NewsBlog

Saturday, March 9, 2013

OH! MY SPRING! 'அந்த வசந்தம் போனதெங்கே?'

ஆரம்ப கல்வி நாட்களில் என் தாயாரோடும், அண்டை -- அயலாரோடும் காற்றுடன் சேர்ந்து அழகிய சங்கீதம் இசைக்கும் அந்த அடர்ந்த சவுக்குத் தோப்புக்கு சுள்ளி பொறுக்கச் செல்வோம்.

உயர்நிலைக் கல்வி நாட்களில் ஓட்டப் பயிற்சிக்காக அலைக் கடல் நீரின் ஈரத்தில் தட்.. தட்.. என்று கால்களைப் பதித்து ஓடுவது பேரின்பம்! பல நூறு மீட்டர் அகலத்தில் வெள்ளை வெளேரென்று பூவாய் படர்ந்திருக்கும் கடலோரத்து வெண் மணல். அதில் முளைத்திருக்கும் புற் -- பூண்டு தாவரங்கள். அவற்றில் கால்பந்து அளவுக்கு பூக்கும் முட்பூக்கள்! அவை காற்றில் உருண்டு உருண்டு ஓட.. வேட்டை விலங்குகளாய் விரட்டிச் செல்லும் நண்பர்கள் குழு.

இப்படி, ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் இயற்கையின் வசந்தமாய் காணப்பட்ட சென்னை மாநகரின் வடக்குப் பகுதியும், முதலாவது மற்றும் இரண்டாவது வட்டத்தைச் சேர்ந்த என் ஊர்.. எண்ணூர் இன்று இல்லை!
 
சவுக்குத் தோப்பை நிர்மூலமாக்கிவிட்டு கொட்டப்பட்ட உரத்தொழிற்சாலைகளின் மலைக்குன்றுகள் போன்ற ஜிப்ஸம். அத்தொழிலுக்கு மூலப் பொருளான திரவ நிலை அம்மோனிய வாயு நிரப்பப்பட்ட மெகா சைஸ் பூமி உருண்டை வடிவ கொள் கலன். அம்மோனியம் வாயுவை குழாய் வழியே நிரப்ப கடல் மார்க்கத்தில் காத்திருக்கும் ஒன்றுக்கு மூன்றாய் ரோஸ் வண்ண கப்பல்கள்!

இந்த பேராபத்தை உணராமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் சிறார்கள். பாறைகளாகிப் போன கரையோரத்து கிழிந்த கடலில் மகிழ்ந்து குளிக்கும் சிறுவர்கள்!

இந்தியாவில் குடிநீரில் புளோரைடு நச்சு அதிகளவு கலக்கப்பட்டள்ள நகரங்களின் பட்டியலில் எண்ணூரும் ஒன்று. நீர் நச்சாகிப் போனதால்.. அதை பயன்படுத்திய மூன்று தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வளைந்த கால்களாகி .. பற்கள் கரைப் படிந்து அழகிழந்தவர்கள்.. அத்தனை எலும்பு நோயும் தொற்றிக் கொண்டவர்கள் என்று முடங்கிப் போன இளைய பாரதம்!

கடலோரம் மறைந்து .. கடலரிப்பைத் தடுக்க மைல் கணக்கான நீளம் பாறைகளே கரைகளாகிப் போன பரிதாபம்!

மனிதனின் சுயநலங்களால் சின்னபின்மாய் சீரழிந்துப் போன.. அத்தனை அடையாளங்களையும் ஒளிப்பதிவாய் சுமந்து கொண்டு உள்ளதை உள்ளபடியே காட்டும் விழிகளின் மற்றொரு ஈரமிது!
 

0 comments:

Post a Comment