NewsBlog

Saturday, November 17, 2012

வெள்ளை மாளிகையின் அந்த வெற்றிக்குப் பின்னால்.. (பகுதி - 2)

அமெரிக்கத் தேர்தல்களையொட்டி அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து ஒரு செய்தி வெளியானது. அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றிப் பெற்றதை அடுத்து பாகிஸ்தானில் நடைபெற்ற ஏராளமான கண்டன ஊர்வலங்கள் குறித்த  செய்தி அது. ஊர்வலங்களில் அமெரிக்கக் கொடி எரியூட்டப்படுவதால்.. அந்த நாட்டில் அமெரிக்க கொடிகளுக்கு ஏக கிராக்கியாம். இந்தச் செய்தியை ஏஜென்ஸி பிரான்ஸ் வெளியிட்டிருந்தது. 

பாகிஸ்தானிய மக்களின் இந்த எதிர்ப்புணர்வு பிபிசி நடத்திய கருத்துக் கணிப்பிலும் வெளிப்பட்டது.



ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதை உலகநாடுகளின் பார்வைக் குறித்த கணிப்பு இது. ஜீலை 3 லிருந்து செப்டம்பர் 3 வரை குளோப் ஸ்கேன் நடத்திய இந்த கருத்தக் கணிப்பில் பாகிஸ்தானைத் தவிர உலகநாடுகள் அனைத்தும் வரவேற்றிருந்தன. 

 அமெரிக்க குண்டு வீச்சுகளால் பாகிஸ்தானின் எல்லைப்புறங்களில் அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்படுவது வழக்கமாகி விட்டது. அதனால் அமெரிக்கா கடைபிடித்துவரும் வெளிவிவகாரக் கொள்கைக்கு பாகிஸ்தானிய மக்கள் ஆதரவளிக்கவில்லை என்பதே பொருள். நூற்றுக்கணக்கான அப்பாவி மாலாலாக்கள் கொல்லப்படுவதை சர்வதேச ஊடகங்கள் வாய் மூடி மௌனம் சாதிக்கின்றன.


அதனால், அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்வு சம்பந்தமாக பாகிஸ்தானியர்களின் கோபம் நியாயமானது என்பதை உணர முடிகிறது. தீவிரவாதிகளை ஒடுக்குகிறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு அமெரிக்கா பாகிஸ்தானின் எல்லைப் புறங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் கடும் தாக்குதல் தொடுக்கிறது. பாகிஸ்தானியர்களின் உயிர், உடமைக்கு பெருத்த சேதம் விளவைித்து வருகின்றது. அப்படி இருக்கும் போது பாகிஸ்தான் ஒபாமாவை ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமாகும்.

அமெரிக்க தேர்தல்களில் ஒபாமா பெற்ற வெற்றி சிலருக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது. அதில் குறிப்பிடத்தக்கவர்தான் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டைன். கருப்பர் இன மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஒபாமாவுக்காக பிரச்சாரக் கூட்டங்களை முந்நின்று நடத்தியவர். அவர் வசிக்கும் வடக்கு நியூஜெர்ஸி பகுதியில் இன்றைக்கும் கருப்பின இளைஞர்கள் காவல்துறையினரின் இனதுவேஷ கெடுபிடிகளுக்கு ஆளாகிவருகிறார்கள்.

 இனவெறியற்ற எதிர்காலம் தன் முன்னிருப்பதை எண்ணி எண்ணி புளாங்கிதம் அடைகிறார் புரூஸ். "அது நம்பமுடியாத மாலை நேரம்! ஒபாமா அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையும் வெற்றிப் பெற்ற அந்தி மாலை அது. வாழ்க்கையில் மறக்க முடியாதது!" - என்கிறார் புன்னகையுடன் (ஆதாரம்: அல்ஜஸீரா).


ஒபாமாவின் தேர்தல் வெற்றிக்கு முத்திரைப் பதித்தது மேற்கு கடலோரப் பகுதி. இங்கிருந்து வந்த முடிவுகள்தான் ஒபாமாவின் நள்ளிரவு குதூகலத்துக்கு காரணமானது. இரவு ஒரு மணியளவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஒபாமாவின் வெற்றிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க வேண்டிவந்தது. தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டன் தலைமையகத்திலிருந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு ரோம்னி அறிக்கை சமர்பிக்க வேண்டியும் இருந்தது.

இதைத் தொடர்ந்து இரவு 2 மணியளவில் ஒபாமா வெற்றியுரையாற்றினார். அதில் வரவிருக்கும் சிக்கல்கள் குறித்தும், அதற்காக ரோம்னியின் ஒத்துழைப்பை பெறவிருப்பதையும் குறிப்பிட்டார். தனக்களிக்கப்பட்ட வாக்குகள் அரசியல் ரீதியாக அளிக்கப்படவில்லை. தனது சாதனைகளுக்காக அளிக்கப்பட்ட வாக்குகள் என்று தமக்குத் தாமே மெச்சிக் கொண்டார்.

 ஒபாமாவின் சாதனைகளுக்காக வாக்களித்தவர்களுக்கு இரட்டிப்பாக ஒபாமாவும் பிரதிபலன் செலுத்தியாக வேண்டிய நிர்பந்தம் தற்போது. வால்ட் ஸ்ட்ரீட்டுக்கு விசுவாசமாக இருப்பேன் என்பதே இதன் பொருள்! இதன் மூலம் தனக்கு வாக்களிக்க ஓடியோடி உழைத்த நடுத்தர மற்றும் கருப்பின மக்களுக்களின் வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்வேன் என்பது இதன் பொருள். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை சீர்க்குலைக்க இனி தயக்கமில்லை என்பதே இதன் செய்தி. 

உஸாமா பின் லேடனைக் கொலைச் செய்தவர்களுக்கு பாராட்டுதல்கள் கிடைத்தன. 

போரும் ஒரு முடிவுக்கு வரும் என்று அந்தக் கூட்டத்தில் சொல்லப்பட்டது. ஆப்கனை மனதில் வைத்து ஒபாமா பேசினாலும் அது சாத்தியமில்லை  என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். ஆப்கானிஸ்தானில் வலுவாக சிக்கிக் கொண்ட அமெரிக்க அங்கிருந்து மீளுவது வெகு சிரமம். அதேநேரத்தில் வெளியேற்றப்பட்ட அமெரிக்கப் படைகள் இன்னும் உலகில் போரிட வேண்டிய பல இடங்களுக்குப் புலம் பெயர்ந்து செல்லும். அது சிரியாவோ, ஈரானோ தீர்மானமான அடுத்த இலக்குகளை நோக்கி படைகள் நகரும்.

 


ஊடகங்கள் ஒபாமா வெற்றியைக் கண்துஞ்சாமல் ஒளிபரப்பின. இத்தேர்தல்களில் பில்லியன் கணக்கான டாலர்கள் பெருமளவில் செலவழிக்கப்பட்டன.

தொடர்ந்து விளம்பரங்கள், ஊடக கருத்தாக்கங்கள் என்று 9 மாத காலத்துக்கு போடப்பட்ட திட்டங்களுக்கு கோடிக்கணக்கான பணம் இறைக்கப்பட்டது. அப்படி கோடி கோடியாகக் கொட்டியும் வாக்காளர்களை ஈர்க்க முடியவில்லை. 

அமெரிக்க ஜனாதிபதி தனது இரண்டாவது தேர்தல்களில் முன்பைவிட அதிக வாக்குகளைப் பெறுவார் என்பதே காலங்காலமான அமெரிக்க வரலாறு. 

  • 2000-ஆம் ஆண்டில் ஜார்ஜ் புஷ் 50 மில்லியன் வாக்குகளைப் பெற்றார். 
  • 2004-ஆம் ஆண்டிலோ இந்த எண்ணிக்கையை 62 மில்லியனாக அதிகரித்துக் கொண்டார். 
  • 1992-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தரல்களில் கிளிண்டன் பெற்ற வாக்குகள் 45 மில்லியன்.
  • 1996-ஆம் ஆண்டிலோ இது 47.5 மில்லியனாக அதிகரித்தது.
  •  1980-இல் ரீகன் 44 மில்லியன் என்பதிலிருந்து..
  • 1984-இல், 54.5 மில்லியன் வாக்குகள் பெற்றார். 


 நடந்து முடிந்த தேர்தல்களில் ஒபாமா முந்தைய தேர்தல்களைவிட 11 மில்லியன் வாக்குகள் குறைவாகப் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த வாக்குச் சரிவு இருந்தது என்கிறார் அமெரிக்க வாக்களார் ஆய்வு மையத்தைச் சேர்ந்த கர்ட்டிஸ்  ஹான்ஸ். 

இது 1944, 1940 ஆண்டைய தேர்தல்களில் பிராங்ளின் டிலனோ ரூஸ்வெல்ட் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த ஒரு நடப்பாகும். அரிதான செயலாகும். 

ரூஸ்வெல்ட்டைப் போலவே அமெரிக்க வரலாற்றில் அதிகம் வெறுக்கப்பட்ட அதிபர் ஜார்ஜ் புஷ். அவரிடமிருந்து பதவியைப் பெற்றவர் ஒபாமா. 

அமெரிக்க தேர்தல்களில் எவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் பார்மூலா ஒன்றுதான் உலகை மேலாதிக்கம் செய்வது. உலகக் காவல்காரனாக பாவித்து மக்களை அடக்கி ஒடுக்குவது.. உலக ரவுடியாக பரிமளிப்பது.

 புஷ்ஷின் வழித்தடத்தில் அச்சுப் பிசகாமல் நடந்தவர் ஒபாமா! நடந்து முடிந்த தேர்தல்களில் ஒருவேளை ரோம்னி வெற்றிப் பெற்றிருந்தாலும் அவரும் அச்சுப் பிசகாமல் ஒபமாவைப் பின்பற்றி இருப்பார். 

0 comments:

Post a Comment