NewsBlog

Wednesday, September 4, 2013

சிறப்புக் கட்டுரை: 'காலாவதியாகும் ‘கௌபாய்’ போர்கள்!'



மத்திய கிழக்கு நாடுகள் ‘கௌபாய் ஹோட்டல்களாகி விட்டன; சிரியா உட்பட! வழிப்போக்கர் யார் வேண்டுமானாலும் ‘டிஜாங்கோ’ பாணியில் துப்பாக்கியை உருவி “பட்.. பட்”டென்று சுட்டு வீழ்த்திவிட்டு உரிமையாளர்களாவது போலதான் நிஜத்திலும் நடக்கிறது.

ஆம்..! மத்திய கிழக்கு நாடுகளின் மீது யார் வேண்டுமானாலும், போர்த் தொடுத்து அந்த நாடுகளின் கலை, கலாச்சார சின்னங்களை அழிக்கலாம், நாகரீகத்தை சீர்க்குலைக்கலாம். மனித உயிர்களைப் பறிக்கலாம். மண்ணின் மைந்தர்களான அம்மக்களின் கண்ணியத்தை சூறையாடலாம். கனிம வளங்களை கொள்ளையடிக்கலாம். ஏன் பூகோள அமைப்பையே மாற்றியமைக்கலாம். கடைசியாக, தனது எண்ணங்களுக்கொப்ப தலையாட்டி பொம்மைகளாய் ஆட்சியாளர்களை நியமிக்கலாம்.


இந்த அத்துமீறலுக்கான உள்நோக்கம் எரிவாயு, நிலப்பரப்பு, ராணுவ மேலாண்மை எதுவாகவும் இருக்கலாம். காரணம் கற்பிக்க ரசாயன ஆயுதங்கள்.. போலியான மனித உரிமை நிலைநாட்டல் என்று ஆயத்தமான எவ்வளவோ பொய்கள் இருக்க கவலைப்பட என்ன இருக்கிறது? அதேபோல, தலையாட்டி பொம்மையாய் ஐநா மன்றமும், தீர்மானங்களை உலக சமூகத்தின் மீது திணிக்க சிற்றரசர்களாய் அதன் தலைவர்களும் இருக்க தயக்கம் கொள்ள காரணம் என்ன இருக்கிறது?

மிகவும் மோசமான உள்நாட்டு யுத்தத்தில் ஏற்கனவே சிரியா சிக்கிக் கொண்டுள்ள நிலையில் உலக 'பெத்தண்ணா' "உன்னை ஒழிக்கிறேனா இல்லையா.. பார்!" - என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது.  ஒருபுறம், அமெரிக்கக் கழுகும், மறுபுறம் ரஷ்ய கரடியும் நவீன ஆயுதங்களின் விற்பனை சந்தையாக தற்போது சிரியாவை தேர்ந்தெடுத்திருக்கின்றன. இதுவும் போதாதென்று தற்போது அமெரிக்கா சிரியாவின் மீது ராணுவ நடவடிக்கை என்று மிரட்டிக் கொண்டிருக்கின்றது.

போருக்கான காரணமாக இருப்பது.. 'சாம் அங்கிளுக்கு' சொல்லித் தர வேண்டுமா என்ன? அவை மலை.. மலையாக இருக்கும் போது! 

தற்போது கிடைத்திருக்கும் காரணம் நரம்புகளை முடக்கும் நச்சுவாயுவை தன் சொந்த மக்களுக்கு எதிராக சிரியா பயன்படுத்தியது! என்று நாட்டாண்மையால் ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பு வாசிக்கப்பட்டது. மக்களை கொன்றொழித்து.. மகாராசாவாக முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்ட பிறகு காரணமாவது கத்திரிக்காயாவது? அதுவும் உலக போலீஸைப் பகைத்துக் கொள்ள யாரால்தான் முடியும்? அதன்பிறகு என்கவுண்டரில் போட்டு தள்ளிவிடுமே!

இந்த பூமிப் பந்தை தம் சந்ததிகளுக்கு சொத்தாக விட்டு விட்டுச் செல்ல வேண்டியவர்கள், அமைதி விரும்பிகள்.. போரற்ற உலகம் வேண்டும் என்று போராடி வரும் நிலையில் போர் இனி காலாவதியாகிப் போனது என்று எண்ணிய நிலையில் அமெரிக்க ஏகாத்திபத்யம் ஆள் – அம்பாரிகளை அணி திரட்ட ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. சிரியா மீது அமெரிக்கா போர்த் தொடுக்க தனது முதல்நிலை கூட்டாளியான இங்கிலாந்தையும் இணைத்துக் கொள்ள முயன்றது. ஆனால், இங்கிலாந்து ஒபமாவுக்கு ஆதரவு தர முடியாத நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுவிட்டது.


இங்கிலாந்து பாராளுமன்றத்தில் காமரூன் தாக்கல் செய்த சிரியாவின் மீதான ராணுவ நடவடிக்கைக்கான தீர்மானம் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது. போருக்கு ஆதரவாக 272 பேரும், எதிராக 285 பேரும் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது அதாவது 13 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தீர்மானம் ஆரம்பநிலையிலேயே நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் இங்கிலாந்து மக்கள் போரை விரும்பவில்லை என்றே கருதலாம்.

போரினால்.. எதையும் சாதிக்க முடியாது..! பேரழிவு.. உயிரிழப்பு.. என்பதைத் தவிர! என்பது இன்னும் அமெரிக்காவுக்கு புரியவில்லை. அமெரிக்காவின் மக்கள் உரிமைப் போராளி ‘ஹோவர்ட் ட்ர்மேன்’ (Howard Thurman) "வன்முறையைத் தேர்ந்தெடுப்பது பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான உண்மையான தீர்வுகளின் கதவுகளை மூடிவிடும்!” – என்கிறார்.

போர்கள் விரைவான சில முடிவுகளின் தீர்மானங்களுக்கு வழிகோலினாலும், அவையே தீராத தலைவலிகளாய்.. பின்னடைவுகளாய்.. எதிர்வினைகளைத் தோற்றுவித்து விடுகின்றன. அத்தோடு சர்வதேச நல்லுறவையும் சீர்குலைத்துவிடுகின்றன. போர் ஒருகாலும் பிரச்னைகளைத் தீர்ப்பதில்லை. மக்களை துன்புறுத்தி, உயிர்களைப் பறிப்பதுதான் மிச்சமாக இருக்கும்.

அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் இதுவரை செய்த நன்மைகள் என்ன? யாராவது பட்டியலிட முடியுமா?

உலகின் மிகவும் வலிமை வாய்ந்த.. சக்தி வாய்ந்த நாடு.. எதையும் சாதிக்கக்கூடிய .. தீர்மானிக்கக்கூடிய சக்தி சமார்த்தியங்களைக் கொண்ட நாடு உலக மக்களுக்கு தீங்கு விளைவிப்பதைவிட நன்மைகளுக்காக உழைப்பதற்கு எந்தத் தடையுமில்லை.

செப். 11 - க்குப் பிறகாவது அமெரிக்கா, "தன்னை ஏன் உலகம் வெறுக்கிறது?" - என்று சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஆக்ககரமான இந்த நிலைமையை மேற்கொள்ளாமல், உலக தலைமைக்கான உயரிய விழுமியங்களை வளர்த்துக் கொள்ள விரும்பாமல் மீண்டும்.. மீண்டும் உலக அரங்கில் ஒரு முரடனாக.. உலக ரவுடியாகவே அமெரிக்கா வலம் வருவது துரதிஷ்டவசமானது.


ஆனால், தற்போதைய சிரியாவின் மீதான அமெரிக்காவின் போர்த்தொடுப்பதற்கான நிலைப்பாட்டை உலகம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவைத் தவிர வேறு யாரும் இந்த ஆக்கிரமிப்பில்.. நாடு பிடிக்கும் ஆசையில் ஈடுபட மாட்டார்கள் என்று வெறுப்பாய் உமிழ்ந்து கொண்டிருக்கிறது.


போருக்கு எதிரான உலகின் மிகச் சிறந்த இலக்கியவாதியும், பீஸ் வாய்ஸ்ஸின் (Peace Voice) கட்டுரையாளருமான ‘விக்டர் பிரிம்சன்’ (Victor Bremson) மத்திய கிழக்கில் அமெரிக்கா செய்ய வேண்டிய செயல் திட்டங்களை இப்படி பட்டியலிடுகிறார்:

  • நம்முடைய வாழ்வியல் மாண்புகளை தீர்மானித்து அதன்படியே மற்றவரையும் வாழச் செய்வது.
  • ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கான உலகின் ஆளுமைப் பண்பின் முன்னுதாரணமாய் திகழ்வது.
  •  மத்திய கிழக்கில் மண்டிகிடக்கும் கல்வியின்மை, வறுமை இவற்றை களைவதற்கான செயல்முறையிலான தீர்வுகளை அளிப்பது.
  • எரிபொருள் செல்வாக்குகளின்.. அழுத்தங்களின் தீர்மானங்களை எடுப்பதைத் தவிர்த்து மாற்று எரிபொருளைத் தேர்வு செய்வது.
  • முதலில் நம்மிடம் குவிந்து கிடக்கும் பேரழிவு ஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வது.
  • மனித குலத்து தீமை விளைவிக்கும் அமைப்புகளை தெளிவாக உலகுக்கு அடையாளம் காட்டுவது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது.
  • ஆட்சியாளர்களால் அடக்கியாளப்படும் சொந்த மக்களை மேலும் அடக்கி, ஒடுக்க ஆயுதங்கள் வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்பது.
  • மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் அரசு சாரா அமைப்புகளுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்வது.
  • பிரச்சனைகளை வன்முறை வழியில் கையாளாமல்.. பேசி தீர்ப்பது.
  • ஜனநாயகத்துக்கு எதிரான மோசமான சர்வாதிகாரிகளின் வாழ்வை பாதுகாக்க.. சாதரண மக்களின் வாழ்க்கையை அச்சத்தில் உறையச் செய்யாமல் நீதியை நிலைநாட்டுவது.
  • சிரியா உட்பட வன்முறையில் நம்பிக்கையற்ற ஆயுதம் ஏந்தாத அரசியல் அமைப்புகளின் ஒத்துழைப்போடு அவர்களையே முன்னிறுத்தி வன்முறையற்ற தீர்வுகளுக்கான அழுத்தம் கொடுப்பது. 
தன்னைப் போல பிறரை எண்ணும் எண்ணம் வேண்டும். அமெரிக்கா திருந்துமா அல்லது ஜனநாயக அமைப்பின் கொடிய சர்வாதிகாரியாக நிலைத்து நிற்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!




0 comments:

Post a Comment