NewsBlog

Saturday, October 10, 2020

பனையோடு நான்..!

 
''''''''''''''''''''''''''''''''''''''''''''''
>>> இக்வான் அமீர் <<<
''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 

ஒருநாள் தம்பி குமார் - விஜயகுமார் வேல்முருகன்,  எங்கள் வீட்டின் மாடி தோட்டத்திற்கு வந்திருந்தபோது, எதேச்சையாக எடுத்த முடிவுதான் அது – ‘பனை விதைகள் நடுவது என்று’

அதற்கு முன்னர் பனை மரத்தின் பலன்களை இருவருமே அறிந்து வைத்திருந்ததும் கூடுதல் பயனாக அமைந்தது.

60-களின் துவக்கத்தில், நான் மூன்றாவது நான்காவது வகுப்புப் படிக்கும்போதே அறிமுகமாகியிந்த தோழன்தான் பனை மரம். எனது வீட்டிற்கு மிக அருகில் இருந்த பள்ளிக்கு பத்து, பதினைந்து பாதுகாவலர்களாக வரிசைக்கட்டி நின்றிருந்தார்கள் அந்த பனைத் தோழர்கள். வீட்டில் மின்சாரம் இல்லாத காலத்தில் இரவின் கும்மிருட்டில் வீசும் பலத்த காற்றில் பனை ஓலைகளின் உரசல்கள் பயம் தந்த காலம் அது.

இருள் விலகாத அந்த கருக்கலில் யார் முந்தி செல்கிறார்களோ அவர்கள் நிச்சயம் சில பனம்பழத்துடன் திரும்புவது திண்ணம். அநேகமாக அந்தப் போட்டியில் அதிகமாக வெல்வது நானாகவே இருக்கும். ஏழ்மையின் பசியும், பனம்பழத்தின் சுவையும் பல இரவுகளை உறங்காத இரவுகளாக்க பனம் பழம் சேகரிப்புப் போட்டியில் நான் வெல், எந்தத் தடையுமிருக்காது! விறகடுப்பில் பனம் பழத்தைச் சுட்டு, முகமெல்லாம் பழச்சாற்றைப் பூசிக்கொண்டு, 'பனம்புலி'யாக வளர்ந்த நாட்கள் அவை.

இதைத் தொடர்ந்து, ஆந்திரத்தில் வாழ்ந்து வந்த எனது பாட்டியை பள்ளி விடுமுறையில் சந்திக்க செல்லும்போதெல்லாம் சரியான பேருந்து வசதியில்லாமல் நடந்து செலல வேண்டியிருக்கும். ஒரு பத்து கிலோ மீட்டருக்கும் குறையாத அந்த கிராமப்பகுதிகளைக் கடந்து செம்மண் சாலையில் நடந்து செல்ல வேண்டும். அப்போதெல்லாம் வழி நெடுக காணப்படும் இதே பனைமரங்கள்தான் 'சல சல' பனை ஓலை உரசல் ஒலியால், தோழமையாக தனிமையைப்  போக்கி பாட்டியின் கிராமத்துக்கு சலிப்பில்லாமல் கொண்டு சேர்க்கும்.

இத்தகைய ஒரு சூழலில்தான் ஒருமுறை பாட்டி, “(சுவரை ஒட்டியிருந்த திறந்தவெளி) குளியலறையில், செம்மண் பாறைகளுக்கிடையில் ஒரு பனம் மரம் வளர்வதாக” - சொன்னாள்.

“அதை பிடுங்க வேண்டாம்..!” – என்ற எனது சொல்லை, வேத வாக்காக ஏற்ற அவள், கிழங்கு நிலையில் இருந்த அந்த பிஞ்சு மரத்தை பிடுங்கிடாமல் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.

 

ஒவ்வொரு பள்ளி விடுமுறையின் போதும், அந்த ஒற்றைப் பனை மரத்தின் வளர்ச்சி என்னை ஒத்ததாகவே இருந்தது. என்னோடு பனையும் வளர்ந்து, சில ஆண்டுகளில் நெடுமரமாக.. இளைஞியாகிவிட்டது. 

ஒற்றைப் பனைமரம் அந்த கிராமத்தில் முதன்முறையாக ஒரு வீட்டில் வளர்ந்து காய்த்து நின்ற அதிசயமும் நடந்தது.

அந்த பனைமரத்தின் ஒய்யாரமும், சலசலப்பும் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதனுடனான எனது பரிச்சயம் எனது பாட்டியின் மரணத்துடன் முடிவுக்கு வந்தது.

தனது ஒரே மகனை அந்த ஒற்றைப் பனைமரத்துடன் ஒப்பிட்டு புலம்பிவந்த எனது பாட்டியின் ஆசையை எனது தந்தை புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான், அந்த குக்கிராமத்து வீட்டை சொற்ப விலைக்கு விற்றுவிட்டார். அந்நிலையில் மீண்டும் அந்த வீட்டையும் பனை மரத்தையும் பார்க்க நான் சென்றிருந்தேன். வானளாவி கம்பீரமாக வளர்ந்து நூங்குகளாக பனைமரம் காய்த்திருந்தது. அதன் பிறகு நான் மேற்கொண்ட பயணத்தில் அந்தப் பனைமரம் கொல்லப்பட்டிருந்தது ஒரு சோகமான வரலாறு.  

எனது இளம் பிராயம்தொட்டு பனைமரத்துடன் எனக்கிருந்த தொடர்பு மீண்டும் வடசென்னை காட்டுப்பள்ளி வனத்துக்கு நான் ஒளிப்படங்கள் எடுக்கவும், காட்டுயிரி ஆய்வுக்காக செல்லும்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

நூற்றுக் கணக்கான பனைமரங்களும், சவுக்கும், முந்திரியும் அடர்ந்த காடு அது.

அனல் மின்சாரம் என்ற பெயரில் பல ஏக்கர் வனங்கள் கையகப்படுத்தப்பட்டு https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg அழிக்கப்படும் வேளையில்தான் எனது மாடி தோட்டத்தில் குமாருடன் அந்த சந்திப்பு நடந்தது. ஒரு லட்சம் பனை விதை நடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே நமது நாட்டின் பாரம்பர்ய வேளாண்முறைகள் பக்கம் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த https://www.youtube.com/watch?v=JtvoDYT_KH4&t=15s எனது கவனமும் தீவிரமானது. இதற்காக நான் எடுத்துக் கொண்ட சிரத்தைகள் பலருக்கு வேலையற்றவனாக என்னைக் காட்ட எனக்குக் கிடைத்த ஒரே துணை குமாரின் உதவிகளோடு, Pasumai Kudaram  பசுமைக் கூடாரம் https://www.facebook.com/Pasumai-Kudaram-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1820117441612952/?ref=br_tf மூலமாக ஆக்கப் பூர்வமான பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

2 comments:

  1. அமீர் சார்....வேலையுள்ளவர்கள் தனக்கும் தன் குடும்பத்திற்க்குமே உழைக்கிறார்கள்....வேலையற்றவர்களோ இந்த சமூகத்துக்காக உழைக்கிறார்கள்....இதில் யார் சிறந்தவர்கள்?

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி அய்யா

      Delete