NewsBlog

Tuesday, March 5, 2013

உடல் நலம்: 'மெல்ல அசைப் போடுங்கள் இனி'



நூறு வயது வாழ யாருக்குதான் ஆசை இருக்காது? அதுவும் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமாக இருக்கும்போது!

நூறு வயது வாழ்வது நமது கையில் இல்லையாயினும் .. நோயில்லாமல் வாழ முயலலாம் அல்லவா?

"சில நேரங்களில் திட உணவை விட திரவ உணவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!"- என்போர் கூட சிலருண்டு! "மடக் .. மடக்"- என்று குடித்துவிட்டு வேகமாக ஓடிவிடலாம் அல்லவா?

அவசரமான உலகில் உணவை மென்று சுவைத்து உண்பது அருகிவிட்டது என்பது வருத்தத்தற்குரியது. உண்ணும் உணவை நன்றாக மென்று தின்பது நலம் பயபிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பக்கவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் படுக்கையில் இருப்போர் மென்று உண்ணும் பழக்கத்தை செயல்படுத்தும்போது, மூளை நன்றாக செயல்படுகிறது; நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. இதன் விளைவாக இவர்கள் விரைந்து நடக்க முடிகிறது. அதேபோல, பேச்சுத் திறனும் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மூளையின் பல்வேறு செயல்பாடுகள் பற்களுடன் தொடர்புடையவை. அதனால்தான் பல்வலி வந்தோர் தலைவலியோடு அவதிப்படுகிறார்கள்! பற்களுக்கும் மூளைக்கும் உள்ள இந்த உறவு உணவை நன்றாக மெல்லும்போது இன்னும் கூடுகிறது. 



மென்று அரைப்பதால் உண்டாகும் ஒருவிதமான மெல்லிய ஓசையை மூளை விரும்புவதாகவும், அந்த ஓசையை இசையைப் போல மூளை உணர்ந்து அளவற்ற புத்துணர்ச்சி பெறுவதாகவும் இதன் விளைவாக மூளையின் இயங்குத் திறன் அதிகரிப்பதாகவும் வியக்குத்தக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பற்களின் அமைப்பு அற்புதமானது!

பற்களின் வேர்ப்பகுதி மெல்லிய பஞ்சு போன்ற மிருதுவான தன்மையுடையது. இதில் உணர்வுகளை கடத்துவதில் அபார ஆற்றல் கொண்ட பல நுண்ணிய உணர்வு இழைகள் உள்ளன. மூளையின் நரம்பு மண்டலத்தோடு இவை நெருங்கிய.. நேரடித் தொடர்புடையவை. 




இந்த நெருக்கமான அமைப்பால் நாம் மென்று உண்ணும் கால அளவுக்கு ஏற்ப மூளையும் அபாரமாக பணியாற்ற ஆரம்பிக்கிறது.

மூளையின் இந்த அபாரம் .. உடல் முழுக்க பரவி உடல் இயங்குத் திறனும் அபாரமாகிறது.

மென்று உண்ணும் பழக்கத்தால் மூளையின் உயிர் அணுக்கள் உடற்பயிற்சியைப் பெறுகின்றன. இதன் மூலமாக சிந்திக்கும் ஆற்றலும், கற்கும் ஆற்றலும் வளர்கிறது

வளரும்போதே குழந்தைகளுக்கு உணவை மென்று உண்ணும் பழக்கத்தை வாழ்வியல் போக்கோடு இயல்பாக்கிவிட்டால்… அவர்கள் புத்திசாலிகளாக மாறிவிடுவார்கள்.

முதியவர்களுக்கு மூளையின் மூப்புத்தன்மை தடுக்கப்பட்டு இளமையாக செயல்படுவதால்.. அவர்களின் செயல்திறன் கூடுகிறது.

மரத்து நிழலில் ஆடு-மாடுகள் அசைபோடுவதைக் காண நேரிட்டால் “சபாஷ்!” என்று சொல்லுங்கள். “ஆஹா! இயற்கை இலவசமாக அளித்த என் ஆசான்களே!” என்று வாய்விட்டு புகழுங்கள்!

1 comment:

  1. பயனுள்ள தகவல்.... அருமை... நான் விரைவாக உண்ணும் பழக்கம் உள்ளவன்.... இனி கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடிப்பேன்..:)

    ReplyDelete