"சினிமா ஓர் உன்னதமான தேடல். இந்தியாவின் வல்லரசு கனவு. சந்திரனுக்கு விண்கலம் ..... என ஒரு பக்கம் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிறோம் நாம். இன்னொரு பக்கம் இருக்கிற ரணங்களை உள்நோக்கிப் பார்ப்பதில்லை.
பீகார் மாநிலம்,முஸாபர்நகருக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு கிராமத்தில் இப்போது வரை 6 மாத பெண் குழந்தைகளை விற்கும் வாரச் சந்தை நடந்து வருகிறது. மும்பை, கொல்கத்தா போன்ற சிவப்பு விளக்குப் பகுதிகளில் பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தவே அந்த குழந்தைகளைப் பெற்றோர்களே விற்கும் கொடுமை. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என தேடிப் போய் பார்த்தால், அத்தனை பயங்கரம்.
வாழ்க்கையின் மிகச் சிறந்த சுவாரஸ்யம் என்ன? அடுத்த நொடியில் என்ன நடக்க போகிறது என்பதுதானே? ஆனால், சிந்திக்க வாய்ப்பில்லாத சுயம் இல்லாத ஒரு பச்சிளம் குழந்தையின் வாழ்க்கையை சில ரூபாய்கள் அங்கே தீர்மானித்து வைக்கின்றன. அதை அப்படியே சினிமாவுக்குள் எடுத்து வர முடியாது. அப்படியே கொண்டு வந்தால் அதில் உள்ள அரசியலை பேச வேண்டியிருக்கும்.
அதனால் அப்படி விற்கப்பட்ட ஒரு பெண் குழந்தை 18 வயதில் திரும்பி வந்து தன் பெற்றோரைச் சந்திக்கும் போது வருகிற சூழல், இங்கே தமிழ்நாட்டு பக்கம் குற்றாலத்துக்கு வந்து போகிறபோது அந்த பெண்ணுக்கு ஏற்படுகிற சின்ன சிநேகம் இது போன்ற விஷயங்களை உள்ளுக்குள் வைத்து கதை புனைந்திருக்கிறேன்!"
'என்னதான் பேசுவதோ' திரைக்கதை சம்பந்தமாக 09.02.2014 தினமணிக்காக அதன் இயக்குனர் 'ஆச்சார்யா' ரவி அளித்த பேட்டி இது.
சிவப்பு விளக்குப் பகுதிகளின் பாலியல் காட்சிகள் அநேகமாக காட்சிப்படுத்தப்படும் என்பதால், இந்த திரைப்படம் நிச்சயம் ஓடலாம்; ஓடாமலும் போகலாம். ஆனால், இந்த திரைப்படம் பேசும் கதைக்கான தீர்வு என்ன?
ஒரு திரைப்படக்கலைஞனுக்கு சமூக அவலங்களை எதிர்த்துப் போரட பொறுப்புணர்வு இல்லையா? இருக்கும் அரசியலை எதிர்த்து மாற்று அரசியலை சொல்லும் சமூக கடமை வேண்டாமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
ஆச்சார்யா ரவி சொல்லும் அந்த கிராமத்துப் பெண்கள் தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை வெறும் சொற்ப ரூபாய்களுக்கு விற்கும் அவலத்துக்கு அவர்களைத் தள்ளியது எது? அதற்கான மாற்றுதான் என்ன? என்று பார்ப்பதுதானே பிரச்னையின் முழு தீர்வாக இருக்க முடியும்?
அதேபோல, முஸாபர்நகருக்கு பக்கத்து கிராமங்களைக்குள் நுழைந்து உண்மைகளை உரசிப் பார்த்த ஆச்சார்யா ரவிக்கு முஸாபர்நகருக்குள் அண்மையில் நடந்த வகுப்பு கலவரங்களால் அநாதையாக்கப்பட்ட பச்சிளங் குழந்தைகளின் அவலங்கள் தெரியாமல் போனதேன்? அரசின் பொறுப்பின்மையால் நிவாரண முகாம்களில் இறந்து கொண்டிருக்கும் பச்சிளங் குழந்தைகள் செய்த குற்றங்கள்தான் என்ன?
உண்மையில், ஒவ்வொரு மனிதனும் அவரவர் வகிக்கின்ற பொறுப்புகளையொட்டி பொறுப்பாளியாவார். அந்த பொறுப்புகள் குறித்து அவர் நிச்சயம் பதில் சொல்லிதான் ஆக வேண்டும். இல்லையென்றால் அவர் இந்த சமூகத்தில் வாழ தகுதியற்றவர் என கருதப்பட வேண்டியவராவார்.
0 comments:
Post a Comment