கேள்வி: கூட்டணியிலிருந்து இடதுசாரிகளை அதிமுக வெளியேற்றி யுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: அதிமுகவுக்குப் பல அரசியல் காரணங்கள் இருக்கக் கூடும். அந்தக் காரணங்களை நான் ஆராய்ந்து பார்க்க விரும்பவில்லை. மக்களுக்கே அது தெரிய வரும்.
கேள்வி: திமுக கூட்டணிக்கு வருமாறு இடதுசாரிகளை கருணாநிதி அழைத்துள்ளார். அது ஏற்கப்படுமா?
பதில்: கருணாநிதியின் அழைப்பு எங்கள் கவனத்துக்கு வந்தது. மாநில அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளும் சந்தித்துப் பேசியுள்ளனர். அதிமுகவுடன் உறவு முறிந்துள்ள நிலையில் எந்த முடிவு எடுத்தாலும் இடதுசாரி கட்சிகள் இணைந்தே எடுப்பது என முடிவு செய்துள்ளனர். மாநிலக் குழு எடுக்கும் முடிவு, மத்தியக் குழுவின் கவனத்துக்கு வரும். அகில இந்திய அளவில் உள்ள அரசியல் நிலவரத்துக்கு ஏற்ப, மாநில குழுவின் கருத்தை ஏற்கவோ அல்லது வேறு வகையில் வழிகாட்டவோ மத்தியக் குழுவுக்கு அதிகாரம் உண்டு. அதன்படி இடதுசாரிகளின் முடிவு இருக்கும்.
கேள்வி: இடதுசாரிகள் தலைமையில் தமிழகத்தில் தனி அணி அமையுமா?
பதில்: இடதுசாரிகள் தலைமையில் தனி அணி அமைய வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பம். ஆனால், உடனடியாக அமைவதற்கு சாத்தியம் இல்லை. எல்லாக் கட்சிகளும் அணியை அமைத்துவிட்டன. எதிர்காலத்தில் அப்படியொரு சூழல் வரலாம்.
கேள்வி: இடதுசாரிகளுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
பதில்: தமிழக அரசியலில் யாராலும் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் புறக்கணித்துவிட முடியாது. நீண்ட பாரம்பர்யம் கொண்ட இயக்கங்கள். பல்வேறு இடங்களில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவே இடதுசாரிகள் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.
நன்றி: தினமணி ( 09.03.2014)
0 comments:
Post a Comment