NewsBlog

Tuesday, December 18, 2012

'ஹிஜ்ரத்' இல்லாத 'மதீனா'! , பகுதி - 3



மக்காவின் 13 ஆண்டுகளும், அண்ணலாரும் அவரைப் பின்பற்றி வாழ்ந்த முஸ்லிம்களும் குறைஷிகளின் கொடுமைகளுக்கு நித்தம் ஆளாகி இரத்தம் சிந்திக் கொண்டேதானிருந்தார்கள். 

இறைநெறியான இஸ்லாத்தை ஏற்று அதன்படி அமைதியாக வாழ முயன்ற முஸ்லிம்களுக்குக் கிடைத்தது கொடுமைகளும், உயிர்-இழப்புகளும்தான்! ஆனால், அவர்கள் அந்நிலையிலும், பொறுமை என்ற பூரண கவசத்தை அணிந்துதான் மௌனமான ஒரு 'விடியல் யுத்தம்' புரிந்தார்கள். சத்தியத்தைக் கட்டிக் காத்தார்கள்.

"அவர்கள் கூறுவதை சகித்துக் கொண்டு கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி இரும்..!" (73:10)

"மேலும், இந்நிராகரிப்போருக்கு நீர் அவகாசமளியும் (அதிகமாய்) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளியும்!" (86:17)

- என்ற திருமறையின் கட்டளைப்படி அவர்கள் வாழ்ந்தார்கள்.

குறைஷிகளின் கொடுமையின் உச்சக்கட்டத்தில்தான்...

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைக்கட்டளைப்படி மக்காவைவிட்டு  ஹிஜ்ரத் செய்கிறார்கள். பிறந்த மண்ணையும், சொந்த - பந்தங்களையும், சொத்து - சுகங்களையும் விட்டு விட்டு தாயகம் துறந்து அந்நிய நாடான மதீனாவுக்கு செல்கிறார்கள்.

இந்த  ஹிஜ்ரத்தை நினைவுறுத்த இதோ!  ஹிஜ்ரியும் பிறந்துவிட்டது. இப்புத்தாண்டின் பிறப்புக்குப் பின்னால் புதைந்திருக்கும் வரலாற்றுப் படிப்பினைகள் ஏராளம்!

இன்றும், இந்தியாவின் ஒவ்வொரு விடியலும், அதன் ஏதாவது ஒரு மூலையில், ஒரு மக்கா உயிர் பெறுகிறது! முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாள்தோறும் அவர்களின் உயிர், உடமைகள் சூறையாடப்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. அவர்களின் மானம் - மரியாதை உரசிப் பார்க்கப்பட்டவாறு மக்காவின் கொடுமைகள் தொடர்கின்றன. முஸ்லிம்களின் சொத்துக்கள் திட்டமிட்டு சூறையாடப்படுகின்றன. அவர்களின் பொருளாதார முதுகெலும்புகள் முறிக்கப்படுகின்றன. ஒரு துல்லியமான திட்டமிட்ட அஜெண்டாவின் அரங்கேற்றங்கள் இவை! மக்கத்து குறைஷிகளின் அதே அடக்குமுறைகள் மீண்டும் நவீன காலத்தில் தொடர்கிறது!

1434 ஆண்டுகளுக்கு முன்னர் சத்தியத்துக்கு எதிராக அதை நசுக்கிட.. அந்த மாபெரும் ஜோதியை ஊதி அணைத்திட அசத்தியங்கள் ஒன்றுபட்டு கிளர்ந்தெழுந்ததைப் போலவே இன்றும்_

இந்திய உபகண்டத்தில் மக்கத்து இறைநிராகரிப்பு குறைஷிகளின் குணாம்சத்தில் சங்பரிவார் சக்திகள் மற்றும் அதன் துணை பரிவாரங்கள் .. இந்து தீவிரவாத அமைப்புகள் கைக்கோர்த்துக் கொண்டு பணியாற்றுகின்றன.

ஆள்பலம், அதிகார பலம், பொருளாதார பலம் இவற்றுக்கும் மேலாக உத்பாக்களைக் போன்ற ஊடக பலம் என்று சர்வ சக்தியுடன் இஸ்லாத்துக்கு எதிரணியில் நிற்கின்றன. முஸ்லிம்களை நசுக்கிட .. அவர்களை வேறுடன் கிள்ளி எறிந்திட  துடிதுடித்து அணிவகுத்துள்ளன.

 தங்கள் தாயகத்தில் அமைதியாக வாழ முயலும் முஸ்லிம்களை எரிச்சலூட்டி.. வலிய வன்முறையைத் தூண்டும் செயலில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். முஸ்லிம்களை பேரத்தின் மூலமும், அச்சுறுத்தல்களின் மூலமும் வென்றுவிட கனவு கோட்டைகளை விண்ணளாவ இவர்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்து தீவிரவாதிகளான இவர்கள் இந்திய உபகண்டத்தின் ஊர்தோறும் மக்களின் உள்ளங்களில் நச்சு விதைகளை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். பகைமைத் துவேஷங்களை தூவிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில், முஸ்லிம்கள் அன்று போல இன்றும் கடைப்பிடிக்க வேண்டியது பொறுமையைத்தான்! உணர்ச்சிவசப்பட்டு விட்டில் பூச்சிகளாய்  மாறும் நிலைமையைத் தவிர்த்தேயாக வேண்டும்.

1434 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியத்தின் அழைப்புக் கேட்டதும், உடல் - பொருள் - ஆவி அத்தனையையும் துச்சமாக மதித்து தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கையை கட்டிக் காக்க தயாராக முன் வந்த துடிப்புள்ள நபித் தோழர் பிலால்கள், கப்பாப்கள் (இவர்கள் அனைவர் மீதும் இறையருள் பொழிவதாக!) அதே துடிப்புடன் இன்றும் இந்திய உபகண்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமூக அடக்குமுறைக்கு எதிரான விடுதலை வேட்கையுடன் அவர்களின் தேடல்கள் தொடர்கிறது. ஆனால், ஒரே ஒரு வித்யாசம்! இவர்கள் இங்கு வேறு வேறு பெயர்களுடன் வேறொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமே அந்த வேறுபாடாகும். சத்தியத்திற்கான இவர்களின் தேடலுக்கும், சமூக விடுதலைக்கும் வழிகாட்ட வேண்டியது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாகும்.

மக்கத்து இறைநிராகரிப்பாளர் போலவே நமது நாட்டிலும் அதே சாயல்களுடன் வேறொரு பெயரில் சங்பரிவார் இந்து தீவிரவாதிகள்!

 இஸ்லாத்தை செயல்படுத்திக் காட்ட அதைப் பின்பற்றி வாழ அன்று போலவே இன்றும் போல ஒரு தியாகக் கூட்டம்!

ஆனால், 1434 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அந்த கொள்கையின் உயிர் துடிப்பு, இப்போது துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்திடம் இல்லாதது வருந்தத்தக்கது. இந்த தேக்க நிலையிலிருந்து மீண்டு முஸ்லிம் சமூகம் முழுமையான செயல்வடிவ முஸ்லிம்களாக மாற வேண்டும். திருக்குர்ஆனயும், திருநபிகளாரின் வழிமுறைகளையும் முழுக்க .. முழுக்க செயல்படுத்திக் காட்ட .. சொல்லாலும் செயலாலும் செயல்படுத்திக் காட்ட முன்வர வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தின் இந்த வாழ்வியல் முறைமை, 

"... (நபியே!) பொறுமையாக இருங்கள்; அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. நம்பிக்கைக் கொள்ளாதோர் உம்மை அலட்சியத்துக்குரியவராக .. மதிப்பற்றவராக காணக்கூடாது!" ( 30:60) 

- என்ற இறைக்கட்டளைக் கேற்ப முன்னுதாரணமான வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் இந்த வாழ்வியல் முறைமை,

"வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும்  கொடுத்தாலும் என் கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டேன்!" - என்ற அண்ணலாரின் தளராத கொள்கைப் பிடிப்புள்ளதாக இருக்க வேண்டும். 

இதுதான்  ஹிஜ்ரி புத்தாண்டும் நம்மிடம் வேண்டுவதாகும்!

முஸ்லிம் சமூகம் இத்தகைய கொள்கைப் பிடிப்புடன் .. குணாம்சங்களுடன், செயலுருவ சிப்பாய்களாக வாழ முன்வருவார்களேயானால்... இன்ஷா அல்லாஹ் இந்திய உபகண்டம்  ஹிஜ்ரத் இல்லாத மதீனாகிவிடும்! இறைவன் அதை நிச்சயம் உருவாக்கித் தருவான்!

- முற்றும்.

பகுதி 1 இணைப்புக்கு: http://mrpamaran.blogspot.in/2012/12/1_16.html
பகுதி 2 இணைப்புக்கு: http://mrpamaran.blogspot.in/2012/12/2_17.html

0 comments:

Post a Comment