NewsBlog

Wednesday, October 16, 2013

விருந்தினர் பக்கம்: 'அறிவு சுவர்களுக்குள்ளிருந்து போராடுங்கள்!'




"அனைவருக்கும் இனிய பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்...!"

....என்று சொல்லி விட்டு விலகி விடுவதை விட இன்று முஸ்லிம்கள் சார்ந்து என் மன ஓட்டங்களைப் பதிவு செய்ய எண்ணுகிறேன். 

உலக வரலாற்றில் முஸ்லிம்களுக்கு என்று மிகப் பெரும் வரலாறுகளும், கலைகள் சார்ந்த அவர்களின் படைப்புகளும் உண்டு. ஆனால் இன்று துரதிஷ்ட வசமாக தீவிரவாதம் என்கின்ற பொறிக்குள் அவர்கள் வசமாக சிக்க வைக்கப் பட்டுள்ளார்கள்; சிக்கவைக்கப்பட்டார்கள்; சிக்கியும் கொள்கிறார்கள். 

மதம் சார்ந்து ஒரு பதிவை இடுவதில் எனக்கு உடன் பாடு இல்லை என்றாலும். ஒரு கேள்விக்கான பதிலை சொல்லாமல் விடுவது தவறு, தடுப்பதும் தவறே!

 உலகின் மிகக் கொடூரமான அணுகுண்டு என்கின்ற அரக்க தாக்குதலை ஜப்பான் மீது மேற்கொண்ட நாடு அமெரிக்கா. அதில் எந்த வகையிலும் முஸ்லிம்களுக்கோ மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கோ எவ்வித தொடர்புமில்லை. 

உலகின் அதிக பட்ச கொடூரமான சர்வாதிகாரி என்று சுட்டிக் காட்டப்படும் ஹிட்லர் முஸ்லிம் அல்ல. அது மட்டும் அல்ல ஹிட்லருக்கு ஆதரவாக அன்றைய யுத்த காலங்களில் தேவாலையங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன என்று வரலாறு கூறுகிறது. 

இந்த இடத்தில் இன்னும் ஒரு சம்பவத்தைச் சொல்லியாக வேண்டும். 

ஹிட்லருக்கு ஆதரவாக ஜெர்மானிய கிறிஸ்தவர்கள் ஏசுநாதரிடம் பிரார்த்தனை செய்த அதே சமயம் பிரிட்டன் மக்களோ தங்களின் பிரார்த்தனைகளில் தங்களின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று அதே ஏசுநாதரிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்தும் இருக்கிறார்கள். 

உண்மையிலே பாவம்..! ஏசுநாதர்! அவரின் நிலைமை யாருக்கும் வரக் கூடாது. நீதி என்னவோ அது நடந்தது. அந்த நீதியில் ஏசுநாதருக்கு தொடர்பு இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது!

 இவ்வவு விளக்கம் ஏன் என்றால்.... தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை ஒரு மதத்துடனோ, இனத்துடனோ, மொழி சார்ந்தோ அடையாள படுத்துவது தவறு. இஸ்ரேலின் மிக முக்கிய உலகம் சார்ந்த அரசியல் பணி என்ன தெரியுமா? மேற்கத்தியய ஊடகங்களை தன் வசப்படுத்தி பரப்புரைகளை மேற்கொள்வது. அவ்வளவு ஏன் அமெரிக்காவின் ஊடகத்துறையில் இஸ்ரேலியர்களின் கை வண்ணம் நிறைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.


கோக்கோ கோலாவுக்கு இருக்கும் மரியாதை இப்போது இளநீருக்கு உண்டா? எந்த வகையிலும் இளநீருக்குப் பக்கத்தில் வரும் தகுதி கோக்கோ கோலாவுக்கு இல்லை. ஆனால், சாத்தியமானது. எப்படி? கோடி கோடியாக கொட்டினார்கள். பிரபலமான நடிகர் யாரோ அவர் மூலமாக விளம்பரப் படுத்தினார்கள். பிரபலமான தொலைக் காட்சிகளில் விளம்பரங்களை ஓட விட்டார்கள். அதேபோல, பிரபலமான பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்கள். இன்று மொத்த மார்க்கெட்டும் அவர்கள் கையில். 

இப்படி பரப்புரைகளுக்கு பலியான சமூகங்களில் முஸ்லிம் சமூகமும் ஒன்று. 

ஆனால், முஸ்லிம்கள் பதில் சொல்லும் முறையும், தவறுகளைக் கூட கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதும் அவர்களை மேலும் மேலும் பலவீனமாக்கும். 

இது ஆயுதத்தின் கால கட்டம் அல்ல; அறிவின் கால கட்டம். அறிவுச் சுவர்களை உங்களை சுற்றி மிகப் பலமாக அமைத்துப் போராடுங்கள்! அந்த சுவருக்குள் இருக்க தகுதி இல்லாதவர்களை முஸ்லிம் என்று பார்க்காமல் ஒதுக்கி வையுங்கள். இல்லையென்றால்.. அதுவே உங்களின் பலவீனமாகி விடும். அவர்களும் உங்களின் எதிரிகளின் வேறோரு வடிவமே. அவர்களை வைத்தே உங்களையும் சிக்க வைக்க முயலுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..!

நான் சே'வுக்கு அடுத்து மிகவும் நேசித்த மனிதன் யாசிர் அரஃபாத். அவர் இந்த சூழ்ச்சிகளை உணர்ந்து உலகத்துடன் இணைந்து அறிவுச் சுவரை எழுப்ப முயன்று கொண்டு இருந்த போதே கொல்லப்பட்டர். அது மரணம் அல்ல கொலை.  

எனவே, தீவிரவாதத்தின் பெயரால் மட்டும் அல்ல எந்த வடிவிலும் உங்களை அவர்கள் முடக்கவே முயலுவர். நீங்கள் மூளையைப் பயன்படுத்துங்கள். முஷ்டியையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்; ஆனால் இப்போது பயன்படுத்த வேண்டாம்.

- வாசு முருகவேள்

0 comments:

Post a Comment