NewsBlog

Sunday, June 2, 2013

உடல் நலம்: 'காக்க.. காக்க.. கல்லீரல் காக்க!'



நாம் அன்றாடம் பருகும் தண்ணீர், உட்கொள்ளும் பல்வேறு உணவுப் பொருட்கள், 100 சதவீதம் சுத்தமானது என, சொல்ல முடியாது. இவற்றில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், நாட்கணக்கில் உடம்பில் சேர்ந்தால், அவை நஞ்சாக மாறி, உடலுக்கு ஊறு விளைக்கும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்தை தவிர்க்கும் பணியை, கல்லீரல் மேற்கொண்டு வருகிறது.
தினமும், குடலில் செரிமானம் செய்யப்படும் உணவை உறிஞ்சும் கல்லீரல், முதலில் அதில் உள்ள, நச்சுத்தன்மைக் கொண்ட வேதிப் பொருட்களை நீக்குகிறது.
அதன்பின், அந்த உணவில் உள்ள, புரதம், கார்ப்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து ஆகியவற்றை, தனித்தனியாக பிரித்து, அவற்றை ஆற்றலாக மாற்றி, சிறுநீரகம், மூளை, கை, கால் உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்புகளுக்கும், தொடர்ந்து அளிக்கிறது


மேலும், உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க தேவையான, புரதத்தை உற்பத்தி செய்வதுடன், ரத்தத்தை, நீர்த்துப் போக செய்யாமல், அதை குறிப்பிட்ட உறைநிலையில் வைத்திருக்கும், முக்கியமான பணியையும், கல்லீரல் செய்கிறது.
உடலின், "வேதி தொழிற்சாலைஎனும் அளவிற்கு, நாள் ஒன்றுக்கு, கிட்டத்தட்ட, 3,000 வேதிவினைகளை, கல்லீரல் மேற்கொள்கிறது.
  • மது பழக்கம், வெறும் வயிற்றில் மது அருந்துவது,
  • உடம்பில் அளவிற்கு அதிகமாக சேரும் கொழுப்புச் சத்து,
  • உடல் பருமன்,
  • உயர் ரத்த அழுத்தம்,
  • நீரிழிவு நோய், "ஹெப்படைட்டிஸ் பிவைரஸ் தாக்கம்
போன்ற காரணங்களால், கல்லீரல் பாதிக்கப்படுகிறது

கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக, மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. "ஹெப்படைட்டிஸ் பிவைரஸ் தாக்கம் அதிகமாகும் போதும், கல்லீரலில், கொழுப்பு சத்து அதிகமாக சேரும்போதும், கல்லீரல் புற்றுநோய் உண்டாகிறது.
பிரத்யேக ரத்த பரிசோதனை மூலம், கல்லீரலின் ஆரோக்கியத்தை அறியலாம்.
  • தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வது,
  • சத்தான உணவுகளை தேவையான அளவு உட்கொள்வது,
  • மதுப் பழக்கத்தை தவிர்ப்பது,
  • "ஹெப்படைட்டிஸ் பிதடுப்பூசி போட்டுக் கொள்வது
போன்றவற்றின் மூலம், கல்லீரல் பாதிப்பை தவிர்க்கலாம்.
மொத்தம், 1.5 கி.கி., எடையுள்ள மனிதக் கல்லீரல், பல காரணங்களால், குறிப்பிட்ட அளவு வரை சேதமடைந்தால், அது, ஒரு மாதத்திற்குள் மீண்டும் வளர்ந்துவிடும் தன்மைக் கொண்டது

தன்னைத் தானே புதுப்பித்து, உடல் உறுப்புகள் அனைத்திற்கும் ஆற்றல் அளிக்கும் அற்புத உறுப்பான கல்லீரல், ஒருவருக்கு பாதிக்கப்பட்டால், அதற்கு, அவரே முழுமுதற் காரணமாக இருக்க முடியும்.
கல்லீரல் செயலிழந்தால், உடல் உறுப்புகளின் இயக்கமும் தடைப்படும் என்பதை கருத்தில் கொண்டு, கல்லீரலை நாம் காக்க வேண்டும்.

பேராசிரியர் நாராயணசாமி,
கல்லீரல் மருத்துவ துறை தலைவர்,
சென்னை மருத்துவக் கல்லூரி,
98411 70145

0 comments:

Post a Comment