NewsBlog

Tuesday, October 15, 2013

சிறப்புக் கட்டுரை:'நினைவுகளின் சங்கமத்தில் தியாக திருநாள்!'


துல்ஹஜ் 10 ஆம், நாள்.

அரபாஃத் மைதானம் முழுவதும் வெள்ளுடை ஹாஜிகளால் நிரம்பிவழியம். அந்நிலப்பரப்பின் காற்றுகூட 'இறைநாம' உச்சரிப்பின் உச்சஸ்தாயியில் ஸ்தம்பித்துவிடும். இந்த அரபாஃத் மைதானத்தில்தான் 1434 ஆண்டுகளுக்கு முன் நபிகளார் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார்கள். அது அவர்களின் கடைசி ஹஜ்ஜான ஹஜ்ஜதுல் விதாவாகும்.

அதில் ஒன்றரை லட்சத்திற்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று நபித்தோழர், தோழியர்கள் குழுமியிருந்தனர். அரபு நாட்டின் மூலை முடுக்குளில் இருந்தெல்லாம் மக்கள் வந்து குவிந்திருந்தனர். மாபெரும் இறைத்தூதர்... கிருத்துவ சகோதரர்களால் ஆப்ரஹாம் எனப்படும் இப்ராஹீம் நபி (இறையருள் பொழிவதாக!) அழைத்தார்களே, அந்த அழைப்பை ஏற்று, ஹஜ்ஜை நிறைவேற்ற அவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர்.

நபி பெருமானார் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்தபடி மக்களுக்கு இறுதி ஏவுரைகள் வழங்கிக் கொண்டிருந்தார்கள். உரையின் நிறைவுரையில் மக்களை நோக்கி வினவினார்கள்:

"மக்களே! நாளை மறுமையில் என்னைக் குறித்து இறைவன் உங்களிடம் விசாரிப்பான். அப்போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? என்னுடைய தூதை உங்களுக்கு சரியான முறையில் எடுத்து வைத்துவிட்டேனா?"

ஹீரா மலைக்குகையில், முதன்முதலாக இறைவனின் திருச்செய்தி அருளப்பட்டு நபிகளார் இறைத்தூதராக அறிவிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு சற்றும் அயராது உழைத்து.. அந்த திருச்செய்தியை மக்களுக்கு எப்பாடுபட்டாவது சேர்த்திட துடியாய் துடித்தவர்கள்.

"போர்த்து மூடி உறங்குபவரே! எழுந்திருங்கள்! மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்!" (74:1,2)

- இறைக்கட்டளைப் பிறந்ததும், 'ஸபா மலைக்குன்றின் மீது ஏறிக் கொண்டு துளியும் அஞ்சாமல் மக்களை இறைவனின் பக்கம் அழைத்தவர்கள்,

சத்தியத்திற்காக, அதை மேலோங்க செய்ய இரத்த பந்துக்களான உறவினரின் கடும் பகைக்கு ஆளாகி தாய் மண்ணான மக்காவின் தெருதோறும் உதிரம் கொட்டியவர்கள்,

'தாயிப்' எனப்படும்  தொலை நகரில் இறைத்தூதை சமர்பிக்கச் சென்றவர்கள், அந்த இறைச்செய்தி நிராகரிக்கப்பட்டு தெருக்களில் ஓட ஓட விரட்டப்பட்டு ரத்தக்களறியாய் ஆனவர்கள்,

13 ஆண்டுக்காலம், தாய் மண்ணில் சொல்லொண்ணாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளானவர்கள், சத்தியத்தை சொன்னதற்காக துன்புறுத்தப்பட்டவர்கள்,

தாயகம் துறந்து, மதீனா சென்ற பின்பும் எதிரிகள் நிம்மதியாய் விடுவதாயில்லை. ஒரு 10 ஆண்டுக்காலம், தற்காப்பு யுத்தமுனைகளில் வாள் ஏந்தி நின்றவர்கள்.

இப்படி 23 ஆண்டுகாலம் ஓயாத அறப்போராட்டத்தின் இடையே சத்திய தீப்பிழம்பை ஏற்றி வைத்த அன்பு நபியின் தியாகங்கள் அளப்பரியவை.

அல்லும், பகலும் உழன்று, இறைத்தூதை மக்களுக்குச் சமர்பித்து அதன் அடிப்படையில் ஒரு லட்சிய சமூகத்தை நிர்மாணித்துக் காட்டினார்கள். ஆனாலும், நபிகளாரின் அடிமனதில் இனம் புரியாத ஒரு நெருடல். அரபாஃத் மைதானத்தில் கேள்வியால் எழுகிறது.

"... என்னுடைய தூதை நான் சரியாய் சமர்பித்து விட்டேனா?"

மக்காவில் ஒருநாள், 

இறைத்தூதை எடுத்து வைக்க சென்ற அன்பு நபி மிகவும் களைத்தவர்களாய் , தளர்ந்த நடையுடன் வீடு திரும்பினார்கள்.  கடும் பசி வேறு. கணவரின் நிலையை உணர்ந்த கதீஜா நாச்சியார், அன்பு கணவருக்கு உணவு பறிமாற ஆரம்பிக்கிறார்கள். உணவை பிசைந்து வாயருகே கொண்டு செல்லும்போதான் அது நடக்கிறது.

வீட்டுக்கு வெளியே தெருவில் 'ஒட்டக காஃபிலா, ஒட்டக குழுவொன்று' நடந்து செல்லும் சத்தம் கேட்கிறது. வெளியூரிலிருந்து வணிக நிமித்தமாக வந்த வணிகக் கூட்டம் அது. 

வாயருகே கொண்டு சென்ற உணவு கவளத்தை உண்ணாமல் தட்டில் வைத்து விரைந்து எழ முயலும் அண்ணலாரிடம், “இறைவனின் தூதரே! இன்னும் சாப்பிடவில்லை. அதற்குள் எங்கு கிளம்பிவிட்டீர்கள்?”- என்று கதீஜா நாச்சியார் (இறையருள்  பொழிவதாக!) கவலையுடன் வினவுகிறார்கள்.

“கதீஜா உமக்கு கேட்கவில்லையா? ஆம்..! நான் தெளிவாகவே கேட்டேன். தெருவில் செல்லும் ஒரு காஃபிலாவின் சத்தத்தை. வெளியூரிலிருந்து யாரோ வணிகர்கள் மக்காவிற்கு வந்திருக்கிறார்கள் போலும். நான் உடனே சென்று அவர்களை சந்தித்து “இறைச்செய்தியை சமர்பித்தேயாக வேண்டும் கதீஜா!” – நபிகளாரின் முகத்திலிருந்த களைப்பு எங்கு போனது என்று தெரியவில்லை. உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

“இறைவனின் தூதரே! நீங்கள் மிகவும் களைப்புடன் வந்திருக்கிறீர்கள். அதுவும் பசியுடன் வந்திருக்கிறீர்கள். சிறிது உணவையாவது உண்டுவிட்டு செல்லுங்களேன்!” – கவலைத் தோய்ந்த கனிவான குரலில் கதீஜா நாச்சியார் (இறையருள் பொழிவதாக!) அக்கறையுடன் அன்பு கணவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அன்பு நபி அவர்கள், “ஒரே ஒரு கணம் தம் மனைவியாரின் முகத்தை ஏறிட்டு நோக்கிவிட்டு கூறினார்கள்: “கதீஜா! நான் இதோ.. இந்த உணவை உண்டுவிட்டு செல்வதற்குள் அந்த வணிகக்கூட்டம், மக்காவைவிட்டு வெளியேறிவிட்டால்.. அவர்களுக்கு நான் இறைவனின் திருத்தூதை சமர்பிக்க முடியாதவனாகி விடுவேனே!” – பதற்றத்துடனும், கவலையுடனும் நபிகளாரின் குரல் வெளிப்படுகிறது.

இப்படி சதா சர்வ காலமும் இறைவனின் திருச்செய்தியை மக்களுக்கு விடுத்துக் கொண்டிருந்த அண்ணலார்தான்  அரபாஃத் திடலில் கேட்கிறார்கள்:

“…. என்னுடைய தூதை சரியான முறையில் சமர்பித்துவிட்டேனா?”

கூடியிருந்தோர் ஒரே குரலில் சொன்னார்கள்: “ஆம்..! இறைத்தூதர் அவர்களே! இறைவனின் திருச்செய்தியை தாங்கள் முழுமையான முறையில் எடுத்து வைத்துவிட்டீர்கள் என்றும், இறைத்தூதர் என்னும் அந்தஸ்தில் தங்களின் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றி விட்டீர்கள் என்றும் நாங்கள் சான்று பகர்வோம் இறைவனின் திருத்தூதரே!”

இன்னும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பணியை நிறைவுற தாங்கள் செய்துவிட்டீர்கள் என்றும், இறைவனின் அமானிதத்தை எங்களிடம் சரியான முறையில் ஒப்படைத்துவிட்டீர்கள் என்றும் இப்பணிகளில் எந்தவிதமான குறைகளையும் வைக்கவில்லை என்றும் நாங்கள் மறுமையில் சான்று பகர்வோம் இறைத்தூதர் அவர்களே!”

இதைக் கேட்டதும், அண்ணல் நபிகளார் வானத்தை நோக்கி தங்களின் சுட்டு விரலை உயர்த்தி, “இறைவா.. நீயும் சாட்சியாக இருப்பாயாக! இறைவா.. நீயும் சாட்சியாக இருப்பாயாக! இறைவா.. நீயும் சாட்சியாக இருப்பாயாக!” – என்று மூன்று முறை கூறிவிட்டு,

“இங்கு வந்திருப்போர் இங்கு வராதவருக்கு இச்செய்தியை சமர்ப்பித்து விடுங்கள்!” – என்றும் பணிக்கிறார்கள்.

இறைத்தூதராக தேர்வு செய்யப்பட்ட நாள் முதற்கொண்டு.. மரணம்வரை இறைச்செய்தியை ஒவ்வொரு தனி மனிதருக்கும் சென்று சேர்த்துவிட ஓயாமல் பாடுபட்ட நபிகளாருக்கே தம் இறைப்பணியின் மீது “திருப்திதானா?” என்ற வினா அரபாஃத் திடலில் எழுகிறது.

மலைகளும், வானங்களும், பூமியும் சுமக்க பயந்து மறுத்த இறைவனின் அமானிதத்தை, அடைக்கலப் பொருளை சுமப்பதாக வாக்களித்துள்ள நாம் அண்ணலாரின் மனதில் எழுந்த கவலையில் லட்சத்தில் ஒரு பங்கையாவது என்றாவது பெற்றோமா? இப்பொறுப்பை குறித்து மறுமை சிந்தனை எப்போதாவது நமக்கு ஏற்பட்டதா?

உலகின் 700 கோடி மக்களும் இன்று ஒழுக்க வீழ்ச்சி, அமைதின்மை போன்ற கடும் பிணிகளுக்கு ஆளாகி அவதியுறுகிறார்கள். அப்பிணிகளுக்கான ஒரே மருந்து, சர்வ நோய் நிவாரண சஞ்சீவி இஸ்லாம்தான்! அதை கையில் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் நாம் என்றைக்கு அவர்களின் பிணிகளை தீர்க்கப் போவது?

மறுமையில், நாளை இதைக் குறித்து விசாரிக்கப்பட மாட்டோம் என்ற உறுதியா? அல்லது தைரியமா?

இறைச்செய்தியை சரியான முறையில் சமர்பிக்காததால்தான் உலக பொது நெறியான இஸ்லாம் இன்று அன்னியத்தனமாகி விட்டது. சில வணக்கமுறைகள், ஒரு சில சடங்கு சம்பிரதாயங்கள் என்றளவில் குறுகிய வட்டத்தில் சிறைபட்டுள்ளது. இரத்த பந்தமுள்ள ஆதமின் மக்களில் ஒருவர் மற்றொருவர் வன்மத்துடன்... ஒருவர் மற்றவரின் குருதியை ருசிபார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

என்ன இந்த அவல நிலைக்கு.. அழிவு நிலைக்கு நம் பங்கு ஒரு சிறிதும் இல்லையா?

நம் நாட்டின் 125 கோடி மக்களில் எத்தனை விழுக்காடு பேருக்கு இஸ்லாத்தை முழுமையான முறையில் எத்தி வைத்தோம்? குறைந்தபட்சம், ஆதரவாளர்களாக எத்தனை அபுதாலிப்புகளை உருவாக்கியுள்ளோம்?

அண்ணல் நபிகளாரை (அன்னார் மீது இறைவனின் சாந்தியும், சாமாதானமும் என்றென்றும் நிலவுவதாக!) உயிரினும் மேலாக நேசிக்கும், அவர்களின் வாரிசுகள் என்று புளாங்கிதமடையும் நாம், அண்ணலாரை செயல் ரீதியாக நேசிப்பது என்பது அவர்களின் வழிமுறைகளை முற்றிலும் பின்பற்றி நடக்கும் போதுதானே அது நிஜமாகும்?

இந்த வினாக்களை எல்லாம் தியாகத் திருநாளில் நாம் எழுப்பியே ஆக வேண்டிய காட்டாய நிலையில்தான் உள்ளோம்.! 
 

0 comments:

Post a Comment