NewsBlog

Friday, December 7, 2012

'வீணாகும் இளைய பாரதம்!', பகுதி - 1



நாட்டு வளர்ச்சிக்கு இன்றியமையாதது மனிதவளம். பிற வளங்களுடன் ஒப்பிடும்போது இதன் மதிப்பு அளவிட முடியாதது. நீர்வளம் குறைந்து விடலாம்! வனம் மற்றும் கால்நடை வளங்களில் பற்றாக்குறை ஏற்படலாம்! பூமியின் மடியில் மறைந்துள்ள கனிமங்களும் தீர்ந்துவிடலாம்! ஆனால், இயற்கையின் எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு காலத்தில் நிலைத்து நிற்கக் கூடியது மனிதவளம் அதாவது மனித சக்தி!

இத்தகைய மனிதவளத்தை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்பதே தற்போதைய வினா. 20-ஆம் நூற்றாண்டில் நடைப்பயின்று கொண்டிருக்கும் நாம் மனிதவள பயன்பாடு குறித்து சீர்த்தூக்கிப் பார்ப்பது அவசியம்.

நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்து கொண்டிருப்போர் இளைஞர்கள். இந்த இளைய சக்திதான் நாட்டை முன்னேற்றச் சிகரங்களைத் தொட வைக்கும் அற்புதமான மனிதவளமாகும். கடந்த மூன்று நாற்றாண்டுகளாய் உலகளவில் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1960-1980 க்கு இடைப்பட்ட காலத்தில் உகல மக்கள்  தொகை 46 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில் இதில் இளைஞர்களின் எண்ணிக்கை 66 விழுக்காடு!


இளைஞர்களின் மக்கள் தொகையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால்.. இது வளர்முக நாடுகளில் அதிகம் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும். உலக மக்கள் தொகையின் 84 விழுக்காடு இளைய சக்தி இந்த நாடுகளில்தான் உள்ளது. 

1995-இல் நடத்தப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, உலகில் 15-24 வயதுக்குட்பட்டோர் 102 கோடியே 50 லட்சமாக இருக்க.. அதில் 17 கோடியே 56 லட்சம் பேர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அந்த ஆய்வின்படி உலக நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களில் ஏழு பேரில் ஒருவர் இந்தியர்!

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 15 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் இருப்பாதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன அதாவது ஒவ்வொரு ஆறு இந்தியரில் ஒருவர் இளைஞர்! இதிலிருந்து நமது நாட்டில் மனிதவளம் எந்தளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆனால், இந்த மனிதவளத்தால் கிடைக்க வேண்டிய பலன்கள் மட்டும் நாட்டுக்கு இதுவரையும் கிட்டவில்லை என்பது வருந்தத்தக்கது. அரைநூற்றாண்டுக்கு மேலான சுதந்திர இந்தியாவில் இளைய சக்தியின் பங்களிப்பு சரியானதாக இல்லை என்றே சொல்லலாம். நமது கல்வி நிலையங்களில் கற்று வெளிவருவோரின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளாத அரசு திட்டங்களில் உள்ள குறைபாடுகளையே இது காட்டுகிறது.

 உலகின் தலைச்சிறந்த கல்வி நிலையங்களுடன் போட்டிப்போடும் விதத்தில்  தரம் வாய்ந்த கல்வி நிலையங்கள் நம்மிடம் உள்ளன. ஐஐடி, இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் போன்ற முக்கியமானவை இந்த பட்டியலில் அடங்குபவைதான்! ஆனால், இவற்றில் கல்வி கற்று வெளிவருவோரில் அதிகளவு பேர் அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்குப் பறந்து விடுகிறார்கள். அவர்களின் சேவையை தேச வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக நமது ஆட்சியாளர்கள் திட்டங்களை வடிவமைக்கவில்லை. நாட்டின் மொத்த மாணவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் தகுந்த வேலைவாய்ப்புகள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் என்பதே உண்மை. 

இளைய சக்தி வீரியமானது. எதையும் சாதிக்கக்கூடியது. அதற்கான சரியான வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பதே துரதிஷ்டவசமானதாகும். தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியாத நிராசையில் சமூகத்தின் மீது வெறுப்பு ஏற்படுவது இயல்பானது. தம்மை இந்த இழிநிலைக்கு ஆளாக்கிய அரசியல் தலவர்கள் மீதும், அரசாங்கம் மீதும் அதிருப்தி அடைவது தவிர்க்க முடியாதது. 

நாட்டில் நிராசை அடைந்த இளைஞர்கள் எத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு மும்பை நல்ல உதாரணம். மும்பையில் சட்ட விரோத நடவடிக்கைகளில் அதிகளவு ஈடுபட்டிருப்போரும், வணிகர்களையும், தொழிலதிபர்களையும் மிரட்டி பணம் பறிப்போரும் இளைஞர்கள்தான்.

ஆரம்பத்தில் இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தேர்ச்சிப் பெற்ற குண்டர்கள் என்று காவல்துறை கருதியிருந்தது. ஆனால், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்தான் இத்தகைய கிரிமினல் நடவடிக்கைகளில் பங்கெடுப்போர் என்ற அதிர்ச்சி வெளிப்பட்டது. காவல்துறையினரிடம் சிக்கியவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ளவும், வறுமையிலிருந்து விடுபடவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாய் அளித்த வாக்குமூலங்கள் இந்த உண்மையைப் புலப்படுத்தியது.

அதேபோல, தீவிரவாத இயக்கங்களில் முன்வரிசையில் நிற்பதும் இளைஞர்கள்தான். இந்த சமூக அவலத்துக்கான காரணம் நமது ஆட்சியாளர்கள் மனிதவளத்தைக் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  

 அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அணைகள், ஆய்வுகூடங்கள் கட்டினால்.. இரண்டு ஐந்தாண்டு திட்டங்கள் முடிவதற்குள் இந்தியா சோவியத்தைப் போல வளர்ச்சியின் சிகரங்களைத் தொடும் என்று நினைத்தார். ஆனால், தனது இந்தக் கனவுகளை நிறைவேற்ற இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்று ஏனோ அவர் தீவிரமாக சிந்திக்கவில்லை. இதன் விளைவாக அரசு திட்டங்களில் 1980 வரை இளைஞர்களுக்கான ஒரு திட்டமும் உருவாக்கவில்லை. 

-- இளைய பாரதம் இன்னும் எழும்!

0 comments:

Post a Comment