NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Friday, November 30, 2012

அமிலாபிஷேகங்களில் கருகும் தேவிகள்!

 அந்த இருண்ட இரவு அவளுடைய வாழ்க்கையையே இருட்டாக்கி விடப்போகிறது என்பது உண்மையிலேயே தெரிய நியாயமில்லைதான்! அன்றைய நித்திரைதான் அவளது சுகமான கடைசி நித்திரை எனபதையும் அவள் அறியமாட்டாள்! நடு இரவில் கதவை உடைத்துக் கொண்டு நுழைகிறது ஒரு கூட்டம். அவள் எழுந்திருக்காதவாறு அழுத்தி கைக்கால்களைப் பிடித்துக் கொள்கிறது. முகம் முழுக்க அந்த 'தேவிக்கு' அமிலாபிஷேகம் நடத்தப்படுகிறது. தோலும்-சதையும் உருகிக் கரைந்து தந்த வேதனையால் அவள் போட்ட சத்தம்... அழுகை.. கூப்பாடுகள்.. இரவின் இருளில் கரைந்து போயின அவளது முகம் போலவே! மூக்கு சிதைந்து..காதுகள் சிறுத்து.. பார்வை பறிப்போய்.. கேட்கும் சக்தியையும் இழந்து இயற்கை அழகுகள் சிதைந்து செயற்கையான கோரப் பிறவியாகிவிட்டாள் அவள்! நடைபிணமாய் தொடர்கிறது அனுதினமும் அவளது வாழ்க்கை!



அவள் செய்த குற்றம்தான் என்ன?

அந்த வெறியர்களின் உடல் பசிக்கு இணக்கம் தெரிவிக்காத ஒரே காரணம்தான்!

கடந்த ஒன்பது ஆண்டுகளாக 27 வயது கொண்ட சோனாலி முகர்ஜி மருத்துவ சிகிச்சைகாக பல்வேறு முறையீடுகள் செய்தும் அரசாங்கத்தின் மனம் இரங்கவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மூவரும் மூன்று ஆண்டு சிறைவாழ்க்கைக்குப் பிறகு பிணையில் வெளிவந்து அடுத்த பசிக்கு அடுத்த இரையை தேடிக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை!

தன்னை கொன்றுவிடும்படி சோனாலி கெஞ்சியும் எவ்வித பயனுமில்லை. 

"கடந்த நான்காண்டுகளாக நான் பெரும் வேதனைகளை அனுபவித்து வருகின்றேன். எதிர்காலம் குறித்து எந்த நம்பிக்கையும் இன்றி தவியாய் தவிக்கின்றேன்!" - என்கிறார் சோனாலி விரக்தியுடன். 

"நீதி கிடைக்காவிட்டாலோ, மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் செய்து தரப்படாவிட்டாலோ நான் இறந்து போவதைத் தவிர வேறு வழியில்லை!" - என்கிறர் சோனாலி.. தெற்கு தில்லியின் சீக்கியர் கோயிலை ஒட்டிய ஒற்றை அறை குடியிருப்புக்குள் அமர்ந்தவாறு.

"அரைமுகத்துடன் அரைகுறையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை!" -  என்கிறார் இவர் தொடர்ந்து.



சோனாலியின் பரிதாபகரமான இந்த முறையீடு உலகம் முழுக்க நாடு-எல்லைகள், சாதி-மதங்கள் இவற்றைத் தாண்டி அமில வீச்சுகளால் பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண் சார்பான முறையீடாகும். 

பாதிக்கப்பட்டவர்க்கு தகுந்த நஷ்ட ஈடில்லை! கொலைக்கு ஒப்பான இந்த குற்றச் செயலுக்கு ஒப்பான தண்டனையும் இல்லை!! வெகு சொற்பகால தண்டனையை அனுபவித்துவிட்டு சுதந்திர மனிதர்களாக கொடியவர்கள் நடமாடிக் கொண்டிருப்பது சகிக்க முடியாதது. 

பெண்களுக்கு எதிரான அமில வீச்சுகள் உலகளவில் கம்போடியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் அதிகளவில் நடந்து வருகின்றன.

உலகளவில் ஆண்டுக்கு பதிவாகும் 1500 அமில வீச்சுகளில் 80 விழுக்காடு பெண்களுக்கு எதிரானவை என்று லண்டனை மையமாக வைத்து செயல்படும்  'Acid Survivors Trust International' - என்ற அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மிகவம் குறைந்தளவிலான தகவல்கள் குறித்த புள்ளிவிவரங்களாகும். பாதிக்கப்பட்டோர் இதை வெளியில் சொல்ல பயப்படுவதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

 இந்தியாவைக் குறித்தத் தகவல்கள் அதிகாரப் பூர்வமானவையாக இல்லாவிட்டாலும்,2011 இல், Cornell University திரட்டிய புள்ளிவிவரங்கள் படி, 1999-2010 இடைப்பட்ட காலத்தில் நமது நாட்டில் 153 அமில வீச்சு சம்பவங்கள் ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பெரும்பான்மையான சம்பவங்கள் செக்ஸ் வன்முறைகளாகவும், கட்டாய திருமண வற்புறுத்தல்கள் நிராகரிக்கப்பட்டதற்காகவும் நிகழ்ந்தவை. 



"நான் அடைய முடியாததை யாரும் அடையக்கூடாது என்ற மனப்போக்கின் விளைவு இது!" - என்கிறார் ஐநா மன்றத்தின் தெற்கு ஆசிய நாடுகளுக்கான இணை இயக்குனர் சுஷ்மா கபூர். 

இளமைத்துள்ளும் கனவுகளுடன் ஜார்கண்டின் தன்பாத் நகரில் சமூகயியல் மாணவியாக கல்விப்பயிலும் போது சோனாலிக்கு வயது 17. 

குற்றவாளிகள் மூவரும் சோனாலியின் அண்டை வீட்டார். ஒவ்வொரு நாள் காலையும் இந்த மூவரும் பாலியல் தொடர் தொந்திரவுகளைத் தந்துகொண்டிருந்தார்கள். 

இது எல்லை மீறி போகவே சோனாலி காவல் நிலையத்தில் புகார் செய்வதாக எச்சரிக்க அவரை பழிவாங்கும் நடவடிக்கையாக அமில வீச்சு கையாளப்பட்டது. 

முகத்தின் 70 விழுக்காடு பகுதி கருக்கிவிட்டது. குற்றவாளிகள் கைது  செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிணையில் விடுதலையானார்கள். 

சோனாலி மேல்முறையீடு செய்துள்ள நிலையிலும் மீண்டும் குற்றவாளிகள் எங்கே தன்னை பழிவாங்குவார்களோ என்று பயந்தவாறு இருக்கிறார். 

பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் போன்ற நாடுகளில் அமில வீச்சு கடும் குற்றமாக கருதப்படுகிறது. ஆனால், நமது நாட்டிலோ இது பெண்களுக்கு எதிரான துன்புறத்தலாகவே குற்றம் பதிவு செய்யப்படுகிறது. இதனால், குற்றவாளிகள் எளிதாக பிணையில் வந்துவிட முடிகிறது.

 அமில வீச்சு குற்றங்களின் கடுமையைக் கருத்தில்கொண்டு நடப்பு மக்களவைத் தொடரில் அமில வீச்சுகள் தனியான குற்றமாக கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைதண்டனையும், 10 லட்சம்வரையிலான அபராதமும் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலாக மக்களவை ஒப்புதலுக்காக தற்போது நிலுவையில் உள்ளது.



பாதிக்கப்பட்டவர்களும், தன்னார்வ அமைப்புகளும் கழிவறைகளைச் சுத்தம் செய்வதற்காக எளிதாக கிடைக்கும்  ஹைட்ரோகுளோரிக் மற்றும் கந்தக அமிலங்கள் போன்ற சக்திமிக்க அமிலங்கள் சம்பந்தமாக ஒரு வரையறை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்துள்ளனர். இவற்றை தயாரிக்க எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் இவை துப்பாக்கிகளைவிட பயங்கரமான ஆயுதங்களாக மாறிவருகின்றன என்கின்றனர் இவர்கள்.

"வெறும் 50 ரூபாயில் அடர்த்தியான ஆபத்து மிக்க அமிலங்களைக் கூட நமது கடைகளில் எளிதாக வாங்க முடிகிறது. வெறும் 50 ரூபாயில் என்னைப் போன்ற பெண்களின் வாழ்க்கையை சிதைத்துவிட முடிகிறது!" - என்று கவலைத் தெரிவிக்கும் சோனாலியா, "அவர்கள் என்னை கொன்றிருக்கலாம்! ஆனால், நானோ தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றேன்!' - என்கிறார் தொடர்ந்து.

Source: Reuters

Thursday, November 29, 2012

எதிர்காலம் தொலைத்துவிட்ட இளையபாரதம்!

"இன்றைய குழந்தைகளே நாளைய குடிமக்கள்!"- என்றார் பண்டித ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் எதிர்காலம் தொலைத்துவிட்ட இருள்படிந்த முகத்தினர் என்பதும், புத்தகம் சுமக்க வேண்டிய கைகள் ஸ்பேனர், சுத்தியல் என்று அழுக்குப் படிந்தவர்களாய்  மாறிவருகிறார்கள் என்பதும் சத்தியம்.

உலகில் இருக்கும் 10 ஆயிரம் மில்லியன் குழந்தைத் தொழிலாளர்களில் இந்தியாவில் இருப்போர் மட்டும் இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் என்று கசப்பான உண்மையைச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள்!

பெருகிவரும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒருபுறம் மையஅரசும், மறுபுறம் மாநில அரசுகளும் பல்வேறு சட்டங்களை இயற்றியும் பயனில்லாமல் போய்விட்டது. பல தன்னார்வ சமூக அமைப்புகள் களத்தில் இறங்கி நடவடிக்கைகள் எடுத்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பெற்றோரின் பொறுப்பின்மை, நலிந்த குடும்பத்தின் சூழல்கள், வாழும் சமூகத்தின் அக்கறையின்மை போன்றவை நாளுக்கு நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பெருகக் காரணங்களாக இருக்கின்றன.

Wednesday, November 28, 2012

மறக்கடிக்கப்பட்ட மகாகவி!

'அம்மா நாள்! ஆயா நாள்!!' - என்று ஆளாளுக்கு சிறப்பு நாட்களை நிர்ணயித்துக் கொண்டு உலகம் முழுக்க வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டிருக்க.. சத்தமில்லாமல் நவ.09 கடந்துவிட்டது.

ஆம்! ஒரு மாபெரும் கவிஞரின் ... பழுத்த தேசபக்தரின் பிறந்த நாள் அது. இப்படி மறக்கடிக்கப்பட்டதற்கு காரணம்.. அவர் முஸ்லிம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை.அவர்தான் மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால்.

 1938 இல், லாகூரில் மகாகவி இக்பால் மரணமடைவதற்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஜவஹர்லால் நேருவும் கலந்து கொள்கிறார். அவர் மேடையிலிருந்த மகாகவி இக்பாலை நோக்கி இப்படி சொல்கிறார்: "ஜின்னாஹ்  ஒரு அரசியல்வாதி! நீங்களோ ஒரு தேசபக்தர்!"

பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணகர்த்தா இவர் என்று சொல்பவர்களுக்கு இது நெத்தியடியாகும். இருந்தும் மகாகவி இக்பால் தொடர்ந்து பழிக்கப்படுகிறார். 

இந்திய துணைக்கண்டத்தின் பன்முகப் பண்பாட்டை மிகவும் விரும்பியவர் மகாகவி. இந்த விருப்பத்தின் பிறிதொரு வடிவம்தான் இன்றளவும் போற்றப்படும், "சாரே ஜஹான்சே அச்சாஹ்  ஹிந்துஸ்தான்  ஹமாரா..  ஹமாரா..!" - என்ற ஒவ்வொரு இந்தியனையும் சிலிர்க்க வைக்கும் தேசியப்பாடல். 

Tuesday, November 27, 2012

காஸா 2012

காலச்சக்கரம் மீண்டும் சுழன்றுள்ளது! டிசம்பர் 2008 இதோ.. நேருக்கு நேர் படக்காட்சிகளாய்! சில பாத்திரங்கள் மட்டுமே மாறியுள்ளன.

'எஹீத் ஒல்மார்ட்' இருந்த இடத்தில் 'பெஞ்சமின் நெதன்யஹீ'.  'ஹோஸ்னி முபாராக்' ஆட்சிகாலத்தில், கெய்ரோவில் இருந்தவாறு காஸாவாசிகளை தனது ஆள்காட்டி விரலைக் காட்டி, கடுமையாக மிரட்டிய  இஸ்ரேலின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் காதிமா கட்சியின் தலைவியுமான 'டிளிபி லைனி' இருந்த இடத்தில் இப்போது, வலதுசாரி இயக்கமான 'இஸ்ராயீல் பைத்துன் கட்சியின்' (இஸ்ரேல் நமது தாய்நாடு) இனவெறி பிடித்த 'அவிக்தர் லைபர்மேன்'.

 காஸாவிலோ, ரத்த சகதியாய் போன 7 வயது ரணன் அரபாத் மற்றும் 11 வயதான உமர் அல் மஷாரவீக்களின் உடல்களை அல்ஷிபா மருத்துவனையின் பிணஅறையிலிருந்து கைகளில் ஏந்திக் கொண்டு வரும் தந்தை! சுற்றிலும் சிதைந்து போன குழந்தைகளின் பூ உடல்கள்.

காஸா 2012 நினைவூட்டுகிறது 2009 ஆம் ஆண்டை!

 'முபாரக்' ஒழிந்தார். பலஸ்தீனத்துக் குழந்தைகளின் கால்களை உடைத்துவிடுவதாக கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்ட அவருடைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அ'ஹ்மது அபூஅல் கெய்ட்டும்' தொலைந்தார். அரபு வசந்தம் மலர்ந்தது. 

வலிமையான மக்கள் செல்வாக்குப் பெற்ற... மக்கள் நலன்நாடும்.. லஞ்ச-ஊழலற்ற, சர்வாதிகாரமற்ற, யாருடைய கைப்பாவையாகவும் செயல்படாத ஆட்சி அமைப்பு எகிப்தில் உருவானது. அரபு வசந்தம் மலர்ந்தது.

எகிப்து காஸாவாசிகளுக்கு என்ன செய்திட முடியும்? 

இந்த வினா விண்ணிலிருந்து சராமாரியாக ஏவுகணைகளும், குண்டுகளும் மழையாய் காஸாவை ரத்தக் களறியாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் உலக முஸ்லிம்களின் மனதில் எழுந்த கவலை தோய்ந்த கேள்வி இது.  ஜுன் மாதத்தில்தான் தேர்தல்களில் வெற்றிப் பெற்றிருந்த எகிப்தின்  முஹம்மது முர்ஸியால் என்ன சாதிக்க முடியும்?

Monday, November 26, 2012

மறக்கடிக்கப்பட்ட ஒரு மகாகவி!

விரைவில் எதிர்பாருங்கள்..

Sunday, November 25, 2012

முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரணம் என்ன? - பகுதி - 2

"முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதற்கு  யார் காரணம்? பின்தங்கியிருக்கிறார்கள் என்று த.மு.மு.க உட்பட பலரும் கூறுகிறார்கள். படிக்க வேண்டாம் என்று இவர்களை யார் தடுத்தார்கள்?" (இராம கோபாலன் -16.07.1999, விஜய பாரதம்)

 இந்தக் கேள்வி வலுவானது. கேட்பவர் இராம கோபாலன் என்பதாலேயே கேள்வியில் நியாயமில்லை என்றாகிவிடாது.  

'இந்த நாட்டில் முஸ்லிம்களை கல்வி கற்க வேண்டாம் என்று யார் தடுத்தது? யாரும் தடுக்கவில்லை! அப்படியானால்.. முஸ்லிம்கள் அறிவைப் பெற வேண்டாமென்று இறைவேதம் தடுக்கிறதா? அல்லது இறைத்தூதர்  முஹம்மது நபிகளார் (ஸல்) தடுக்கிறார்களா?'

ஒருக்காலும் இல்லை. இறைவேதமும் தடுக்கவில்லை. இறைத்தூதரும் தடுக்கவில்லை. 

  "இறைவா! என் அறிவை அதிகப்படுத்துவாயக!" (திருக்குர்ஆன் - 20:144)

"எவர்களுக்கு ஞானம் வழங்கப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கு இறைவன் உயர்ந்த பதவிகளை வழங்குவான்!" (திருக்குர்ஆன் - 58:11)

"எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார்" (திருக்குர்ஆன் -  2:269)

அறிவின் முக்கியத்துவம் குறித்து இத்தகைய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

Saturday, November 24, 2012

முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரணம் என்ன? - பகுதி - 1

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியர் அனைவருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில் அரசியல் தலைவர்களின் கைங்கரியங்கள், ஆதாயங்கள் இவற்றால்.. அந்த உரிமைகள் சரியாக மக்களிடம் சென்றடைவதில்லை என்பதே உண்மை. களையக்கூடிய குறைபாட்டை முன்னிறுத்தி ஒட்டுமொத்த அமைப்பையும் குறை சொல்வது சரியல்ல.


லஞ்சம், ஊழல், லட்சியமற்ற அரசியல்வாதிகள், இவர்களோடு கைக் கோர்த்துக்கொண்ட வளர்ந்துவிட்ட வகுப்புவாதிகள், கல்வியின்மை, சரியான தலைமையின்மை, ஒற்றுமையின்மை போன்றவை முஸ்லிம்களின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாகும். அரசியல் சுயநலங்களாலும், பிரித்தாளும் சூழ்ச்சிகளாலும் இங்கு முஸ்லிம்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடு பிரிவினை அடைவதற்கு முன்னமே விதைக்கப்பட்ட வகுப்புவாதம் என்னும் நச்சுமரங்கள் இன்று காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வளர்ந்து படர்ந்து விட்டுள்ளன. இந்த துவேஷம் காவல் துறையிலிருந்து நீதித்துறைவரை தங்கு தடையில்லாமல் ஊடுருவியுள்ளது. அதனால்தான.. பதவிக்காலம் முடிந்ததும், இத்துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் வகுப்புவாத இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.தேர்தல்களிலும் பங்கெடுக்கிறார்கள். வகுப்புவாதிகளின் 50 ஆண்டுகால முயற்சியின் அறுவடை இது.

வகுப்புவாதிகளின் வளர்ச்சியும், அவர்களின் செயல்பாட்டால்... விளையும் கொடுர நிகழ்வுகளும் முஸ்லிம்களின் கவனத்தை சிதறடிக்கின்றன. இனம் புரியாத பீதியிலும், அச்சத்திலும் அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

பொதுசிவில் சட்டம் கொணரும் முயற்சியால்.. ஷரீஅத் சட்டங்களுக்கு ஆபத்து!  தங்களது நம்பிக்கைகளுக்கும் தனித்தன்மைகளுக்கும் பேராபத்து என்ற சிந்தனையால்.. அவை பறிப்போகாமல் காப்பதற்கான முயற்சிகளால்.. ஒவ்வொரு காலக்கட்டத்திரும் அவர்களின் முயற்சிகள் திசைத்திருப்பப்படுகிறது. நேரம் செலவாகிறது. இதன் விளைவு தேசநிர்மாணத்தின் பக்கம் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இந்த பங்களிப்பு குறைந்ததன் விளைவாக தேச, சமுதாய, அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் பின்தள்ளப்பட்டுவிட்டார்கள்.



அடுத்தது, நாட்டு விடுதலைக்குப் பின் அவர்களுக்கு சரியான தலைமை அமையாததும் அவர்களின் பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாகும். "40 ஆண்டுகாலம் கொடிபிடித்தே என் கைகள் காய்ப்பு காய்த்துவிட்டன!" - என்றார் ஒருமுறை மறைந்த முஸ்லிம் லீக்கின் தலைவர்களில் ஒருவரான அப்துல் லத்தீஃப் அவர்கள். காய்ப்புக் காய்த்த கைகள் மாற்றினது வேறொரு கொடி என்பது இறந்தகால வரலாறு. அவர்கள் படிப்பினைப் பெறவில்லை என்பதே இதன் பொருள்..

அரசியல் தலைவர்களால் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை வெளிப்படையாகவே சொல்ல முடியும்! அவர்கள் தங்கள் உழைப்பையும், நேரத்தையும்,  பொருளையும்  குறிப்பிட்ட  கட்சிக்கு அர்ப்பணித்து அதிலேயே கரைந்துருகி தங்களது வளர்ச்சியின் பக்கம் கவனம் செலுத்த தவறிவிட்டார்கள்.

அத்துடன் தேசப்பற்றால் அந்நிய மொழியாம் ஆங்கிலக் கல்வியை புறக்கணித்ததும் முஸ்லிம்களின் பின்னடைவுக்குக் காரணமாகும்.

- காரணங்கள் தொடரும்.

Friday, November 23, 2012

செங்குருதியால் நனைந்த கர்பலா!


 அது ஹஜ்ஜுக் காலம்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கள் கூட்டம் கூட்டமாக அருள்மாரி சொரியும் மக்கா மநாகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். 

"வந்துவிட்டேன்! இறைவா! வந்துவிட்டேன்!" - ஹாஜிகளின் முழக்கம் விண்முட்ட எழுந்தது. 

அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் கஅபாவை நோக்கி நடக்கிறார். எண்ணங்களை ஒருமுகப்படுத்தித் தொழுகிறார். அதன் பின் இரு கரங்களையும் விரித்து இறைஞ்சுகிறார்:

"இறைவா! உலகின் பல திசைகளிலிருந்தும் மக்கள் கூட்டம் ஹஜ்ஜை நிறைவேற்றிட உனது இல்லத்திற்கு வருகை தரும் வேளையில், உன் அடியானான ஹீஸைனோ இங்கிருந்து வெளியேற இதோ நின்றிருக்கின்றேன். மக்கள் தியாகத் திருநாளுக்காக இங்கு திரண்டிருக்கும் வேளையில் இந்த ஹீஸைனும் தனது குடும்பத்தாருட்ன தியாகம் செய்ய சத்தியத்திற்கு சான்று பகர இதோ புறப்பட்டுவிட்டார்.


இரட்சகா! உனது திருபூமியின் புனிதத்துவம் காக்கப்பட இந்த அருள்பூமி ரத்தக் கறைபடியாமல் காத்திட இறைத்தூதரான எனதருமைப் பாட்டனாரின் கட்டளைகளை சிரமேற்கொண்டு  இதோ கூஃபா நோக்கி பயணமாகிவிட்டேன். 

கருணையாளனே! என் பாவங்களையும், என் குடும்பத்தாரின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

அருளாளனே! தற்போது என் பிரியத்துக்குரிய பாட்டனாரும், என்னருகில் இல்லை. என்னை ஈன்றெடுத்த பெற்றோரும் இல்லை. உடன் பிறந்த சகோதரரும் துணையாய் இல்லை. இந்நிலையில், அசத்தியம் எனக்கு எதிராய் நிற்கிறது. என் உயிரைக் குடித்திட துடியாய்த் துடிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நீயே எங்கள் பாதுகாவலனாய் இருப்பாயாக!

எனது அதிபதியே! உனது பிரியத்திற்கூய இறைத்தூதர் எந்தக் கரத்தைத் தம் திருவாயால்.. முத்தமிட்டார்களோ அந்தக் கரம் அநியாக்காரனான யஜீதின் கரம் பற்றி ஒருபோதும் 'பைஅத் - பிராமணவாக்குமூலம்' செய்யாது. உனது திருத்தூதர் எந்த வாயை அன்பால் முத்தமிட்டார்களோ அந்தத் திருவாயால் அநீதிக்காரனான யஜீதைக் கலிஃபாவாக ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தாது.

இறைத்தூதரின் இதயத்துண்டு,சுவனத்தின் தலைவி (ஃபாத்திமா) ஈன்றெடுத்த புதல்வர் இதோ சுவனப்பாதையில் புறப்பட்டுவிட்டார்.

அகிலங்களின் அதிபதியே! எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக! சத்தியததில் நிலைத்திட உதவி செய்வாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்!

புனித கஅபாவே! சத்தியம் காத்திட உன்னிடம் பிரியா விடை பெறுகின்றேன்.

Thursday, November 22, 2012

சம நீதியா? ஒரு சார்பா?


ந்த ஆன்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்றுவிட்டது. 

ம்.. அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். நான்காண்டுகளுக்கு பிறகு ராளமான சர்ச்சைகளுடன் ஒரு மனித வரலாறு முடிக்கப்பட்டது. நீதியின் பெயரால்.. சட்டம் என்ற இருட்டறையில் சட்ட ரீதியான அரசு சார்பான கொலைன்றுகூட இதைக் கூறலாம். இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றியதையொட்டி காங்கிரஸ் மற்றும் சங்பரிவார் கூட்டம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று வெற்றி விழா எடுத்துள்ளனர்.  

னால், இதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இதே இந்திய உபகண்டத்தின் மற்றொரு பகுதியில் தாஜ்  ஹோட்டல் தாக்கப்பட்டதைவிட ஒரு கொடிய சம்பவம் நடந்தது. குஜராத் மாநிலத்தில் நாட்டின் குடிமக்களின் ஒரு பகுதியினருக்கு எதிராக நடந்த வன்முறை இது. ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் சட்டவிரோதமாக ஒரு மாநிலத்தின் ட்சியாளர்களால் கொடுரமாகப் பறிக்கப்பட்ட துரதிஷ்டம் இது. னால், அதற்கு காரணமான கொலைக்காரர்கள் யாரும் இதுவரையிலும், கழுமரம் ஏற்றப்படவில்லை. தோ இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. மீண்டும் இதே கொலைக்காரர்கள் அரியணையில் ஏறப்போகிறார்கள். 



ந்த சூழலில் இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒரு ம்பவத்தை நான் இங்கு நினைவுகூர விரும்புகின்றேன்.

யார் யார் எல்லாம் நமது நாட்டின் அநீதியாளர்களின் கரங்களில் சிக்கி நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு ந்த வரலாற்று நிகழ்வை சமர்பிக்கின்றேன்.

Tuesday, November 20, 2012

இலக்கில்லாத இளைய சக்தி

ஒருமுறை ரவீந்திரநாத் தாகூர் இப்படி சொன்னார்: "மனிதனிடம், கடவுள் நம்பிக்கை இழக்கவில்லை. அப்படி இழந்திருந்திருந்தால்... அவன் மனிதனைப் படைத்திருக்கவே மாட்டான்!"

மனிதப்படைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை. 

தற்போது நமது நாட்டின் மக்கள் 100 கோடிக்கும் அதிகம். இதிலும் இளைஞர்களின் எண்ணிக்கைதான் அதிகம். உலகளவில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியாவில்தான் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். இன்னும் 30 ஆண்டுகளில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் வாய்ப்புகள் உண்டு. அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால்.. உலகிலேயே இளைய சக்தி அதிகம் கொண்ட முதல் நாடாக இந்தியா மாறிவிடும்.


தற்போது நாட்டில் 33 கோடியே 60 லட்சம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள். 15-19 வயதுக்குட்பட்டவர்கள் 12 கோடியே 10 லட்சம் பேர். 20-34 வயதுக்குட்பட்டவர்கள் 27 கோடியே 10 லட்சம். இந்த அடிப்படையில் கணக்கிட்டால்.. நாட்டில் 72 கோடி 80 லட்சம் பேர் இளைஞர்கள்தான். அதாவது நாட்டின் 70 விழுக்காடு பேர் இளைய சக்தியினர். 

இந்த இளைஞர்களுக்கு சரியான கல்வி, தொழில்நுட்ப வசதிகளை எட்டச் செய்தால்.. வாழ்க்கைக்கான சரியான இலக்கு, குறிக்கோள் இவற்றை நோக்கிச் செலுத்தினால்.. இவர்கள் நாட்டின் வரலாற்றை நிச்சயம் வளர்ச்சியை நோக்கி மாற்றி அமைப்பார்கள். உலகின் வலிமை வாய்ந்த நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவார்கள்.

 ஆனால், நடப்பு நிகழ்ச்சிகள் நிராசைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் 30 விழுக்காடுக்கும் அதிகமான மக்கள் கல்லாதவர்களாக உள்ளனர். கல்லாமையில் உலகின் முதல் நாடாக நமது நாடு மாறும் அவலம் உள்ளது. நாட்டில் வேலையின்மை அதிகரித்துவருகிறது. இதன் விளைவாக இளைய சக்தி ஒருவிதமான விரக்தியில்  மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அவர்கள் சட்டவிரோதச் செயல்களில், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாக மாறிவருகிறார்கள். இத்தகைய பலவீனமானவர்களை வகுப்புவாத, தீவிரவாத, சமூக விரோத சக்திகள் தங்களின் சுயநலங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மற்றொருபுறம் நாட்டில் கல்வி நிலையங்கள் புற்றுசலாய்ப் பெருகிக் கொண்டிருக்கின்றன. கல்வி அமைப்பில் அதி தீவிரமான போட்டியும் காணப்படுகிறது. அறிவியல், தகவல் தொழில் நுட்பத்துறைகளில் நமது நாடு வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில் கல்வி மற்றும் ஒழுக்க மாண்புகள் அதலபாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. வழி தவறிய இளைஞர்கள் நெறிகேடான வழிகளில் நடைபோடுவதை அன்றாடச் செய்திகள் தெரியப்படுத்துகின்றன. ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஈவ் டீஸிங் போன்றவை இளைஞரிடையே பெருகிவருகின்றன. 

திருமணத்துக்கு முன்னரே தவறான உறவுகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. மேற்கத்திய கலாசாரம் வெகுவேகமாக இந்திய இளைஞரிடையே ஊடுருவி வருவதைக் கண்டு சமூகவியல் அறிஞர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். 

 துரதிஷ்டவசமாக நமது இளைஞருக்கு வழிகாட்டக்கூடிய தலைவர்கள் அருகிவிட்டார்கள். சீரிய வழிகாட்டுதல், வழிநடத்துதல் இல்லாததால்.. ஒருவிதமான இறுக்கமான, கடின நிலையை இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வாழ்க்கைக்கான இலக்கு, இலட்சியம் இல்லாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கை என்பது உலக இன்பங்களுக்கான முதலீடு என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல. வாழ்க்கைக்கான நோக்கம் நிச்சயம் உண்டு. உண்பது, உறங்குவது. உல்லாசங்களை அனுபவிப்பது என்பதெல்லாம் வாழ்க்கைக்கான நோக்கமோ லட்சியமோ அல்ல. 

வாழ்க்கை மனித இனத்துக்கு கிடைத்தற்கரிய கிடைத்துள்ள வரம். அதனால், வாழ்க்கையின் உன்னத இலட்சியங்களை இளைஞர்களிடம் உணர்த்த நமது சமூக, அரசியல் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அவர்களைச் சரியான இலக்கில் வழிநடத்த வேண்டும். புத்தம் புதிய எண்ணங்கள், வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். நிராசையுடன் சமூகத்திலிருந்து  வெகுதூரம் அவர்கள் விலகிச் செல்லாமல் கட்டியணைக்க வேண்டும்.

உண்மையில், உலகின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான் உள்ளது. அவர்கள்தான் இந்தியாவின் நவயுக சிற்பிகள். சாதனை மனிதர்களே அவர்களின் ஆதர்சமாக இருக்க வேண்டும். மேற்கத்திய கலாசாரமோ,  ஹாலிவுட்டின் அரிதாரமோ, பாலிவுட்டின் கற்பனைகளோ நமது இளைஞர்களின் முன்னுதாரணங்கள் அல்ல. நமது ஆட்சியாளர்கள் மிகச் சிறந்த உதாரண புருர்களாகத் திகழ்ந்து ஆளமைப் பண்பால்.. இளைஞர்களை ஈர்க்க வேண்டும். இல்லையென்றால்.. நமது நாடு அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பங்களில் சாதனை மேல் சாதனை புரிந்தாலும், ஒழுக்க விழுமியங்களில் மிகவும் பின்தங்கிவிடும் ஆபத்து உண்டு.

Monday, November 19, 2012

அதிகாரத்துக்கு எதிரான அறப்போர்

பதினான்காம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட மன்னர்களில் முக்கியமானவன் அலாவுத்தீன்  கில்ஜி. சர்வாதிகாரி. முன்கோபி. பிறர் ஆலோசனைகளை அலட்சியம் செய்பவன். அப்படிப்பட்டவனுக்கு ஷரீஅத் (திருக்குர்ஆன் - நபிபெருமானார் வழிமுறை) ஒளியில் சில பிரச்சினைகளுக்குத் தீர்வ காண வேண்டும் என்ற எண்ணம் ஏனோ எழுந்தது.

அன்றைய தலைசிறந்த இஸ்லாமியச் சட்ட வல்லுநராகத் திகழ்ந்தவர் நீதிபதி முகீஸீத்தீன். அவரை அரசவைக்கு அழைத்தான் கில்ஜி. அரசாட்சியில் யாருடைய ஆலோசனையையும் மதிக்காத சுல்தானுக்கு இப்போது என்ன தேவை வந்தது? என நீதிபதிக்கு ஆச்சரியம் உண்டானது.



தன் முடிவு நெருங்கிவிட்டதாக முகீஸீத்தீன் எண்ணினார். அதற்கு காரணமும் இல்லாமலில்லை. அவர் எந்நாளும் நீதிக்குப் புறம்பாக தீர்ப்பபை வளைத்ததில்லை. அடுத்தவர் முகஸ்துதிக்காகவோ, பயந்தோ அநீதிக்கு என்றும் துணை போனதில்லை. அரசனோ ஷரீஅத் - நீதிக்கு முற்றிலும் எதிரானவன். தன் பதில்களும் அவனுக்கு திருப்தியளிக்கவும் போவதில்லை. அவை இன்னும் கோபத்தை கிளறுபவையாகவே இருக்கும். இருப்பினும் என்ன செய்வது? உண்மையை உரைத்தலே நீதிபதிக்கு அழகு!

நடப்பது நடக்கட்டும் என்று முகீஸீத்தீன் கில்ஜியின் அரசவைக்கு சென்றார். 

நீதிபதியை சுல்தான் வரவேற்று இருக்கையில் அமரச் செய்தான். அவனது முதல் சந்தேகம் அரசு அதிகாரிகளின் லஞ்ச - ஊழல்களைப் பற்றியது.

"நீதிபதி அவர்களே! அரசு அதிகாரிகளின் லஞ்ச - லாவண்யங்களைத் தாள முடியவில்லை. எனவே, அவர்களுக்கு சற்று கடுமையான தண்டனை தர விரும்புகின்றேன். திருடுபவனுக்கு ஷரீஅத்தில் மணிக்கட்டை தரித்து விடுவதே தண்டனையல்லவா? அதனால்.. அரசு ஊழியர்களின் கைகளை ஷரீஅத் சட்டபடி வெட்டி தண்டனையளிக்கலாமா?"

"அரசே! அரசு அலுவலகத்திற்காக ஊதியம் பெற்றுக் கொண்டே மக்களிடம் லஞ்சம் பெறுவதும், அவர்களிடம் ஏதாவது பிரதிபலனை எதிர்ப்பார்த்து சம்பாதிப்பதும் குற்றம்தான். இப்படி தவறாக ஈட்டிய சொத்துக்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து அரசு கரூவூலத்தில் (பைத்துல்மால்) சேர்க்க வேண்டும் என்பதே ஷரீஅத்தின் விதியாகும். மேற்படியான குற்றங்களுக்காக கையை தரிப்பது சட்ட விரோதமானதாகும். திருட்டுக் குற்றவாளிகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். அதற்கும் சில ஷரஅத்துக்கள் உண்டு. அவற்றையும்  மீறி திருட்டுக் குற்றமிழைப்பவருக்கே கடும் தண்டனை தரச்சொல்கிறது இஸ்லாம்"

சுல்தானின் கருத்துக்கு மாற்றமான தீர்ப்பையே நீதிபதி வழங்கினார்.

"சரி.. நான் என்னுடைய சொந்த செலவுகளுக்காக பைத்துல்மாலிலிருந்து (அரசு கரூவலத்திலிருந்து) எவ்வளவு பணம் எடுத்துச் செலவழிக்க முடியும்?" கில்ஜயின் இரண்டாவது சந்தேகம் இது.



தன் முடிவு நெருங்கிவிட்டதை இந்த கேள்வியிலிருந்தே முகீஸீத்தீன் தெரிந்து கொண்டார். என்னவானாலும் நீதியிலிருந்து அறவே பிறழக்கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டார். அச்சத்திற்கு சற்றும் அவர் இடம் தரவில்லை. மறுமைநாளில் இறைவன் முன்பு சத்தியத்தை மறைத்த குற்றத்திற்காக தலைகுனிந்து நிற்பதைவிட இம்மையில் சத்தியத்திற்கு சான்று பகர்ந்த செயலுக்காக தலையை இழப்பதே மேல் என்று உறுதி பூண்டார். 

"அரசே! நீங்கள் பைத்துல்மாலிலிருந்து பணத்தை எடுத்து கையாள தடையில்லை. ஆனால், அப்படி எடுப்பதற்கு மூன்று வழிமுறைகள் உள்ளன. முதல் நிபந்தனை நீங்கள் சாமான்யமானவர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு மாற வேண்டியிருக்கும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கைத் தேவைக்காக சராசரி நபர் குறைந்தளவு வருமானம் ஈட்டுவதைப் போலவே நீங்களும் அதற்கு மிகைக்காமல் பைத்துல்மாலிலிருந்து எடுத்து செலவழிக்கலாம். இதுவே இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வழிமுறையாகும். 

இரண்டாவது வழிமுறை, நீங்கள் உங்கள் குடிமக்களில் செல்வந்தர்களின் வாழ்க்கை வசதிகளைப் பெறுவது. அதற்கு எவ்வளவு தேவை உள்ளதோ அதை நீங்கள் பைத்துல்மாலிருந்து எடுத்த பயன்படுத்த முடியும். ஆனால், இது வீண் விரயம் என்ற பட்டியலில் இடம் பெறும். வீண் விரயம் செய்பவரை இறைவன் நேசிப்பதில்லை. 

கடைசியாக மூன்றாவது வழிமுறை, செல்வந்தர்களைவிடவும் சற்று கூடுதலான வாழ்க்கை வசதிகளைப் பெறுவது. ஆனால், இது உங்கள் பிரஜைகளையும் அவர்களின் செல்வங்களையும் கொள்ளையடிப்பதற்கு ஒப்பானதாகும்!"

முகீஸீத்தீனின் பதிலைக் கேட்டதும் அலாவுத்தீன்  கில்ஜி சர்ரென்று கோபத்தின் உச்சிக்கு சென்றான். கண்கள் சிவந்து விட்டன. இது ஷரீஅத் விவகாரமாக இருந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

தேவகிரிக்கு ஆளுநராக பதவி வகித்தப்போது சுல்தானுக்கு ஒரு புதையல் கிடைத்திருந்தது. அதை அவன் அடைய விரும்பி இருந்தான். அது குறித்து கடைசி வினாவை தொடுத்தான்.

அந்தப் புதையல் கிடைத்த போது, கில்ஜியின் படைவீரர்களும் சாட்சிகளாக கூட இருந்தனர். அதனால், அது தனிநபர் உடைமையல்ல. பொதுவானது. எனவே, புதையல் அரசுக்கு சொந்தமானது. அதை அரச கரூவூலத்தில் சேர்ப்பித்திட வேண்டும் என்று முகீஸீத்தீன் தீர்ப்பளித்தார்.

கில்ஜிக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. 

"என்ன? புதையல் எனக்குச் சொந்தமில்லையா? நான்தான் அதை கண்டெடுத்தேன். அது எனக்கே சொந்தம்..!" - என்று கூச்சல் போட ஆரம்பித்தான்.

அரசனின் கோபத்தைக் கண்ட நீதிபதி முகீஸீத்தீன் சற்றும் அஞ்சவில்லை. புன்னகைத்தவாறு இருக்கையிலிருந்து எழுந்து சென்றுவிட்டார். தனது கடமையைச் செய்த திருப்தி அவர் முகத்தில் நிலவியது.

வீட்டை அடைந்தவர் வீட்டாரிடம், நான் உங்களிடம் இறுதியாக விடை பெற்றுச் செல்ல வந்திருக்கின்றேன். இன்னும் சற்று நேரத்தில் அரசர் என்னை அரசவைக்கு அழைத்து சிரச்சேதம் செய்யப் போகின்றார்" -  என்றார். மரணத்தை எதிர்க்கொள்ள தயாராய் குளித்து உடலை தூய்மையாக்கிக் கொண்டார். இறைவனை தொழுதார். சிப்பாய்களின் வருகைக்காக காத்திருந்தார். 

சற்று நேரத்தில் அங்கு சிப்பாய்கள் வரவே செய்தனர். "அய்யா! அரசர் உங்களை கையோடு அழைத்து வரச் சொன்னார்!" -. என்று கூடவே அவரை அரசவைக்கு அழைத்தும் சென்றனர். 

முகீஸீத்தீன் அரசவைக்கு சென்ற போது கிலிஜியின் கோபம் தணிந்து விட்டிருந்தது. அஞ்சாமல் உண்மையை எடுத்துரைத்தமைக்கு வெகுவாகப் பாராட்டி பல பரிசுகளை வழங்கி நீதிபதியை மதிப்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்தான் அந்த சர்வாதிகாரி. 

இது இந்திய வரலாற்றில் இடம் பெற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம். 

ஆட்சியாளர் முன் அஞ்சாமல் சத்தியத்தை எடுத்துரைப்பது 'ஜிஹாத் எனப்படும் அறப்போருக்கு' சமமான செயலாகும்.

அன்று கொடிய ஆட்சியாளனுக்கு துதிப்பாடியாய் மாறாமல் ஒரு முகீஸீத்தீன் உண்மையை உரைத்தார். 

இன்று எங்கே போய்விட்டார் அவர்?

   

Saturday, November 17, 2012

வெள்ளை மாளிகையின் அந்த வெற்றிக்குப் பின்னால்.. (பகுதி - 2)

அமெரிக்கத் தேர்தல்களையொட்டி அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து ஒரு செய்தி வெளியானது. அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றிப் பெற்றதை அடுத்து பாகிஸ்தானில் நடைபெற்ற ஏராளமான கண்டன ஊர்வலங்கள் குறித்த  செய்தி அது. ஊர்வலங்களில் அமெரிக்கக் கொடி எரியூட்டப்படுவதால்.. அந்த நாட்டில் அமெரிக்க கொடிகளுக்கு ஏக கிராக்கியாம். இந்தச் செய்தியை ஏஜென்ஸி பிரான்ஸ் வெளியிட்டிருந்தது. 

பாகிஸ்தானிய மக்களின் இந்த எதிர்ப்புணர்வு பிபிசி நடத்திய கருத்துக் கணிப்பிலும் வெளிப்பட்டது.



ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதை உலகநாடுகளின் பார்வைக் குறித்த கணிப்பு இது. ஜீலை 3 லிருந்து செப்டம்பர் 3 வரை குளோப் ஸ்கேன் நடத்திய இந்த கருத்தக் கணிப்பில் பாகிஸ்தானைத் தவிர உலகநாடுகள் அனைத்தும் வரவேற்றிருந்தன. 

 அமெரிக்க குண்டு வீச்சுகளால் பாகிஸ்தானின் எல்லைப்புறங்களில் அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்படுவது வழக்கமாகி விட்டது. அதனால் அமெரிக்கா கடைபிடித்துவரும் வெளிவிவகாரக் கொள்கைக்கு பாகிஸ்தானிய மக்கள் ஆதரவளிக்கவில்லை என்பதே பொருள். நூற்றுக்கணக்கான அப்பாவி மாலாலாக்கள் கொல்லப்படுவதை சர்வதேச ஊடகங்கள் வாய் மூடி மௌனம் சாதிக்கின்றன.


அதனால், அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்வு சம்பந்தமாக பாகிஸ்தானியர்களின் கோபம் நியாயமானது என்பதை உணர முடிகிறது. தீவிரவாதிகளை ஒடுக்குகிறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு அமெரிக்கா பாகிஸ்தானின் எல்லைப் புறங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் கடும் தாக்குதல் தொடுக்கிறது. பாகிஸ்தானியர்களின் உயிர், உடமைக்கு பெருத்த சேதம் விளவைித்து வருகின்றது. அப்படி இருக்கும் போது பாகிஸ்தான் ஒபாமாவை ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமாகும்.

அமெரிக்க தேர்தல்களில் ஒபாமா பெற்ற வெற்றி சிலருக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது. அதில் குறிப்பிடத்தக்கவர்தான் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டைன். கருப்பர் இன மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஒபாமாவுக்காக பிரச்சாரக் கூட்டங்களை முந்நின்று நடத்தியவர். அவர் வசிக்கும் வடக்கு நியூஜெர்ஸி பகுதியில் இன்றைக்கும் கருப்பின இளைஞர்கள் காவல்துறையினரின் இனதுவேஷ கெடுபிடிகளுக்கு ஆளாகிவருகிறார்கள்.

 இனவெறியற்ற எதிர்காலம் தன் முன்னிருப்பதை எண்ணி எண்ணி புளாங்கிதம் அடைகிறார் புரூஸ். "அது நம்பமுடியாத மாலை நேரம்! ஒபாமா அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையும் வெற்றிப் பெற்ற அந்தி மாலை அது. வாழ்க்கையில் மறக்க முடியாதது!" - என்கிறார் புன்னகையுடன் (ஆதாரம்: அல்ஜஸீரா).


ஒபாமாவின் தேர்தல் வெற்றிக்கு முத்திரைப் பதித்தது மேற்கு கடலோரப் பகுதி. இங்கிருந்து வந்த முடிவுகள்தான் ஒபாமாவின் நள்ளிரவு குதூகலத்துக்கு காரணமானது. இரவு ஒரு மணியளவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஒபாமாவின் வெற்றிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க வேண்டிவந்தது. தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டன் தலைமையகத்திலிருந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு ரோம்னி அறிக்கை சமர்பிக்க வேண்டியும் இருந்தது.

இதைத் தொடர்ந்து இரவு 2 மணியளவில் ஒபாமா வெற்றியுரையாற்றினார். அதில் வரவிருக்கும் சிக்கல்கள் குறித்தும், அதற்காக ரோம்னியின் ஒத்துழைப்பை பெறவிருப்பதையும் குறிப்பிட்டார். தனக்களிக்கப்பட்ட வாக்குகள் அரசியல் ரீதியாக அளிக்கப்படவில்லை. தனது சாதனைகளுக்காக அளிக்கப்பட்ட வாக்குகள் என்று தமக்குத் தாமே மெச்சிக் கொண்டார்.

 ஒபாமாவின் சாதனைகளுக்காக வாக்களித்தவர்களுக்கு இரட்டிப்பாக ஒபாமாவும் பிரதிபலன் செலுத்தியாக வேண்டிய நிர்பந்தம் தற்போது. வால்ட் ஸ்ட்ரீட்டுக்கு விசுவாசமாக இருப்பேன் என்பதே இதன் பொருள்! இதன் மூலம் தனக்கு வாக்களிக்க ஓடியோடி உழைத்த நடுத்தர மற்றும் கருப்பின மக்களுக்களின் வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்வேன் என்பது இதன் பொருள். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை சீர்க்குலைக்க இனி தயக்கமில்லை என்பதே இதன் செய்தி. 

உஸாமா பின் லேடனைக் கொலைச் செய்தவர்களுக்கு பாராட்டுதல்கள் கிடைத்தன. 

போரும் ஒரு முடிவுக்கு வரும் என்று அந்தக் கூட்டத்தில் சொல்லப்பட்டது. ஆப்கனை மனதில் வைத்து ஒபாமா பேசினாலும் அது சாத்தியமில்லை  என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். ஆப்கானிஸ்தானில் வலுவாக சிக்கிக் கொண்ட அமெரிக்க அங்கிருந்து மீளுவது வெகு சிரமம். அதேநேரத்தில் வெளியேற்றப்பட்ட அமெரிக்கப் படைகள் இன்னும் உலகில் போரிட வேண்டிய பல இடங்களுக்குப் புலம் பெயர்ந்து செல்லும். அது சிரியாவோ, ஈரானோ தீர்மானமான அடுத்த இலக்குகளை நோக்கி படைகள் நகரும்.

 


ஊடகங்கள் ஒபாமா வெற்றியைக் கண்துஞ்சாமல் ஒளிபரப்பின. இத்தேர்தல்களில் பில்லியன் கணக்கான டாலர்கள் பெருமளவில் செலவழிக்கப்பட்டன.

தொடர்ந்து விளம்பரங்கள், ஊடக கருத்தாக்கங்கள் என்று 9 மாத காலத்துக்கு போடப்பட்ட திட்டங்களுக்கு கோடிக்கணக்கான பணம் இறைக்கப்பட்டது. அப்படி கோடி கோடியாகக் கொட்டியும் வாக்காளர்களை ஈர்க்க முடியவில்லை. 

அமெரிக்க ஜனாதிபதி தனது இரண்டாவது தேர்தல்களில் முன்பைவிட அதிக வாக்குகளைப் பெறுவார் என்பதே காலங்காலமான அமெரிக்க வரலாறு. 

  • 2000-ஆம் ஆண்டில் ஜார்ஜ் புஷ் 50 மில்லியன் வாக்குகளைப் பெற்றார். 
  • 2004-ஆம் ஆண்டிலோ இந்த எண்ணிக்கையை 62 மில்லியனாக அதிகரித்துக் கொண்டார். 
  • 1992-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தரல்களில் கிளிண்டன் பெற்ற வாக்குகள் 45 மில்லியன்.
  • 1996-ஆம் ஆண்டிலோ இது 47.5 மில்லியனாக அதிகரித்தது.
  •  1980-இல் ரீகன் 44 மில்லியன் என்பதிலிருந்து..
  • 1984-இல், 54.5 மில்லியன் வாக்குகள் பெற்றார். 


 நடந்து முடிந்த தேர்தல்களில் ஒபாமா முந்தைய தேர்தல்களைவிட 11 மில்லியன் வாக்குகள் குறைவாகப் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த வாக்குச் சரிவு இருந்தது என்கிறார் அமெரிக்க வாக்களார் ஆய்வு மையத்தைச் சேர்ந்த கர்ட்டிஸ்  ஹான்ஸ். 

இது 1944, 1940 ஆண்டைய தேர்தல்களில் பிராங்ளின் டிலனோ ரூஸ்வெல்ட் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த ஒரு நடப்பாகும். அரிதான செயலாகும். 

ரூஸ்வெல்ட்டைப் போலவே அமெரிக்க வரலாற்றில் அதிகம் வெறுக்கப்பட்ட அதிபர் ஜார்ஜ் புஷ். அவரிடமிருந்து பதவியைப் பெற்றவர் ஒபாமா. 

அமெரிக்க தேர்தல்களில் எவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் பார்மூலா ஒன்றுதான் உலகை மேலாதிக்கம் செய்வது. உலகக் காவல்காரனாக பாவித்து மக்களை அடக்கி ஒடுக்குவது.. உலக ரவுடியாக பரிமளிப்பது.

 புஷ்ஷின் வழித்தடத்தில் அச்சுப் பிசகாமல் நடந்தவர் ஒபாமா! நடந்து முடிந்த தேர்தல்களில் ஒருவேளை ரோம்னி வெற்றிப் பெற்றிருந்தாலும் அவரும் அச்சுப் பிசகாமல் ஒபமாவைப் பின்பற்றி இருப்பார். 

Wednesday, November 14, 2012

வெள்ளை மாளிகையின் அந்த வெற்றிக்குப் பின்னால் (பகுதி -1)

அது ஒரு நீண்ட கசப்பான பந்தயம்! அதற்கான செலவோ சுமார் 2.5 பில்லியன் டாலர்கள்! 2012 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களுக்கான அரங்கேற்ற செலவிது!

உண்மையிலேயே இரு வேட்பாளர்களுக்கிடையே நடந்த சரியான போட்டியா இது? அல்லது அமெரிக்க தேர்தல்கள் அமைப்பு சரியான ஜனநாயக அமைப்புதானா?

இதற்கான விடை காண நாம் முதன் முதலில் செல்ல வேண்டிய இடம் ஒபாமா மற்றும் ரோம்னி கலந்து கொண்ட விவாத மேடைக்கு..


நகர அரங்குக் கூட்டம் என அழைக்கப்பட்ட இந்த மேடையில், தேர்தல் சம்பந்தமான முக்கியப் பிரச்சினைகள் நாட்டு நலன் மிக்க உண்மையான அமெரிக்கர்களிடமிருந்து வரும் என அறிவிப்பு செய்யப்பட்டது. 

ஆனால், அந்த கூட்டம் முழுவதும் முன்னமே ஆயத்த வடிவமைப்புடன்  தயாரிக்கப்பட்டது என்பது நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்து போனது. முக்கிய வினாக்களுக்கான பதில்கள் என்பது ஒருபுறமிருக்கட்டும்! அந்த வினாக்கள் எழுப்பக்கூட அங்கு அனுமதியில்லை எனபதைதான் அந்த ஜனநாயக அரங்கு நிரூபித்தது. 

2012, அமெரிக்க தேர்தல்களின் கருத்துக் கணிப்பு என்ற பெயரால்.. அதற்கான நிறுவனம் ஒரு 82 தனிநபர்களைத் தேர்வு செய்து, அவர்கள் எந்த தரப்பு வாக்காளர்களையும் சேர்ந்தவர்கள் அல்ல என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டது. நாட்டு மக்களின் ஒட்டு மொத்த நடுநிலை வாக்காளர்களின் பிரதிநிதிகளைப் போல, சுயமாக அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். 

இந்த 82 நபர்களும் தமது கேள்விகளை முன் கூட்டியே தயாரித்து சிஎன்என்  தலைமை நிருபர் நிகழ்ச்சியின்  அமைப்பாளர் காண்டி கிரௌலியிடம் அளிக்கப்பட்டது. யார் பேச வேண்டும்? எதைப் பேச வேண்டும்? என்பதை தீர்மானிப்பவர் காண்டிதான்! ஊடகங்களுக்கு தீனியாய் பரபரப்பூட்டும் கேள்வி-பதில்கள் அவை. 


 திட்டமிட்டபடி வினாக்கள் முறையாக தொடுக்கப்பட வேண்டும் அதாவது எழுதி வைத்திருந்ததைப் பார்த்து வாசிக்க வேண்டும்.  அப்படி படிக்கும் போது சொதப்பினாலோ அவரவர் முறைத் தவறி வாசித்தாலோ.. அவ்வளவுதான் அரங்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார். கேள்வி கேட்கப்பட்டதும், ஒலிப்பெருக்கி உடனுக்குடன் அணைக்கப்படும்.

இத்தகைய ஒருவிதமான அச்ச உணர்வே அரங்கு முழுவதும் நிரம்பி இருந்தது என்கிறது உலக சோசலிஸ வலைத்தளம் (ஆதாரம்:  WSWS - The Obama-Romney Debate - Joseph Kishore - 18.10.2012)

அந்த அரங்கில் கேட்கப்பட்ட கேள்விகள் அதற்கான பதில்கள் எல்லாம் ஏற்கனவே திட்டமிட்ட ஆயத்த வடிவிலானது என்பது உண்மையானது. ஆனால், உலக மக்கள் மனதில் எழும் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பர்? விணணளாவிய கேள்விகள் இருந்தாலும்.. சில முக்கியமான கேள்விகள் இவை:


 1. மதிப்பிற்குரிய அமெரிக்க ஜனாதிபதி தமது சொந்த குடிமக்களை படுகொலை செய்வத சம்பந்தமான சட்ட பூர்வமான வரையரை என்ன? இலக்கு நிர்ணயித்து மக்களைக் கொல்லும் உரிமை என்பது அமெரிக்க மக்களுக்கும் பொருந்துமா? அல்லது உலக மக்களுக்கு மட்டுமா? (இந்தக் கேள்விக்கான பதிலை ஏற்கனவே  FBI இயக்குநர் ரோபர்ட் முல்லர் தெளிவாக பதில் சொல்லமல் மழுப்பியது குறிப்பிடத்தக்கது)

2. ஒவ்வொரு செவ்வாய் கிழமை ஒரு கூட்டம் நடத்துவது. உலகில் கொல்லப்பட வேண்டியவர் பட்டியலை வெளியிடுவது, அதன் பிறகு அமெரிக்க ஆளில்லா விமானம்  மூலமாக அவரைத் தீர்த்துக் கட்டுவது - (ஏற்கனவே ஒபாமா நியூயார்க் டைம்ஸ்ஸீக்கு அளித்த பேட்டியில்  கூறியது போல) என்ற முடிவு எடுக்கப்படுமா?

3. இப்படி முடிவெடுத்து வைக்கப்பட்டுள்ள மரண ஆணைகள் எத்தனை?

4. சித்திரவதைக்கு எதிராகவும், ஒற்று வேலைகள் சம்பந்தமாக முன்னாள் அதிபர் புஷ்ஷின் நிர்வாக அதிகாரிகளை குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஏன் எதிர்க்கிறீர்கள்?

5. அடுத்தாண்டு தாக்குதலுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஈரான் விஷயத்தில் இஸ்ரேலின் பங்களிப்பு என்ன? அதற்கு அளிக்கப்பட்டுள்ள உத்திரவாதங்கள்தான் என்ன? உண்மையிலேயே இத்தகைய போருக்கு அமெரிக்கா தயாரா? அப்படி போர் மூளுமாயின் அதற்காக அமெரிக்கா அணு ஆயுதங்களைக் கையாளுமா?


 இந்தக் கேள்விகள் அனைத்துமே இரு வேட்பாளர்களுக்கும் பொத்தம் பொதுவானவையாகும். அமெரிக்க மக்கள் எதிர்படவிருக்கும் போர்களினால் சுமக்க வேண்டிய சுமைகள் சம்பந்தமானது. உலக மக்கள் அனுபவிக்கும் வேதனைகள் சம்பந்தமானது.

கடைசியாக இந்தக் கேள்வி எழுவதும் தவிர்க்க இயலாததாக இருக்கிறது. ஆமாம். உலகப் பொருளாதாரத்தை பெரும் கலக்கத்தில் ஆழ்த்திய வால்ட் ஸ்ட்ரீட் சம்பந்தமானது. இதற்கு காரணமான எந்த வங்கியாளரையும் அல்லது பொறுப்பாளரையும் இதுவரையும் தண்டிக்கவில்லையே ஏன்? இதற்கு இணையான கடைசி கேள்வி, அமெரிக்க மக்களில் அதிகம் பேர் மிக வறிய நிலைக்குத் தள்ளப்பட்டும், வேலையின்மையின் சுமைக்கு ஆளாகியுள்ள நிலையில் பங்குச் சந்தை நிறுவனங்களும், பெரு நிறுவன லாபங்களும் பல்கிப் பெருகுவது எப்படி?

நடைபெற்ற அரங்கில் அமெரிக்க தேர்தல்களில் எவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் செல்வந்தர்கள்தான் சுகபோகமாக வாழ்வார்கள் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாயிற்று. இரு வேட்பாளர்களும் முதலாளித்துவ அமைப்புக்கு முட்டுக் கொடுப்பவர்கள், பெருநிறுவனங்களின் பாதுகாவலர்கள் என்பது மீண்டும் நிரூபணமானது அந்த அரங்கில்!

  • உங்கள் பணம்!
  • உங்கள் வேட்பாளர்!!
  • உங்கள் முடிவு!!! 

இதுதான் அந்த அரங்கின் முடிவாய் ஒலித்தது.

-- இறைவன் நாடினால்.. தொடரும்.

(Source: உலக சோசலிஸ வலைத்தளம், அல்ஜஸீரா.
படங்கள்- நன்றி- ராய்டர் மற்றும் அசோசியேட் பிரஸ்.)



Saturday, November 10, 2012

மியான்மர்: பௌத்த பயங்கரவாதம் ஒரு கட்டுக்கதை அல்ல..! (இறுதிப்பகுதி - 4) ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் பர்மிய முஸ்லிம்களும், நமது கடமையும்!



உலகின் மிகவும் மோசமாக கொடுமைக்குள்ளான சிறுபான்மை இனம் என்று ஐ.நா. மன்றத்தால் முத்திரைக் குத்தப்பட்டவர்கள் ரோகின்ய பர்மிய முஸ்லிம்கள். இவர்கள் வாழும் ராகின் மாநிலம் மேற்கு மியான்மரில் அதாவது மேற்கு பர்மாவில் உள்ளது. 

மூன்று மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட இந்த மாநிலம் மேற்கில் வங்கக் கடலை எல்லையாகக் கொண்டது. இங்கு பெரும்பான்மை இனமாக பௌத்தர்கள் வாழ்கிறார்கள். 

அரகான் பகுதியில் வாழும் ரோகின் இன முஸ்லிம்களின் துன்பம்-துயரங்கள் இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறன. 

மார்ச் 18, 1942-இல், சுமார் 5 ஆயிரம் முஸ்லிம்கள் கொடுரமான முறையில் ராகின் தேசியவாதிகளால் ‘மின்பா’ மற்றும் ‘மொரோ ஹாங்’ பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தத் துயர சம்பவத்துக்குப் பிறகு இவர்கள் மீது பர்மிய அரசால் இழைக்கப்படும் அநீதிகள் - அடக்குமுறைகள் தொடர் கதைகளாயின. இவர்களுக்கு சட்ட ரீதியான குடியுரிமைகளைத் தர அரசாங்கம் மறுத்துவருகிறது.

ஐ.நா.மன்றத்தின் அகதிகளுக்கான முதன்மை ஆணையரின் கூற்றுப்படி,

  • பர்மிய முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
  • அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒடுக்கப்படும்.
  • கல்வி கற்கும் உரிமையோ அல்லது சொத்துரிமையோ மறுக்கப்படும் என்பதுதான் பர்மிய அகதிகள் என்ற சொல்லுக்குப் பொருளாகும்.
ஒரு அரசாங்கமே தன் குடிமக்களுக்கு எதிராக நடத்தும் இத்தகைய அராஜகப் போக்கை சகிக்க முடியாமல் மூன்று லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஷ்கும் இன்னும் 24 ஆயிரம் பேர் மலேசியாவிற்கும் தங்களைக் காத்துக் கொள்ள தப்பிச்  சென்று விட்டார்கள். இன்னும் பலர் தாய்லாந்துக்கு புகலிடம் தேடிச் சென்றுவிட்டார்கள். ஆனால், தாய்லாந்தோ, பங்களாதேஷோ இவர்களை இன்முகத்துடன் வரவேற்று அடைக்கலம் அளிக்கவில்லை.


பங்களாதேஷ், அகதிகளாக வந்துள்ள ரோகின்ய முஸ்லிம்களை திரும்பவும் அழைத்துக் கொள்ளம்படி பர்மிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்  கொண்டிருக்கிறது. தாய்லாந்தோ அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. அது இன்னும் ஒருபடி மேலே சென்று குழந்தை பெண்கள் சகிதமாக நீர்வழியாக அகதிகளாக வருவோரை கடலோர காவல்படை கப்பல்கள் மூலம் தடுத்து நிறுத்துகிறது. அத்துடன் பலவந்தமாக அப்படகுகளை இடித்து நீரில் மூழ்கடிக்கும் முயற்சிகளில் இறங்கிவருகிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ (Human Rights Watch) பர்மிய அரசு ரோகின்ய முஸ்லிம்களை கொத்தடிமைகளாக மாற்ற வற்புறுத்தி வருகிறது!’ – என்ற தகவலையும் தருகிறது. இப்படி மாற மறுப்போரை கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்குவதாகவும் முஸ்லிம்களின் ஏழு வயதுக்குட்பட்ட சின்னஞ்சிறுவர்கள் கூட இத்தகைய கொத்தடிமை சிறார் குழுக்களில் இடம் பெற்றுள்ள அதிர்ச்சிகரமான தகவலையும் தொடர்ந்து தருகிறது.


‘வாட்டர்லூ’ பல்கலைக்  கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ‘முஹம்மது எல்மஸ்ரி, ‘தி எகிப்தியன் கெஸட்டுக்கு’ எழுதும்போது, ரோகின்ய முஸ்லிம்கள் வரலாற்று ரீதியாகவே பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகிவருவதை சுட்டிக் காட்டுகிறார். இந்த மக்கள் மீது தனியாக வரி விதிக்கப்படுவதாகவும், பலவந்தமாக தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படுவதாகவும், அவர்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதாகவும், திருமண நேரங்களில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.  ரோகின்ய முஸ்லிம்கள் வலுக்காட்டாயமாக சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் இராணுவ முகாம்களில் கீழ்நிலைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதையும் வருத்தத்தோடு எழுதுகிறார். 

தனது சொந்த குடிமக்களிடம் பர்மிய அரசு காட்டும் பாரபட்சத்தை.. முஸ்லிம்களை பர்மிய அரசு நடத்தும் மிக மோசமான நிலையை சர்வதேச அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.

பல்லண்டுகளாக பர்மிய அரசாலும், பெளத்த தீவிரவாதிகளாலும் துன்பங்களை அனுபவித்துவரும் ரோகின்ய முஸ்லிம்களுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் உரத்துக் குரல் எழுப்பி வருகின்றன.


மே, 2009-இல், ‘ஹீயுமன் ரைட்ஸ் வாட்சின்’ ஆசியாவுக்கான இணை இயக்குனர் ‘எலைன் பெர்ஸன்’ ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, ‘அசோசியேஷன் ஆப் சவுத் ஏசியன் நேஷன்ஸ்’ (ASEAN) என்ற அமைப்பு பர்மிய அரசின் செயல்களைக் கண்டிக்க வேண்டும். உலக நாடுகள் அதன் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது அவர், பர்மிய அரசாங்கம் ரோகின்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகளை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார். ஆனால், பர்மிய அரசோ அவர்களை தன் சொந்த குடிமக்கள் என்ற அந்தஸ்தைக் கூட தர மறுப்பதை சுட்டிக் காட்டி வேதனைப்பட்டார்.

ஏற்கனவே துன்பத்துக்கு மேல் துன்பங்களை அனுபவித்து வரும் பர்மிய முஸ்லிம்கள் தற்போது மீண்டும் அலை அலையான அடக்குமுறைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 

ஐ.நா.மன்றத்தின் ஓர் அறிக்கையின் படி, தற்போது நடந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வெறிக்கு பலியாகி அகதிகளானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரம்வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதை துல்லியமாக கணக்கிடும் சாத்தியமில்லை. 

ராகின் மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் கிட்டதட்ட 9 ஆயிரம் முஸ்லிம்களின் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன;  எரிக்கப்பட்டுள்ளன. இது பர்மிய நாட்டின் மனித உரிமை மீறலுக்கான ஒரு படி பின்னடைவு என்கிறது சர்வதேச மனித உரிமை ஆணையகமான ஆன்மெஸ்டி இண்டர் நேஷனல்!

‘’தி ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ-ஆபரேஷன்’ (OIC) பர்மிய முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்துள்ளது. 



பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சம்பந்தமான உண்மைத் தகவல்கள் கசிந்துவரும் நிலையில் ‘டைம்ஸ் துருக் நியூஸ் ஏஜென்ஸி’ சமீபத்தில் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவித்தள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்தக் கொடுமையை மேற்கத்திய ஊடகங்கள் வாய்மூடி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.. செவிடர்களாய்.. ஊமைகளாய், குருடர்களாய் ...!

பல்வேறு தலைப்புகளில் புத்தம் புதிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக அதுவும் முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை கட்டம் கட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பானது அன்றி வேறில்லை. தங்கள் ஊடகங்களைப் போலவே, மேற்கத்திய நாடுகளும் பார்வையிழந்தோரின் நிலையிலேயே உள்ளன.

தற்போது அமெரிக்கத் தேர்தல்களில் இரண்டாவது முறையாக வெற்றிவாகைச் சூடிய அதிபர் ஒபாமா முதன் முறையாக பர்மாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகமே தலையில் வைத்துக் கொண்டாடிய ஜனநாயகப் போராளி, பர்மிய அரசியல் நாயகி, ஆங் சென் சுகி தனக்கு நோபல் பரிசு அளிக்க நார்வேயில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அவர் அடக்கி ஒடுக்கப்படும் பர்மிய முஸ்லிம்களைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  பர்மாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சம்பந்தமாக மூச்சுகூட விடவில்லை. ஜனநாயகப் போராளிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்த சம்பவம் இது. 

மனசாட்சி மிக்க உலக மக்கள் இன வெறியால் படுகொலைச் செய்யப்படும் பர்மிய முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது அவர்களின் தார்மீகக் கடமையும்கூட. பெயர்தாங்கிகளாக சர்வதேச சமூகம் வாய்மூடி மௌனமாக உள்ள நிலையில் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்குக் குரல் எழுப்ப வேண்டியது நம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.