NewsBlog

Sunday, October 6, 2013

நடப்புச் செய்தி: 'கேம் ஸ்டார்ட்..ஆரம்பமானது.. தேர்தல் கூட்டணி.. ஆட்டம்!'



முந்தைய நாள் நடந்தது இது. 

அலுவலக உணவு வேலையில், மதிய தொழுகை முடிந்து பணியிடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். இடையில், எனது நண்பர் சாலையோரத்து நடைபாதை வியாபாரியை நலம் விசாரிக்க நின்றேன். அருகில்தான் காவல் நிலையம். காவல் நிலையத்தைச் சுற்றி ஏகக் கூட்டம்.

எங்கள் அந்த உரையாடலில் காவலர்கள் குறித்து விமர்சனம் வந்தபோது நான் சொன்னேன்: “நீங்க பார்த்துட்டே இருங்களேன் தம்பி. குற்றவாளி உலகின் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டார்கள் நம் போலீஸார். கைது செய்து கொண்டு வருவார்களா இல்லையான்னு பாருங்களேன்!” – என்று சொல்லிவிட்டு, ".....ஆனால்..!" - என்று இழுக்க அவர் என்னை உற்றுப் பார்த்தார்.

நான் தொடர்ந்தேன்: "ஆனால், தம்பி அரசியல் காரணங்கள்தான் நம் காவல்துறையின் எல்லா குளறுபடிகளுக்கும், பெயர் கெடுதலுக்கும் காரணம்! உலகின் முதல்தர தமிழக போலீஸாரின் தகுதியிழப்புக்கும் இதுதான் காரணம்!” - என்று வருத்தம்  தெரிவித்து விட்டு நடந்தேன். 

நான் இரண்டு நாட்களுக்கு முன்னர் சொன்னது இன்று நடந்துள்ளது. 

புத்தூரில் வீடு சுற்றிவளைப்பு: 2 தீவிரவாதிகள் கைது.

இன்றைய தினமணியின் முகப்பு செய்தி இதுதான். இதே தினமணி கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று நீதிமன்றம் விடுதலை செய்யும் போது இப்படி முகப்பில் வெளியிடுமா? நிச்சயமாக இதுவரை வெளியிட்டதில்லை.

கைதுகள் ஒருபுறம் இருக்கட்டும்.

சதி முறியடிப்பு என்னும் குறுந்தலைப்பில், ஒரு கதையும் அதே தினமணியில் இழையோடுகிறது; வரும் மக்களவை தேர்தல் கூட்டணி கதை அது. அப்பட்டமாக தெரிகிறது. தினமணி ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது.

'கைது செய்யப்பட்ட பிலால் மாலிக்கும், பன்னா இஸ்மாயீலும் திருப்பதி திருமலையில் நடைப்பெற்று வரும் பிரம்மோற்ஸ்வத்தை சீர்குலைக்கும் வகையில் வெடிகுண்டு வைப்பதற்காக சதித் திட்டம் தீட்டியதாகவும், அதிலும் குறிப்பாக கருட சேவையின் போது பயன்படுத்தும் குடையில் வெடிகுண்டு வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட இருப்பதும் உளவுத்துறைத் தகவல் திருமலை பாதுகாப்புத் துறை பிரிவு ஐஜி மகேஷ் பகவத்துக்கு 3 நாட்களுக்கு முன்பு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கைகள்.. சுற்றிவளைப்புகள்.. பரபரப்புகள் தொடர்கிறது செய்தி.

ஒரு வீட்டில் இருப்போரை கைது செய்ய 12 மணி நேர கடும் போராட்டம் நடத்தியுள்ளதாக அதே செய்தி தெரிவிக்கிறது.

ஆனால், கைது செய்யப்பட்டவர்களில் பிலால் மாலிக்கின் மனைவி ஹசீனா பானு, மற்றும் அவரது 2 சிறு வயது மகன்களையும், ஒரு பெண் குழந்தையையும் (இந்த செய்திபடி மூன்று குழந்தைகள்) போலீஸார் மீட்டனராம். ஓரு குடும்பத்திடமிருந்து குழந்தைகளை மீட்ட (கடத்தப்பட்டவர்கள்தான் மீட்கப்படுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்) வேடிக்கையும் இங்குதான் நடந்துள்ளது. 

குண்டு வைக்க வந்தவர்கள் மனைவி, மக்களோடு வந்து குண்டு வைக்க வேண்டுதல் ஏதாவது செய்து கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை. எல்லாம் நமது உளவுதுறைக்குத்தான் வெளிச்சம். 

இனி நமது தமிழகப் பத்திரிகைகளின் ரீல்.. புரூடாக்கள் அளவில்லாமல் போய்விடும்.

சமூக ஆர்வலர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இன்றைய நாளிலிருந்து இந்த கைது சம்பவம் தொடர்பாக நமது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை அவரவர் சக்திக்கு ஏற்ப கொஞ்சம் சிரத்தையுடன் சேகரித்து வாருங்கள். அந்த வரலாற்றுப் பேழைகள் இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உண்மை வரலாறுகளை திரும்பிப் பார்க்க உதவும். நிஜ முகங்களைக் காட்டும். வருங்கால இளைஞர்களின் ஆய்வு பட்டங்களுக்கு ஆவணங்களாக மாறி நிற்கும்.

அதேபோல, தயக்கம் இன்றி, கைது செய்யப்பட்டவர்கள் சம்பந்தமாக அனைத்துத் தகவல்களையம், சட்ட வல்லுநர்கள் மூலமாக திரட்ட ஆரம்பியுங்கள். இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அளித்துள்ள கடைசி உரிமைவரை போராட ஒன்று திரளுங்கள்.

இதில், உணர்ச்சி வசப்படத் தேவையில்லை. பதட்டமும் வேண்டாம். கைது செய்யப்பட்டவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள் என்றால் அவர்கள் ஒவ்வொரு மணித்துளி அனுபவிக்கும் கொடுமைகளும், மனித உரிமை மீறல்களும், சிறைக் கொடுமைகளும் இறைவனின் ஏட்டில் நன்மைகளாகவே பதியப்படும். சுவனத்தின் நறுமணத்துக்குரியவர்களாகவே அவர்களை மாற்றும் என்ற நம்பிக்கை உண்மை என்றால் பொறுமைக் காத்திடுங்கள். 

இதுதான் பேராண்மை என்கிறது மார்க்கம்.

0 comments:

Post a Comment