NewsBlog

Saturday, October 5, 2013

சிறப்புக் கட்டுரை: 'உலக அமைதிக்கு யார் அச்சுறுத்தல்?'


சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, உலக ரவுடி அமெரிக்கா நிம்மதி பெருமூச்சு விட்டாலும்… அதற்குப் புதிய தலைவலி வேறொரு வடிவில் சூழ்ந்து கொண்டது. சோவியத்திடம் இருந்த அணு ஆயுதங்கள் உலகின் பிற நாடுகளிடம்  சிக்கி விடக் கூடாதே என்ற கவலை அது. இந்த அணு ஆயுதங்களை யார் பயன்படுத்தப் போகிறார்களோ என்ற திகில் அமெரிக்க அரசைப் பற்றிக் கொண்டுள்ளது.

இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த போது, துப்பாக்கிகளில் வெளிப்படும் கந்தகப் புகை மண்டலம்கூட ‘காளான் குடை’ யைப் (அணு ஆயுத வெடிப்பின் போது வெளிப்படும் தோற்றம்) போலவே அதன் கண்ணுக்குத் தென்பட்டது. இந்த பயத்தின் காரணமாகத்தான் அமெரிக்கா, வட கொரியாவை தாக்கத் தயங்குகிறது. ஈரானைக் கண்டு எட்டி நிற்கிறது.

தானும், தன் செல்லப் பிள்ளை ‘பேட்டைப் பிஸ்தா’ இஸ்ரேலைத் தவிர உலக நாடுகள் யாரும் ஆக்கப் பணிகளுக்குக் கூட அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவும், இஸ்ரேலும் குவித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களை ஊடகங்கள் வரவேற்கின்றன. சிவப்பு, வெண்மை மற்றும் நீலம் என்று பல்வேறு நிறங்களில் வகைப் பிரித்து ‘ அவை நாட்டு பாதுகாப்புக்கு என்று வர்ணிக்கின்றன.

ஆனால், உலக நாடுகள் அணு ஆயுதங்கள் பெற்றிருப்பதில் அதே ஊடகங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் அமெரிக்கா அந்தக் கொடிய அணு ஆயுதங்களை ‘ஹிரோஷிமா – நாகசாகி’ நகரங்கள் மீது செலுத்தி பெரும் சேதத்தை மனித குலத்துக்கு உருவாக்கி 68 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஊடகங்களின் இந்தப் போக்கு இன்னும் மாறவில்லை.

ஜப்பான் மீது தொடுக்கப்பட்ட அணு ஆயுதத் தாக்குதல் சம்பந்தமாக ஆரம்பத்தில் அமெரிக்க தலைமைத்துவம் பொய்யுரைத்தது. அதிலும் இமாலயப் பொய்! ஆயினும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஓரிரு ஊடகங்களைத் தவிர பிற ஊடகங்கள் அனைத்தும் உண்மையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிறு முணு முணுப்பையும் எழுப்பவில்லை.

கொடூர செயலின் மன அழுத்தம் தாங்காமலோ அல்லது உண்மை வெளிப்பட்டால் அசிங்கமாகிவிடும் என்ற பயத்தாலோ ஆக.9, 1945 – இல், அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ‘ஹாரிட்ரூமென்’ மக்கள் மன்றத்தில் ஒரு பெரும் பொய்யை அவிழ்த்துவிட்டார்.

“முதலாவது அணுகுண்டு (ஜப்பான்) ஹிரோஷிமாவின் இராணுவ முகாம்கள் மீது போட்டதை உலகம் கண்டது. ஏனென்றால், தாக்குதலில் முடிந்தளவு பொது மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்கவே நாங்கள் விரும்பினோம்!”

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்ற பழமொழிக்கு சரியான விளக்கம் இந்தப் பொய்.


உண்மையில், அமெரிக்க அரசு அணுகுண்டின் முழு வீச்சுக்கு ஆளாகும் விதத்தில் கச்சிதமான நிலப்பரப்புக் கொண்ட நகரங்களை ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்தது. அதன் அடிப்படையில்தான் ஹிரோஷிமாவின் மீது ஆக.6-இல், ஒரு அணு குண்டையும், நாகசாகியின் மீது ஆக.9 –இல், மற்றொரு அணு குண்டையும் போட்டது. இதன் விளைவாக ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் உடல் கருகி உடன் சாம்பலானார்கள் அல்லது அணு ஆயுத பின்விளைவுகளுக்கு ஆளாகி செத்து மடிந்தனர்.

ஆனால், அறிவியல் அறிஞர் குழாம் ‘மன்ஹாட்டன் புராஜெக்ட்’ என்ற பெயரில் அமெரிக்கா வடிவமைத்த கொடிய அணு ஆயுதத் திட்டத்தை அறிந்திருந்தது.

1943 வசந்தக் காலத் துவக்கத்தில் வடக்கு ‘புதிய மெக்ஸிக்கோ’வைச் சேர்ந்த ‘லாஸ் அலமோஸ்’ ரகசிய ஆய்வுக் கூடத்தில் பிறந்து வளர்ந்த திட்டம் அது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இன்று அந்த ஒரு ஆய்வு கூடத்துக்காக ஆண்டுதோறும் இரண்டு பில்லியன் டாலர் நிதியுதவிக்கு மேலாக ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியின் பெரும் பகுதியை அந்த ஆய்வுக்கூடம் அணு ஆயுத ஆய்வு மற்றும் பாதுகாப்பு பராமரிப்புகளுக்காக செலவழிக்கிறது. இதில் அமெரிக்காவிடம் உள்ள பத்தாயிரம் ‘தெர்மோ நியூக்களியர்’ அணு ஆயுதங்களும் அடக்கம்!

இந்நிலையில்தான், தற்போது 200 க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் இஸ்ரேலிடம் இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக லெபனானில் அப்பாவி மக்களைக் கொல்ல இஸ்ரேல் பயன்படுத்திய நவீன ஆயுதங்களின் வீரியத் திறனை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.


ஆனால், இந்த உண்மைகள் எதுவும் ஊடகங்கள் வெளியிடுவதில்லை. இலத்தீன் அமெரிக்காவின் பத்திரிகையாளர் ‘எட்வர்டோ காலினோ’ இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்: “உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது யார்? ஈரான் என்ற நாடா ஹிரோஷிமா – நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை வீசியது?”

அர்த்தமுள்ள கேள்வி இது. பதில் சொல்லத்தான் நேர்மையான ஆட்சியாளர்கள் இல்லை. துணிச்சலாக வெளியிட எந்த ஊடகமும் தயாராக இல்லை.

0 comments:

Post a Comment