NewsBlog

Saturday, June 29, 2013

விருந்தினர் பக்கம்: 'கிழிந்த பேண்ட்டுக்கு மேல் அணிந்த ஜட்டி!'

 
"உத்தர்கண்ட் மாநிலத்தின் கேதார்நாத் பகுதி இயற்கைப் பேரழிவில் சிக்கிக்கொண்ட குஜராத் புனித யாத்திரைப் பயணிகள் 15,000 பேரை நரேந்திர மோடி மீட்டார். அதற்காக 3 போயிங் விமானங்கள், 80 டொயோட்டா இன்னோவா கார்களை ஈடுபடுத்தினார். மருத்துவக் குழுக்களை விமானம் மூலம் கொண்டுபோய் இறக்கினார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாம்களை அமைத்தார்..." 

..... இப்படியாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் ஜூன் 23 இதழில் செய்தி வந்தது.

"ஆகா பார்த்தீர்களா? மோடியின் நிர்வாகத் திறமையை!"- என்று பாஜக தொண்டர்கள் தெருக்களிலும் இணையப்பதிவுகளிலும் புகழ்ந்தோதினார்கள். ஏதோ மோடியே ஹெலிகாப்டரிலிருந்து கயிறில் தொங்கி ஒவ்வொருவராகக் கைப்பிடித்துக் காப்பாற்றியது போல் சித்தரித்தார்கள். உத்தர்கண்ட் மாநில அரசை விடவும், அங்கே ஒரு ரவுண்டு விமானம் மூலம் பார்வையிட்டுவிட்டுத் திரும்பிய குஜராத் மாநில முதலமைச்சரின் நடவடிக்கை பல மடங்கு சிறப்பாக இருந்தது என்று அரசியலைப் பூசவும் அவர்கள் தவறவில்லை.

அவ்வளவு கடுமையான மழை வெள்ளம், நிலச்சரிவு, மழை ஓயும்போது மட்டுமே மீட்பு என்றிருந்த சூழலில், பேன்ட்டுக்கு மேல் ஜட்டியணிந்த எந்த சூப்பர்மேன் வந்திருந்தாலும் 3 நாட்களில் 15,000 பேரை மீட்டிருக்க முடியாதே? சிந்திக்கத் தெரிந்த பலரும் ஊடகங்களில் இந்தக் கேள்வியை எழுப்பினார்கள். அப்படியே மோடி 15,000 பேரை மீட்டார் என்பதை நம்பினாலும், குஜராத்காரர்களை மட்டும்தான் மீட்டார் என்பது, பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் என்று காட்டப்படுகிறவருக்கு அழகல்லவே என்ற கேள்வியும் எழுந்தது. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கே கூட சகித்துக்கொள்ள முடியாமல் எப்படி இந்த 15,000 பேர் என்ற எண்ணிக்கை கிடைத்தது என்று விசாரிக்கத் தொடங்கினாராம்.
இப்போது உண்மை வெளிவந்துள்ளது. முதன் முதலில் இந்தச் செய்தியை எழுதிய ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆசிரியர்களில் ஒருவரான ஆனந்த் சூண்டாஸ், அந்த 15,000 என்ற எண்ணிக்கையையும் மற்ற மிகை விவரங்களையும் கொடுத்தது பாஜக-வேதான் என்று உடைத்திருக்கிறார். அக்கட்சியின் உத்தர்கண்ட் மாநில தலைவர்களில் ஒருவரான 'அனில் பலூனி' அந்த விவரங்களைக் கொடுத்தாராம். 'இந்த விவரம் சரியானதுதானா?'- என்று கேட்டபோது, மற்ற பாஜக தலைவர்கள், குஜராத்திலிருந்து வந்திருந்த பாஜக இளைஞர் பிரிவினர் முன்னிலையில், “அனைத்து விவரங்களும் உண்மைதான், மோடி அற்புதமான செயலைச் செய்திருக்கிறார்” என்றாராம் பலூனி.

‘தி ஹிண்டு’ நாளேட்டிற்கு (ஜூன் 28) அளித்த பேட்டியில் இதையெல்லாம் தெரிவித்திருக்கிறார் சூண்டாஸ்.

பலூனி சொன்னதன் அடிப்படையில் கிளப்பிவிடப்பட்டது காற்றடைத்த பலூன்தான் என்பது ஒரு வாரத்திற்குள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கெட்டிக்காரன் புழுகு எட்டு நாள் என்பார்கள். அந்த அளவுக்குக் கூட தாங்கவில்லை மோடி சாகசப் புழுகு.

அரசியலில் கூட்டாளிகள் யாரும் இல்லை என்பதால், இப்படிப்பட்ட புனைவுகளைக் கூட்டணி சேர்த்து மக்களை ஏமாற்றிவிடலாம், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளை அள்ளிவிடலாம் என்று கணக்குப் போட்டது நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராகத் தேர்ந்தெடுத்த பாஜக. பலூன் உடைந்துவிட்டதால் அடுத்த புனைவுக்குத் தயாராகிக்கொண்டிருப்பார்களோ?

தகவல்: எஸ். சத்திய மூர்த்தி 
(மூலம்: தீக்கதிர் - ஆசாத்)

0 comments:

Post a Comment