NewsBlog

Saturday, June 1, 2013

ஆளுமை: 'நேர்மைக்கு விலையில்லை!'


'தனக்கு உரிமையில்லாத பணம் வேண்டாம்!' - என்று ரூ. 1.9 கோடி காசோலையை  திருப்பியனுப்பினார் ஓர் ஆட்டோ டிரைவர். 

வியப்புக்குரிய இந்த சம்பவம் நடந்திருப்பது காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில்தான்! 


தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு நஷ்டஈடாக அளிக்கப்பட்ட ரூ. 1.9 கோடி பணத்துக்கான காசோலையை, அதை வழங்கியவர்களிடமே திருப்பி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஆட்டோ டிரைவர் ராஜூ.


குஜராத் மாநிலம் 'சனாந்த்' பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவர். மேற்கு வங்க மாநிலத்தில் டாடா நானோ தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு கிளம்பிய போது, அங்கிருந்து இடமாற்றம் செய்த அந்த நிறுவனம் தற்போது சனாந்த் பகுதியில் தனது தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதற்காக அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியை, குஜராத் தொழில் வளர்ச்சி கழகம் செய்து வருகிறது. 

ஒரு பிகா நிலத்திற்கு குறிப்பிட்ட தொகை வீதம் டாடா நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கி வருகிறது. பிகா என்பது வட இந்தியாவில் நிலத்தின் அளவை குறிக்கும் ஒரு சொல்லாகும்.  

இப்பகுதியில் ராஜூவின் முன்னோர்களுக்கு சொந்தமான 10 பிகா நிலம் இருந்தது. இதில் 3 பிகா நிலத்தை ராஜூவின் தாத்தா வேறொருவக்கு விற்று விட்டார். ராஜூவின் தாத்தாவிடமிருந்து நிலத்தை வாங்கியவர், அதை பெயர் மாற்றம் செய்யவில்லை. தற்போது அந்த இடத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். .


அந்த 3 பிகா நிலத்திற்கான நஷ்ட ஈடான ரூ. 1.9 கோடி ராஜூவின் பெயருக்கு காசோலை வந்துள்ளது. இதையடுத்து தனக்கு வந்த காசோலையை டாடா நிறுவன அதிகாரிகளிடமே திருப்பி அளித்துள்ளார் ராஜூ.  

"எனது பெற்றோர் எனக்கு கற்பித்த சில விஷயங்களில் நேர்மையும் ஒன்று. நேர்மையற்ற வழியில், எனக்கு சொந்தமில்லாத வழியில் வந்த பணத்தைக் கொண்டு எனது வாழ்க்கையை நடத்த எனக்கு விருப்பமில்லை. எனக்கு மேலும் 4 பிகா நிலங்கள் உள்ளன. அது எனக்கும் எனது குடும்பத்தாரின் எதிர்கால வாழ்விற்கும் போதும்" என்று ராஜூ கூறியுள்ளார்.


ராஜூவின் இந்த செயலால் குஜராத் தொழில் வளர்ச்சிக்கழக அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர். தங்களது வாழ்வில் இவ்வளவு பெரிய தொகை திரும்ப வந்துள்ளது இதுவே முதல் முறை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.  வெறும் ரூ. 6 ஆயிரம் சம்பளத்தில் ஆட்டோ டிரைவர் வாழ்க்கையை நடத்தும் ராஜூ, இவ்வளவு பெரிய தொகைக்கு ஆசைப்படாதது தங்களை மிகவும் ஆச்சர்யப்பட வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

நேர்மைக்கு விலை இல்லை என்பது அவர்களுக்கு பாவம் தெரியாது!

தகவல்:
:

0 comments:

Post a Comment