ஊடகத்துறையினரின் ஒரு சார்பு போக்கை எதிர்த்து மாணவர்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள்.
27.03.2014 வியாழன் அன்று ராஜஸ்தானின் ஜெய்பூர் 'குளோபல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி' மாணவர்கள்தான் ஜெய்பூரின் தெருக்களில் இறங்கி போராடினார்கள்.
அமைதியாக நடந்த அந்த பேரணியில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், அமைப்பினர் கலந்து கொண்டனர்.
'இந்திய சிறுபான்மையினரான முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட செய்திகளில் ஊடகங்கள் நடந்து கொள்ளும் ஒரு சார்புடையப் போக்கு அவமானகரமானது, அப்பாவிகளின் வாழ்வுரிமையைப் பறிப்பது, நாங்கள் பொறியாளர்கள், வெடிகுண்டுகள் தயாரிப்பாளர்கள் அல்ல!' - போன்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு அவர்கள் கோஷமிட்டவாறே சென்றார்கள்.
எத்தகைய ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக செய்திகளை வெளியிடும் ஊடகத்துறையினர் மீது உடனே நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். இதனால், தேவையில்லாமல் மாணவர்கள் கைது செய்யப்படுவதாகவும், அவர்களின் வாழ்வு சீரழிவதாகவும், கைது செய்யப்படும் அப்பாவிகளுக்கான நீதி தாமதப்படுவது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும் அவர்கள் கோஷமிட்டார்கள்.
தேர்தல் சமயங்களில் சொல்லி வைத்தாற்போல, சிறுபான்மையினரை கைது செய்வதும் அவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை சுமத்துவதும் வழக்கமாகிவருகிறது.
இந்நிலையில் ஒரு சார்பாக திரிக்கப்பட்ட செய்திகள் வெளியிடும் ஊடகங்களால் மாணவர்களின் வாழ்க்கை சீரழிகிறது. புகழ் வாய்ந்த சமூக ஆர்வலர்கள்கூட எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் கைது நடவடிக்கைகளுக்கு ஆளாவதும், அவர்கள் சம்பந்தமாக எவ்வித சட்ட மீறல்கள் இல்லாத நிலையிலும், செய்திகளை ஊடகங்கள் திரித்து வெளியிடுவதும் அதிகரித்துவருகிறது. நமது அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் இது.
இப்படி கைது செய்யப்படும் அப்பாவிகள் பல ஆண்டுகள் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதும் பிறகு நிராபராதிகள் என்று விடுதலை செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இது அவர்கள் இழந்து போன வாழ்வை ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் அப்பாவி சிறுபான்மையின இளைஞர்களை கைது செய்யும் காவல்துறையினர் மீதும், அது குறித்து திரித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளோபல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் வலியுறுத்தினார்கள். இதில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலையிட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
சமய நல்லிணக்கத்துடன் வாழ்வதே ஒவ்வொரு மாணவனின் விருப்பமாகும் என்பதையும் அவர்கள் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
0 comments:
Post a Comment