NewsBlog

Sunday, December 9, 2012

சூடேறும் பூமி! பேராபத்தில் மனித வாழ்க்கை! பகுதி -1



புத்தாயிரமாண்டு.. சூரியனின் கோபாக்னி ஆண்டாக பிறக்க இருக்கிறது!

இப்படி சொன்னவர், பிரபல விண்வெளி ஆய்வாளர் ஆர்தர் சி.கிளார்க், சொன்னது - மார்ச் 1999 ஆம் ஆண்டு.

நடப்பு நிகழ்ச்சிகள் கிளார்க்கின் கூற்றை ஊர்ஜிதம் செய்வதாகவே உள்ளன. சென்ற பருவத்தில் குளிர்காலம் முடிந்ததும்.. முடியாததுமாய் வெய்யில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது. இது வழக்கத்தைவிட அசாதரணமானது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்த செய்திகள் இதை ஊர்ஜிதம் செய்தன.

கடந்த 500 ஆண்டுகளோடு ஒப்பிட்டால்.. 20-ஆம் நூற்றாண்டு உஷ்ண நூற்றாண்டு  என அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 21-ஆம், நூற்றாண்டு மிகவும் கடுமையாக இருக்கும் என்று வேறு எச்சரித்துள்ளார்கள். 

முன்னேற்றத்தின் சிகரங்களைத் தொடுவதற்காக, தான் வாழும் சூழலை பொருட்படுத்தாமல் மனிதன் சுயநலமாய் சிந்தித்தான். அதன் அறுவடை காலமே இது. மனிதன் தன் கைகளால் சம்பாதித்துக் கொண்ட பாவத்தின் சம்பளம்! இயற்கையைச் சிதைத்ததால்.. விளைந்த சிக்கல்! சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் பூமியை உஷ்ணமயமாக்கிக் கொண்டிருக்கின்றன. எதிர்காலம் மனித குலத்துக்கு பெரும் சவாலாக மாறிவருகிறது.



உலகம் முழுமைக்கும் அதிகளவு வெப்பநிலை பதிவாய் இருந்தாலும், கொஞ்சம் பின்திரும்பிப் பார்த்தால்... 1990 க்குப் பின் ஏழு ஆண்டுகள் கடும் வெப்ப ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1994,1995,1998 இந்த மூன்றும் இந்தியாவை வெப்பத்தால்.. வாட்டியெடுத்த ஆண்டுகளாகும்.

நாட்டில் வெப்பத்தாக்குதல்களுக்கு ஆளாகி மரணமடைந்தோர் எண்ணிக்கை 1995 இல் அதிகளவு பதிவாயின. இப்படி பதிவான மரணங்கள் 410. இதுவே 1998 இல், 3 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. கணக்கில் வராதோரின் எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கலாம். 

உலகின் அதிகளவு குளிர் பகுதிகளான சைபீரியாவில் 1998 இல் பதிவான வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி சென்டிகிரேட் அதிகம். அதே ஆண்டு தலைநகர் தில்லியில் கடந்த 50 ஆண்டுகளில் காணப்படாத 45.6 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் மக்களின் இயல்பான வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தது. அதுபோலவே, ராஜஸ்தானிலும் வழக்கத்தைவிட 50 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவியது. 

நம்மைச் சுற்றியும் உள்ள நிலைமையின் விபரீதத்திற்கு இவை சில உதாரணங்கள். 

சுற்றுச்சூழலில் ஏற்படும் அசாதரணமான மாற்றங்களுக்கு காரணம், 'குளோபல் வார்மிங்' (Global Warming) என்று ஆய்வாளர்களும், சுற்றுச்சூழலியலாளர்களும் சொல்கிறார்கள்.



உண்மையில், சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் சீராக இருப்பதால்தான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகிறது. வாயுக்கள் நிரம்பியிருக்கும் இப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குளோபல் வார்மிங்குக்கு வழிவகுக்கின்றன.

பூமியைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள 'கிரீன்  ஹவுஸ்' அமைப்பின் காரணமாக பூமியின் வெப்பநிலை பாதுகாக்கப்படுகிறது. சூரிய கதிர்களை தடுத்து வடிக்கட்டி இந்த அமைப்பு சமநிலைப்படுத்துகிறது. பூமியைச் சுற்றியும் போர்வையாய் போர்த்தப்பட்டிருக்கும் இந்த அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் பூமியின் வெப்பநிலை மாற்றத்துக்குக் காரணமாகின்றன.

அதோபோல, 'ஓசோன்' கவசத்தில் ஓட்டைகள் விழுந்து புற ஊதாக் கதிர்கள் பூமியை நேரடியாகத் தாக்குகின்றன. சுற்றுச்சூழல் மாசுக்களால் ஏற்படும் நச்சு வாயுக்கள் பூமியின் 'கிரீன்  ஹவுஸ்' அமைப்பைச் சிதைக்கின்றன. 

-- தொடரும்.

0 comments:

Post a Comment