நாம் எதைப் படம் எடக்க விரும்புகிறோமோ அதை மட்டுமே, பின்னணியில் வேறு எதுவும் இல்லாதபடி படம் எடுப்பது எப்படி? படம் எடுக்குமுன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களில் இதுவும ஒன்று.
இங்கு வெளியாகி உள்ள செம்பருத்தியின் படத்தைப் பாருங்கள்.அந்தப் பூவின் அனைத்து அம்சங்களும், மிகத் துல்லியமாகத் தெரிய வேறு எந்தப் பின்னணியும் இல்லாமல் மிக நேர்த்தியாக படம் உள்ளது. இந்தப் பூவின் அனைத்து பாகங்களும் தெளிவாகத் தெரிவதற்கு என்ன காரணம்? அப்படத்தில் வேறு எதுவுமே இல்லாமல் தனிப்பூ மட்டுமே விழுந்திருப்பதுதான் இல்லையா? பூவை விட்டு நம் கவனம் திசை திரும்பாதபடி, வேறு எந்தப் பொருளும் படத்தில் விழாமல் பின்னணியில் கருந்திரை போட்ட மாதிரி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தப் படத்தையும் பாருங்கள். பின்னணியில் நாம் கவனம் எடுத்துக் கொள்ளாவிட்டால் படம் எப்படி இருக்கும்? என்று தெரிகிறதல்லவா? இந்தப் படத்தில் பூவோடு இலை, கிளை என்று சகலவும் தெரிகின்றனவே! இந்த இரு படங்களையும் ஒப்பிட்டால் கண்ணுக்கு எது விருந்து? என்பது சொல்லாமலேயே தெரியும்.
படத்தில் என்ன விழ வேண்டும் என விரும்புகின்றோமோ அதை மட்டுமே படம் எடுங்கள்.
உங்கள் குழந்தையை, பூனையை, நாய்க்குட்டியை அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களையோ, தனித்தனியாகவோ, கூட்டங்கூட்டமாகவோ படம் எடுக்க நினைத்தால் ஃபிரேமுக்குள் நீங்கள் விரும்புவற்றை மட்டுமே இருக்கும்படி காமிரா வியூஃபைண்டரில் கவனமாகப் பார்த்து நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
தவிர்க்க முடியாத பின்னணி படத்தில் விழுமே என்று தெரிந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? அது படத்தில் தெளிவாக விழாதபடி அவுட் ஆஃப் ஃபோகஸ் செய்துவிடுங்கள். இதனால், நாம் படம் எடுக்க நினைத்தவை தெளிவாக பதிவாகும்.
நீங்கள் படம் எடுக்க நினைத்தது உங்கள் சொந்த திருப்திக்காக மட்டுமா? அல்ல. நீங்கள் படம் எடுத்தபோது உங்கள் தாத்தாவோ, பாட்டியோ, குழந்தைகளோ, வளர்ப்புப் பிராணிகளோ எப்படி இருந்தார்கள்? இருந்தன? என்று பல ஆண்டுகள் கழித்து நேற்றைய நிழல்களாக நீங்கள் பார்த்து மகிழவும், மற்றவர்களிடம் காட்டி அவர்களை மகிழ்விக்கவும்தான். எனவே அந்தப் படம் அத்தனை ஜீவனுடன் இருக்க வேண்டாமா?
புகைப்படங்கள் நிலைத்திருக்க வேண்டியவை. நீங்கள் மட்டுமல்ல, மற்றவர்களும், ஏன் வருங்காலச் சந்ததியினலும் கூட பிறகு பார்த்து மகிழ வேண்டியவை. எனவே அதற்கேற்றபடி அந்தப் படங்கள் சரியானபடி, சரியான கோணத்தில் எடுக்க வேண்டும் என்பது முக்கியம்.
எனவே, படம் எடுக்கும்முன், நாம் அதற்காக சில நொடிகள் ஆழந்து சிந்தித்து சற்று சிரமம் எடுத்துக் கொண்டாவது செயல்பட்டால் இவை நாம் எடுத்தப் பாடங்கள்தானா? என பிறகு நீங்களே வியப்படையும் விதத்தில் அவை அமைவது நிச்சயம்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் கிடைக்காத அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நல்ல காமிராக்கள் இப்போது சந்தையில் மலிவாக, தாராளமாகக் கிடைக்கின்றன. எனவே, அந்தக் காமிராக்கள் நம் சிரத்தைக்கு உரிய பலனை என்றும் நிலைத்திருக்கக் கூடிய பரிசை அருமையான புகைப்படங்களாக்கி நமக்கு நிச்சயம் தரும் என்பதில் சந்தேகமேயில்லை!
- ஆரி மில்லர்.
0 comments:
Post a Comment