NewsBlog

Saturday, June 15, 2013

விருந்தினர் பக்கம்:'கையெழுத்து'


 
நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழில் சில பக்கங்கள் எழுதும் வாய்ப்பு என் சித்தப்பா மகன்(தம்பி தான்) மூலம் கிடைத்தது. விவசாயத்தைப் பெருக்க வேண்டியதன் அவசியம் குறித்த கட்டுரையைப் பள்ளியில் கேட்டிருப்பதாகவும், நான் எழுதிக் கொடுத்தால் copy -செய்து கொள்வதாகவும் சொல்லிக் கெஞ்சினான். "விவசாயம்" என்று நான் எழுதும் போதே என் சாயம் வெளுத்தது. 'வி' னா, வீணாய் போய் 'லி'னா மாதிரி இருந்ததைப் பார்த்து சிரித்தான் என் தம்பி. என் கையெழுத்து முன்பை விட மிக மோசமாகியிருந்தது. கடைசியாக நான் 'எழுதி' மூன்று வருடமாவது இருக்கும். என் computer-வந்ததிலிருந்து, டிக் செய்வதற்கும், underline-செய்வதற்கும், sign-செய்வதற்கும் தான் நான் பேனா எடுத்திருக்கிறேன். ink pen -பிளஸ்டூவோடு நின்று போனது.

என் கையெழுத்தைப் பார்க்கும் போது என் வாழ்வின் பல நிகழ்வுகள் அலையடிக்க ஆரம்பித்தன. என் கையெழுத்தை விட என் தங்கையின் கையெழுத்து நன்றாக இருக்கும். என் வீட்டு பாடங்களை அவள் எழுதிக் கொடுத்து வகுப்பில் தமிழாசிரியரிடம் மாட்டியிருக்கிறேன். என் அத்தை என் கையெழுத்தை மாற்ற எடுத்த முயற்சிகளில் நானே வென்றேன். என் கையெழுத்தின் லட்சணம் குறித்து நான் என்றும் கவலைப் பட்டதில்லை -MBA சேரும் வரை.

இதுவரையில் நான் பார்த்திலேயே ஆகச் சிறந்த கையெழுத்துக்கு சொந்தக்காரனான நண்பன் சாய்ராமின் கையெழுத்தைப் பார்த்த பிறகு, என் கையெழுத்து இன்னும் கேவலமானது போல் இருந்தது. அதற்கு முன்பு வரை என் BSC.  நண்பன் சரவண குமாரின் கையெழுத்து தான் சிறந்தது என்றிருந்தேன். பள்ளியில் என் நண்பன் பாலச்சந்தரின் கையெழுத்து மணிமணியாய் இருக்கும். அதைவிட அலங்கரிப்புகள். அவனுடைய கணக்கு நோட்டைத் திறந்தால் ஏதோ பெண்களின் கோல நோட்புக்கை திறந்தது போல இருக்கும். அததனை அலங்காரம். சூத்திரங்களுக்கு நெளி நெளியாக அடிக்கோடுகள். பதில்களுக்கு விதம் விதமான பெட்டிகள் என அமர்க்களப் படுத்தியிருப்பான். அதையும் மல்லிகை வாசம் வருகிற பால்பாயின்ட் பேனாவால் எழுதியிருப்பான். 4D -ல் ஒரு கணக்கு நோட்டு அவனால் தான் செய்ய முடியும்.



ஆனால் கையெழுத்தை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தவன் சாய்ராம் தான். அவன் MBA வில் 'தங்கப் பதக்கம்' வாங்கியதற்கு குண்டு குண்டான கையெழுத்தும் ஒரு முக்கிய காரணம். signature- கூட அவன் பிரித்து தனித்தனி எழுத்தாகத்தான் எழுதுவான் (இப்போது எப்படி இருக்கிறான்? என்று தெரியவில்லை) அவன் எதை எழுதினாலும் அது மார்க் ஆக மாறியது.

NASA வைப் பற்றி WASA வில் (wage and salary administration) எழுதினாலும், பீடியைப் பற்றி OD யில் (organization development) சொன்னாலும் அது மார்க் ஆனது. 'ஜோக்' இல்லை, உண்மை. 'அம்மா' என்பதை கேவலமாக எழுதுவதை விட 'அய்யோ' என்பதை அழகாக எழுதுவதன் முக்கியத்துவம் நான் அறிந்து கொண்டேன். 
இந்த சமயத்தில் கையெழுத்தில், பெரிய ஓவியர் போல வித்தியாசமான 'ஸ்டோர்க்ஸை' கையாண்ட எனது நண்பன் ராகவனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவனைப் போலவே அவன் கையெழுத்தும் மிக வித்தியாசமானது. அவன் "ரகு காலில் நல்ல அடி" என்று எழுதிக் கொடுத்தால் "ராகு காலத்தில் நல்லா படி" என்று தான் படிப்பீர்கள். அப்படியொரு 'கங்கனம்' ஸ்டைலில் எழுதி திணறடிப்பான்.

துணை இயக்குனர் வாய்ப்பு தேடி சென்னையில் அலைந்த காலங்களில் சில இயக்குனர்கள் என் கையெழுத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். வடபழனியில் ஒரு இயக்குனரை பார்க்கச் சென்ற போது, அவரின் உதவியாளர், "ஹீரோவுக்கும், ஹீரொயினுக்கும் முதல் சந்திப்பு சண்டையில் ஆரம்பிக்குது! இதுக்கு சீன் எழுது பார்க்கலாம். " என்றார்.
நான் பல்சரில் வரும் நாயகனை, ஸ்கூட்டியில் வரும் நாயகி மோதிவிடுவதாக, அதன் சண்டை காட்சியை எழுதிக் காண்பித்தேன்..படித்துப் பார்த்தவர் பேய் அறைந்தது போல் ஆகி, பேப்பரை என்னிடம் கொடுத்தார். நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் அவரை பார்க்க, "உன் கையெழுத்து நல்லா இருக்கு" என்றார். "சீன் சகிக்கவில்லை" என்பதைத் தான் அவர் அப்படிச் சொன்னார். இருப்பினும் முதலும் கடைசியுமாக என் கையெழுத்து பாராட்டப்பட்டது அன்று தான். 

பள்ளிகளில் 95 மார்க்குக்கு பாடம் நடத்திவிட்டு 5 மார்க் கையெழுத்துக்கு என்று ஒதுக்கலாம். அதன் அழகை அளவிட சில முறைகள் தேவைப்படும். அதற்கெல்லாம் இங்கே யாருக்கு நேரம்  இருக்கிறது? கையெழுத்தை வைத்து மனிதனின் மன நிலையை கணிக்க முடியும் என்று உளவியல் சொல்கிறது. இது உண்மை தான். எப்போதும் படபடப்பாக இருப்பவரின் கையெழுத்து பெரும்பாலும் கோணல்மாணலாக இருக்கும். ரிவர்ஸில் யோசித்தால் நிதானமாக, அழகாக எழுதினால் பதட்டம் குறையும். ஆக நல்ல கையெழுத்து BPயை குறைக்கலாம் இல்லையா? 

அடுத்த தலைமுறை தவறவிடும் விஷயங்களில் கையெழுத்தும் ஒன்றாய் இருக்கும். தேர்வுகள் எல்லாம் 'டாபிளட்டில்' எழுதப்படலாம். முழு இங்க்கையும் காட்டும் கண்ணாடி 'கேம்லின்' பேனா மியூசியத்தில் இருக்கலாம்.

என் தம்பி "என்னன்னா இது? விவசாயத்தைப் பத்தி எழுதச்சொன்னா... நீ ஏதோ கையெழுத்தைப் பத்தி கிறுக்கியிருக்க? இது யாருக்கு வேணும்?" என்றான். 

நான் மட்டும் இதை வைத்து என்ன செய்வேன்? படிப்பதற்கு யாருமே இல்லை.என்றாலும, நிச்சயம் வாசிக்கப்படும் என்ற நம்பிக்கையில்  நான் (சரளா... என் laptop-ஐ எடு....!)
 
நன்றி: சிவக்குமார் அசோகன்

0 comments:

Post a Comment