுதல், முஸ்லிம் மக்களின் சமூக - அரசியல் இயக்கங்கள் மீது வகுப்புவாத முத்திரை குத்துதல், பாதுகாப்பு - பாராமிலிட்டரி, போலீஸ் ஆகிய துறைகளில் முஸ்லிம்களை ஒதுக்குதல், உருது மொழிக்கு எதிரான உணர்வை வளர்த்தல் போன்ற முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பாகமாகத்தான் பசுவதை எதிர்ப்பையும் பார்க்க வேண்டும். 

சில்லறை - மொத்த இறைச்சி வியாபாரத்தில் பெரும்பாலும் ஈடுபட்டிருப்பவர்கள் முஸ்லிம்களே! பசுவதை எதிர்ப்பு என்று குரல் எழுப்புவதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை நசுக்கிவிடலாம். அதேசமயம் இந்துக்களின் 'புனித விலங்கை' கொல்பவர்கள் என்னும் பொய்ப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்துவிடலாம்.

தீய நோக்கம் கொண்ட வகுப்புவாத பாசிஸ்டுகளின் இந்தப் பிரச்சாரம் சரித்திர சத்தியங்களுக்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர் பிரபல வரலாற்று ஆய்வாளர். மனித உரிமைப் போராளி.  பேராசிரியர் மற்றும் முன்னாள் வரலாற்றுத்துறைத் தலைவர் கேரள பல்கலைக்கழகம்)

நன்றி: சமரசம் (மாதமிருமுறை - 16-31, 1995)



 

0 comments:

Post a Comment