NewsBlog

Tuesday, March 26, 2013

வாழ்வியல்: ‘முதலாவது யுத்தம்!’



“என்னதான் செய்வதென்று தெரியலே.. படாதபாடுபடுத்துறான்ப்பா.. 15 வருஷமா அவன்கிட்டே மாட்டிட்டு முழிக்கிறேன்..!” – புலம்பிக் கொண்டே வந்தார் நண்பார்.

விஷயம் இதுதான்:

“நிறுவனத்தில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் குழுக்களாய்தான் சேர்ந்து பணிபுரிய வேண்டியதிருக்கும். கூட்டு முயற்சியின் விளைவாகத்தான் உற்பத்தி கிடைக்கும். இந்த ‘குரூப்’பில் அல்லது ‘குழு’வில் உள்ளவர்கள் சரியாக அமையாவிட்டால்.. உற்பத்தி பாதிப்பதோடு பணிபுரிபவர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியதிருக்கும்.

நண்பரின் குரூப்பில் இருந்தவர்களில் சில இளைய பணியாளர்கள் மற்றும் நண்பரை 15 ஆண்டுகளாக மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவரும் முரட்டு சுபாவம் கொண்டவர் ஆகியோர் அடக்கம்.

இளைய பணியாளர்களோ பட்டும் படாமலும் செயல்படுவார்கள்.

நண்பர் மிகவும் பொறுமைசாலி. நல்ல பண்பாளர். சிறந்த கல்வியாளர்கூட. ஆனாலும், எதற்கெடுத்தாலும் பிரச்னை தரும் அந்த முரட்டு மனிதரை மட்டும் நண்பராக்கிக் கொள்ள முடியவில்லை. ‘அவருக்கு எப்போது கோபம் வரும்? எப்போது நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வார்?’ – என்பது யாருக்கும் தெரியாது.

அந்த முரட்டு சுபாவம் உள்ளவர் யாருடனாவது பிணங்கிக் கொண்டே இருப்பார். இந்தப் பிணக்கின் சுழற்சியில் அதிகம் சிக்குவது மேற்படி நண்பர்தான்!

இத்தகைய முரட்டு மனிதர்கள் வாழ்க்கையின் பல துறைகளில் எதிர்பட்டுக் கொண்டே இருப்பார்கள். மனித உறவுகளுக்காக அவர்களைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். மற்றவர்கள் நல்ல மனிதராக மாறவில்லை என்பதற்காக நம்மிடம் உள்ள பண்புகளை இழந்திட முடியாது. பண்பற்ற செயல்களை எதிர்ப்பதற்காக உணர்ச்சிவசப்படுவது நமது ஆளுமைப் பண்பைச் சிதைத்துவிடும்.

ஆக, வாழ்க்கையின் அடிதோறும் நாம் முதலாவது எதிரியாக கருத வேண்டியது நம்மைத்தான்! நாம் போரிட வேண்டியதும் நம்மோடுதான்! இந்த நினைப்புதான் நம்மைப் பண்பட வைக்கும். 


சமீபத்தில் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளைத் தயாரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியில் குடிநீர்த்துறை சார்ந்த மூத்த அரசு அதிகாரிகள் இருவர் பேட்டி அளித்தனர்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அரசு அதிகாரிகளின் பெயர்களில் தமிழில் ஒரு புள்ளி விடப்பட்டும், ஆங்கிலத்தில் ‘க’ உச்சரிப்புக்காக ‘G’ க்குப் பதிலாக ‘K’ யும், இடம் பெற்று விட்டன. இந்த எழுத்துப் பிழையை தயாரிப்பாளன் என்ற முறையில் நானும் கவனிக்கவில்லை.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில் இதைக் கண்ட அந்த ‘அசைன்மெண்ட்’ கொடுத்தவர் தொலைபேசியில் அரைமணி நேரத்துக்கு ஒரு பிடி பிடித்துவிட்டார். அதிலிருந்து தப்பிக்க பல காரணங்கள் இருந்தன. ஆனாலும், அவற்றில் எதையும் எனது தவறை மறைப்பதற்கான ‘கவசங்களாக்கிக்’ கொள்ள விரும்பவில்லை. மௌனமாக அந்த ‘அர்ச்சனைகளை’ வாங்கிக் கொண்டு நடந்த தவறுக்கு முழு பொறுப்பு ஏற்றேன். அடுத்தமுறை தவறு நிகழாதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதியும் அளித்தேன். அன்றைய இரவு முழுவதும் வேதனையால் மனம் தவித்தது.

அடுத்த நாள்.

அலுவலகத்துக்குச் சென்று எனக்கு ‘அசைன்மெண்ட்’ வழங்கிய சம்பந்தப்பட்ட நபரைச் சந்திக்கும்வரை இந்த மனநிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

கடைசியில், அறையில் நுழைந்தபோது அவர் என்னை அன்புடன் அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார். முதல்நாள் எதுவும் நடக்காதது போல, ஒரு சகஜமான நிலை. ஒளிபரப்பான நிகழ்ச்சி மிகவும் கலைநயத்தோடு அமைந்திருந்ததைச் சுட்டிக் காட்டிப் பாராட்டினார். அடுத்த ‘அசைன்மெண்ட்’டுக்காக, புதிய தலைப்பையும் கொடுத்தார்.

ஒரே இரவில் நடந்த மாற்றம் இது. இந்த சம்பவத்தில் கொஞ்சம் பொறுமை காத்திருக்காவிட்டால்.. அதற்கான எதிர்விளைவுகள் பல நிரந்தர சோகங்களை சுமக்கச் செய்திருக்கலாம். பொறுமை காத்ததற்கு கைமேல் பலன் கிடைத்திருந்தது.  

மனித வாழ்க்கையில் இத்தகைய சம்பவங்கள் அன்றாடம் நடக்கத்தான் செய்கின்றன. பேருந்தில்… அஞ்சல் நிலையத்தில்… காவல்நிலையத்தில்… இன்னும் பல்வேறு இடங்களில்.. இது தொடரலாம். உயரதிகாரிகள் சில நேரங்களில் போதிய புரிதல் இல்லாமலோ அல்லது அவர்களின் பணிச்சுமையின் காரணமாகவோ கோபப்படலாம்.

அது எதுவானாலும்… நம்மை உணர்ச்சிப் பிழம்பாய் நாம் மாற்றிக் கொள்ளக்கூடாது. பதிலுக்குப் பதிலாய் .. தரம் தாழக்கூடாது! ஆளுமைப் பண்பிலிருந்து கீழிறங்கிடக்கூடாது.

15 ஆண்டுகள் தனது முரட்டு நண்பரைச் சமாளித்த அந்த நண்பர்  நிச்சயம் முதிர்ச்சியடைந்திருப்பார். நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கும். இன்னும் பல ஆண்டுகளைச் சமாளிக்கும் பக்குவம் பெற்றிருப்பார்; தனது மனதோடு யுத்தம் தொடரும் நிலையில்!

0 comments:

Post a Comment