NewsBlog

Sunday, August 2, 2020

சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கை என்ன சொல்கிறது? ஏன் எதிர்க்கிறார்கள்?

கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட இந்த புதிய வரைவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அது முழுக்க பெருநிறுவனங்கள் நலனை மட்டுமே பேணுவதாக இருக்கிறது.

"தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேசிய நலன் சார்ந்து திட்டங்களுக்கு சூழலியல் மதிப்பீடு தேவையில்லை என்கிறது வரைவு.

நாளை எந்த திட்டத்தையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் எனக் கூறிவிடலாம், எந்த கருத்துக் கேட்பும் சூழலியல் மதிப்பீடும் செய்யாமல் அமல்படுத்தலாம்.

உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஒரு சாலை விரிவாக்கத் திட்டம் கொண்டு வரப்படுகிறது என்றால், அது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். அதன் பின்பே அந்த திட்டத்தை அமல்படுத்த முடியும்.

நாளை, இதனை தேசிய முக்கியத்தவம் வாய்ந்த திட்டம். தேசிய நலனுக்கானது என வரையறுப்பார்கள். எந்த சூழலியல் மதிப்பீடும் இல்லாமல் அமல்படுத்துவார்கள்.

இப்போது மக்கள் கருத்தைக் கேட்டுவிட்டு அறிக்கையைத் திரித்துத் தரும் வேலை நடக்கிறது.

எதிர்காலத்தில் மக்கள் கருத்துக் கேட்பே வேண்டாம் என்பது ஜனநாயக படுகொலை. இந்த சூழலியல் மீது மட்டும் அல்ல ஜனநாயகத்தின் மீதான சம்மட்டி அடி

அதேபோல, மற்ற தொழிற்சாலைகள் குறித்த பொது கருத்துக்கேட்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, பொதுமக்கள் பங்கேற்புக்கு ஒதுக்கப்பட்ட கால அவகாசமும் 30 நாட்களிலிருந்து 20 நாட்களாகக் குறைக்கப்படுகிறது,

அடுத்துள்ள குறைபாடு அபாயகரமானது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த வரைவு வழி வகை செய்கிறது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் இந்த திட்டங்கள் குறித்து பிறகு ஒரு குழு போடப்பட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு யார் அதனை முடக்குவார்கள். எளிமையாகக் சொல்ல வேண்டும் என்றால், ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைக்க எத்தனை பேர் உயிர் துறக்க வேண்டி இருந்தது!

தொழிற்சாலைகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தாக்கல் செய்தால் போதும் என புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது. இதுவும் ஆபத்தானது. இது தொழிற்சாலை சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் விளைவுகள் குறித்து தகவல்கள் தெரிந்து கொள்வதை மட்டுப்படுத்தும்.

சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தின் மீது கவனம் செலுத்தாமல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கொள்கைகளைத் தாழ்த்துவது போல் உள்ளது.

குறிப்பாக இந்த அறிவிப்பு தொழிற்சாலை களின் சட்டவிரோதமான செயல்பாடுகளை சட்டப்பூர்வமாக்குவது போல் உள்ளது.

குறிப்பாக இன்னொரு விஷயத்தைக் கூற வேண்டுமானால், சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து சில அமைப்புகள் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன அல்லவா. அதனைத் தடை செய்கிறது இந்த வரைவு.

ஒரு நிறுவனத்தை எதிர்த்து குடிமை சமூகமோ, தனி நபர்களோ இனி நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்கிறது இந்த வரைவு. இது மோசமான ஆபத்தாக முடியும்,"

(பிபிசியிடம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தராஜன்)


0 comments:

Post a Comment