NewsBlog

Tuesday, November 20, 2012

இலக்கில்லாத இளைய சக்தி

ஒருமுறை ரவீந்திரநாத் தாகூர் இப்படி சொன்னார்: "மனிதனிடம், கடவுள் நம்பிக்கை இழக்கவில்லை. அப்படி இழந்திருந்திருந்தால்... அவன் மனிதனைப் படைத்திருக்கவே மாட்டான்!"

மனிதப்படைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை. 

தற்போது நமது நாட்டின் மக்கள் 100 கோடிக்கும் அதிகம். இதிலும் இளைஞர்களின் எண்ணிக்கைதான் அதிகம். உலகளவில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியாவில்தான் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். இன்னும் 30 ஆண்டுகளில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் வாய்ப்புகள் உண்டு. அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால்.. உலகிலேயே இளைய சக்தி அதிகம் கொண்ட முதல் நாடாக இந்தியா மாறிவிடும்.


தற்போது நாட்டில் 33 கோடியே 60 லட்சம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள். 15-19 வயதுக்குட்பட்டவர்கள் 12 கோடியே 10 லட்சம் பேர். 20-34 வயதுக்குட்பட்டவர்கள் 27 கோடியே 10 லட்சம். இந்த அடிப்படையில் கணக்கிட்டால்.. நாட்டில் 72 கோடி 80 லட்சம் பேர் இளைஞர்கள்தான். அதாவது நாட்டின் 70 விழுக்காடு பேர் இளைய சக்தியினர். 

இந்த இளைஞர்களுக்கு சரியான கல்வி, தொழில்நுட்ப வசதிகளை எட்டச் செய்தால்.. வாழ்க்கைக்கான சரியான இலக்கு, குறிக்கோள் இவற்றை நோக்கிச் செலுத்தினால்.. இவர்கள் நாட்டின் வரலாற்றை நிச்சயம் வளர்ச்சியை நோக்கி மாற்றி அமைப்பார்கள். உலகின் வலிமை வாய்ந்த நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவார்கள்.

 ஆனால், நடப்பு நிகழ்ச்சிகள் நிராசைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் 30 விழுக்காடுக்கும் அதிகமான மக்கள் கல்லாதவர்களாக உள்ளனர். கல்லாமையில் உலகின் முதல் நாடாக நமது நாடு மாறும் அவலம் உள்ளது. நாட்டில் வேலையின்மை அதிகரித்துவருகிறது. இதன் விளைவாக இளைய சக்தி ஒருவிதமான விரக்தியில்  மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அவர்கள் சட்டவிரோதச் செயல்களில், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாக மாறிவருகிறார்கள். இத்தகைய பலவீனமானவர்களை வகுப்புவாத, தீவிரவாத, சமூக விரோத சக்திகள் தங்களின் சுயநலங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மற்றொருபுறம் நாட்டில் கல்வி நிலையங்கள் புற்றுசலாய்ப் பெருகிக் கொண்டிருக்கின்றன. கல்வி அமைப்பில் அதி தீவிரமான போட்டியும் காணப்படுகிறது. அறிவியல், தகவல் தொழில் நுட்பத்துறைகளில் நமது நாடு வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில் கல்வி மற்றும் ஒழுக்க மாண்புகள் அதலபாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. வழி தவறிய இளைஞர்கள் நெறிகேடான வழிகளில் நடைபோடுவதை அன்றாடச் செய்திகள் தெரியப்படுத்துகின்றன. ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஈவ் டீஸிங் போன்றவை இளைஞரிடையே பெருகிவருகின்றன. 

திருமணத்துக்கு முன்னரே தவறான உறவுகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. மேற்கத்திய கலாசாரம் வெகுவேகமாக இந்திய இளைஞரிடையே ஊடுருவி வருவதைக் கண்டு சமூகவியல் அறிஞர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். 

 துரதிஷ்டவசமாக நமது இளைஞருக்கு வழிகாட்டக்கூடிய தலைவர்கள் அருகிவிட்டார்கள். சீரிய வழிகாட்டுதல், வழிநடத்துதல் இல்லாததால்.. ஒருவிதமான இறுக்கமான, கடின நிலையை இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வாழ்க்கைக்கான இலக்கு, இலட்சியம் இல்லாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கை என்பது உலக இன்பங்களுக்கான முதலீடு என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல. வாழ்க்கைக்கான நோக்கம் நிச்சயம் உண்டு. உண்பது, உறங்குவது. உல்லாசங்களை அனுபவிப்பது என்பதெல்லாம் வாழ்க்கைக்கான நோக்கமோ லட்சியமோ அல்ல. 

வாழ்க்கை மனித இனத்துக்கு கிடைத்தற்கரிய கிடைத்துள்ள வரம். அதனால், வாழ்க்கையின் உன்னத இலட்சியங்களை இளைஞர்களிடம் உணர்த்த நமது சமூக, அரசியல் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அவர்களைச் சரியான இலக்கில் வழிநடத்த வேண்டும். புத்தம் புதிய எண்ணங்கள், வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். நிராசையுடன் சமூகத்திலிருந்து  வெகுதூரம் அவர்கள் விலகிச் செல்லாமல் கட்டியணைக்க வேண்டும்.

உண்மையில், உலகின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான் உள்ளது. அவர்கள்தான் இந்தியாவின் நவயுக சிற்பிகள். சாதனை மனிதர்களே அவர்களின் ஆதர்சமாக இருக்க வேண்டும். மேற்கத்திய கலாசாரமோ,  ஹாலிவுட்டின் அரிதாரமோ, பாலிவுட்டின் கற்பனைகளோ நமது இளைஞர்களின் முன்னுதாரணங்கள் அல்ல. நமது ஆட்சியாளர்கள் மிகச் சிறந்த உதாரண புருர்களாகத் திகழ்ந்து ஆளமைப் பண்பால்.. இளைஞர்களை ஈர்க்க வேண்டும். இல்லையென்றால்.. நமது நாடு அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பங்களில் சாதனை மேல் சாதனை புரிந்தாலும், ஒழுக்க விழுமியங்களில் மிகவும் பின்தங்கிவிடும் ஆபத்து உண்டு.

0 comments:

Post a Comment