காட்டமான ..
புகை சூழந்த வளையங்களில்..
நிறம் நிறமான மது பானங்களில்..
போதை மயக்கங்களில் மூழ்கி..
இளமையை வீணடிக்கும் இளையவனே!
இருட்டிற்கு இனமாகி..
சதை ஈனர்களுக்கு விருந்தாகி..
நெருப்புக்கு இரையாகி அல்லல்படும் - உன்
சகோதரியின் விழிநீரை துடைத்து - அவளை
கரைச் சேர்க்க வா.. இளையவனே!
மானுடம் இங்கே
கந்தக நெடிகளில் அழிகிறது!
மனிதாபிமானமோ
இரத்தக் கரைசல்களில் கரைகிறது!
மனிதம் எங்கேயிருக்கிறது?
தெரியுமா..இளையவனே?
சேற்றிக்கும் கீழே புதைக்குழியில்..
நீதி-நேர்மைகள் மறைந்து
மனிதத் தன்மைகள் மடிந்து
சத்தியங்கள் வீழ்ந்து
அசத்தியங்கள் ஆர்ப்பரிக்கும்...
இருண்ட உலகில் நீயோ_
இலக்கில்லாமல் எங்கேயோ..
சொருகும் விழிகளின் மிதப்புகளில்
அல்லவா லயித்திருக்கிறாய்?
காலங்கள் உனக்காக
காத்திருக்கும்வரை நீ காத்திராமல்..
காலங்களை பற்றிப் பிடித்து..
வெல்லவா இளையவனே!
உலக சாம்ராஜ்யம்
உனக்காகவே காத்திருக்க..
நீ ஏன் கூனி குறுகிவிட்டாய்?
இருள் கிழித்து ஒளியேற்ற வா
இளையவனே!
நாடுகள், இனங்கள்
மொழிகள், மதங்கள் என்று
பி.... ரி.... ந்...... து
பிளவுப்பட்டிருக்கும்
ஆதிபிதாவின் மைந்தர்களை
சகோதரத்துவங்களால்
பாலம் அமைக்க வா..
இளையவனே!
இவ்வுலகின் அறியாமை காரிருள்
விலக்க.. எங்கும் சாந்தியும்-சமாதானமும் தவழ..
உன் இரட்சகன்
உனக்குக் காட்டிய நேரிய
வாழ்வியலைப் பின்பற்றி..
ராஜநடைபோடு இளையவனே!
அதோ !
அடிவானத்துக்கும் அப்பால்..
உன் இலக்கு உனக்காகவே காத்திருக்க..
இறந்த காலங்களை எட்டி உதைத்து..
நிகழ்காலங்களில் தூயவனாய் புகுந்து..
எதிர்காலம் ஒளிமயமாய் படைக்க..
விரைந்து.. வா..
என் இளையவனே!
- 'சின்னக்குயில்'
0 comments:
Post a Comment