NewsBlog

Monday, September 30, 2013

சிறப்புக் கட்டுரை:'ஒரு கிலோ மூங்கிலில் ஒரு யூனிட் மின்சாரம்!'



தமிழகத்தின் அரசியலை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கிய இடம் பிடித்தது மின்வெட்டு பிரச்னை! ஆட்சிமாற்றம் நிகழ்ந்த பிறகு தற்போது மண்ணின் உயிர்களை மயனமாக்க மத்திய அரசு அணுமின் நிலையத்தை பிடிவாதமாக தமிழகத்தில் அமைக்க இருக்கிறது. மின்சாரம் என்னும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முனைந்திருக்கிறார் ஓசூர் நகரில் இயங்கிவரும் குரோமோர் உயிரிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் என்.பாரதி.

இவர் கண்டுபிடித்திருக்கும் பீமா என்ற மூங்கில், மின் உற்பத்தியில் உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியது என்பது முக்கியமானது. 

"சும்மா கிடைக்குமா சுதந்திரம்?" - என்று சொல்வது போல, பீமா மூங்கில் 'ஜீபூம்பா' மாஜிக்கில் கிடைத்ததல்ல. இதற்காக பாரதி நான்கு ஆண்டுகாலம் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. வழக்கம்போல ஆய்வாளர் சந்திக்க வேண்டிய அத்தனை விமர்சனங்களையும் தாங்கி பொறுமையுடன் செயல்பட வேண்டியிருந்தது. 

சரி.. பீமாவில் அப்படி என்ன விசேஷம்? இத்தனை ஆண்டுகள் சிரமம் எடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? இந்த கேள்விகள் எழுவது சகஜம்தான்.


வழக்கமான மூங்கிலைக் காட்டிலும் பீமா மாறுபட்டது என்பதே இதன் முதல் விசேஷம். ஆரம்பத்தில் 6 மாதங்கள் வரை வெறும் 6 அங்குலமே வளரும் பீமா மூங்கில், அடுத்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு நாள்தோறும் ஒன்றிலிருந்து ஒன்றரை அடிவரை கிடுகிடுவென்று வளரக்கூடியது என்பதே இதன் சிறப்புத்தன்மையாகும்.

அத்தோடு, சூரிய ஒளியின் உதவியுடன் வளரும் பீமா, கரியமிலவாயுவை அதிகளவில் உறிஞ்சிக்கொண்டு வளர்கிறது. இதற்கு பதிலாக மனித இனம் சுவாசிக்க உதவும் பிராணவாயுவை அதிகமாக வெளியேற்றி சுற்றுச் சூழலைக் காக்கிறது.

சூழல் மாசுபடாமல் தடுப்பதோடு நின்றிருந்தால் பீமா பேசப்பட்டிருக்காது. மனித வாழ்க்கைக்கு அத்யாவசியமான மின்சாரம் தயாரிக்கவும் பீமா மகத்தான பங்கு வகிக்கிறது.

ஆம்... ஒரு ஏக்கரில் ஆயிரம் பீமா மூங்கில் செடிகளை நட்டால்.. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து 40 டன் மூங்கிலை அறுவடைச் செய்யலாம். பீமா மூங்கிலை எரியூட்டுவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்; அதுவும் ஒரு கிலோ மூங்கிலில் ஒரு யூனிட் மின்சாரம்!

“மின் பற்றாக்குறையால் தவிக்கும் நம் நாட்டில் கிராமந்தோறும் மூங்கில் பயிரிட்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மின்தேவையை சமாளிக்க நாம் தயாராகிவிடுவோம். அதுவும் இயற்கையான முறையில் சூழல் மாசுபடாமல் இது சாத்தியமாகும். இப்படி கிராமந்தோறும் 200 ஏக்கரில் மூங்கில் விளைவித்தால் போதும் ஒருமணி நேரத்திற்கு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால்,  ஆண்டின் 52 வாரங்களில் 7 ஆயிரம் மெகாவாட் முதல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்!”- என்கிறார் ஆயிரம்வாட் மின்பூக்கள் உதிரும் கண்களோடு பாரதி!

வழக்கமாக ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு ஆகும் செலவு 5.40 ரூபாயாகும். ஆனால் மூங்கில் விறகில் தயாராகும் மின்சாரத்தின் அடக்கவிலை ரூ.1.50 மட்டுமே என்பது வியப்புக் கலந்த உண்மை! மூங்கில் விறகால் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை! மின் தேவையிலும் தன்னிறைவு அடையமுடியும்! விவசாயிகள் ஒரு ஏக்கரில் மூங்கில் பயிரிட்டால் ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய்வரை வருவாய் ஈட்டமுடியும். பீமா, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, கிராம பொருளாதாரத்தையும் மேம்படுத்த பெரிதும் உதவும்.

“…… இதுகனவு போல தோன்றினாலும், நடைமுறை சாத்தியமானதே! இதற்கான உதாரணங்கள்  தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிரூபித்துள்ளோம்.  கடந்த எட்டு ஆண்டுகளில் இந்நாடுகளில் 14 லட்சம் பீமா மூங்கில் செடிகளை நடவு செய்துள்ளோம். அதேபோல, நமது நாட்டிலும் 1.5 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது!”- என்கிறார் பாரதி.

இத்தனை சிறப்புகள் பெற்ற பீமா மூங்கிலை பயிடுவதற்கான அத்தனை பயிற்சிகளையும் பாரதி அளிப்பது இன்னும் விசேஷம். 

"தரிசுநிலமா? வரண்ட காடா? பயம் வேண்டாம்! நாங்களிருக்கிறோம்! பீமா மூங்கில் செழித்து வளரும்!" என்கிறார் பாரதி நம்பிக்கையூட்டும் புன்சிரிப்புடன்!

தமிழகத்தில் இயங்கிவரும் 12 சர்க்கரை ஆலைகளில் மூங்கில் விறகு மற்றும் கரும்புச் சக்கை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பரிட்சார்த்த முறையில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் 2 ஆயிரம் ஏக்கர் அளவு நிலப்பரப்பில் பீமா மூங்கிலை பயிரிடுமாறு தமிழக அரசு பாரதியைக் கேட்டுக்கொண்டுள்ளது ஒரு நல்ல செய்தியாகும். அதேபோல, கர்நாடகமும் பாரதியின் பீமா மூங்கில் பயிரிடுவதற்கு முனைப்புக் காட்டி வருகிறது.

விறகு மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுவதை ஊக்குவிப்பதற்காக மத்திய திட்டக்குழு உயிரி எரிசக்திக்கான துணைக்குழுவை அமைத்துள்ளது. அதில் பாரதியையும் உறுப்பினராக சேர்த்துள்ளனர் என்பது மற்றொரு விசேஷமான தகவலாகும்.

எதிர்வரும் காலத்தில் உயிரி எரிசக்தி பிரபலமடையும் என்ற நம்பிக்கை உள்ள நிலையில் பீமா மூங்கில் முக்கியப் பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை! மாற்று எரிசக்திக்காக ஏங்கும் இந்தியாவில் மாற்று சிந்தனையால் உருவானதுதான் பீமா மூங்கில்! பீமா விண்முட்ட வளர்ந்து நம் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யும்.

இந்தியாவின் மின் தேவை வெறும் மூங்கில் விறகின் மூலம் தீர இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியனின் சாதனையை வருங்காலம் பேசும் என்பது இன்னும் உள்ளத்தை குதுகலமடையச் செய்கிறது. ஒரு முறுக்கு மீசைப் பாரதியைப் போல பீமா பாரதியின் பங்கு இந்திய வரலாற்றில் மகத்தானதாக இடம் பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

0 comments:

Post a Comment