மாணவப் பருவத்தில் தந்தையாருடன் பொழுதுபோக்காக மீன் பிடிக்கச் செல்லும்போது ஏற்பட்டது அந்த நண்டுசிண்டுகளோடான பரிச்சயம்.
எண்ணூர் கடற்கழியைத் தாண்டி அத்திப்பட்டு குருவிமேடு பகுதி கால்வாய் ஓரமாக கலர் கலராய் மஞ்சள், சிவப்பு, நீலம் என்று கண் கொள்ளா காட்சியாக வலைக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் நூற்றுக் கணக்கான நண்டுகள். ராணுவ வீரனைப் போல தடித்த ஒரு கொடுக்குடன் அவை கையாட்டி கையாட்டி அவற்றுக்குள் தகவல் பறிமாறிக் கொள்ளும் அழகே தனி!
இது முடிந்து பொதிகை தொலைக்காட்சிக்காக 'கல்ஃப் ஆசியா' தரப்பில் குறும்படங்களைத் தயாரிக்க (உப்பளம் சம்பந்தமாக) அந்தப் பக்கம் போனபோது அதே நண்டுசிண்டுகள் எண்ணிக்கையில் குறைந்திருந்திருப்பதை காண முடிந்தது.
ஆனால், தற்போது அதே பால்ய கால சிநேகிதர்களைத் தேடிப் போனபோது.. அவர்களைக் காணாமல் சுற்றி.. சுற்றி தேட வேண்டியிருந்தது. கண் கவரும் வண்ணங்கள் இல்லை. கருத்துப் போய் கால நிலைக்கேற்ப அந்த நண்டுகளும் மாறுதல் அடைந்திருந்தது அதிர்ச்சியளித்தது.
பெருகிவரும் தொழிலகங்களும், அவற்றின் மாசுகளும் நம்மைச் சுற்றி வசிக்கும்.. நமக்காக உயிர் வாழும் உயிரினங்களை கொன்றுவருவது சகிக்க முடியாதது. சக ஜீவன்களை அழித்துவிட்டு என்னதான் சாதிக்கப் போகிறோம் நாம்? வருத்தமே மிஞ்சுகிறது. வேதனை நெஞ்சைப் பிளக்கிறது.
இனி நண்டுசிண்டுகளோடு நீங்களே பேசிக்கொள்ளுங்கள்.. உங்களால் முடிந்தால் அவற்றின் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
0 comments:
Post a Comment