NewsBlog

Thursday, December 13, 2012

சிறுகதை: 'சொந்தமில்லா பந்தங்கள்!'



ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன், அவளுக்கும் எனக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை! இருந்தாலும் அவளைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் கனத்துப் போகிறது. சுற்றுச்சூழல் மறந்துபோய்.. அவளுக்கு உதவி செய்ய மனம் துடியாய் துடிக்கிறது.

அன்றும்கூட அப்படிதான். கடைத்தெருவுக்கு வந்திருந்த என் மனைவியை இறக்கிவிட்டு பைக்கை நிறுத்திய  பிறகு பார்த்தால்.. அவள் பக்கத்திலேயே அமர்ந்திருந்தாள். என் மனைவி ஆசை ஆசையாக பொறுக்கி வாங்கியிருந்த ஆப்பிள் பழங்களை அவளிடம் கொடுத்துவிட்டு வந்தபின்தான் என் மனம் லேசானது. 

என் மனைவி ஆச்சிரியத்துடன் பார்த்தாள். பல நேரங்களில் பல மனிதர்களின் புருவங்கள் இப்படிதான் உயர்ந்திருக்கும். சில நேரங்களில் பணமாகவும், சில நேரங்களில் பழங்களாகவும்  இன்னும் சிலநேரங்களில் தின்பண்டமாகவும் அவளிம் என் நேசத்தை வெளிப்படுத்துவதில் எனக்கு அலாதியான திருப்தி. 

 பலநாள் தலை வாராததால் சடை விழுந்துபோன தலைமுடி. அழுக்கடைந்த உடல். கிழிந்த சேலை. ஏதோ நோய் தாக்கியதைப் போல தோற்றம். மனோரஞ்சிதம் என்னமாய் மாறி போய் இருந்தாள்!

மனோரஞ்சிதம் அழகு தேவதை என்று சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லாவிட்டாலும், அவள் அந்தப் பகுதி ஆண்களுக்குத் தினமும் தேவயான அழகுடையவளாகவே இருந்தாள். வசீகரம் இல்லாத ஏதோ ஒரு வசீகரம் அவளிடம் இருக்கவே செய்தது. 

முட்புதர்கள் நிறைந்த வேலிக்குள் இருந்த அவளுடைய குடிசை வீட்டை நோக்கி இரவு-பகல் என்று எப்போதும் ஆண்கள் படையெடுத்தவாறே இருப்பார்கள். 

பள்ளி நாட்களில் எங்கள் பத்தாம் வகுப்பின் ஜன்னலிலிருந்து பார்த்தால் மனோரஞ்சித்தின் வீடு நன்றாகவே தெரியும். சில மாணவர்கள் அவளது வீட்டுக்கு வரும் கஸ்டமர்களை எண்ணுவதிலேயே குறியாக இருப்பார்கள். 

வகுப்பில் தாமோதரன் நன்றாக வளர்ந்த மாணவன். திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகள் என்று இருக்க வேண்டியவன். ஆனால், அவன் ஒவ்வொரு வகுப்பிலும் ஒன்றுக்கு இரண்டு வருடங்கள் தங்கிப் படித்தவன். எல்லா விவரங்களும் அறிந்தவன். நடமாடும் வாத்ஸ்யாயனர்.


ஆசாராமாக வளர்க்கப்பட்ட எனக்கு எனது சக தோழர்கள் பேசுவது அரைகுறையாகத்தான் விளங்கும். பிடித்தும், பிடிக்காததுமாய் அந்தப் பேச்சுகளைக் கேட்பதில் அலாதியான விருப்பம். 

மாணவர்களை மனோரஞ்சிதம் கஸ்டமர்களாக சேர்த்துக் கொள்ளாவிட்டாலும்கூட தாமோதரன் அவளைக் கட்டாயப்படுத்தி இன்பம் துய்ப்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்வான். சில நேரங்களில் பணம் கொடுத்துவிட்டுப் போவானாம். இன்னும் சில நேரங்களில் பணம் இல்லாவிட்டாலும்கூட அவனுக்கு அனுமதிப்பாளாம்.

"பணமில்லை.. நாளைக்குத் தரேன்!" - என்பானாம். "பணமும் வேண்டாம்..! ஒன்றும் வேண்டாம்..! ஒழுங்காய் படிப்பில் கவனம் செலுத்துற வழியைப் பார்!" - என்று பரிவோடு அறிவுரை சொல்லுவாளாம்.

இதையெல்லாம் தாமோதரன் எங்களிடம் பெருமையாகச் சொல்வான். அவனைச் சுற்றி இருக்கும் மாணவர்கள் இதை ரசிக்கும்போது எனக்கோ மனோரஞ்சிதம் வலியால் துடிப்பதாகத் தோன்றும். வேதனைத் தாளாமல் அலறுவதாகக் காதுகளில் ஒலிக்கும். 

தாமோதரன் நினைவு வரும்போதெல்லாம், "வெறிப்பிடித்த நாய்களா..!"- என்று என் மனம் திட்டித் தீர்க்கும்.

தாமோதரனுடன் பத்தாம் - பதினொன்றாம் வகுப்புகளில் படித்த அந்த இரண்டாண்டுகளில் அவன் எந்தவிதமான நோய்நொடிகளுக்கும் ஆளாகவில்லை. இது ஒன்றே மனோரஞ்சிதம், கஸ்டமர்களுக்காகத் தனது உடலை நல்ல ஆரோக்கியமான நிலையில் வைத்திருந்தாள் என்பதற்குச் சான்று.

 ஆயிற்று.. இருபது.. இருபத்தி ஐந்தாண்டுகள். வாழ்க்கையும், அதன் சுமைகளும் அழுத்த அதிலேயே கவனம் மூழ்கியிருந்த நேரத்தில்தான் மனோரஞ்சிதத்தை ஒருநாள் தெருவோரத்தில் பார்த்தேன். 

தொலைந்து போன இளமையும், குலைந்துபோன உடலுமாய்த் தென்பட்டாள். ஏதோ கனவுலகில் சஞ்சரிக்கும் மாந்த்ரீகனைப் போல அவள் பார்வை வெறுமையாக இருந்தது. அவளை அடையாளம் கண்டுபிடிப்பது எளிதாக இல்லையென்றாலும் இளமையின் அழுத்தமான பதிவுகள் அவளை இனம் காட்டிக்  கொடுத்து விட்டன. 

ஏற்கனவே பள்ளி நாள்களில் சபலங்களையும் தாண்டி மனோரஞ்சிதத்தின் மீது ஏற்பட்டிருந்த இனம் புரியாத சிநேகிதம் இப்போது என்னுள் கிளைவிட்டுப் படர்ந்திருந்தது. அவளுடைய எதிர்காலம் என்னுள் பெரும் சுமையாக அழுத்துகிறது. அவளைப் பார்க்கும்போதெல்லாம் நிற்கிறேன். சூழல்களைப் புறந்தள்ளிவிட்டுத் தோழமையுடன் அவளை நெருங்குகிறேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்யத் துடிக்கிறேன். 

ஆரம்பத்தில் சொன்னது போல, அவளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவள் மனுஷி. நான் அவளது சக மனுஷன் என்பதைத் தவிர!

0 comments:

Post a Comment