NewsBlog

Monday, December 17, 2012

'ஹிஜ்ரத்' இல்லாத 'மதீனா'..! பகுதி - 2




குறைஷிகள் தங்கள் திட்டம் தோல்வியடைந்ததைக் கண்டார்கள். 

நேரிடையான மோதலில் இறங்கினார்கள்.

இந்த தனிநபர் வார்த்தை பிரயோகங்களின்தான் எல்லா பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. தடித்த வார்த்தைகள்.. அதைத் தொடர்ந்து இனக்கலவரங்கள், சமயப்பூசல்கள் வரை இந்த வார்த்தைகள்தான் கொண்டு சேர்க்கின்றன. 

ஆனால். அண்ணல் நபிகளார் இவற்றை அழகிய முறையில் எதிர்கொள்கிறார்கள். 

"முஹம்மதே! 

"எம்மைச் சுற்றியுள்ள இம்மலைகள் அனைத்தையும், தரைமட்டமாக்கி... சிரியாவிலும், இராக்கிலும் உள்ளதைப் போல நதிகளை ஓடவிடச் செய்யும்படி உமதிறைவனிடம் கேளும்!"

"எங்களது முன்னோர்களில் சிலரை குறிப்பாக குஸையை மீண்டும் உயிர்ப்பிக்கச் சொல்லும்! உம் தூதைப்பற்றி அவரிடமே நாங்கள் கேட்டு தெளிவுப் பெறுகிறோம்!"

"இவைகளை எங்களுக்கு செய்துதர முடியாவிட்டாலும் பரவாயில்லை! உமக்காவது சில உதவிகளை இறைவனிடம் கேளும். 

உம்மிடம் ஒரு வானவரை அனுப்பி நீர் சொல்வதை உறுதிப்படுத்தியும், நாங்கள் சொல்வதைப் பிழையென காட்டும்படியும் உம் இறைவனிடம் கேளும்!"

"தோட்டங்கள், மாளிகைகள், தங்கம்-வெள்ளி முதலான செல்வங்களை தரும்படி கேளும். இதிலிருந்து உமது செல்வாக்கு உமதிறைவனிடம் எவ்வாறு உள்ளது  என்பதை நாங்கள் அறிந்து கொள்கிறோம்!"

இப்படி எல்லாம் நபிகளாரை குறைஷி இறை நிராகரிப்பாளர்கள் கிண்டலும், கேலியுமாய் பரிகாசம் செய்தனர்.

 அண்ணல் நபிகளார் (ஸல்) மிகவும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள்.  இந்த பரிகாசங்களுக்கு பொறுமையாகவே பதிலளித்தார்கள். உணர்ச்சிப்பூர்வமான எந்த ஒரு நடவடிக்கைகளையும் அவர்கள் பிரதிபலிக்கவில்லை. இப்படி சொன்னார்கள்:

"இப்படிப்பட்ட விஷயங்களை நான் இறைவனிடம் கேட்கக்கூடிய வனுமல்ல. நான் அதற்காக அனுப்பப்பட்டவனுமல்ல. அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவும், நன்மாராயங் கூறுபவனுமாகவே இறைவன் என்னை அனுப்பியுள்ளான்!"

கொதித்தெழுந்த குறைஷிகள், "ஓ! முஹம்மதே! நாங்கள் உம்மை  நிம்மதியாக இருக்க விடமாட்டோம்! உம்மை நாங்கள் அழிக்கும்வரை .. அல்லது நீர் எங்களை அழிக்கும்வரை ஓயமாட்டோம்!"- என்று சூளுரைத்தார்கள். 

இவை எல்லாம்,

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாத்தின் திருச்செய்தியை மக்களுக்கு எடுத்த வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதை பொறுத்துக் கொள்ள முடியாத இறை நிராகரிப்பாளர்களான குறைஷிகள் இறைத்தூதரையும், அவர்களது திருச்செய்தியையும் கடுமையாக எதிர்த்ததை விளக்கும் வரலாற்றுச் சம்பவங்கள். 

மக்காவின் மண்ணில் பிறந்து ...

அப்பாலையின் காற்றைச் சுவாசித்து...

தம் வியர்வையை அம்மண்ணிலேயே சிந்தி உழைத்து.. வாழ்ந்தவர்கள்.. 

சத்தியத்தை ஏற்று ...

அதை பிரகடனப் படுத்திய ஒரே காரணத்துக்காக..

அண்ணலார் பட்ட துன்பங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாத துன்பக் காவியங்கள்.

இறைவனின் திருச்செய்தியை சமர்பித்து நல்லொழுக்க அடிப்படையில் ஒரு சமூகம் கட்டமைப்பதற்கான அண்ணலாரின் முயற்சிகளுக்கு கிடைத்த பரிசுகள்... சித்திரவதைகள், சமூக விலக்குகள், அடக்குமுறைகள் என விதம் விதமாக நீளும் பட்டியல் அது.



சுற்றமும், நட்பும், ஒட்டு மொத்த சமூகமும் பகையாகி நின்றபோது, 

அண்ணல் நபிகளார் (ஸல்) சத்தியத்தையும், பொறுமையையும் மட்டும் ஆயுதங்களாகிக் கொண்டார்கள். ஓராண்டல்ல.. ஈராண்டல்ல பதிமூன்றாண்டுகள் தாய் மண்ணில் மௌன யுத்தம் நடத்தினார்கள்.

இந்தக் காலக்கட்டத்தில் ஒரே ஒரு முறைதான் இறை நிராகரிப்பாளன் ஒருவனை முஸ்லிம்களில் ஒருவர் ஒட்டகத்தின் தாடை எலும்பைக் கொண்டு தாக்கி காயப்படுத்தியதாக வரலாறு சொல்கிறது.


 -- இன்னும் வரும்

பகுதி 1 இணைப்புக்கு: http://mrpamaran.blogspot.in/2012/12/1_16.html
பகுதி 3 இணைப்புக்கு: http://mrpamaran.blogspot.in/2012/12/3.html


0 comments:

Post a Comment