அன்று இரவு திடுப்பென்று வீட்டுக்கு விருந்தினர்
வந்துவிட்டனர். என் இல்லத்தரசி என்னை தனியே அழைத்து, “ஏங்க! இருந்ததை சாப்பிட்டு முடிச்சு
இப்போதான் பாத்திரங்களை எல்லாம் கழுவி வச்சேன்!” – என்றார் சங்கடத்துடன்.
“வீட்டுலே எப்பவும் நான்கைந்து பேர் சாப்பிடும்
அளவுக்கு சாப்பாடு தயாராக இருக்குமே?” –என்றதும், “உண்மைதான்! ஆனால், காலையிலே அதைப்
சாப்பிட ஆளில்லாமல் கீழே கொட்ட வேண்டியிருக்கு . அதனாலே, இப்போதெல்லாம் … நமக்கு என்ன
தேவையோ அதை மட்டும் வடிக்கிறேன்!” – என்று சொன்ன கையோடு அடுப்பைப் பற்ற வைத்து, சுடச்
சுட உணவு தயாரித்து விருந்தோம்பியது வேறு விஷயம்.
நமது வீடுகளில் நாம் அன்றாடம் சந்திக்கும் இத்தகைய
பிரச்னைகள் ‘விரயம்’ என்பதற்கு உதாரணங்கள்தான்!
தேவைக்கு அதிகமான, போதிய கவனமில்லாத, தரமில்லாத
செயல்கள் அனைத்தும் விரயம் என்றே சொல்லலாம். இதனால் நேரம், உழைப்பு, பொருளாதாரம், உடல்
நலம் இவை அனைத்தையும் இழக்க நேரிடலாம்.
மனித உடலின் சீரான இயக்கம், உடல் நலத்தின் ‘தரமாக’
வெளிப்படுகிறது. இதில் காட்டும் கவனமின்மை பெரும் பாதிப்பாகி, உடல் நலம் கெட்டு நோயாளியாக்குகிறது.
கடைசியில் சில அவயங்களையும் விரயம் செய்ய வேண்டியிருக்கிறது அதாவது இழக்க வேண்டியிருக்கிறது.
ஒரு நிறுவனம் என்பது இதற்கு சற்றும் குறைந்ததல்ல.
லாபத்தில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனத்தின் ‘வெற்றியின் ரகசியம்’, விரயம் தவிர்த்தல்
அல்லது கட்டுக்குள் கொண்டு வரல் – இதுவும் ஒரு காரணம்தான்!
கவனமின்மை எனப்படும் செயல் மிகப் பெரிய இழப்புகளை
ஏற்படுத்திவிடும்.
ஒரு வாகன உற்பத்தி ஆலையில், அசெம்பியின்போது, இழப்பு
1.4 லட்சம் ரூபாய். இயந்திர கோளாறால் 2.70 லட்சம், வெட்டுமானக் கருவிகளைத் தவறாகக்
கையாள்வதால் விரயம் 0.54 லட்சம், ‘ஹீட் ட்ரீட்மெண்ட்’ எனப்படும் அனல் சிகிச்சையின் போது இழப்பு 0.24 லட்சம், பழுதுபட்ட
வெட்டுமானக் கருவிகளால் விரயம் 0.53 லட்சம், இன்னும் இதர காரணங்களால் விரயம் 9.98 லட்சம்
ரூபாய். இது ஒரு நிறுவனத்தின் ஒரு மாத விரயத்துக்கான இழப்பீட்டுப் பட்டியல். இதில்
பணியாள் கவனமின்மையால் மட்டும் விரயமாகும் பொருளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
10.44 லட்சம் ரூபாய்!
ஒருமுறை உயரதிகாரி ஒருவர் தனது பணியாளரிடம் சொன்னது
இது:
“இந்தப் பொருள் விரயமானால்.. உன் சம்பளத்தோடு..
என் சம்பளத்தைச் சேர்த்தாலும் இதை வாங்க முடியாது!”
உண்மைதான்!
நாம் அனுதினமும் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின்
அல்லது உற்பத்தி செய்யும் பொருளின் விலை மிக அதிகமானது. அதற்காகப் பயன்படுத்தப்படும்
எந்திரம் பல கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கலாம். அதனால், ஒவ்வொரு கண நேரமும் கவனத்துடன்
பணிபுரிந்தால் விரயத்தைப் பெருமளவில் தவிர்த்துவிடலாம்.
பணி மாற்றங்கள் காரணமாக சிற்றுண்டி சாலையில் பணிபுரிந்து
கொண்டிருந்த சில பணியாளரை எந்திரப்பகுதிக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுவரை
முற்றிலும் வேறுபட்ட பணிச்சூழலுக்குள் நுழைந்த பணியாளர்கள், ஆரம்பத்தில் சற்றுத் திணறிவிட்டனர்.
துளையிடும் வெட்டுமானக் கருவியான டிரில்லின் (drill) பெயர்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
அதேபோல, ‘மரையிடும்’ கருவியான ‘டாப்பின்” (Tap) பெயரும் தெரியவில்லை.
இந்நிலையில் அவர்களில் ஒருவர் இப்படி கேட்டார்:
“சார் இந்தக் ‘குச்சியை’ (drill) வைத்துக் கொண்டு எப்படி துளையிட முடியும்? இந்த ‘முள்ளால்’
(Tap) எப்படி மரையிட முடியும்?”
“இது துளைப்போடும் குச்சி! இது மரைபோடும் குச்சி!!”
– என்றுதான் அந்த அதிகாரி ஆரம்பத்தில் விளக்கி அவருக்குப் புரிய வைத்த தனது அனுபவத்தை
பகிர்ந்து கொண்டார்.
போதிய தொழில் நுட்பமின்மையும், விரயத்துக்கான காரணமாகிவிடும்..
எச்சரிக்கை!
உதாரணமாக, ஒரு வாகனத்தின் ‘சேசியின்’ விலை சுமார்
6 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டால்.. இதில் அனுமதிக்கப்படும் விரயத்தின் மதிப்பு
சுமார் 700 ரூபாய் மட்டுமே! 900 ரூபாய் அளவு விரயமானாலும் ‘சேசியின்’ விலை அதிகரித்துவிடும்.
சில நேரங்களில் மிகவும் கவனமாக, நேர்த்தியாக, தரமாக
உற்பத்திப் பொருள் ஒவ்வொரு நிலையிலும் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இடையில், ஏதாவது
ஒரு பணியாளர் செய்யும் ஒரு சிறு தவறுகூட மொத்த இழப்புக்கும் காரணமாகிவிடும்.
விரயம் என்பது தனிநபரை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல.
குடும்பம், நிறுவனம், நாடு என்று தொடராய்ப் பாதிக்கும்
பொருளியல் வீழ்ச்சியாகும்!
A good message for irresponsible managers & workers
ReplyDelete