NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Monday, September 30, 2013

சிறப்புக் கட்டுரை:'ஒரு கிலோ மூங்கிலில் ஒரு யூனிட் மின்சாரம்!'



தமிழகத்தின் அரசியலை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கிய இடம் பிடித்தது மின்வெட்டு பிரச்னை! ஆட்சிமாற்றம் நிகழ்ந்த பிறகு தற்போது மண்ணின் உயிர்களை மயனமாக்க மத்திய அரசு அணுமின் நிலையத்தை பிடிவாதமாக தமிழகத்தில் அமைக்க இருக்கிறது. மின்சாரம் என்னும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முனைந்திருக்கிறார் ஓசூர் நகரில் இயங்கிவரும் குரோமோர் உயிரிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் என்.பாரதி.

இவர் கண்டுபிடித்திருக்கும் பீமா என்ற மூங்கில், மின் உற்பத்தியில் உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியது என்பது முக்கியமானது. 

"சும்மா கிடைக்குமா சுதந்திரம்?" - என்று சொல்வது போல, பீமா மூங்கில் 'ஜீபூம்பா' மாஜிக்கில் கிடைத்ததல்ல. இதற்காக பாரதி நான்கு ஆண்டுகாலம் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. வழக்கம்போல ஆய்வாளர் சந்திக்க வேண்டிய அத்தனை விமர்சனங்களையும் தாங்கி பொறுமையுடன் செயல்பட வேண்டியிருந்தது. 

சரி.. பீமாவில் அப்படி என்ன விசேஷம்? இத்தனை ஆண்டுகள் சிரமம் எடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? இந்த கேள்விகள் எழுவது சகஜம்தான்.


வழக்கமான மூங்கிலைக் காட்டிலும் பீமா மாறுபட்டது என்பதே இதன் முதல் விசேஷம். ஆரம்பத்தில் 6 மாதங்கள் வரை வெறும் 6 அங்குலமே வளரும் பீமா மூங்கில், அடுத்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு நாள்தோறும் ஒன்றிலிருந்து ஒன்றரை அடிவரை கிடுகிடுவென்று வளரக்கூடியது என்பதே இதன் சிறப்புத்தன்மையாகும்.

அத்தோடு, சூரிய ஒளியின் உதவியுடன் வளரும் பீமா, கரியமிலவாயுவை அதிகளவில் உறிஞ்சிக்கொண்டு வளர்கிறது. இதற்கு பதிலாக மனித இனம் சுவாசிக்க உதவும் பிராணவாயுவை அதிகமாக வெளியேற்றி சுற்றுச் சூழலைக் காக்கிறது.

சூழல் மாசுபடாமல் தடுப்பதோடு நின்றிருந்தால் பீமா பேசப்பட்டிருக்காது. மனித வாழ்க்கைக்கு அத்யாவசியமான மின்சாரம் தயாரிக்கவும் பீமா மகத்தான பங்கு வகிக்கிறது.

ஆம்... ஒரு ஏக்கரில் ஆயிரம் பீமா மூங்கில் செடிகளை நட்டால்.. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து 40 டன் மூங்கிலை அறுவடைச் செய்யலாம். பீமா மூங்கிலை எரியூட்டுவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்; அதுவும் ஒரு கிலோ மூங்கிலில் ஒரு யூனிட் மின்சாரம்!

“மின் பற்றாக்குறையால் தவிக்கும் நம் நாட்டில் கிராமந்தோறும் மூங்கில் பயிரிட்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மின்தேவையை சமாளிக்க நாம் தயாராகிவிடுவோம். அதுவும் இயற்கையான முறையில் சூழல் மாசுபடாமல் இது சாத்தியமாகும். இப்படி கிராமந்தோறும் 200 ஏக்கரில் மூங்கில் விளைவித்தால் போதும் ஒருமணி நேரத்திற்கு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால்,  ஆண்டின் 52 வாரங்களில் 7 ஆயிரம் மெகாவாட் முதல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்!”- என்கிறார் ஆயிரம்வாட் மின்பூக்கள் உதிரும் கண்களோடு பாரதி!

வழக்கமாக ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு ஆகும் செலவு 5.40 ரூபாயாகும். ஆனால் மூங்கில் விறகில் தயாராகும் மின்சாரத்தின் அடக்கவிலை ரூ.1.50 மட்டுமே என்பது வியப்புக் கலந்த உண்மை! மூங்கில் விறகால் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை! மின் தேவையிலும் தன்னிறைவு அடையமுடியும்! விவசாயிகள் ஒரு ஏக்கரில் மூங்கில் பயிரிட்டால் ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய்வரை வருவாய் ஈட்டமுடியும். பீமா, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, கிராம பொருளாதாரத்தையும் மேம்படுத்த பெரிதும் உதவும்.

“…… இதுகனவு போல தோன்றினாலும், நடைமுறை சாத்தியமானதே! இதற்கான உதாரணங்கள்  தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிரூபித்துள்ளோம்.  கடந்த எட்டு ஆண்டுகளில் இந்நாடுகளில் 14 லட்சம் பீமா மூங்கில் செடிகளை நடவு செய்துள்ளோம். அதேபோல, நமது நாட்டிலும் 1.5 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது!”- என்கிறார் பாரதி.

இத்தனை சிறப்புகள் பெற்ற பீமா மூங்கிலை பயிடுவதற்கான அத்தனை பயிற்சிகளையும் பாரதி அளிப்பது இன்னும் விசேஷம். 

"தரிசுநிலமா? வரண்ட காடா? பயம் வேண்டாம்! நாங்களிருக்கிறோம்! பீமா மூங்கில் செழித்து வளரும்!" என்கிறார் பாரதி நம்பிக்கையூட்டும் புன்சிரிப்புடன்!

தமிழகத்தில் இயங்கிவரும் 12 சர்க்கரை ஆலைகளில் மூங்கில் விறகு மற்றும் கரும்புச் சக்கை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பரிட்சார்த்த முறையில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் 2 ஆயிரம் ஏக்கர் அளவு நிலப்பரப்பில் பீமா மூங்கிலை பயிரிடுமாறு தமிழக அரசு பாரதியைக் கேட்டுக்கொண்டுள்ளது ஒரு நல்ல செய்தியாகும். அதேபோல, கர்நாடகமும் பாரதியின் பீமா மூங்கில் பயிரிடுவதற்கு முனைப்புக் காட்டி வருகிறது.

விறகு மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுவதை ஊக்குவிப்பதற்காக மத்திய திட்டக்குழு உயிரி எரிசக்திக்கான துணைக்குழுவை அமைத்துள்ளது. அதில் பாரதியையும் உறுப்பினராக சேர்த்துள்ளனர் என்பது மற்றொரு விசேஷமான தகவலாகும்.

எதிர்வரும் காலத்தில் உயிரி எரிசக்தி பிரபலமடையும் என்ற நம்பிக்கை உள்ள நிலையில் பீமா மூங்கில் முக்கியப் பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை! மாற்று எரிசக்திக்காக ஏங்கும் இந்தியாவில் மாற்று சிந்தனையால் உருவானதுதான் பீமா மூங்கில்! பீமா விண்முட்ட வளர்ந்து நம் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யும்.

இந்தியாவின் மின் தேவை வெறும் மூங்கில் விறகின் மூலம் தீர இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியனின் சாதனையை வருங்காலம் பேசும் என்பது இன்னும் உள்ளத்தை குதுகலமடையச் செய்கிறது. ஒரு முறுக்கு மீசைப் பாரதியைப் போல பீமா பாரதியின் பங்கு இந்திய வரலாற்றில் மகத்தானதாக இடம் பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

Sunday, September 29, 2013

வாழ்வியல்: 'தவளையைப் போல் தவறிழைக்க வேண்டாம்!'


ஒரு தவளை கொதிக்க வைக்க இருக்கும் நீரில் விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அடுப்பை மூட்டியதும் நீரும் சிறிது சிறிதாக கொதிக்க ஆரம்பிக்கிறது.

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது, தவளை தன் உடலை அந்த வெப்பநிலைச் சூழலுக்கு ஏற்ப தன்னையும் மாற்றிக் கொள்ளும். வெப்பம் அதிகரிக்க.. அதிகரிக்க தவளையும் தன் இயல்பை அந்த வெப்பநிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டேவரும்.

கடைசியில், தண்ணீர் கொதிநிலையை அடையும் அந்த தருணத்தில் வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதித்து தப்ப முயலும். ஆனால்,  எவ்வளவுதான் முயன்றாலும், தவளையால் கொதிநீரிலிருந்து தப்பி வெளியேற முடியாது. பாவம் கடைசியில் அது இறப்பைத் தழுவ வேண்டியிருக்கும்.

அந்த தவளையை கொன்றது யார்?

இதைப் படிக்கும் பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்ல வருவீர்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. ஆபத்திலிருந்து எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் முட்டாள்தனம்தான் அதை கொன்றது.

இந்த உதாரணம் தன் கையாலேயே தன் உயிரைப் போக்கிக் கொண்ட அந்த அப்பாவி தவளைக்கு மட்டுமே ஆனதல்ல.

நமக்கும் இது பொருந்தும்தான்!

நாமும் அந்த தவளைப் போன்றுதான் பலநேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப எல்லோரிடமும்  அனுசரித்து போகிறோம். எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் இந்த அணுசரனை தொடர்கிறது.

எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளாத அறியாமையே இதற்கு காரணம்.

மனரீதியாக, உடல்ரீதியாக, பணரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரித்துக் கொள்ளாமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக அவர்கள் செய்ய ஆரம்பிப்பார்கள். உடலில் வலிமைமையோடும், மனதில் தெளிவோடும், நற்சிந்தனையோடும் அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதலே சாலச் சிறந்தது. இல்லையென்றால் அந்த தவளைக்கு ஏற்பட்ட நிலைமைதான் நமக்கும்!

உண்மைதான்! நாம் அனுமதித்தால் ஒழிய எவராலும் நம்மை அழிக்க முடியாது.

காலப்பெட்டகம்: 'அஸதுத்தீன் உவைஸி'


அஸதுத்தீன் உவைஸி. 

அண்டை மாநிலம் ஆந்திரத்தின் அரசியல் சிங்கம்.

அரசியல்வாதி என்றாலே அசிங்கம் என்றாகிவிட்ட சூழலில் அரசியலை தூரெடுத்து தூய்மை செய்ய போராடிக் கொண்டிருக்கும் உண்மையான போராளி. உண்மையிலேயே,  மக்களுக்காகவே அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கும் மனிதர்.

1969 ஆம் ஆண்டு, மே மாதம் 13 ஆம் தேதி 1969ல் ஆந்திரத்தின் ஹைதராபாத்தில் சுல்தான் சலாஹுதீன் உவைசி என்ற அரசியல் பிரமுகருக்கு மகனாய் பிறந்தார். இவருடைய தந்தை 6 முறை தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அஸதுத்தீன் உவைஸி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில் B.A பட்டம் பெற்றார். பிறகு மேற்படிப்பிற்காக லண்டன் சென்றார். அங்கு LLB சட்டம் பயின்று வழக்குரைஞரானார். 

இந்நிலையில், உவைஸியின் தந்தை தலைமை தாங்கி நடத்திவந்தஅனைத்து இந்திய மஜ்லிஸ்--இத்திஹாதுல் முஸ்லிமீன்’ என்ற அரசியல் கட்சியில் பங்கெடுத்தார். 2009ஆம் ஆண்டிலிருந்து உவைஸி அந்த இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

உவைஸியின்  ஆதரவாளர்கள்நகீப்--மில்லத்’ என்று சிறப்புப் பெயரிட்டு இவரை அழைக்கின்றனர்.

1994 ஆம் ஆண்டு,  ஹைதராபாத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் உவைஸி வெற்றி பெற்றார். 1999 இல், நடந்த அடுத்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அதிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார்.  அதைத் தொடர்ந்து மக்களவைக்கான தேர்தல்களின் போட்டியிட்டு 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மக்களவை உறுப்பினராகவும் உவைஸி இருந்து வருகிறார். 

டெய்ல் பீஸாக.. 

அண்மையில், மக்களவை உறுப்பினர்கள் குறித்தும் மக்களவையில் அவர்களது செயல்பாடுகள் குறித்தும் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின்படி, காங்கிரஸ் கட்சியின் மத்தியப் பிரதேசத்தின் மக்களவை உறுப்பினர் மீனாட்சி நடராஜன் 85 விழுக்காடு  நாட்கள் மக்களவைக் கூட்டங்களில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். அதேநேரத்தில் மக்களவையில் அவர் எழுப்பிய கேள்விகள் 135 மட்டுமேயாகும்! ஆனால், அஸதுத்தீன் உவைசி 1042 கேள்விகள் கேட்டு சாதனை படைத்துள்ளார் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மக்களவை செயல்படாமல் முடக்கி வைத்தது சம்பந்தமான ஓர் ஆய்வு நடத்தப்பட்டால்..

அதில் பி.ஜே.பி முதலிடம் பெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தகவல்: அஹ்மது ரிஜ்வான்
Ahamed Rizwan