NewsBlog

Tuesday, October 15, 2013

சிறப்புக் கட்டுரை: 'தியாகத் திருநாள் நினைவுகள்'


முஸ்லிம்களின் பிரதான நன்நாட்கள் இரண்டு. ஒன்று 'ஈதுல் பித்ர் - ஈகைத் திருநாள்!' மற்றது 'ஈதுல் ளுஹா - தியாகத் திருநாள்!'.

தியாகத் திருநாள் தியாகத் திருமகனார் இப்ராஹீம் நபியின் உன்னத தியாகங்களை நினைவுறுத்தும் நாளாகும். இறைவனின் நெறிமுறைக்காக, அவனது கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக தம்முடைய முழு வாழ்க்கையையும், "என் தொழுகை, என் வாழ்க்கை, என் மரணம் அனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!" - என்று பிரகடனப்படுத்தியவர் இப்ராஹீம் நபி.

மனிதப் பிறவி உன்னதமானது. இறைகட்டளைகளைப் பின்பற்றி வாழ்வதே மனித படைப்பின் நோக்கம். தான் அதிகமாக நேசிக்கும் பொருட்களையெல்லாம், இறைவனுக்காக தியாகம் செய்வதற்கு சற்றும் தயங்காதவனே உண்மையான இறைநம்பிக்கையாளன் ஆவான். இதை செயலில் நிரூபித்துக் காட்டிய மாமனிதரே இப்ராஹீம் நபி. அவரை நினைவு கூறும் நாளே தியாகத் திருநாள். அன்னாரின் வாழ்க்கை முழுவதும் சோதனைகளின் முட்களமாகவே இருந்தது. அவை அனைத்தையும், ஆத்மச் சுத்தியுடனும், திடமான மனதுடனும் தாங்கிக் கொண்டார் அப்பெருமானார்.

அஞ்ஞான மூடப்பழக்கங்களில் பண்டைய முன்னோர்களின் வழி வழி மரபுகளில் மூழ்கியிருந்த சமுதாயத்தாரிடையே தோன்றியும், அம்மக்களின் அறியாமை இருளுக்குப் பலியாகாது ஜொலித்த சிந்தனைச் சுடர். சமுதாயத்தின் பெயரைச் சூட்டிக் கொண்டு கண்மூடித்தனமான அனாச்சாரங்களில் திளைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு அப்பெருந்தகை என்றும் ஒத்துழைப்புத் தந்தாரில்லை. 

நேர்வழிக்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்த இப்ராஹீம் நபிக்கு சத்தியத்தைத் தந்தருளினான் இறைவன். "வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியமைப்பை நாம் இப்ராஹீமுக்குக் காண்பித்துக் கொடுத்தோம்; உறுதியான நம்பிக்கையுடையோரில் ஒருவராய் அவர் திகழ வேண்டும் என்பதற்காக!" (திருக்குர்ஆன் 6:75)

எப்போது அவருக்கு உண்மை வெளிப்பட்டு விட்டதோ அப்போதிலிருந்தே அவர் சத்தியத்தை மக்களுக்கு எடுத்துரைத்திட முற்பட்டுவிட்டார். அஞ்ஞான இருளிலிருந்து மெய்மையின் பேரொளியின் பக்கம் மக்களை அழைத்திடப் பெரிதும் பாடுபட்டார். 

"இப்ராஹீம் தம் தந்தை ஆஜரை நோக்கி, 'சிலைகளையா நீங்கள் கடவுளராக்குகின்றீர்கள்? நிச்சயமாக நீங்களும், உங்களுடைய சமூகத்தாரும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கின்றேன்!"-என்று கூறிய சந்தர்ப்பத்தையும் நினைவு கூறும்" - (திருக்குர்ஆன் 6:74)

இப்ராஹீம் நபி தம் தந்தையிடம் கூறினார்: "என் அன்புத் தந்தையே! கேட்கவோ, பார்க்கவோ முடியாத, உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவோ இயலாதவற்றை நீங்கள் ஏன் வணங்குகின்றீர்கள்?

என் தந்தையே! உங்களுக்குக் கிடைக்காத ஒரு ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே, என்னைப் பின்பற்றுவீராக! நான் உங்களுக்கு நேரிய வழியைக் காண்பிப்பேன்!

என் தந்தையே! நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; திண்ணமாக ஷைத்தான் கருணை மிக்க இறைவனின் கட்டளைக்கு மாறு செய்பவன் ஆவான்.


என் தந்தையே! கருணை மிக்க இறைவனின் தண்டனைக்கு நீங்கள் இலக்காகி விடுவீர்களோ மேலும், ஷைத்தானின் தோழனாகி விடுவீர்களோ என்று நான் அஞ்சுகின்றேன்!" (திருக்குர்ஆன் - 19:42-45)

அதேபோல, தம் சமூகத்தாரிடமும், இந்தச் செய்தியை தெரியப்படுத்துவதற்கு அவர் கூச்சப்படவில்லை. அவருடைய சமுதாயத்தவர் அவரிடம் வாதம் புரியும்போது அவர் சொன்னார்: "திண்ணமாக, அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருக்க அவனைப் பற்றியா என்னிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்கள்? மேலும், எவற்றை நீங்கள் இறைவனுக்கு இணை வைக்கின்றீர்களோ அவற்றுக்கு நான் அஞ்சமாட்டேன். என் இறைவன் நாடினால்தான் எதுவொன்றும் நிகழ முடியும். என் இறைவனின் ஞானம் அனைத்தையும் சூழ்ந்துள்ளது" (திருக்குர்ஆன் 6:80)

இறைபணிகளின் நிமித்தம் அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டன; இறை மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தமைக்கு இப்ராஹீம் நபி குற்றவாளியாக்கப்பட்டார். அவருடைய தந்தையார்கூட கடும் விரோதியாய் மாறி நின்றார். இறைவனின் மார்க்கத்திற்காக பெற்றோரையும், உற்றார் - உறவினரையும் இழக்கத் துணிந்துவிட்டார் அவர். 

"இப்ராஹீமே! நீ என்னுடைய தெய்வங்களை நிராகரித்துவிட்டாயா? இதனை நீ தவிர்த்துக் கொள்ளாவிட்டால்.. நிச்சயம் உன்னை நான் கல்லால் அடிப்பேன்; நீ என்றென்றும் என்னை விட்டுப் பிரிந்து போய்விடு!"

அதற்கு இப்ராஹீம் கூறினார்; உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! உங்களை மன்னித்தருளமாறு என் இறைவனிடம் நான் இறைஞ்சுவேன். நிச்சயமாக, என் இறைவன் என் மீது மிகவும் கிருபையுள்ளவனாக இருக்கின்றான். மேலும், உங்களைவிட்டும் அல்லாஹ்வை அன்றி, நீங்கள் பிரார்த்தித்து வருகின்ற தெய்வங்களை விட்டும் நான் ஒதுங்கிக் கொள்கின்றேன். நான் என் இறைவனையே பிரார்த்திக்கின்றேன். நான் என் இறைவனை பிரார்த்தித்து ஏமாந்து போகமாட்டேன் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு" (திருக்குர்ஆன்:19:45-48)

யதார்த்தத்தை எடுத்துரைத்தாலும், சத்தியத்தை தெளிவாகப் போதித்தாலும் நேர்வழிக்கு வராத சமூகத்தை சீர்த்திருத்த சற்றுக் கடுமையாய்ச் சொல்ல வேண்டியும் வரலாம்; சமூகத்தார் அதை எவ்வளவு வெறுத்தாலும் சரியே! இதை இப்ராஹீம் நபி செய்தபோது அவருடைய சமுதாயத்தார் சத்தியத்தைப் போதித்த உத்தமரை அரசு தர்பாருக்கு அழைத்துச் சென்று நிறுத்தினார். அங்கும் இறைவனைக் குறித்த சிந்தனையைச் சற்றும் தயங்காமல் எடுத்துரைத்தார் இப்ராஹீம் நபி:

"இப்ராஹீமுடைய அதிபதி யார் என்பது குறித்த அவருடன் தர்க்கம் புரிந்தவனை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவனுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கியிருந்த காரணத்தினாலேயே அவன் தர்க்கம் புரிந்தான். 

"எவன் வாழ்வையும், மரணத்தையும் அளிக்கின்றானோ அவனே என்னுடைய இறைவன்! - என இப்ராஹீம் கூறியதற்கு, 'நானும் வாழ்வையும், மரணத்தையும் அளிக்கின்றேனே!' - என்று அவன் கூறினான்.  அதற்கு இப்ராஹீம், "அப்படியானால்... அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கின்றான். நீ அதைச் சற்று மேற்கிலிருந்து உதிக்கச் செய்!" - என்று கூறினார். இதைக் கேட்ட மாத்திரத்தில் சத்தியத்தை மறுத்த அவன் திகைத்துப் போனான். அல்லாஹ் அக்கிரமம் புரிபவர்களை நேர்வழிப்படுத்துவதில்லை!" (திருக்குர்அன்: 2:258)

அகம்பாவம், அகங்காரம், உலக ஆசை, பதவி மோகம் ஆகியவை மறுமை வாழ்க்கைக்குத் தடைப் போட்டன. இவை நிராகரிப்பாளனான நம்ரூத் மன்னனுக்கும் தடை கற்களாகி நின்றன. சத்தியத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்கிட அவன் முயன்றான். இறைவன் தன் கருணையினால் தம் அடியாரைக் காப்பாற்றிக் கொண்டான். 

இப்ராஹீம் நபி இறைமார்க்கத்துக்காக.. சத்தியத்திற்காக.. சான்று பகர்ந்ததன் விளைவாக தமது தாய் - தந்தையரை, சொந்த - பந்தங்களை, சொத்து - சுகங்களை துறந்து அயல் நாட்டிற்குப் புறப்பட வேண்டியிருந்தது. 

"நான் என் இறைவனின் பக்கம் செல்கின்றேன்!"    (திருக்குர்அன்  -37: 99)

இந்நிலையில் தொடர் போராட்டக் களங்களில் வாழ்க்கை கழிய முதுமையும் வந்தது. அதுவரையில் குழந்தைப் பேறு இல்லாத இப்ராஹீம் நபிக்கு முதுமையில் தம் பணிகளைத் தொடர ஒரு வாரிசும் தேவைப்பட்டது. அதற்காக இறைவனை வேண்டி தம் கோரிக்கையையும் சமர்பித்தார். "என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக! அவர் உத்தமரில் ஒருவராக இருக்க வேண்டும். இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு சாந்த குணம் கொண்ட ஒரு மகனைப் பற்றி நாம் அவருக்கு நற்செய்தி அறிவித்தோம்!" (திருக்குர்ஆன்- 37: 100,101)

இல்லாது.. இல்லாது பேர் சொல்லப் பிறந்த பிள்ளையையும் பாலையில் இறை ஆணைப்படி துறக்க வேண்டியிருக்கிறது. அன்பையும், பாசத்தையும் இறைவனுக்காக தியாகம் செய்கிறார் இப்ராஹீம் நபி. சில காலம் கழித்து மீண்டும் கிடைத்த பிள்ளையை பாசம் சொரிந்து வளர்த்து வரும் வேளையில் மறுபடியும் இறை சோதனை வருகிறது.

"அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது, இப்ராஹீம் ஒருநாள் அவரிடம் கூறினார்: "என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாக கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!" - அதற்கு அவர் கூறினார்: 

"என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அதை  செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்!" இறுதியில் அவ்விருவரும் இறைவனுக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். மேலும், இப்ராஹீம் மகனை முகங்குப்புறக் கிடத்தினார். அப்போது நாம் அவரை அழைத்துக் கூறினோம். "இப்ராஹீமே! நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். திண்ணமாக, இது ஒரு தெளிவான சோதனையாய் இருந்தது. 

மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம். பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் விட்டு வைத்தோம். சாந்தி உண்டாகட்டும்.. இப்ராஹீம் மீது!" (திருக்குர்ஆன் - 37: 102-109)

இப்படி தம் முழு வாழ்க்கையையும், தாம் நம்பிய மார்க்கத்திற்காக உலகின் எல்லாவிதமான இன்பங்களையும், பந்த பாசங்களையும் இறை அன்பிற்காக தியாகம் செய்து 'தியாக நாயகனாக' உயர்ந்து விட்ட இப்ராஹீம் நபியின் வாழ்வை நினைவூட்டும் தியாகத் திருநாளே இந்நாள்.

தியாகத் திருநாள் ஒரு மாபெரும் படிப்பினையைத் தருகிறது. இப்ராஹீம் நபியின் சந்ததிகள் எனச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் சமுதாயத்தவருக்கு அப்பெரியாரின் வாழ்வை முன் வைத்து இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு அறிவுறுத்துகின்றான்: 

"உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவழியில் செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும், எதனை நீங்கள் செலவழித்தாலும் திண்ணமாக அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்" (திருக்குர்ஆன் - 3: 92)

நாம் எதைத் தியாகம் செய்யப் போகின்றோம்? நம்முடைய 'இஸ்மாயீல்' எது?

0 comments:

Post a Comment