NewsBlog

Friday, October 25, 2013

நடப்புச் செய்தி:' ஒரே கவலை... இருவருக்கும்..!'


நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவர், அடுத்தவர் வளர்ந்துவரும் இளையத் தலைவர், இவர்கள் இருவரும் ஒரே விதமான கவலையைத் தெரிவித்திருக்கிறார்கள். முதலாமவர் சீதாராம் யெச்சூரி. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர். அடுத்தவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் தாம்பரத்தில் எழுத்தாளர் சாதத் ஹசன் மாண்டே பிறந்தநாள் நூற்றாண்டு விழா 20.10.2013 ஞாயிறு அன்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட யெச்சூரி,

"துளியும் பொறுப்புணர்வின்றி அப்பட்டமாக சிறுபான்மையோருக்கு எதிராக மத உணர்வு கிளறிவிடப்படும் சூழல் இந்திய அரசியலில் இன்று நிலவுகிறது. ராமர் கோயில் விவகாரம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 307 ஆவது சட்டப் பிரிவு நீக்கம், அனைவருக்கும் ஒரே மாதிரியான சமூகச் சட்டம் ஆகிய விஷயங்களில் தங்களது கட்சியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பா.ஜ.க. தலைவர் வெளிப்படையாகவே பேசுகிறார்.

மற்றொருபுறம் இந்திய தொழில் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் மோடியை, நாட்டையும், பொருளாதாரத்தையும் காக்க வந்த ரட்சகராகச் சித்தரிக்கின்றனர். மோடியை ஒரு சந்தைச் சரக்காகக் கையாளுகின்றனர்!"

- என்று தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இதேவிதமான வருத்தம் ராகுல் காந்தியிடமும் வெளிப்பட்டது.


ராஜஸ்தான் மாநிலத்தில் சுரு என்ற இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது இது:

"நாட்டில் வகுப்புவாதத்தைப் பரப்பி பல உயிரிழப்புகளுக்கு பா.ஜ.க. காரணமாகிவருகிறது. அண்மையில் முஸாபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் சென்றிருந்தேன். அங்கு சோகமான முகங்களைக் கண்டேன். அவர்கள் (பா.ஜ.க) முஸாபர் நகரில் வகுப்புவாதத் தீயைப் பற்ற வைத்தனர்; குஜராத்திலும், உ.பி.யிலும், காஷ்மீரிலும் அதையே செய்தனர். அதனால், நாடு சீரழிகிறது"

மூத்தத் தலைவரது கவலையும், இளைய தலைவரது கவலையும் நியாயமானது. கவனிக்கத்தக்கது. அரசியல்வாதிகள் என்பதாலேயே புறக்கணிக்கவும் அவசியம் இல்லாதது. 

வகுப்புவாதத்தைவிட 'பாஸிஸம்' படு பயங்கரமானது. வரலாற்றில் அழியாத களங்கத்தை கற்பித்திருப்பது!


20.10.2013 ஞாயிறு அன்று சென்னை தம்பு செட்டி தெருவில்  UAPA, AFSPA, MCOCA  போன்ற கருப்புச் சட்டங்களுக்கு எதிராக வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கண்ணியமான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான எம்.ஜி.தேவசகாயம் சொன்னது இது. இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் கவனத்தில் கொள்ள வேண்டியது:

"முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளை கைது செய்ய வந்தார்கள். நான் எதிராக குரல் கொடுக்கவில்லை; ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் அல்ல.

அவர்கள் சோசலிஸ்ட்டுகளை கைது செய்ய வந்தார்கள். நான் எதிராக குரல் கொடுக்கவில்லை; ஏனென்றால் நான் சோசலிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் யூதர்களை கைது செய்ய வந்தார்கள். அப்போதும் நான் எதிராக குரல் கொடுக்கவில்லை ; ஏனென்றால் நான் யூதனல்ல.

கடைசியில் அவர்கள் என்னை கைது செய்ய வந்தபோது, எனக்காக குரல் கொடுக்க அங்கு யாருமேயில்லை!


0 comments:

Post a Comment